செய்திகள்

புதுவகை டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன்: சாம்சங் திட்டம்

Published On 2017-12-01 10:26 GMT   |   Update On 2017-12-01 10:26 GMT
முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் உண்மையன பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

சாம்சங் நிறுவனம் கடந்த சில வருடங்களாக வெளியிட்டு வரும் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புகளில் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. சாம்சங் நோட் எட்ஜ், கேலக்ஸி S7, S8 மற்றும் நோட் 8 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை இதற்கு சான்றாக கூற முடியும்.

தற்சமயம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. மடிக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன் கேலக்ஸி X என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் வரும் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி சாம்சங் நிறுவனம் உண்மையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் ஒன்றையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் நீக்கப்பட்டு முழுமையான திரை மட்டுமே இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து டச்சு வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி சர்வதேச காப்புரிமை அலுவலகத்தில் சாம்சங் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. அதில் சாம்சங் நிறுவனம் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போனினை எவ்வாறு உருவாக்க இருக்கிறது என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளது.



இந்த ஆண்டு மே மாத வாக்கில் சாம்சங் பதிவு செய்துள்ள காப்புரிமைகளில் முழுமையான பெசல்-லெஸ் ஸ்மார்ட்போன் ஆனது, 180 கோணத்தில் வளைத்து, போனின் பின்புறமாக நீட்டிக்க முடியும் என கூறப்படுகிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் முன்பக்கம் பெசல்கள் இன்றி டிஸ்ப்ளே மட்டும் காணப்படும்.

இதுகுறித்து வெளியாகியுள்ள கான்செப்ட் புகைப்படத்தில் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே எவ்வாறு காட்சியளிக்கும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி ஸ்மார்ட்போனில் எட்ஜ் ஜெஸ்ட்யூர்கள், டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர், மேம்படுத்தப்பட்ட ஐரிஸ் ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இதேபோல் இதன் முன்பக்க கேமரா எவ்வாறு பொருத்தப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் பல்வேறு வடிவமைப்புகளை கொண்டு கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன்களை உருவாக்கலாம் என கூறப்பட்டது. அதன்படி சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனின் ஃபிரேமில் ஆன்டெனா பொருத்த வெவ்வேறு வழிமுறைகளை கையாண்டு வருவதாகவும், இதில் பல்வேறு வழிமுறைகள் உண்மையில் செயல்படுத்த முடியுமா என்ற வகையில் அனைத்து வழிமுறைகளையும் முயற்சிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

Similar News