புதுச்சேரியில் 51 பேருக்கு டெங்கு பாதிப்பு
- புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
- கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மக்களுக்கு அதிக அளவில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.
அதில் பெரும் பாலானவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது தவிர சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சலாலும் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாள்தோறும் 20-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவர்கள் தவிர, புதுச்சேரியில் வசிக்கும் தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் 14 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெங்கு குறித்து மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளரும் சுகாதாரத்துறை இயக்குனருமான (பொறுப்பு) டாக்டர் செவ்வேள் கூறியதாவது:-
புதுச்சேரியில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தற்போது கண்டறியப்படுகிறது. 100 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டால் அவர்களில் 30 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரிய வருகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது குறைவாகத்தான் உள்ளது. அடுத்துவரும் நாட்களில் மழை அதிகமாக இருக்குகும் என்பதால் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று உயரும். டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுமருந்து தெளிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சுகாதாரத்துறையின் சார்பில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.