புதுச்சேரி

புதுச்சேரி ஒதுக்கீட்டில் ஜிப்மரில் வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கிய 9 இடம் ரத்து

Published On 2024-09-04 07:16 GMT   |   Update On 2024-09-04 07:16 GMT
  • பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.
  • புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் புதுவை மாநில மாணவர்களுக்காக 64 இடங்கள் ஒதுக்கப்படுகிறது.

இந்த இடங்களில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இரட்டை குடியுரிமை சான்றிதழ் பெற்று புதுச்சேரி மாணவர்களுக்கான இடங்களை அபகரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஒவ்வொரு ஆண்டு புகார் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய கலந்தாய்வில் புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

இது புதுச்சேரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சமூக அமைப்பினர் புதுச்சேரி அரசிடம் அந்த பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்

இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்களின் பெயரை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது-

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் புதுச்சேரி, காரைக்காலில் 250 இடங்கள் உள்ளன இதில் 64 இடங்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் இரட்டை குடியுரிமை பெற்று பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதன் மத்திய அரசை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டமாணவர்களை நீக்க நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி தற்போது அந்த 9 மாணவர்களின் பெயர்களையும் தேசிய மருத்துவ ஆணையம் நீக்கியுள்ளது. இதனால் ஜிப்மரில் புதுச்சேரியை சேர்ந்த மாணவர்கள் 64 பேர் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

புதுச்சேரியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளது. அனைவருக்குமான முதலமைச்சரின் மருத்துவ நிதியுதவி திட்டம் கொண்டுவரப்படும் (ரூ.5லட்சம் வரை சிகிச்சைபெற) என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

அதன்படி விரைவில் அரசு ஊழியர்கள் தவிர, அனைவருக்குமான மருத்துவ நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான கோப்புகள் தயாராகி உள்ளன. இதில் பயன்பெறுபவர்கள் நமது அரசு ஆஸ்பத்திரியின் தடையில்லா சான்றிதழை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News