புதுச்சேரி அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் கணக்கெடுப்பு
- புதுச்சேரியில் மோசடி மூலம் சொத்துக்களை சேர்த்த அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவர்னருக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் மோசடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் சப்-கலெக்டர் ஜான்சன், நில அளவையர் ரேணுகாதேவி உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து புதுச்சேரி அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவர்னருக்கு புகார்கள் அனுப்பி வருகின்றனர்.
கவர்னர் கைலாஷ்நாதன் பதவியேற்றவுடன், அதிகாரிகளின் சொத்து பட்டியலை சமர்பிக்க அறிவுறுத்தியிருந்தார். இதில் பல அதிகாரிகள் தங்கள் கணக்குகளை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகளின் சொத்துக்களை ரகசியமாக கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் மோசடி மூலம் சொத்துக்களை சேர்த்த அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.