தனியார் வங்கி அதிகாரி என கூறி புதுச்சேரி முன்னாள் அமைச்சரிடம் ஆன்லைனில் ரூ.87 ஆயிரம் மோசடி
- வங்கிக் கணக்கு விவரங்களை மர்ம நபர் பெற்றுக் கொண்டார்.
- ஷாஜகான் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
ஆன்லைன் மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியாக எச்சரித்தும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாகவும், வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம் என்றும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறியும், போதை பொருள் அடங்கிய பார்சல் வந்து இருப்பதாகவும் கூறி பல வகைகளில் சைபர் கிரைம் கும்பல் அப்பாவி மக்களிடம் பணத்தை அபேஸ் செய்து வருகின்றன.
இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி நன்கு படித்தவர்களும் ஏமாந்து பணத்தை இழந்து வருகின்றனர்.
தற்போது அரசு முக்கிய பொறுப்பில் இருந்த புதுவை முன்னாள் அமைச்சர் ஷாஜகானிடமும் கைவரிசை காட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஷாஜகானை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் தன்னை தனியார் வங்கி அதிகாரி என்ற அறிமுகப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து அவரது கிரெடிட் கார்டில் கடன் பெறும் உச்சபட்ச கடன் தொகைக்கான அளவை உயர்த்தி தருவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை மர்ம நபர் பெற்றுக் கொண்டார்.
உடனே சிறிது நேரத்தில் ஷாஜகானின் வங்கி கணக் கில் இருந்து ரூ.87 ஆயிரத்து 326 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாஜகான் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.