புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க டிரோன் பறக்கவிட்டு ஆய்வு செய்த போலீசார்
- முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
- டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி நகரப்பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்ட போதிலும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
குறிப்பாக மரப்பாலம் சந்திப்பு முதல் முருங்கப்பாக்கம் சந்திப்பு வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை வேளைகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த பகுதியை கடக்க குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் ஆகிறது. அதற்கு காரணம், சாலையின் இருபுறமும் உள்ள குறுகலான தெருக்களுக்கு பொது மக்கள் கார் மற்றும் இருச்சக்கர வாகனங்களை குறுக்காக ரோட்டை மறித்து கடந்து செல்வதுதான்.
இதனிடையே சமீபத்தில் அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் பகுதியில் ஆய்வு நடத்திய கவர்னரின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இங்கு சாலை விரிவாக்கம் தான் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க ஒரே வழி என்ற போதிலும் தற்காலிகமாக மாற்று ஏற்பாடுகள் செய்ய வழி உள்ளதா? என்ற ஆய்விலும் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று இரவு 7 மணிக்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் மரப்பாலம் சந்திப்பு, முருங்கப்பாக்கம் சந்திப்பு பகுதிகளில் டிரோனை பறக்க விட்டு ஆய்வு நடத்தினார்.
அந்த வழியாக வரும் வாகனங்கள், எங்கிருந்து எங்கு நோக்கி செல்கின்றன? என்பன போன்ற விவரத்தை அவர்கள் பதிவு செய்தனர்.
குறிப்பாக முருங்கப்பாக்கத்தில் இருந்து கொம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், மரப்பாலம் சந்திப்பில் இருந்து கொம்பாக்கம் நோக்கி வாகனங்களை மாற்று வழியில் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா? என்பது தொடர்பாக அவர்கள் டிரோன் காட்சிகளை கொண்டு முடிவு செய்ய உள்ளனர்.