புதுச்சேரி

கோவில் நில மோசடியில் ஈடுபட்ட புதுச்சேரி துணை கலெக்டர் சஸ்பெண்டு- கவர்னர் அதிரடி

Published On 2024-10-16 06:45 GMT   |   Update On 2024-10-16 06:45 GMT
  • கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.
  • துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மணிகண்டன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடந்து வருகிறது.

இந்த மோசடியில் ஈடுபட்டதாக நில புரோக்கர் சிவராமன், நில அளவையர் ரேணுகாதேவி, பத்திர எழுத்தர் கார்த்திக் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த நில மோசடியில் காரைக்கால் துணை கலெக்டர் ஜான்சனுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

மேலும் கோவில் நிலத்தை மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கு அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்து இருப்பதும் அம்பலமானது.

இதைத்தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சனை கடந்த 10-ந் தேதி போலீசார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காரைக்கால் கிளை சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் பார்வதீஸ்வரர் கோவில் மோசடி தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை கலெக்டர் மணிகண்டன் அரசுக்கு அளித்தார்.

இதைத் தொடர்ந்து துணை கலெக்டர் ஜான்சன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து கவர்னர் கைலாஷ் நாதன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள துணை கலெக்டர் ஜான்சனிடம், அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் அதிகாரிகள் வழங்கினர்.

Tags:    

Similar News