புதுச்சேரி

கவர்னர் கைலாஷ்நாதன்

புதுச்சேரியில் வீடு தேடி இலவச அரிசி வழங்க திட்டம்- கவர்னர் தகவல்

Published On 2024-10-22 03:58 GMT   |   Update On 2024-10-22 03:58 GMT
  • ரேசன் கடை ஊழியர்கள் வாழ்வும் மேம்படும். ரேசன் கடை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • முதலமைச்சரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.

புதுச்சேரி:

புதுச்சேரி அரசு குடிமை பொருள்வழங்கல் துறை மூலம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ரேசன் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

அத்துடன் தீபாவளிக்கான இலவச 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரையை ரேஷன் கடை மூலம் வழங்கும் நிகழ்ச்சி மேட்டுப்பாளையம் தொழில்பேட்டை சாலையில் உள்ள ரேஷன் கடையில் நடந்தது.

கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தீபாவளி இலவச அரிசி, சர்க்கரை ஆகிய வற்றை வழங்கி தொடங்கி வைத்தனர்.

விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:-

மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. பிரதமரிடம் உணவு தானியத்துக்காக வங்கிகளில் பணம் தருவது வேறு சில பயன்பாட்டுக்கு செலவாகி விடுகிறது. பணம் தருவதை விட, ஏழை மக்களுக்கு பயன் தரும் வகையில் அரிசி தர கோரிக்கை வைத்தேன்.

கோரிக்கையின் நியாயத்தை பிரதமர் புரிந்துகொண்டு அனுமதி தந்தார். இந்தியாவில் யாரும் உணவில்லாமல் பசியோடு இருக்கக்கூடாது என நோக்கத்துடன் பிரதமர், உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

ரேசன் கடைகளை புதுச்சேரியில் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறியுள்ளது. உணவு தானியங்கள் மக்களுக்கு கிடைக்கவும், ரேசன் கடை ஊழியர்கள் வாழ்வும் மேம்படும். ரேசன் கடை தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீடு தேடி இலவச அரிசி கொண்டு சேர்க்க பரிசீலிக்கிறோம். முதலமைச்சரிடம் பேசி அதற்கான சாத்தியங்கள் ஆராய்ந்து செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

Tags:    

Similar News