புதுச்சேரி

புதுவையில் 18-ந்தேதி 'பந்த்' - இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

Published On 2024-09-10 08:24 GMT   |   Update On 2024-09-10 08:24 GMT
  • கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி:

புதுவையில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் ஒழுங்கு முறை மின்சார ஆணைய அனுமதி பெற்று மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதேபோல நடப்பு நிதியாண்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதன்பிறகு மின் கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்படும். பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கட்டண உயர்வை பரிசீலிக்கும்படி அரசு சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிறகு முன்தேதியிட்டு கடந்த ஜூன் 16-ந்தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதற்கு புதுவை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 2-ந்தேதி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. அன்றைய தினம் மாலையில் 200 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இந்த மானியம் கண்துடைப்பு மோசடி என இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார், இந்தியகம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், துணை செயலாளர் சேதுசெல்வம், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மை செயலாளர் தேவபொழிலன் மற்றும் கம்யூனிஸ்டு (எம்.எல்.) இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், மின் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 18-ந்தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Tags:    

Similar News