புதுச்சேரி

இறந்து போன போலீசாருக்கு இடமாற்றம் உத்தரவு

Published On 2024-08-25 06:14 GMT   |   Update On 2024-08-25 06:14 GMT
  • 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர்.
  • கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

புதுச்சேரி:

புதுச்சேரி காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 414 பேருக்கு இடமாற்றம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவு வெளியானது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, இடமாற்றம் உத்தரவு வெளியிட்ட தலைமையக போலீஸ் சூப்பிரண்டு சுபம்கோஷ் அறிவித்தார்.

இடமாற்றம் உத்தரவு மற்றும் நிறுத்தி வைப்பு உத்தரவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. போலீஸ் டி.ஜி.பி.யின் அனுமதி இன்றி இடமாற்றம் உத்தரவு வெளியானது எனவும், உள்துறை அமைச்சர் அனுமதி பெறாமல் வெளியான பட்டியல் என்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக போலீசில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதுமட்டும் இன்றி, மணவெளி தொகுதியைச் சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றப்பத்திரிக்கையில் ஒருவர் பெயரை நீக்கியதற்காக போலீஸ் சூப்பிரண்டின் கோபத்திற்கு ஆளாகி கட்டாய விடுப்பில் சென்றார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் வெளியானது.

பெண் சப்-இன்ஸ்பெக்டரை மாற்ற கூடாது என கடந்த வாரம் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒருவரிடம் இருந்து உத்தரவு சென்றது. அதை மீறி இடமாற்றம் செய்யப்பட்டதால் இந்த உத்தரவு நிறுத்தப்பட்டதாகவும் போலீசார் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பிற்கு இடையே இறந்து போன போலீசார், போலீசில் இருந்து வெளியேறி மாற்று அரசு பணிக்கு சென்றவர்களுக்கும் இடமாற்றம் உத்தரவு வெளியானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் வில்லியனுாரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெயரும் இடமாற்றம் உத்தரவில் இடம்பெற்று இருந்தது.

அதுபோல் 2 போலீசார் போலீஸ் பணியில் இருந்து வெளியேறி, யூ.டி.சி., தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்து விட்டனர். அவர்களது பெயரும் இடமாற்ற உத்தரவில் இருந்தது. கடைசியில் 4 இடமாற்றம் உத்தரவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டால் இந்த குழப்பங்களுக்கு முற்று புள்ளி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News