கவர்னர் அரசியல் செய்தால் எதிர்ப்போம்- நாராயணசாமி
- கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை.
- என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னர் தேநீர் விருந்தை தொடர்ந்து நாங்கள் புறக்கணிக்கவில்லை. முன்பு இருந்த கவர்னர்கள் கிரண்பேடி, தமிழிசை ஆகியோர் அரசியல் செய்தனர். அதற்குத்தான் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அதிகாரியாக இருந்த கைலாஷ்நாதன், பா.ஜனதா முதலமைச்சர்களிடம் வேலை செய்திருந்தாலும், தற்போது அவர் கவர்னர்.
அவர் நடுநிலையோடு செயல்படுவார் என நம்புகிறோம். அப்படி செயல்பட்டால் அவருடன் சேர்ந்து செயல்படுவோம். காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் கவர்னர்கள் அரசியல் செய்து அந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கின்றனர்.
புதுவை கவர்னர் அரசியல் செய்தால் அதையும் எதிர்ப்போம்.
புதுவைக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது. மத்திய அரசிடம் வாங்குவது ரூ.2 ஆயிரத்து 300 கோடிதான். புதுவைக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை கிடைக்க வேண்டும்.
எனவே மாநில அந்தஸ்து பெற வேண்டியது அவசியம். புதுவைக்கு மாநில அந்தஸ்து கொடுத்தால் டெல்லிக்கும் கொடுக்க வேண்டும். அரவிந்த் கெஜ்ரிவால் இதை கேட்பார் என்பதால் மத்திய அரசு புதுவையை புறக்கணித்து வருகிறது.
முதலமைச்சராக ரங்கசாமி இருக்கும் வரை அவரால் மாநில அந்தஸ்து வாங்க முடியாது. அவர் புதுவை எல்லையை தாண்டி டெல்லி செல்லாதவர். நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதவர். முதலமைச்சர் மாநாட்டில் பங்கேற்காதவர். அவர் பா.ஜனதாவில் சேர்ந்தால் மட்டுமே புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.
என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை வைத்துக்கொண்டு அவரால் மாநில அந்தஸ்து கண்டிப்பாக பெற முடியாது. பா.ஜனதா தனியாக ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால் அப்போது வழங்குவார்கள். மத்திய மோடி அரசு புதுவையில் அரசியல் விளையாட்டு செய்கிறது. ரங்கசாமியை ஏமாற்றுகின்றனர். மாநில அந்தஸ்து பெற பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்த ரங்கசாமி, ஏன் எந்த கூட்டணியை விட்டு வெளியேறவில்லை?
அவருக்கு முதலமைச்சர் நாற்காலி வேண்டும். அதற்காக அவர் கட்சியை, எம்.எல்.ஏ.க்களை தியாகம் செய்வார். மாநில அந்தஸ்து பெற ராகுல்காந்தி, எதிர்கட்சி எம்.பிக்கள், பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.