சிறப்புக் கட்டுரைகள்

ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள மூளை வேறுபாடு!

Published On 2024-08-09 08:21 GMT   |   Update On 2024-08-09 08:21 GMT
  • இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது.
  • ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் வேறுபாடுகள் உள்ளன.

மனிதர்களின் மரபணுவில் 99.9 சதவீதம் அனை வருக்கும் பொதுவானது, அப்படியென்றால் 0.1 சதவீதம் மட்டுமே ஒருவரின் தனித்துவத்தை உறுதிசெய்கிறது. அந்த வகையில் ஆண்களும் - பெண்களும் உடலளவில் மட்டுமே வேறுபட்டவர்கள் என்று பலரும் நினைத்து வருகின்றனர்.

ஆனால், இருவருக்கும் உடல் மட்டுமல்லாது மூளையும் வேறுபடுகிறது. ஆண்களின் மூளையும், பெண்களின் மூளையும் வெவ்வேறு கோணங்களில் செயலாற்றுகின்றன என்பதே மருத்துவ உலகத்தின் கூற்று.

ஒரு பெண், ஆண் போல் வேலை செய்வது கடினம், அதேபோல் ஓர் ஆணால், பெண்ணைப்போல் செயல்படுவதும் கடினம். இயற்கையின் படைப்பில் பெண் என்பவள் அனைவரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவள்.

ஆண் என்பவன் அளவாகப் பேசிக் காரியத்தைச் செய்து முடிப்பவன். இதற்குக் காரணம் ஆண் மூளையும், பெண் மூளையும் அமைப்பிலும், செயல்திறனிலும் வேறுபடுவதே ஆகும். என்ன அந்த வேறுபாடு, என்பதை இப்பகுதியில் பார்ப்போமா?

யார் அறிவானவர்?

பெண்ணின் மூளையைவிட ஆணின் மூளை 10 சதவீதம் (பெண் மூளை 1350கிராம், ஆண் மூளை 1450கிராம்) பெரியதாக உள்ளது. அதாவது ஆண் மூளை, பெண் மூளையைவிட 100-150 கிராம் எடை அதிகம் உள்ளது. அதற்காக ஆண், பெண்ணை விட அறிவானவன் என்று நீங்கள் யாரும் தப்பு கணக்குப் போட்டு விட வேண்டாம்.

அறிவுத்திறன் என்பது மூளையில் உள்ள மேடுபள்ளங்களைப் பொறுத்துத்தான் உள்ளது. நாம் நம் மூளையின் 100 சதவீதத்தில் 5முதல் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்து கிறோம். ஒவ்வொருவரும் தன் மூளையில் எவ்வளவு விழுக் காடுகள் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் உள்ளன.

சிலர் பிறவியிலேயே புத்திக்கூர்மை உள்ளவர்களாக இருப்பார்கள். எனவே இருபாலரில் எவர் வேண்டுமானாலும் அறிவாளியாக இருக்கலாம்.

பெண் ஏன் அதிகம் பேசுகிறாள்?

பெண்களால் ஒரு நாளைக்கு 4000 முதல் 6000 சொற்களை எளிதில் பேச முடியும். ஆனால், ஆண்களால் ஒரு நாளைக்கு 2000 முதல் 4000 சொற்களே பேச முடியும். பேச்சுத் திறனுக்கான இடப்பக்க மூளையில் உள்ள பகுதி பெண்ணுக்கு நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதே இதற்குக் காரணம்.

ஆனால் ஓர் ஆண் அளவாகத்தான் பேசுவான், எல்லாப் பெண்களும் கண்டிப்பாக அதிகமாகத்தான் பேசுவார்கள் என்று 100 சதவீதம் கூறுவது கடினம்தான். விதிவிலக்கு என்பது இதற்கும் பொருந்தும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்பவர்கள் ஆண்களா? பெண்களா?

நம் மூளையின் வலப்பக்க அரைக்கோளம் இடப்பக்க உடலையும், இடப்பக்க அரைக் கோளம் வலப்பக்க உடலையும் இயக்குகின்றன.

இந்த இரண்டு அரைக் கோளங்களையும் இணைப்பது கார்பஸ் கலோசம் எனப்படும் கமிசுரல் பைபர். இந்த பைபர் ஆண்களைவிடப் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனால் தான் ஒரு பெண் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய திறனைப் பெற்றிருக்கிறாள்.

ஓர் ஆணால் ஒரே நேரத்தில் ஒரு வேலையைத்தான் முழுக்கவனத்துடன் திறம்படச் செய்ய முடியும். எடுத்துக்காட்டுக்கு ஆண்கள், குறிப்பிட்ட ஒரு பணியை மையமாகக் கொண்ட வேலைகளில் (பொற்கொல்லர்) சிறந்து விளங்குகிறார்கள்.

ஒரு வேலையை இருபாலரும் செய்கையில் இருவருக்கும் மூளையில் எட்டு பகுதிகள் வேலைசெய்யும். எந்த எட்டுப் பகுதிகள் என்பது இருவருக்கும் மாறுபடுகிறது.


பெண்கள் சிக்கல்களை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள்?

பெண்களின் மூளையில் உள்ள பிரீப்ரான்டல், ஆர்பிடோ பிரான்டல், சுப்பீரியர் டெம்போரல், லேட்டரல் பிரைட்டல் கார்டெக்ஸ் மற்றும் இன்சுலா போன்ற பகுதிகள் ஆண்களைவிடப் பெண்களுக்கு, சற்றுப் பெரிய அளவில் உள்ளது.

மேலும் மூளையில் உள்ள ஒரு நரம்பணு மற்றொரு நரம்பணுவுடன் இணைந்திருக்கும் விகிதம் பெண்களுக்கு 30 சதவீதம் அதிகம், எனவே தான் பெண்கள் ஒரு செயலைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்த்துச் சிந்திக்கக் கூடியவர்கள், அதனால் சில நேரங்களில் சிக்கல்களைப் பெரிதாக்கிவிடுகிறார்கள்.

சிக்கல்கள் என்று வரும்போது, பெண்கள் அவை எப்படி, எங்கிருந்து வந்தன? என்று சிந்திப்பார்களே தவிர அதற்கு என்ன தீர்வு? என்று சிந்திக்க மாட்டார்கள். ஆனால் ஆண்கள் அதற்கான தீர்வை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். ஆண்களுக்குச் சட்டென முடி வெடுக்கும் திறன் பெண்களை விட அதிகம்.

வாகனம் ஓட்டு வதில் வல்லவர்கள் ஆண்களே ஏன்?

ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு ஆண்களால் எளிதில் சென்று வரமுடியும். இதற்கான இடம் மூளையில் பரைட்டல் (Parietal) பகுதியில் உள்ளது, இந்தப் பகுதி இடங்களையும், பாதை களையும் நினைவில் வைத்துக் கொள்வ தற்கான பகுதியாகும்.

ஆண்களுக்குப் பெண்களைவிட இந்தப்பகுதி நன்கு வளர்ந்துள்ளதுதான் இதற்குக் காரணம். அதனால் பெண்கள் வெளியிடங்களுக்குச் சென்று வருவது என்பது ஆண்களைப் போல் எளிதான செயல் அல்ல.

ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் அதிகநேரம் எடுத்துக் கொள்கிறார்கள்?

கண்களில் கூம்புகள் எனப்படும் ஓர் அணு ரெட்டினா வில் உள்ளது. இது ஆண்களை விட 30 சதவீதம் அதிகமாகப் பெண்களுக்கு உள்ளதால், ஆண்களை விடப் பெண்களால் வண்ணங்களை எளிதில் பிரித்தறிய முடியும்.

எனவே தான் நிறங்களில் உள்ள சிறிய மாறுதல் களைக் கண்டு பிடிப்பதில் மிகவும் சிறந்தவர்களாகப் பெண்கள் இருக்கிறார்கள். அதனால் தான் ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்கள்.


வாழ்க்கைத் துணையை ஆண்கள் எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

ஆண்களின் மூளை அமைப்பு, கண்களின் காட்சி களுக்கு முதன்மை அளிக்கிறது. எனவேதான் ஆண்கள் அழகான பெண்களையே வாழ்க்கைத் துணையாக ஏற்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பெண்களுக்கோ காட்சிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட, மனம் விட்டுப் பேசுவதாலும், நன்கு பேசும் ஆண்களினாலும் அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.

அதனாலேயே ஓயாது பேசிக்கொண்டு இருக்கும் ஆண்களைப் பெண்களுக்கு அதிகம் பிடிக்கிறது. இதற்கு ஆண்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.


பெண்கள் உணர்வுகளுக்கு முதன்மை கொடுப்பது ஏன்?

பெண்களின் மூளையில் அதிக கிரேமேட்டர் இருப்பதற் கான சான்றுகள் உள்ளன. கிரேமேட்டரில் உள்ள நரம்பணுக்கள் உடல் இயக்கத்திற் கானவை, மேலும் இது தசைக் கட்டுப்பாடு, ஐம்புலன்கள் மற்றும் உணர்ச்சி களுடன் தொடர்புடைய மூளையின் பகுதியாகவும் இருக்கிறது.

மேலும் மூளைக்குள் உள்ள தொடர்புகளை ஆய்வு செய்யும்போது, பெண்கள் வலுவான இணைப்புகளைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது, இது சிறந்த உள்ளுணர்வு, சிந்தனை, பகுப்பாய்வு மற்றும் முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.

எனவே தான் பெண்கள் எந்த வேலை செய்தாலும் உணர்வு நிறைவுடன் செய்ய முயல்வார்கள். பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றை நன்கு நினைவில் வைத்திருப்பார்கள். அவற்றைக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருக்கும்.

இப்படி இருபாலருக்கும் மூளை வேறுபடும் காரணத்தால், இருவரும் தங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாமல் தடுமாறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் மூளையின் செயல்திறனில் பல முதன்மையான வேறுபாடுகள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் ஏற்படும் பல சிக்கல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

Tags:    

Similar News