'சாட் ஜிபிடி' மனிதனுக்கு போட்டியாக 'செயற்கை நுண்ணறிவு தளம்' ஆச்சரியப்பட வைக்கிறது- ஆபத்துக்கும் வழிவகுக்கிறது
- அமெரிக்காவை சேர்ந்த ‘ஓபன் ஏ.ஐ.’ என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது.
- தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது.
கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்கள் ஆச்சரியமானவர்கள் என்றால் மனிதர்களால் படைக்கப்படும் கண்டுபிடிப்புகள் அதைவிட ஆச்சரியமானவைகளாக இருப்பது நிதர்சனமான உண்மை.
'சாட் ஜி.பி.டி.' இது ஒரு செயற்கை நுண்ணறிவு இயங்குதளம்! அறிவியல் உலகின் அதிசயம். ஆனால் உண்மை.
பழங்கால சினிமாவில் 'ஜீபூம்பா' என்று சொன்னவுடன் 'சொல்லுங்க பிரபு. நான் உங்கள் அடிமை' என்று சொல்லி ஒரு பூதம் வந்து நிற்குமே. அதேபோல் இந்த இயங்குதளம் உண்மையாகவே நம் முன் வந்து நிற்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த 'ஓபன் ஏ.ஐ.' என்ற நிறுவனம் தான் இதை உருவாக்கி இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப உலகில் கூகுள் தேடுபொறிதான் உலக அளவில் மிகப்பெரிய ஜாம்பவனாக நிற்கிறது. ஆனால் இந்த 'சாட் ஜி.பி.டி.' வந்ததும் தகவல் தொழில் நுட்பம் முழுவதையும் தனது சாம்ராஜ்யத்துக்குள் அடக்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.
இந்த செயற்கை நுண்ணறிவு தளம் மனிதர்களுக்கு மிகச்சிறந்த மதியூக மந்திரியாக இருந்து செயல்படுகிறது. இந்த வேலைக்கு யாரையாவது நியமித்தால் ரகசியங்கள் கசிந்து விடலாம். ஆனால் இந்த தளத்தை துணையாக வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம். எந்த ரகசியமும், எந்த சூழ்நிலையிலும் கசிய போவதில்லை. இதை வைத்து என்னதான் செய்ய முடியும்? அப்படி என்னதான் செய்கிறது? என்ன கேட்டாலும் சொல்லும்... எதை சொன்னாலும் செய்யும்...!
ஒரு கட்டுரை தேவை, ஏதாவது ஒரு தலைப்பில் கவிதை தேவை, கேள்விகளுக்கு விடை தேவை, ஒரு பிரச்சினைக்கு தீர்வு தேவை, வரலாற்று தகவல்கள், அறிவியல் தேடல்கள்... என்று எதை கேட்டாலும் உடனே பதிலை தரும். அதுவும் ஒற்றைவரி பதிலாக இருக்காது. ஆதாரங்களுடன் அற்புதமாக செய்து தந்துவிடும்.
மென்பொறியாளர்கள் வரி வரியாக எழுதும் கம்ப்யூட்டர் புரோகிராமில் ஏற்படும் தவறுகளை கண்டு பிடித்து திருத்துவதற்கு மணிகணக்கும் ஆகலாம். நாள் கணக்கும் ஆகலாம்.
ஆனால் நம்ம ஆள் 'சாட் ஜி.பி.டி.'யிடம் சொன்னால் போதும். தவறு எங்கே இருக்கிறது என்பதை உடனே கண்டுபிடித்துவிடும். அதுமட்டுமல்ல. அந்த தவறை திருத்தியும் கொடுத்து விடுகிறது.
ஒரு டிசைன் வரைய வேண்டும், ஒரு கார்ட்டூன் வரைய வேண்டும். எதுவானாலும் சரி மறுகணமே வரைந்து தருகிறது. அதுவும் நான்கைந்து மாடல்களில் தரும். தேவையானதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
வீட்டுப்பாடம் எழுதி கை வலிக்கிறதா? என்ன பாடம் என்பதை சொன்னால் போதும் அதுவே எழுதி தந்து விடுகிறது.
சரி இவையெல்லாம் நாம் கேட்பது. அதைவிட்டு விட்டு 'நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என்று கூறினால் உடனே 'நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? நான் ஏதேனும் உங்களுக்கு உதவ வேண்டுமா? என்று கேட்கிறது! அதாவது நம்மை பற்றி புரிந்தவர்கள் நம் அன்புரிக்குரியவர்கள் நம் மீது அக்கறையுடன் உரையாடுவது போல் உரையாடுவதை பார்த்தால் உடல் புல்லரித்து விடுகிறது.
உனக்கு விடுகதை தெரியுமா என்று பதிவிட்டால் போதும். எனக்கு தெரியும் என்று சொல்லி ஒரு விடுகதையையும் பதிவிட்டு அதற்கு பதிலையும் பதிவிடுகிறது. அதோடு நிற்காது. நான் விடுகதை சொன்னால் கேட்க விருப்பமா என்று கேட்டு நம் அனுமதியை பெற்று விடுகதையை நமக்கு சொல்லி நம்மையே ஆழம் பார்க்கிறது. கற்பனை வளம், அறிவுத்திறன் மிக்கவர்கள், பலமணி நேரம் உழைத்து செய்யும் வேலையை சில நிமிடங்களில் செய்து முடித்து தந்து விடுகிறது. ஒரு ஊரை பற்றிய தகவல்கள் கேட்டால் அந்த ஊரின் சிறப்புக்களை புகைப்பட காட்சிகளுடன் நான்கைந்து பக்கங்களுக்கு டைப் செய்து தந்து விடுகிறது. சிக்கலான கணித சமன்பாடுகளை தீர்க்க முடியாமல் மணி கணக்கில் மண்டையை பிய்த்து கொண்டிருக்க வேண்டியதில்லை. விஷயத்தை சொல்லுங்கள் மறுவிநாடியே தீர்வை தந்து விடுகிறது.
விஞ்ஞானத்தின் வளர்ச்சியும், கண்டுபிடிப்புகளும், உலகம் போகும் போக்கையும் நினைத்தால் மலைப்பாக தெரியும். அதே நேரம் இதனால் ஏற்பட போகும் எதிர்விளைவுகள் இனம் புரியாத பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
மூளைக்கு தீனி கொடுக்கும் அசகாய சாமர்த்தியத்தை ஏற்படுத்தி கொடுத்தாலும் நம் வயிற்றுக்கான பசியை அது தீர்க்குமா? என்ற கேள்வி எழுந்தால் விவசாயமும், விவசாயிகளும் மனக்கண் முன் தெரிவார்கள்.
எது எப்படியோ மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் வல்லவனுக்கு வல்லவன் எந்த வடிவத்திலா வது உருவாகி கொண்டே இருக்கிறான்.