சிறப்புக் கட்டுரைகள்

சூரசம்ஹாரம் நடப்பது எப்படி?

Published On 2024-11-05 08:27 GMT   |   Update On 2024-11-05 08:27 GMT
  • முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது. 6-வது நாள் சூரன் அழிக்கப்பட்டான்.
  • சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும் இங்கும் அசைத்தபடி வருவான்.

திருச்செந்தூரில் நாளை மறுநாள் (7-ந்தேதி) சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. திருச்செந்தூரில் நடக்கும் விழாக்களில் இது முதன்மையானது. உணர்வுப்பூர்வமானது.

முருகப்பெருமானுக்கு நாம் எடுக்கும் திருவிழாக்களுள் சிறப்புமிக்கது கந்தசஷ்டி. சூரனை முருகப்பெருமான் வதம் செய்த நாளே சஷ்டியாகும். இந்த திருவிழா சூரசம்கார திருவிழாவாக திருத்தணி தலம் தவிர முருகன் எழுந்தருளி அருள்பாலிக்கும் மற்ற அனைத்து தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூ ரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி நின்று 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று கோஷமிடும் ஒலி விண்ணை பிளக்கும்.

அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும்படி அறிவுரை கூறினார் வீரபாகு.

 

சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் அழிக்க எண்ணினான். சூரபத்மனின் பிள்ளைகளாகிய பானுகோபன், அக்னி முகாசுரன், தம்பிகளான பானுகோபன், வரத்தினால் பெற்ற இந்திர ஞாலத்தேர், சிங்கவாகனம், சேனைகள் அனைத்தையும் சூரபத்மன் இழந்தான். இறுதியில் மாயப்போர் முறைகளை செய்ய தொடங்கினான். கடலில் சென்று உலகம் நிலை குலையும் வகையில் பெரிய மாமரமாக நின்றான். வீறுகொண்டு எழுந்த முருகன் வேலாயுதத்தை ஏவி விட்டார். அம்மாமரம் இரு கூறாக சிதைந்தது. ஒரு பாதியை மயிலாகவும், மறு பாதியை சேவலாகவும் மாற்றி முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார்.

சூரசம்ஹாரம் என்றால் அசுரனாகிய சூரபத்மனை முருகப்பெருமான் கொன்றார் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் சூரனையும் ஆட்கொண்டு பெருவாழ்வு தந்தருள்கிறார். எந்த தெய்வத்திற்கும் இல்லாத சிறப்பு இதுவாகும். அதனால் தான் 'வைதாரை யும் வாழவைப்பவன் முருகன்' என்று போற்றி வழிபடுவர்.

கந்தபுராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியார், தேவர்கள் ஐப்பசி மாத வளர்பிறையில் முதல் ஆறுநாட்கள் கும்பத்தில் முருகனை எழுந்தருள செய்து அசுரர்களை வதம் செய்வதற்காகவும், அவரது அருள் வேண்டியும் நோன்பு இருந்தனர். முருகனும் அவர்களுக்கு அருள் செய்தார். இதனை நினைவுறுத்தும் விதமாகவே ஐப்பசி அமாவாசையை அடுத்து கந்தசஷ்டி கொண்டாடப்படுகிறது.

 

முருகப்பெருமானுக்கும் சூரபத்மனுக்கும் இடையே 6 நாட்கள் போர் நடந்தது. 6-வது நாள் சூரன் அழிக்கப்பட்டான்.

இந்த 6 நாள் போர் திருச்செந்தூர் கடலில் நடந்ததாக புராணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முதல் நாள் போரில் சூரபத்மன் மகன் பானுகோபன் போரிட வந்து தோல்வி கண்டு புறமுதுகிட்டுத் திரும்பினான்.

இரண்டாம் நாள் சூரபத்மனும், சிங்கமுகாசுரன், அதிசூரன், தாரகாசுரன் மகன் அசுரேந்திரனும் உடன் வந்தனர். வீரபாகுத் தேவர் அசுரேந்திரனைக் கொன்றார்.

மூன்றாம் நாள், சூரபத்மன் தன் மற்றொரு மகனான இரணியனைப் போரிடச் சொன்னான். அவன் அறிவுரைக் கூறியும் சூரபத்மன் ஏற்கவில்லை. இருப்பினும் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்னும் திருவாக்கினை ஏற்றுப் போரிடச் சென்றான் இரணியன்.

சிங்கமுகாசுரன் ஆயிரம் முகங்கள் கொண்டவன். அவன் தேவர்களையும், வீரபாகுவையும் தன் தாய் கொடுத்த பாசத்தை கொண்டு கட்டிக் கடலில் விட்டான்.

பாலசுப்பிரமணியருடன் போரிட வந்த படைகள் அனைத்தையும், கோர ரூபம் கொண்டு விழுங்கினான். குமரக் கடவுளால் பலமுறை வெட்டப்பட்ட வெட்டுண்ட சூரனின் தலை மீண்டும் மீண்டும் முளைத்தது.

சூரபத்மன் திறமையாகப் போரிட்டான். முடிவில் இந்திர ஜாலத் தேரைக் கொண்டு சஞ்சீவியால் உயிர்ப் பித்த, பானுகோபன், சிங்கமுகன், தருமகோபன் முதலிய வீரர் களைக் கொண்டு மீண்டும் போரிட்டான்.

முருகப் பெருமான் பாசுபதத்தால் மீண்டும் அவர்கள் அனைவரையும் கொன்றார். சூரபத்மன் எடுத்த மாமர உருவை வேலாயுதத்தால் இரு பிளவாக்க, அவன் பெற்ற வரத்தால் மீண்டும் நல்லுருவுடன் வந்தான். மீண்டும் அவனை இருபிளவாக்க, அவ்விரு பிளவும், மயிலும், சேவலுமாக மாறின.

மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் பிடித்துத் தேவர்களை சிறை மீட்டார். பின் செந்தூரை அடைந்து சிவபூஜை செய்தார். இவ்வாறாக சூரபத்மனை அழித்ததனால் மும்மூர்த்திகளின் குறைகளைப் போக்கினார்.

தேவேந்திரன் தனக்கும், தேவர்களுக்கும் உதவிய முருகனுக்குத் தம் நன்றியைப் புலப்படுத்த விரும்பி தன் மகளான தேவசேனா தேவியை திருமணம் செய்து கொடுத்தார்.

அதை பிரதிபலிக்கும் வகையில் திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் சூர சம்ஹாரம் நிகழ்ச்சி நடத்தி காட்டப்படுகிறது.

பல வேடங்களில் வரும் சூரனை முருகர் அழிக்கும் காட்சிகள் நாளை மறுநாள் சூரசம்ஹார தினத்தன்று தத்ரூபமாக நடத்தி காட்டப்படும்.

இந்த ஆண்டு நடைபெறும் சூரசம் ஹாரத்தை நேரில் காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரசம்ஹார விழா எப்படி நடைபெறும் தெரியுமா?

சூரசம்ஹாரம் தினத்தன்று (7-ந்தேதி) மாலை முதலில் சூரன் தலையை ஆட்டிக் கொண்டு வருவான். அவனை பல்லக்கில் சுமந்து வருவார்கள்.

திருச்செந்தூர் ஊரின் மையப்பகுதியில் உள்ள சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இருந்து புறப்படும் சூரன் திருச்செந்தூர் நகரில் ரத வீதிகளை வலம் வருவான்.

அப்போது சூரன் போருக்கு வருகிறேன் என்பது போலவும், போருக்கு வரவில்லை என்பது போலவும் தலையை அங்கும் இங்கும் அசைத்தபடி வருவான். சூரன் முன்னே முரசு ஒலித்தபடி செல்வார்கள்.

சூரன் கடற்கரைக்கு வந்ததும் லட்சக்கணக்கான பக்தர்கள் சூரனும், முருகரும் போர் செய்யும் காட்சியை காண ஒன்று திரண்டு நிற்பார்கள். கந்த சஷ்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் யாகசாலை பூஜை முடிவடைந்ததும் கடற்கரைக்கு வந்து விடுவார்கள். இந்த வேளையில் ஜெயந்தி நாதர், வேல்தாங்கிய படைத் தலைவராக சப்பரத்தில் கடற்கரைக்கு கம்பீரமாக எழுந்தருள்வார். அப்போது இயற்கை காட்சியில் கூட மாற்றங்கள் ஏற்படும்.

கடல், ஆகாயத்தின் செந்நிறமாக மாறும். கடற்கரையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவுக்கு அசாதாரண அமைதி நிலவும். லட்சக்கணக்கான மக்கள் சூரசம்ஹாரத்தை காண்பதற்கு கடலும் சற்று உள்வாங்கும் என்று சொல்வார்கள்.

போர் தொடங்கியதும் சூரனின் சப்பரம், ஜெயந்தி நாதரின் சப்பரத்தை வலம் வரும். பின்னர் சூரன் பல்லக்கு, ஜெயந்தி நாதர் பல்லக்குக்கு முன்பு 3 முறை சென்று பின் வாங்கி செல்லும்.

இதைத் தொடர்ந்து ஜெயந்தி நாதரின் பல்லக்கில் இருந்து சூரனின் பல்லக்குக்கு பட்டாசு விடப்படும். அது சூரனை சென்று தாக்கும்.

சூரன் மொத்தம் 3 உருவங்கள் எடுத்து முருகனை எதிர்கொள்வான். முதலில் யானை முகன் எனும் உருவம் கொண்ட அசுரன் வலமிடமாக சாமியைச் சுற்றி வருவான். முருகன் சார்பாக அர்ச்சகர் ஒருவர் அவன் நெற்றியில் வேலால் குத்தி வீழ்த்துவார்.

இதைத் தொடர்ந்து சூரன் உடலில் சிங்கமுகாசுரன் தலை பொருத்தப்படும். சிங்கமுகன் நெற்றியிலும் வேலால் குத்தி வீழ்த்துவார்கள். அடுத்து சூரபத்மன் தலை அதே உடலில் பொருத்தப் படும். சூரபத்மனும் வீழ்த்தப்படுவான்.

இந்த போரின்போது பக்தர்கள் எழுப்பும் கந்தனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா என்ற குரல் விண்ணை அதிர வைக்கும்.

சூரன் தனது தலை துண்டிக்கப்பட்டதும் வேறு தலையுடன் தோன்றி கொண்டே இருப்பான். அவனை ஜெயந்தி நாதர், வதம் செய்வதை பக்தர்கள் கண்டு களிப்பார்கள். போரின்போது ஜெயந்தி நாதருடன் தேவர் படையும், சூரனுடன் அசுரர் படையும் இருப்பது போல் பக்தர்கள் இரண்டு பிரிவாக எதிர் எதிரே வேல் மற்றும் ஆயுதங்களை வைத்து கொண்டு செல்வார்கள்.

இந்த போரின்போது ஒரு கட்டத்தில் சூரன், விநாயகர் தலையுடன், ஜெயந்தி நாதர் முன்பு தோன்றுவான். அவனது மாயத்தை கண்டு சற்று தடுமாறும் ஜெயந்திநாதர், சூரனின் தந்திரத்தை புரிந்து கொண்டு அவனது யானை தலையையும் துண்டித்து விடுவார்.

கடைசியாக மாமரமாக தோன்றும் சூரனை, ஜெயந்தி நாதர் வதம் செய்து சேவலும், மயிலுமாக ஆட்கொள்வார். பின்னர் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். அத்துடன் சூரசம்கார நிகழ்ச்சி முடிவடையும். 6 நாட்களாக சஷ்டி விரதம் கடைபிடித்த பக்தர்கள் கடலில் குளித்து விட்டு விரதத்தை முடித்து உணவு உட்கொள்வார்கள்.

திருச்செந்தூர் தலத்தில் பல நூறு ஆண்டுகளாக இது நடக்கிறது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஆதிகாலத்தில் திருச்செந்தூர் எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்த வாரம் இது பற்றி பார்க்கலாம்.

Tags:    

Similar News