சர்க்கரை வியாதியும் பாலியல் பிரச்சனைகளும்...
- இந்தியாவில் சர்க்கரை வியாதி மிகவும் அதிகமாக உள்ளது.
- சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது.
சர்க்கரை வியாதி...
இது இன்று பொதுவாகவே எல்லோருக்கும் அதிகரித்து வரும் ஒரு முக்கியமான பிரச்சனை ஆகும். குறிப்பாக பெண்களுக்கும் இன்று சர்க்கரை வியாதியின் பாதிப்பானது அதிகரித்து வருகிறது. பெண்கள் பலருக்கு இன்று சிறு வயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்படுவது என்பதும் பொதுவாக இருக்கிறது. இந்த கால கட்டத்தில் இருக்கக்கூடிய உணவு பழக்க முறைகள், உடற்பயிற்சி இல்லாத நிலை, நவீன வாழ்க்கை முறைகள், கம்ப்யூட்டரில் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படும் உடல் பருமன் மற்றும் மனதளவில் ஏற்படுகிற மன அழுத்தம், தூக்கம் இல்லாத நிலையில் இரவில் தொடர்ந்து கண் விழித்தல் ஆகியவை அனைத்துமே சர்க்கரை வியாதியை அதிகரிக்கிற மிக முக்கியமான விஷயமாகும்.
இதில் நான் உணவு வகைகளை சொல்லவே இல்லை. ஏனென்றால் உணவு வகைகளை பற்றி எல்லோருக்கும் தெரியும், உணவு வகைகளில் நமது நாட்டு பெண்களுக்கு அரிசி உணவு சாப்பிடும் பழக்கம் அதிக அளவில் இருப்பதால் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு இன்னும் அதிகம்.
அதனால் தான் இந்தியாவில் சர்க்கரை வியாதி மிகவும் அதிகமாக உள்ளது. இது பற்றிய புரிதல் பலருக்கு நன்றாக தெரிந்த நிலையிலும், சிலருக்கு எதுவும் தெரியாத நிலையிலும் நிறைய பேர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்னும் சொல்லப்போனால் கிராமப்புறங்களில் அதிக உடல் உழைப்பு இருப்பவர்களுக்கு கூட இப்போது சர்க்கரை வியாதி அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
சர்க்கரை வியாதி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உணவு உட்கொள்ளும் முறைகள் பற்றி ஒவ்வொருவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட்டை, சிம்பிள் கார்போஹைட்ரேட்டாக நிறைய சாப்பிடும் வகையிலான அரிசி உணவு சாப்பிடும் பழக்கம் என்பது கண்டிப்பாக சர்க்கரை வியாதி வருவதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துகிறது. இது சர்க்கரை வியாதி பாதிப்பு ஏற்படுவதற்கான நிச்சயமான நிலையையும் கொடுக்கிறது.
சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் உறவு பிரச்சனைகள் என்னென்ன?
பெண்களுக்கு சர்க்கரை வியாதியானது அதிகமாக இருக்கும் இந்த காலத்தில், அவர்களுக்கு பாலியல் உறவு சம்பந்தமான விஷயத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆண்களை பொருத்தவரை சர்க்கரை வியாதி பாதிப்பு இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கும். ஆண்களுக்கு சர்க்கரை வியாதி பாதிப்பு இருந்தால் ஆண்மைக்குறைவுக்கு அடிப்படை காரணமாக இருக்கும் விறைப்புத்தன்மை செயலிழப்பு ஏற்படும், உயிரணு முந்துதல் பிரச்சனை ஏற்படும், உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவாகும், உயிரணுக்களின் கருவுற வைக்கும் தன்மை குறைவாகும், இதுபோன்று எல்லாவிதமான பிரச்சனைகளும் வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் பெண்களுக்கு இதனால் என்னென்ன பிரச்சனைகள் என்று கேட்டால், பொதுவாக பெண்களுக்கு பெண் உறுப்பில் சர்க்கரை வியாதியால் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. என்னென்ன பிரச்சனைகள் வரலாம், ஏன் வரலாம் என்று எங்கள் மருத்துவமனை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தினோம். அதன் முடிவுகள் வெளியானதில், சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் எவ்வளவு வருகிறது என்று பார்த்தால், பாதிக்கப்பட்ட பெண்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் பாலியல் உறவு முறைகளில் பிரச்சனைகள் வருகிறது.
முதலில் அது உறவு முறைகளில் ஆர்வம் இல்லாத நிலையாக இருக்கலாம், விருப்பம் குறைவாக இருக்கலாம், பாலியல் உணர்வுகள் குறைவாக இருக்கலாம். இரண்டாவது, பாலியல் உணர்வுகள் நார்மலாக இருந்தால் கூட, பாலியல் உறவுக்கான எழுச்சி குறைவாக இருக்கலாம். மூன்றாவதாக, இதனால் ஏற்படுகிற சில உச்ச கட்டங்களுக்கான பிரச்சனைகளை சீரான முறையில் அவர்களால் உணர முடியாமல் இருக்கலாம், நான்காவதாக, முக்கியமான விஷயமாக வலிகளும் ஏற்படலாம்.
அதனால் பாலியல் விஷயத்துகான இந்த 4 செயல்பாடுகளுமே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பாதிப்புகள் எந்தெந்த வழிமுறைகளில் வரலாம்?
சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு அவர்களது உடலில் பலவிதமான தொற்று கிருமிகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் ஹார்மோன் மாற்றங்கள், செல்களில் மாற்றங்கள் ஆகியவை உருவாகிறது. இது தவிர கடைசியில் அவர்களின் உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக ரத்தக்குழாய்களில் பழுது, நரம்பு மண்டலங்களில் பழுது, அதில் உள்ள தோல் பகுதிகள் மற்றும் ஜவ்வு பகுதிகளில் பழுது போன்றவையெல்லாம் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிற ஒரு முக்கியமான விஷயம் ஆகும்.
எனவே சர்க்கரை நோய் பாதிப்பு இருக்கிற பெண்களுக்கு, பாலியல் உறவு கொள்வதில் ஏன் ஆர்வம் ஏற்படாமல் இருக்கிறது என்று பார்த்தோமென்றால், இதுபற்றி வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் சொல்லப்படுகிற ஒரு கருத்து இந்த பெண்களுக்கு உறவு கொள்வதில் ஆர்வம் குறைவு என்பதுதான். அதாவது அந்த பெண்களுக்கு உறவு கொள்ளலாம் என்கிற எண்ணங்கள் வரலாம், ஆனால் உறவு கொள்வதற்கான ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. இது பலராலும் மறுக்கப்பட முடியாத உண்மை.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் முதல் முக்கியமான காரணம், பெண் உறுப்புகளில் ஏற்படுகிற சில உலர்வு தன்மைகள் ஆகும். குறிப்பாக உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது, இந்த பெண்களுக்கு பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்பட்டு, பல நேரங்களில் ஈஸ்ட்ரோஜன் வருவது குறைவாகி, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகமாகி, அதனால் ஏற்படும் சில பிரச்சனைகளால் பெண்களுக்கான உலர்வுத்தன்மை அதிகரிக்கிறது. இதன் மூலம் பெண் உறுப்பில் ஏற்படுகிற மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவை மூலம் அவர்களின் ஆர்வம் குறைவாகலாம். பல நேரங்களில் இதற்கு சில நவீன சிகிச்சை முறைகளும் தேவைப்படலாம்.
அந்த வகையில் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு, இந்த ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவது ரொம்ப ரொம்ப பொதுவான விஷயம் ஆகும். அதனால் தான் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு மாறுபடும், ஈஸ்ட்ரோஜன் அளவுகள் மாறுபடும். ஆண்களுக்கு அதுவே சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் போது, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாகும், ஈஸ்ட்ரோஜன் அதிகமாகும். அப்போது ஆண்களுக்கு ஏற்படுகிற தோல் தொடர்பான மாற்றங்கள் அனைத்தும் இதனை அடிப்படையாக கொண்டது.
நரம்பு மண்டலம், ரத்தக்குழாய்களில் பழுது:
பெண்களுக்கு சர்க்கரை வியாதியால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படும் நிலையில் அதன் தொடர்ச்சியால் என்னென்ன பாதிப்புகள் வரலாம் என்று பார்த்தால், பெண்களுக்கு பொதுவாக இந்த ஹார்மோன் குறைவு ஏற்படும் நிலையில் உறவு கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் உறவு கொள்ளும்போது செயல்படக்கூடிய விதங்களில் பல குறைபாடுகள் ஏற்படலாம்.
ஏனென்றால் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குறிப்பாக முதலில், நரம்பு மண்டலமும், ரத்தக்குழாய்களும் பழுதாகும். இதன் காரணமாக பெண் உறுப்புக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். மேலும் பெண்ணுறுப்பை சீராக வைத்திருக்கிற நரம்பு மண்டலம் பழுதாகும் நிலையில், அவர்கள் பாலியல் உறவு கொள்வதில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே சர்க்கரை வியாதி உள்ள பெண்களுக்கு உடல் ரீதியாக இந்த பிரச்சனைகள் எல்லாம் ஏற்படும் போது, கண்டிப்பாக தானியக்கமாக சர்க்கரை அளவு மேலும் அதிகமாகி, அதனால் ஏற்படும் பின் விளைவுகள் அதிகரிக்குமே தவிர, அவர்களுக்கு அது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.
அப்படியென்றால் சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு பாலியல் உறவு பிரச்சனைகள் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே இருக்குமா என்று பயப்பட வேண்டாம். என்னை பொருத்தவரை சர்க்கரை வியாதி இருக்கிற பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியுமா என்று என்னிடம் கேட்டால், முடியும் என்பது தான் என்னுடைய பதில். சரி... அவர்களுக்கு பாலியல் பிரச்சனைகள் வராமல் எப்படி தடுப்பது என்பதை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.