- அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசி பெற்றவர்கள்.
- பூசம் நட்சத்திரம் நாளில் பெருமாளை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும்.
27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும். இந்த நட்சத்திரம் கடக ராசியில் அமைந்துள்ளது. இதன் அதிபதி சனியாகும். இந்த நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. பூசம் என்ற வார்த்தை பூஷ்யம் என்ற வார்த்தையில் இருந்து வரையறுக்கப்பட்டது. பூஷயம் என்றால் ஒளி அல்லது வளம் தரும் ஒளி என்று பொருள். வானில் நீண்ட அம்பு கூடை போன்ற வடிவில் காட்சி தரும். இதன் உருவம் புடலம் பூ எனவும் அம்பு எனவும் மூல நூல்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. தைப்பூச திருநாளன்று சக்தி தேவி முருகனுக்கு தொடுத்த சக்திவேலையும், அஸ்திரங்களையும் வானில் பூச நட்சத்திர வடிவில் தரிசிக்கலாம். சிவசக்தி மற்றும் முருகன் அருள் பெறலாம்.
பூசம் நட்சத்திரத்தின் பொது பலன்கள்
பூசம் நட்சத்திரம் பெண் ராசியான கடகத்தில் சஞ்சரிப்பதால் இவர்களுக்கு தாய்மை உணர்வு மிகுதியாக இருக்கும். உடல் மற்றும் மனம் வலிமை மிகுந்தவர்கள்.
மனோ பலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற பழமொழி பூச நட்சத்திரத்திற்கு மிக பொருந்தும். முத்தாய்பான முயற்சியுடையவர்கள். காலில் சக்கரம் கட்டிக் கொண்டு உழைப்பவர்கள். துணிவு, சிக்கனம் மிகுந்தவர்கள்.
எதிரிகளை வெல்லும் தைரியம் உண்டு. திட்டமிடுதலில் ராஜ தந்திரி. இவர்கள் ஒரு செயலுக்குத் திட்டமிட்டால் கனகச்சிதமாக இருக்கும். சமூக அதிகாரம் மிகுந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே, வாழும் காலத்தில் அனைத்து அதிர்ஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்கள். அதிர்ஷ்ட தேவதைகளின் ஆசி பெற்றவர்கள்.
இன்சூரன்ஸ், உயில் சொத்து, போட்டி, பந்தய வெற்றி போன்ற அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
முன்னோர்களின் நல்லாசிகள் நிரம்பியவர்கள். வாய் ஜாலம் நிறைந்தவர்கள். தன் பேச்சுத் திறமையால் அனைவரையும் கவர்ந்து பொருளீட்டுவார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் பேசியே சரி செய்து விடும் திறமை உண்டு. நிரந்தரமான தொழில் கூட்டாளிகள், நண்பர்கள், வாடிக்கையாளர்கள் உண்டு. பல தொழில் முனைவோர்களுக்கு ரோல் மாடலாக வாழ்வார்கள்.
கல்வி
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளம் நிறைந்தவர்கள் என்பதால் கதை, கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர்களாக இருப்பார்கள். ஆசிரியர், எழுத்தாளர், கலைத்துறை, மருத்துவம், ஜோதிடம், இலக்கணம், யோகா, பயணம் மற்றும் டூரிசம் பிரிவுகளில், ஓட்டல்-ரெஸ்டாரன்ட் தொடர்பான படிப்புகள், மத போதகர், பண்டிதர், வெளிநாட்டு வாணிபம், போஸ்டல் மற்றும் கூரியர் சேவைகள, போன்ற துறைகள் பொருத்தமானதாக இருக்கும்.
தொழில்
வெளிநாட்டு வணிகம் மற்றும் முன்னோர்களின் குலத் தொழில் ஆகியவற்றில் கை தேர்ந்தவர்கள். உள்ளுணர்வு மிகுந்தவர்கள். பயணம் சார்ந்த தொழில் மற்றும் கடல் சார்ந்த தொழிலில் ஆர்வம் அதிகம். நாடகம், கலை, வர்த்தகம் தொடர்பான பிசினஸ் லாபம் தரும். அத்துடன், பால் பொருட்கள், விவசாயம், தோட்டக்கலை, கால்நடைகள் வளர்த்தல், உணவுப்பொருட்கள் தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்தல், அரசியல், பாராளுமன்றம், சட்டமன்ற உறுப்பினர், மத போதகர், கவுன்சிலர், சைக்காலஜிஸ்ட், தன்னார்வ தொண்டர், ஆசிரியர், பயிற்சியாளர், குழந்தைகள் காப்பகம், பிளே ஸ்கூல், வீடு, டவுன்ஷிப் அல்லது சொசைட்டி கட்டுபவர், மத தொடர்பான நிகழ்ச்சிகள் அல்லது சமுதாய நிகழ்ச்சிகளை நிர்வகிப்பவர், சமூக சேவை, போக்குவரத்து போன்ற தொழிலில் ஈடுபடுவார்கள்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
பொருளாதார வெற்றி, வீடு மனை வாகனம் போன்றவை உண்டு. சகிப்பு தன்மை கொண்ட வாழ்க்கை துணை அமையும். மனதிற்கினிய வாழ்க்கை துணையாக அழகு அந்தஸ்து நல்ல புரிந்துணர்வு, உடையவராக இருப்பார்.
திருமணத்திற்கு பிறகு அதிர்ஷ்டம் அதிகமாகும். சந்திரனைப் போல வருமானமும் நிலையற்றதாக இருந்தாலும் கிடைக்கும் பொருளை கவனமாக பாதுகாத்து பயன்படுத்துவார்கள். வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளுடன் எப்போதும் சேர்ந்து வாழ விரும்புவார்கள். பெண் தெய்வங்களை அதிகம் விரும்பி வழிபடுவார்கள்
தசா பலன்கள்
சனி தசா: பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். இதன் தசா காலம் 19 வருடம். பிறந்த நட்சத்திர பாதத்திற்கு ஏற்ப இதன் தசா வருடம் வழி நடத்தும். சுய ஜாதகத்தில் சனி பலம் பெற்றால் பெற்றோர்கள் நல்ல வசதியான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவார்கள். நன்றாக படித்து முதன்மை மாணவராக திகழ்வார்கள். சனி பலம் குறைந்தால் இளமை வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
புதன் தசை: இது தன தாரையின் நட்சத்திரம். இதன் தசா வருடம் 17. கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு சினிமாத் துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பல வகையில் புகழ் பெறும் வாய்ப்புள்ளது. இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, போன்றவற்றிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவார்கள்.
வாழ்க்கையில் அத்தனை வசதிகளையும் பெறுவார்கள். சனி தசாவின் கால அளவிற்கு ஏற்ப புதன் தசாவில் நிலையான, தொழில் உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு, வாகனம் என வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள். குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார். கடின உழைப்பினால் செல்வாக்கு மிக்க தலைவர்களாகவும், பிரபலங்களாகவும் மாறுவார்கள்.
கேது தசா: இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து தாரையின் தசாவாகும். இதன் தசாவருடம் 7 ஆண்டுகள் பணி நிமித்தமாக வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகளை விட்டு தள்ளி இருக்க நேரலாம். ஆனால் குடும்ப வாழ்வில் எந்த பாதிப்பும் நேராது. வாழ்க்கையில் நல்ல வசதிகளை அடைய உழைப்பீர்கள். அமைதியான மற்றும் ஒழுக்கமான குணம் கொண்ட நீங்கள் மற்றவர்களின் முறையற்ற செயல்களால் சில நேரங்களில் பாதிக்கப்படலாம். இந்த காலத்தில் உங்கள் மனதில் இருப்பதை வார்த்தைகளாக கூறுவதில் சிரமப்படுவீர்கள். இதனால் உங்களது மனது காயப்படக்கூடும். கடவுள் நம்பிக்கை அதிகமாகும். சில போராட்டங்களை வாழ்க்கையில் சந்திப்பீர்கள். அதன் பிறகு வளர்ச்சி காண்பீர்கள்.
சுக்ர தசா: இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசாவாகும். இதன் தசா வருடம் 20. சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவையாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும். கேது தசாவில் இழந்த இன்பங்களை சுக்ர தசா மீட்டுத்தரும். உங்களது நல்ல குணங்களால் மற்றவர்கள் மத்தியில் புகழடைவீர்கள். புனித யாத்திரை செல்வீர்கள். யோகா, மந்திர தந்திரங்கள், ஜோதிடம் போன்றவற்றில் ஆர்வம் அதிகமாகும் சுய ஜாதகத்தில் சுக்ரனுக்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் எதிர் பாலினத்தினரால் மன உளைச்சல் அதிகமாகும். சிலருக்கு இந்த காலகட்டத்தில் மறு விவாகம் நடக்கும்.
சூரிய தசா: இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும். சிறி சிறு இன்பங்களை அடைய விரும்புவீர்கள். பாராட்டுக்கு மயங்குவீர்கள் சுய ஜாதகத்தில் சூரியன் பலம் குறைந்தால் கடன், வறுமை, பரம்பரை நோய் தாக்கம் ஏற்படும். இதனால் உங்களது திருமண வாழ்வில் சலசலப்புகள் ஏற்படலாம். உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை இருக்கும். முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும். முன்கோபத்தால் பிறரை வருத்திவிட்டு பின்பு வருத்தம் கொள்வீர்கள். நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களை பெற முடியும்.
சந்திர தசா: இது ஆறாவதாக வரக்கூடிய சாதக தாரையின் தசாவாகும். மன அமைதியை விரும்புவீர்கள். நல்ல புத்திசாலி தனதுத்துடன் பாரபட்சமின்றி நடப்பதுடன் எளிமையான வாழ்வை பின்பற்றுவீர்கள். இரக்க குணம் தயாள குணம் அதிகமாகும்.
ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
பூசம் நட்சத்திரத்தின் சிறப்புகள்:
இந்த நட்சத்திரத்தில் உச்சமடையும் கிரகம் குரு என்பதால் வியாதிகளுக்கு மருந்து உண்ண சிறந்த நட்சத்திரமாகும். பூசம் நட்சத்திரம் நாளில் பெருமாளை வழிபட்டால் தீராத வியாதிகளும் தீரும். ஆலய திருப்பணிகள் தொடங்கவும் ஆலயங்களில் விக்ரக பிரதிஷ்டை, அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் போன்ற தெய்வ காரியங்களை செய்வதற்கு உகந்த நட்சத்திரமாகும். சித்த மருத்துவர்கள் இந்த நட்சத்திரம் வரும் நாளில் மூலிகை பறித்தால் அந்த மூலிகைகளில் விசேஷ சக்தி நிரம்பி இருக்கும். இந்த நாளில் விரதம் இருந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் பொதுஜன வசியம் ஏற்படும். மாந்திரீக தகடுகள் எழுதுபவர்கள் பூசம் நட்சத்திரம் உதிக்கும் நாளில் எழுதினால் அந்த தகடுகளில் ஜீவ ஓட்டம் எளிதில் ஏற்படும். இதன் உருவம் புடலம் பூ என்பதால் கொடி வகைகள், மலர்க்கொடி மற்றும் செடி வகைகளை நடுவதற்கு உரிய நட்சத்திரம் ஆகும். வாஸ்து சாந்தி பரிகாரம் செய்வதற்கும் வித்யாரம்பம் செய்வதற்கும் பூசம் ஏற்ற நட்சத்திரமாகும்.
செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்
மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனைகோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.
நட்சத்திர பட்சி: நீர்காகம்
யோகம்: திருதி
நவரத்தினம்: நீலம்
உடல் உறுப்பு: முகம்
திசை: தென் கிழக்கு
பஞ்சபூதம் : நீர்
அதிதேவதை: குரு
நட்சத்திர மிருகம்: பெண் கரடி, ஆடு
நட்சத்திர வடிவம்: புடலம் பூ, அம்பு
நட்சத்திர விருட்சம்: அரசு
நன்மை தரும் நட்சத்திரங்கள்:
சம்பத்து தாரை. ஆயில்யம்,கேட்டை, ரேவதி
சேம தாரை: பரணி, பூரம், பூராடம்
சாதக தாரை: ரோகிணி, அஸ்தம், திருவோணம்
பரம மிக்ர தாரை : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
பரிகாரம்: பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களின் தேவையறிந்து உதவ வாழ்வியல் மாற்றம் ஏற்படும்..
பூசம் நட்சத்திர நாளில் முருகன் வழிபாடு செய்வது நல்லது.
பூச நட்சத்திரகாரர்களின் தல விருச்சம் அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.
சாதக தாரையான அஸ்தம் நட்சத்திர நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் அனைத்து வளங்களும் பெருகும்.