வாக்காளர் அடையாள அட்டை வந்த வரலாறு
- நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.
- பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.
வாக்காளர் அடையாள அட்டை...
இது சாத்தியமா...
அதுவும் அதிக அளவு மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவது என்பது எப்படி முடியும் என்று நினைத்திருந்த ஒரு காலம் உண்டு.
ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1993-ம் ஆண்டு, நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.
இது உலக நாடுகளையே ஆச்சரியப்பட வைத்தது.
இமாலய சாதனை
இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடியை தாண்டிவிட்டது. அதிலும் 94 கோடியே 50 லட்சத்து, 25 ஆயிரத்து 694 கோடி பேர் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களாக உள்ளனர். உலக அளவில் மிக அதிக வாக்காளர்களை கொண்ட நாடு இந்தியாதான்.
இவ்வளவு பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நாட்டில், அனைவருக்கும் வாக்களிக்க அடையாள அட்டை வழங்கி இருப்பது இமாலய சாதனைதான்.
நாடு இப்போது 18-வது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான, தேர்தலை சந்திக்க உள்ளது.
இந்த சூழ்நிலையில், தற்போது நடைமுறையில் இருக்கும் வாக்காளர் அடையாள அட்டை உருவான வரலாறு பற்றி பார்ப்போம்.
சுகுமார் சென்
நம் நாட்டில் வாக்களிக்கும் வாக்காளர் அனைவருக்கும், இவர் தான் வாக்காளர் என்று அறிவதற்கும், வாக்குப்பதிவில் முறைகேட்டை தவிர்ப்பதற்கும் ஒரு அடையாள ஆவணம் வேண்டும் என்று முடிவு செய்த இந்திய தேர்தல் ஆணையம், கடந்த 1957-ம் ஆண்டு வாக்காளர் அடையாள அட்டை திட்டத்தை முன்மொழிந்தது.
இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்தான், வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வரவேண்டும் என்ற விதையை போட்டவர்.
அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, அதாவது 1958-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ந்தேதி, இதற்கான மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதை அறிமுகம் செய்தவர் அப்போதைய சட்ட மந்திரியாக இருந்த அசோக் குமார் சென். இவர், சுகுமார் சென்னின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் 1958-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்தேதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை தேர்தல் ஆணையாளராக கே.வி.கே.சுந்தரம் பதவி ஏற்றார். அடுத்த சில நாட்களில் அடையாள அட்டை வழங்க வகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, சட்டமாகியது.
கொல்கத்தா இடைத்தேர்தலில் அறிமுகம்
வாக்காளர் அடையாள அட்டையை நடைமுறைப்படுத்த, தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டபோதும், ஏனோ தாமதாமாகிக் கொண்டே சென்றது.
இருப்பினும் 1960-ம் ஆண்டு மே மாதம் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா தென்மேற்கு பாராளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை சோதனை முயற்சியாக கொண்டு வந்தது.
பலர் புகைப்படம் எடுக்க முன்வரவில்லை. குறிப்பாக பெண்கள் தங்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவித்தனர். இடைத்தேர்தல் நடைபெற்ற அந்த ஒரு தொகுதிக்கே ரூ.25 லட்சம் வரை தேவைப்பட்டது. அன்றைய காலத்தில் இது மிகப்பெரிய தொகையாகும்.
தேர்தல் நடத்தும் செலவைவிட, வாக்காளர் அடையாள அட்டைக்கான செலவு அதிகமாக இருந்த காரணத்தால், அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
உயிர் பெற்ற திட்டம்
19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த திட்டம் மீண்டும் உயிர் பெற்றது.
ஆம்!... 1979-ம் ஆண்டு சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இது ஓரளவு சாத்தியமானதால், அசாம், மேகாலயா, நாகாலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் கிடைத்த வெற்றியே 1993-ம் ஆண்டு அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது சாத்தியமானது.
டி.என்.சேஷன்
இதை செய்து காட்டியவர், அப்போது தேர்தல் ஆணையாளராக இருந்த டி.என்.சேஷன். அவரது காலத்தில்தான், தேர்தல் நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
பல்வேறு தடைகளை தாண்டி 1993-ம் ஆண்டு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முழுமையாக அறிமுகம் செய்யப்பட்டது.
ஆரம்பத்தில் வாக்காளர் அடையாள அட்டை என்பது கறுப்பு நிறத்தில் இருந்தது. அதன் முதல் பக்கத்தில் வாக்காளரின் புகைப்படம், பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம் ஆகியவை இடம் பெற்று இருக்கும்.
பின்பக்கத்தில் வீட்டு முகவரி, தொகுதி, பாகம் (வாக்குச்சாவடி எண்) ஆகியவை இடம் பெற்று இருக்கும்.
இதில் வேடிக்கை என்னவென்றால், ஆரம்ப காலங்களில், வாக்காளர் அடையாள அட்டைக்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அந்த அட்டையில் இடம்பெறும்போது தெளிவற்றதாகவும், கேலிக்குரியதாகவும் இருந்தது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது.
மின்னணு வாக்காளர் அட்டை
பின்னர் அந்த தவறுகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலும் புகைப்படத்துடன் வந்தது. தற்போது அழகிய வண்ணப்புகைப்படத்துடன், பிளாஸ்டிக் அட்டையில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இந்த வளர்ச்சியின் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை நடைமுறைக்கு வந்துவிட்டது.
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை என்பது, வாக்காளர் அடையாள அட்டையின் திருத்தமுடியாத, பாதுகாப்பான 'பி.டி.எப்' பதிப்பாகும். மேலும் இதில் வரிசை எண், பகுதி எண் மற்றும் பிற புள்ளிவிவரங்களுடன், பாதுகாப்பான 'கியூ-ஆர்' குறியீடும் உள்ளது.
இதனை செல்போன் மற்றும் கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, சேமித்து வைக்கலாம்.
வாக்காளர் அடையாள அட்டையை எப்படி பெறுவது?
இந்தியாவில் பிறந்த 18 வயது நிறைவடைந்த அனைவரும் வாக்களிக்க தகுதியானவர்கள்.
18 வயது நிறைவடைந்தவர்கள், தேர்தல் ஆணையம் வழங்கும் படிவம் 6-ஐ நிரப்பி, அதனை உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இது தவிர தேர்தல் ஆணையம் அவ்வப்போது நடத்தும் சிறப்பு முகாம்களில், வாக்காளர் அட்டையில் உள்ள முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை செய்யலாம்.
மனநோயாளிகள், கடன் வாங்கி திவால் ஆனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாது.