சிறப்புக் கட்டுரைகள்

உடல் ஆரோக்கியத்தில் தாதுஉப்புக்கள்

Published On 2024-09-20 09:06 GMT   |   Update On 2024-09-20 09:06 GMT
  • ஆயுளை நீட்டிப்பதற்கு தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை.
  • நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் உள்ளன.

நம் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கும், ஆயுளை நீட்டிப்பதற்கும் தாது உப்புக்கள் மிகவும் அவசியமானவை. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினத்திற்கும் பொருந்தும்.

இந்த தாது உப்புகளின் வேலை என்ன? குறைந்தால் என்ன பாதிப்புகள் ஏற்படும்? அதைத் தடுக்க நாம் என்ன உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

நம் உடலில் 14 வகையான முக்கிய தாதுஉப்புகள் (மினரல்கள்) உள்ளன.

இதில் 6 தாது உப்புக்கள் அதிக அளவில் தேவைப்படக்கூடியவை, அவை கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம் ஆகும்.

குறைந்த அல்லது மிகக் குறைந்த அளவு தேவைப்படுபவைகள் இரும்பு மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், அயோடின், கோபால்ட், செலீனியம், மாலிப்டினம் ஆகியவைகள் ஆகும். இவை அனைத்தும் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.

அனைத்துத் தாது உப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம் உடலில் 300-க்கும் அதிகமான வளர்சிதை மாற்றங்கள் மற்றும் உயிர் வேதியியல் எதிர்வினைகள் (பயோகெமிக்கல் ரியாக்சன்ஸ்) நடக்க உதவி புரிகின்றன.


கால்சியம்

கால்சியம் எல்லா வயதினருக்கும் தேவையான ஒன்று. நம் எலும்புகள் மற்றும் பற்களைப் பாதுகாக்கக் கால்சியம் அவசியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அத்துடன் கசியும் நம் ரத்தத்தை உறைய வைப்பதற்கும், இதயம், தசைகள், நரம்புகள், செல்கள், திசுக்கள் சீராக இயங்குவதற்கும் இது அவசியம்.

கால்சியத்தின் குறைபாட்டால் உடல் வலி, எலும்பு வலி, எலும்பு உடைதல், சதைகள் துடிப்பது, உடல்சோர்வு, கண்ணில் புரை விழுதல், சீரற்ற இதயத் துடிப்பு, ஞாபகமறதி ஆகியவை ஏற்படுகின்றன. எனவே நம் அன்றாட வாழ்வில் கால்சியம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியம்.

கால்சியம் நிறைந்த உணவுகள்: பால் மற்றும் பால்சார்ந்த பொருட்கள், கொண்டைக்கடலை, கீரைகள், பாதாம், சால்மன் மீன், அத்திப்பழம், பருப்பு வகைகள், வெள்ளை பீன்ஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, விதைகள் மற்றும் ஆரஞ்சு ஆகியவையாகும்.


பாஸ்பரஸ்

இது ஒரு கனிமம் ஆகும். உடலில் எலும்புகள், பற்கள், உடல் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. நம் உடலில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ உற்பத்தியில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. தசை வலிமையைப் பாதுகாக்கிறது. சிறுநீரகங்களில் கழிவுகளை அகற்ற உதவுகிறது.

நாம் உண்ணும் உணவுகளில் இருந்து உடலுக்குத் தேவையான பாஸ்பரஸைப் பெற்றுவிடலாம். இதன் குறைபாட்டினால் பசியின்மை, மனப்பதற்றம், எலும்பு வலி, உடல் இறுக்கம், உடல் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை ஏற்படுகின்றன.

பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவுகள்: முட்டை, சீஸ், தயிர், டார்க் சாக்லேட் மற்றும் பால் போன்ற உணவுகள்.


மெக்னீசியம்

நமது உடலிற்குத் தேவையான மிகவும் அத்தியாவசியமான 7 மினரல்களில் மிகவும் முக்கியமானது இந்த மெக்னீசியம். இதன் பற்றாக்குறையினால் நம் உடலில் எலும்பு சார்ந்த குறைபாடுகள், பசியின்மை, அடிக்கடி தலைவலி, குமட்டல், தசை வலி, தசைப்பிடிப்பு, தொடு திறன் குறைவு, தசைச் சுருக்கம் மற்றும் மன அழுத்தம் அதிகப்படியான கோபம், தூக்கமின்மை போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகள் உருவாகின்றன.

மேலும் இதயம் தொடர்பான சிக்கல்கள், சுவாசக் கோளாறுகள், மைக்ரைன் எனப்படும் ஒற்றைத் தலைவலி மற்றும் வலிப்பு நோய் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்: உலர் பழங்கள், முந்திரி, பாதாம், முழு தானிய வகைகளான கோதுமை, சிகப்பரிசி மற்றும் கருப்பு கொண்டைக் கடலை, பச்சை காய்கறிகள், பிரக்கோலி, வாழைப்பழம், விதைகள் குறிப்பாக எள் மற்றும் சூரியகாந்தி விதை, மீன் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், இறைச்சி, சாக்லேட், காபி.


சோடியம்

இது உடலின் எலக்ட்ரோலைட்டுகளில் ஒன்றாகும். உடலின் பெரும்பாலான சோடியம் ரத்தத்திலும் செல்களைச் சுற்றியுள்ள திரவத்திலும் உள்ளது. சோடியம் உடலில் நீர்ச் சத்தைச் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மற்றும் தசைச் செயல்பாட்டில் சோடியம் முக்கியப் பங்கு வகிக்கிறது. சோடியமானது நம் உடலில் வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது.

நம் உடலில் சோடியத்தின் அளவானது லிட்டருக்கு 135-145 மில்லி சமநிலையில் (இணையாக/சமமாக) இருக்க வேண்டும். இதன் அளவு குறையும்போது உடல் சோர்வு, தலைவலி, வாந்தி, மயக்கம், தலைசுற்றல், தசைப் பிடிப்பு, சுயநினைவை இழத்தல், மனப்பதற்றம், கவனிக்கும் திறன் குறைதல், சிந்திக்கும் ஆற்றல் குறைதல், வலிப்பு என்று பல வகையான நரம்புக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

சோடியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள்: கேரட், நூல்கோல், பீட்ரூட், கீரைகள் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு மற்றும் முட்டையின் மஞ்சள் கரு.


பொட்டாசியம்

மன ஆரோக்கியத்திற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும், தசைகள் வலுப்பெறவும், உடலில் இருக்கக் கூடிய அழுக்குகள் வெளியேறவும், திரவ அளவை உடலில் சீராக வைத்துக் கொள்ளவும், நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கவும் பொட்டாசியம் மிகவும் அவசியமான ஒன்று.

இதன் குறைபாட்டினால் சீரற்ற இதயத் துடிப்பு, தசைச் சோர்வு, தசைப் பிடிப்பு, மலம் இறுகல், மதமதப்பு ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது.

பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்: வாழைப்பழம், ஆரஞ்சு, தேன், திராட்சை, கீரைகள், உருளைக்கிழங்கு மற்றும் புரோக்கோலி.


இரும்பு

இது நம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உடல் வெப்பநிலையைச் சீராக வைக்கவும், சீரண உறுப்புகள் சரியாகச் செயல்படவும் உதவுகிறது. கருவுற்ற பெண்களுக்கு இரும்புச் சத்து மிகவும் அவசியம். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது, எனவே உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கு இது அவசியம். இரும்புச் சத்துக் குறைவினால் ரத்தச்சோகை பற்றி பகுதி 12-இல் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகள்: கீரைகள், முந்திரி, பாதாம், வால்நட்ஸ், உலர்ந்த பழங்கள், பேரீச்சம் பழம் மற்றும் மாதுளை.

எவ்வளவு தேவை?

தாது உப்புகள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தேவை என்பதை பார்ப்போம்.

கால்சியம்-1000 மிகி

பாஸ்பரஸ்-700 மிகி

மெக்னீசியம்-ஆண்கள் - 400 மிகி, பெண்கள் - 310 மிகி

சோடியம்- 1200 மிகி - 1500 மிகி

பொட்டாசியம்- 1600 - 2000 மிகி

கந்தகம்-1000 மிகி

இரும்பு-ஆண்கள் - 8 மிகி, பெண்கள் - 18 மிகி

மாங்கனீசு-ஆண்கள் - 2.3 மிகி, பெண்கள் - 1.8 மிகி

தாமிரம்-900 மிகி

துத்தநாகம்-ஆண்களுக்கு 11 மிகி, பெண்களுக்கு 8 மிகி

அயோடின்-150 மைகி

கோபால்ட்-5-8 மைகி

செலீனியம்-55 மைகி

மாலிப்டினம்- 45 மைகி


தாது உப்புகள் நிறைந்த உணவுகள்:

மேல் கூறப்பட்டுள்ள அனைத்து வகையான தாதுஉப்புகளும் நம் உடலுக்குக் கிடைக்க நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்- காய்கறிகள், கீரைகள், பழங்கள், பால், பால் சார்ந்த பொருட்கள், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், உலர்ந்த பழங்கள் மற்றும் விதைகள் முளைக்கட்டிய தானியங்கள் போன்றவைகளாகும்.

இவற்றில் தாதுஉப்புகள் மட்டுமல்லாமல் வைட்டமின்களும் நிறைந்துள்ளதால் நாம் என்றுமே ஆரோக்கியமாகவும், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதையேதான் நம் முன்னோர்கள் "உணவே மருந்து" என்று கூறியிருக்கிறார்கள்.

Tags:    

Similar News