சிறப்புக் கட்டுரைகள்
null

பிராங்க்ளின் உருவாக்கிய வெற்றி சூத்திரம்... இன்று புதிதாக என்ன செய்யலாம்?

Published On 2024-02-07 15:34 IST   |   Update On 2024-02-07 15:36:00 IST
  • அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார்.
  • உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை பிராங்க்ளின் ஆதரித்தார்.

அமெரிக்காவின் நூறு டாலர் நோட்டைப் பார்த்திருக்கிறீர்களா? அதில் பிரதானமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா? அவர் தான் அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களில் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின். அவரை கவுரவிக்கும் விதமாகவே அமெரிக்கா தனது நூறு டாலர் நோட்டில் அவர் படத்தைச் சித்தரித்துப் பெருமைப்படுகிறது. அவரைப் பெருமைப்படுத்துகிறது!

 

பன்முகப் பரிமாணம் கொண்ட அவரது வாழ்க்கை பிரமிக்க வைக்கும் ஒன்று. அவரது சுயசரிதை அனைவரும் படிக்க வேண்டிய ஒரு நூல்.

பிறப்பும் இளமையும்: மிக சாதாரணமான எளிய குடும்பத்தில் 1706-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் பிறந்தார் பெஞ்சமின் பிராங்க்ளின்.

அவரது தந்தை ஜோசையா பிராங்க்ளின் சோப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பவர். அவருக்கு இரு மனைவிகள் மூலம் 17 குழந்தைகள் உண்டு. பத்தாவதாகப் பிறந்தவர் பிராங்க்ளின்.

ஏழ்மையான குடும்பம். ஆகவே அவரை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. ஓராண்டு மட்டுமே அவரால் பள்ளிக்குப் போக முடிந்தது.

ஆனால் இயல்பாகவே எதையும் கூர்ந்து கவனிக்கும் அவர் ஏழாவது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். கிடைத்த நேரத்தைப் பயன்படுத்தி நான்கு மொழிகளைக் கற்றார்.

இளம் வயதில் செய்தித்தாள்களை விற்க ஆரம்பித்த அவர் தானாகவே ஒரு செய்தித்தாளை ஆரம்பித்து சிறப்பாக நடத்த ஆரம்பித்தார். ஒரு பிரிண்டிங் பிரஸை நிறுவிய அவர் அதில் ஏராளமான சோதனைகளைச் செய்து பார்க்க ஆரம்பித்தார்.

ஒவ்வொரு நாள் காலையிலும் புதிதாக இன்று என்ன செய்யலாம் என்று யோசிப்பது அவரது வழக்கமாக ஆனது.

இதனால் தான் அவர் 23 வயதிலேயே ஒரு அச்சக முதலாளியாகவும், பத்திரிகை வெளியீட்டாளராகவும் எழுத்தாளராகவும் ஆக முடிந்தது. பின்னால் அரசியல் ஈடுபாடு காரணமாக ஒரு ராஜ தந்திரி ஆனார். விஞ்ஞானி ஆனார். பிலடெல்பியா போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாக 1737 முதல் 1753 வரை பதவி வகித்தார்.

அரசியல் வாழ்வு: சமுதாய அக்கறை கொண்டு அதை மேம்படுத்தும் எல்லா விஷயங்களிலும் அவர் ஈடுபட ஆரம்பித்தார். பிரான்சுக்கான முதல் யு.எஸ். தூதுவராக அவர் நியமிக்கப்பட்டார். 1785 முதல் 1788 முடிய அவர் பென்சில்வேனியா தலைவராக ஆனார். இங்கிலாந்துடன் நல்ல உறவை மேற்கொண்ட அவரது புகழ் பரவியது.

முதலில் தனது பத்திரிகையில் 'அடிமைகள் விற்பனைக்கு' என்று விளம்பரத்தை பிரசுரித்து வந்த அவர், பின்னர் அது தவறு என்று உணர்ந்து மனம் மாறி அடிமைத்தனத்தை ஒழிக்க வெகுவாகப் பாடுபடலானார். அப்போது அமெரிக்க புரட்சி தோன்றவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அமெரிக்க காலனிகள் 13ஐயும் ஒன்றிணைக்க முனைந்து உழைத்தார்.

அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களுள் ஒருவர்: அமெரிக்காவை நிறுவிய நிறுவனர்களுள் ஒருவராக பெஞ்சமின் பிராங்க்ளின் அறியப்படுகிறார். அமெரிக்க புரட்சியை நடத்தி 13 காலனிகளை ஒருங்கிணைத்து யுனைடட் ஸ்டேட்சின் சுதந்திர பிரகடனத்தில் கையெழுத்திட்டு அரசியல் அமைப்பை உருவாக்கியவர்கள் இவர்களே.

13 அம்சத் திட்டம்: தனக்குத் தானே அவர் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். வெற்றி பெற வாழ்நாளில் தான் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய 13 அம்சங்களை ஒரு தாளில் அவர் குறித்து வைத்துக் கொண்டார்.

1. நடுநிலைமையுடன் அணுகல் 2. மவுனம் 3. ஒழுங்கு 4. உறுதி எடுத்தல் 5. சிக்கனம் 6. உழைப்பு 7. நேர்மை 8. நியாயம் 9. சுத்தம் 10. மிதமான போக்கு 11. அமைதி 12. தூய்மை 13. எளிமை

இந்த 13 அம்சங்களையும் ஒரு தாளில் குறித்து வைத்துக்கொண்டு எதிரே வார நாட்களைக் குறித்து ஒவ்வொரு வாரமும் ஒரு அம்சத்தை மட்டும் மிகுந்த கவனத்துடன் மனமூன்றி அவர் கடைப்பிடிப்பார். அதை நாள்தோறும் அவர் சரி பார்ப்பார். அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் X குறிகளை இடுவார். இப்படி தினமும் இவற்றைச் சரிபார்க்கப் பார்க்க நாளடைவில் அவரது தாளில் X குறிகள் குறைந்தது. இப்படி வருடத்தில் உள்ள 52 வாரங்களில் நான்கு முறை இந்த 13 அம்ச திட்டத்தை அவர் கடைப்பிடித்தார். இதன் பலன் அபாரமாக இருந்தது. அதை அவரது வாழ்க்கையின் வெற்றி காண்பித்தது;

நேர்மை, நியாயம் என்பதில் தான் செய்த தவறுகளை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். முறை தவறி தனக்கு ஒரு மகன் பிறந்ததை அவர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். வில்லியம் என்ற அந்த மகனைத் தானே வளர்த்தார். இந்த 13 அம்சத் திட்டம் அனைவருக்குமானது. உலகின் ஆகப் பெரும் விற்பனையாளராகத் திகழ்ந்த பிராங்க் பெட்கர், பிராங்கிளினின் திட்டத்தினால் உத்வேகம் பெற்றார். தனது விற்பனைத்துறையில் தனக்கேற்றவாறு 13 குணாதிசயங்களை அவர் குறித்து வைத்துக் கொண்டு முன்னேறலானார்.

அவர் கொண்ட 13 அம்சத் திட்டம் 1. உற்சாகம், 2. ஒழுங்கு, 3. மற்றவர் பார்வையில் எதையும் பார்த்தல், 4. கேள்விகளைக் கேட்டல், 5. மற்றவரின் முக்கிய தேவையை உணர்தல், 6. மவுனம் (எதிரில் இருப்பவர் சொல்வதை உன்னிப்பாகக் கேட்டல்), 7. நேர்மை, 8. தனது வேலை பற்றிய அறிவு, 9. மற்றவரைப் பாராட்டுதல், புகழ்தல் 10. புன்சிரிப்புடன் பழகுதல், 11. பெயர்களையும் முகங்களையும் நினைவிலிருத்தல், 12. வாடிக்கையாளர் சேவை, 13. விற்பனையைத் திறம்பட முடித்தல்.

தனக்கென ஏற்படுத்திக் கொண்ட இந்த கொள்கை திட்டத்தை அவர் கடைப்பிடித்ததால் உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக ஆனார். ஆகவே முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தனக்கென ஒரு 13 அம்சத் திட்டத்தை உருவாக்கி அதைத் தினமும் ஊன்றிக் கவனித்துக் கடைப்பிடித்தால் வெற்றி நிச்சயம். இப்படி வெற்றிக்கு ஒரு புதுமுறை வழிகாட்டியாக ஆனார் பெஞ்சமின் பிராங்க்ளின். அவர் செஸ் விளையாட்டில் நிபுணர். நீச்சல் வீரர். வாழ்நாள் முழுவதும் சைவ உணவையே மேற்கொண்டார். தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்எங்ஙனம் ஆளும் அருள் என்ற வள்ளுவரின் கோட்பாட்டை கடைப்பிடித்தவர் அவர்...

பிராங்க்ளின் எபெக்ட்: அரசியல் வாழ்வில் அவர் தன் கொள்கைகளை எதிர்க்கும் பலரையும் அன்றாடம் சந்திக்க வேண்டியிருந்தது. எதிராளிகளைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் அவர்கள் தன்னைத் தாக்குவதைக் குறைப்பதிலும் அவர் ஒரு புதுவழியைக் கையாண்டார்.

ஒரு முறை தன்னை வெகுவாக எதிர்த்து வந்த சட்டமன்ற உறுப்பினரை தானும் தீவிரமாக எதிர்க்காமல் அவரிடம் சென்று அவரது நூலகத்தில் உள்ள ஒரு நூலைப் படிக்கத் தர முடியுமா என்று வேண்டினார். இந்த வேண்டுகோளினால் புளகாங்கிதம் அடைந்த எதிராளி தனது நூலை அவரிடம் படிக்கக் கொடுத்தார்.

பிராங்க்ளின் அந்தப் புத்தகத்தைப் படித்த பின்னர் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்து ஒரு குறிப்புடன் புத்தகத்தைத் திருப்பித் தந்தார். அன்றில் இருந்து பிராங்க்ளினை ஆக்ரோஷமாக விமரிசிப்பதை அவர் குறைக்க ஆரம்பித்தார். இதிலிருந்து அவர் கற்ற பாடம், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்யும்போது அவரைப் பற்றிய நல் அபிப்ராயம் அதிகமாவதோடு அவரை விரும்பவும் ஆரம்பிக்கிறார் என்பது தான்.

இந்த உத்தியை அறிவியல் அறிஞர்கள் 'பிராங்க்ளின் எபெக்ட்' என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

இது சரிதானா என்பதைக் கண்டுபிடிக்க பின்னால் அறிவியல் ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. இது அதிசயிக்கத்தக்க விதத்தில் பலனைத் தருகிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளன.

இது மட்டுமல்ல, பிறர் ஒரு விஷயத்தைக் கூறும்போது அதில் அவர் மாறுபட்ட அபிப்ராயத்தைக் கொண்டிருந்தால் அதை நேரடியாக எதிர்த்துப் பேசுவதை கைவிட்டார். 'சந்தேகமின்றி', நிச்சயமாக' என்ற வார்த்தைகளைத் தவிர்த்து, 'நான் நினைப்பது என்னவென்றால்', 'எனக்கு இப்போது இப்படித் தோன்றுகிறது' என்ற வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். இது நல்ல பலனைக் கொடுத்தது. விவாதங்களை இதன் மூலமாக நிறுத்திய அவர் அனைவராலும் போற்றப்படும் உயரிய நிலையை அடைந்தார்.

குழந்தைகளிடம் அன்பு: அவர் சாலையில் சென்று கொண்டிருக்கும்போது குழந்தைகள் அவரது கையைப் பிடித்து முத்தமிடுவது வழக்கம். ஒருநாள் வழியிலே அவரைச் சந்தித்த குழந்தை ,"ஐயா! கடவுளை எங்கே காண முடியும்? நீங்கள் தான் பெரிய மேதை ஆயிற்றே! எனக்கு வழியைச் சொல்லுங்கள்" என்று கேட்டது.

பிராங்க்ளின் புன்னகை புரிந்தார். ஒளிவெள்ளம் பாய்ச்சும் ஆகாயத்தைச் சுட்டிக்காட்டி, "அதோ பிரகாசிக்கிறதே, அந்த சூரியனைக் கொஞ்சம் பாரேன்" என்றார். அந்தக் குழந்தை பார்க்க முயன்றது. ஆனால் உடனே கையால் கண்களை மூடிக்கொண்டு, "சூரிய வெளிச்சத்தை என்னால் தாங்க முடியவில்லை' என்று கூறியது.

பிராங்க்ளின், "என் அருமைச் செல்வமே! இறைவனைக் கண்ணால் பார்க்க முடியாது. சூரியன் எப்படி வெப்பம், ஒளி இவற்றின் மூலமாக இருக்கிறதோ அது போல முடிவற்ற நல்லனவற்றின் தொகுப்பு தான் இறைவன். எல்லையற்ற பேரறிவே இறைவன். நன்றாக ஆராயத் துவங்கு. உனது ஒவ்வொரு நாளும் நல்ல தன்மையால் மெருகு பெறும். அப்போது இறைவனின் சாந்நியத்தை உணர்வதோடு உனது ஆத்மாவே இறைவனின் பிரதிபிம்பம் என்பதை உணர்வாய்" என்றார்.

விஞ்ஞானி பிராங்க்ளின்: இயல்பாகவே புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட பிராங்க்ளின் அச்சகத்தில் நிறைய மாற்றங்களைச் செய்தார். உலோகத்தினால் செய்யப்படும் நாணயங்களில் போலி நாணயங்கள் அதிகரிப்பதை எண்ணி, பேப்பரில் நோட்டுகளை அடிக்கும் புதிய வழியை அவர் ஆதரித்தார். இதற்காக புதிய பேப்பரையும் புதிய மையையும் தயாரித்தார். 1729-ம் ஆண்டு பேப்பர் கரன்சியைத் தயாரித்தார். ஒரு பட்டத்தை இரும்புத்தடி ஒன்றுடன் பறக்கவிட்டு மின்னலில் மின்சாரம் இருப்பதைக் கண்டறிந்தார். மின்சாரத்தில் பாசிடிவ், நெகடிவ் என்ற வார்த்தைகளை முதலில் அறிமுகப்படுத்தியவர் அவரே. ஜனத்தொகை கணக்கெடுப்பை முதலில் ஆரம்பித்தவர் அவரே. அதே போல கடல் சம்பந்தமான பல ஆய்வுகளை ஆரம்பித்தவரும் அவரே.

மறைவு: நடு வயதில் இருந்தே பிராங்க்ளினுக்கு உடல் பருமன் ஒரு பிரச்சனையாக இருந்தது. கீல் வாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் 1787-ல் அமெரிக்க சட்டம் கையெழுத்திடப்படும் போது உடல் நிலைமை மோசமாக ஆகவே வெளியுலகில் வருவதைத் தவிர்த்தார்.

1790, ஏப்ரல் 17-ம் நாளன்று நுரையீரல் உறை வீக்கத்தால் மரணமடைந்தார். இறக்கும்போது அவரது மகள் சற்று ஒருக்களித்துப் படுக்குமாறு கூறியபோது "இறக்கும் ஒரு மனிதனுக்கு எதுவும் சுலபமில்லை" என்று கூறியவாறே உயிர் துறந்தார்.

நமக்கென ஒரு வெற்றித் திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி அதை வகுத்து, கடைப்பிடித்து வெற்றி கண்ட பிராங்க்ளின் வெற்றிக்கு ஒரு வழிகாட்டி என்பதில் ஐயமே இல்லை!

தொடர்புக்கு:-

snagarajans@yahoo.com

Tags:    

Similar News