சிறப்புக் கட்டுரைகள்

பீலேவின் வெற்றி ரகசியம்

Published On 2024-05-08 11:22 GMT   |   Update On 2024-05-08 11:22 GMT
  • உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று.
  • பீலே இளம் வயதில் ஷூ பாலிஷ் போட்டும், வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

மிகுந்த ஏழ்மையில் பிறந்து தன் முயற்சியால் முன்னேறி ஒரு நாட்டில் நடந்த போரையே தற்காலிகமாக நிறுத்தி தன்னைக் காணச் செய்த ஒரு பெரும் வீரர் யார்?

உலகமே சொல்லும் கால்பந்து மன்னன் பீலே, பீலே என்று!

பிறப்பும் இளமையும்: பீலே என்று உலகத்தினரால் அறியப்படும் எட்ஸன் அராண்டெஸ் டொ நாசிமெண்டோ 1940-ல் அக்டோபர் 23-ம் தேதி டொண்டின்ஹோ என்பவருக்கும் செலஸ்டி அராண்டெஸ் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

சகோதரர்கள் இருவரில் இவரே மூத்தவர். தந்தை ஒரு கால்பந்து விளையாட்டுக்காரர். பிரேசில் நாட்டில் ட்ரெஸ் கொராகஸ் என்ற இடத்தில் அவர் பிறந்தார். மிக ஏழ்மையான குடும்பம். தனது 6-ம் வயதில் பீலே ஷூக்களுக்கு பாலிஷ் போட்டும், வறுத்த வேர்க்கடலையை விற்றும் பணம் சம்பாதித்தார்.

தந்தையின் நண்பர் ஒருவரின் பெயரை தவறாக பீலே என்று உச்சரிக்க அவரை நண்பர்கள் செல்லமாக அவரை பீலே என்றனர். அதுவே நிலைத்து விட்டது.

ஆனால் அமெரிக்க கண்டுபிடிப்பாளரான எடிஸன் பெயர் தான் அவருக்கு சூட்டப்பட்டிருந்தது. தனது பெயருக்கு என்ன அர்த்தம் என்று தனக்குத் தெரியாது என்றும் போர்த்துக்கீசிய மொழியில் அந்த வார்த்தைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்றும் அவர் தனது சுயசரிதத்தில் பின்னால் எழுதியுள்ள்ளார். ஆனால் எது எப்படியானாலும் உலகத்தினருக்கு அவர் பீலே தான்!

கால்பந்து விளையாட்டு: தந்தை கால்பந்தில் பயிற்சி தர, அந்த விளையாட்டு அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால் கால்பந்து வாங்கக் காசில்லாமல் சாக்கில் கந்தல்துணிகளை அடைத்து கால்பந்து போலச் செய்து தனது பயிற்சியை அவர் தொடங்கினார்.

ஷூ போட வழியின்றி ஷு இல்லாமல் வெறும் காலோடு ஆங்காங்கே இருந்த விளையாட்டு மைதானங்களில் விளையாடி தனது விளையாட்டை அவர் செம்மைப் படுத்திக் கொண்டே இருந்தார்.

உலகக் கோப்பை வெற்றி: தனது 15-ம் வயதில் பிரேசிலின் தேசிய விளையாட்டுக் குழுவில் சாண்டாஸ் நகரக் குழுவிற்காக அவர் விளையாட ஆரம்பித்தார்.

17-ம் வயதிலேயே உலகக் கோப்பையை வென்றார். 1958, 1962, 1970 ஆகிய மூன்று போட்டிகளில் உலகக் கோப்பையை வென்ற அவரது சாதனையைப் பார்த்து உலகமே பிரமித்தது. பிரேசிலுக்காக அவர் 92 விளையாட்டுக்களில் 77 கோல்களைப் போட்டார். பிரேசில் நாட்டின் கதாநாயகனாக ஆனார்.

இவர் விளையாடிய விளையாட்டுக்களில் ஒரு கோலாவது போட்டு விடுவார். 1956-ல் விளையாடியதற்காக அவருக்குக் கிடைத்த தொகை வெறும் பத்து அமெரிக்க டாலர்களே! தனது வருமானத்தை வைத்துத் தான் குடும்பத்திற்காக கேஸ் ஸ்டவ்வையே முதலில் வாங்க வைத்தார்.

ஆனால் பெரும் விளையாட்டு வீரராக உலகை அவர் வலம் வந்த போது அவர் அமெரிக்காவில் தனது வருமானத்திற்கான வரியாக மட்டும் 20 லட்சம் டாலர்களைத் தர வேண்டி இருந்தது. சந்தோஷமாக அவ்வளவு பெரும் தொகையை அவர் வரியாகக் கட்டினார்.

பீலே போட்ட கோல்கள் எத்தனை?

பீலே கால்பந்து விளையாட்டில் போட்ட மொத்த கோல்கள் எத்தனை என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் தொடர்ந்து நிலவுகின்றன. கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் அவரது சாதனையை அங்கீகரித்து அவர் போட்ட கோல்கள் 1279 என்று அறிவித்திருக்கிறது. ஆனால் 2015-ல் பீலே தன்னைப் பற்றிக் கூறுகையில் தான் போட்ட மொத்த கோல்கள் 1283 என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேசிலுக்கு அவர் தந்த உலகக் கோப்பை 1958-ல் பீலே உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு பிரேசிலை முன் நிறுத்தினார். பின்னர் மூன்று உலகக் கோப்பைகளை வென்றார்.

இளம் வயதில் உலகக் கோப்பையை வென்றவரும் இவரே தான், மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே வீரரும் இவரே தான்!

92 முறை ஹாட் ட்ரிக் கோல் அடித்த இவரது சாதனை என்றும் பேசும் பொருளாக ஆகி விட்டது! (ஒரு விளையாட்டில் மூன்று கோல்களைப் போடுவது ஹாட் ட்ரிக் சாதனையாகும்) 31 விளையாட்டுக்களில் இவர் நான்கு கோல்களைப் போட்டு சாதனை நிகழ்த்தியுள்ளார்.

1958-ல் இவர் நிகழ்த்திய சாதனையைப் பார்த்த மக்கள் இவருக்கு 'ஓ ரெ' என்ற பட்டப்பெயரைச் சூட்டினர். இதற்கான அர்த்தம் "மன்னன்" என்பதாகும்.

போரை நிறுத்திய பீலே: மின்னல் போல அங்குமிங்கும் களத்தில் அவர் விளையாடு வதையும் பந்து நகர்த்துவதையும் மடக்குவதையும் முன்னேறிச் சென்று அனாயாசமாக கோல் போடுவதையும் பார்க்க ஆயிரக்கணக்கானோர் முதலிலேயே வந்து நின்று விடுவர். அவரது தோற்றம் அனைவரையும் ஈர்த்தது.

1967-ல் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. இரண்டு குழுக்களுக்குமிடையே நடந்த அந்த உக்கிரமான போர் பீலே அங்கு விளையாட வருகிறார் என்பது தெரிந்ததுமே தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

தற்காலிகமாக இரு நாட்கள் இப்படி ஒரு போரை தன் விளையாட்டால் நிறுத்திய ஒரே வீரர் அவரே. அவரது பெயர் பொறித்த டி ஷர்ட்டுகளை அணிவது ஒரு கௌரவமாகவே கருதப்பட்டது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் முப்பது சட்டைகள் வரை வைத்திருப்பர். இல்லாவிடில் அவர்களால் மைதானத்தை விட்டு வெளியேற முடியாது. அவ்வளவு டிமாண்ட் அந்த சட்டைகளுக்கு!

விளையாட்டுத் துறை அமைச்சர்: பிரேசில் நாடு வளர்ந்து வரும் உலக கதாநாயகனைப் போற்றியதோடு ஒரு சமயம் பயப்படவும் செய்தது - எங்கேயாவது அவர் இன்னொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்று விடுவாரோ என்று!

1995-ல் அவர் பிரேசிலின் விளையாட்டுத் துறை அமைச்சராக்கப்பட்டார். மூன்று ஆண்டுகால பதவி காலத்தில் பிரேசில் நாட்டில் இருந்த லஞ்சம் உள்ளிட்ட களைகளை எல்லாம் அறவே ஒழித்த அவர் நாட்டின் விளையாட்டுத் துறையையே நவீன மயமாக்கினார்.

பீலே தினம்: அவரது நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் நாள், பீலே தினமாக பிரேசில் கொண்டாடி வருகிறது. 1969-ல், நவம்பர் 19-ம் நாளன்று சாண்டோஸ் நகரில் அவர் தனது ஆயிரமாவது கோலைப் போட்டு சாதனை நிகழ்த்தினார்.

இந்த கோலைப் போட்டவுடன் ரசிகர்கள் உற்சாகம் மீறி மகிழ்ச்சி பொங்க மைதானத்தில் நுழைந்து விடவே அரை மணி நேரம் விளையாட்டு நிறுத்தப்பட்டது.

இந்த ஆயிரமாவது கோல் நினைவாக பிரேசில் ஒரு விசேஷ தபால் தலையை வெளியிட்டு இவரை கௌரவித்தது. நூற்றாண்டின் இணையற்ற வீரர்: சென்ற நூற்றாண்டில் இணையற்ற வீரராகத் திகழ்ந்த இவர் "நூற்றாண்டின் வீரர்" என்று கொண்டாடப்படுகிறார்.

வெண்கலத்தினாலான இவரது சிலை ஒன்று ரியோ டி ஜெனிரோவில் திறந்து வைக்கப்பட்டது. ரொனால்ட் ரீகன், எலிசபத் மகாராணி உள்ளிட்ட ஏராளமானோர் அவரைச் சந்தித்து புகழ்ந்து மகிழ்ந்துள்ளனர். இவரை அனைவரும் ப்ளாக் பெர்ல் - கறுப்பு முத்து என்றே அழைப்பது வழக்கமானது.

இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு மிக்க நூறு பேர்களைத் தேர்ந்தெடுத்த டைம் பத்திரிகை பீலேயையும் ஒருவராக அறிவித்தது.

 குடும்பம்: பீலே மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். ஏழு குழந்தைகள் அவருக்கு உண்டு.

அதிர்ஷ்ட சட்டை எங்கே?

எல்லோரையும் போல பீலேக்கும் அதிர்ஷ்டம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார். நண்பர்களும் கால்பந்து ஆர்வலர்களும் மிகவும் கவலையுற்றனர். பீலே தனக்கு ஏன் இப்படிஒரு சோர்வு ஏற்பட்டது என்று யோசிக்கலானார். விடை அவரது மனதில் பளிச்சென உதயமானது.

வழக்கமாக அவர் அணியும் சட்டையை ஒரு கால்பந்து ரசிகர் விரும்பிக் கேட்கவே பீலே அவருக்கு அதைக் கொடுத்துவிட்டார். தனது சட்டை போன அன்றிலிருந்து தான் இந்த மனச்சோர்வு தனக்கு வந்தது என்று அவர் எண்ணினார்.

உடனே ஒரு துப்பறியும் நிபுணரை நியமித்தார். யாருக்கு தான் தனது சட்டையைத் தந்தாரோ அவரைக் கண்டு பிடித்து அதைப் பெற்றுத் தரவேண்டும் என்பதே துப்பறிவாளருக்கு அவர் இட்ட கட்டளை.

பெரும் தேடலை மேற்கொண்ட துப்பறிவாளரும் ஒரு வழியாக அந்த ரசிகரைக் கண்டுபிடித்து சட்டையைத் திருப்பி வாங்கி வந்து அதை பீலேயிடம் தரவே அவருக்கு அடங்காத மகிழ்ச்சி ஏற்பட்டது. அன்றிலிருந்து அவர் பழைய பீலே ஆனார். உற்சாகம் அவருக்குக் கரை புரண்டோடியது.

சரி, உண்மையில் நடந்தது என்ன? துப்பறிவாளர் பீலேயைப் பற்றி மிகவும் கவலைப்பட்டார். ஆகவே பீலே விளையாடிய முந்தைய விளையாட்டின் சட்டையையே செட் - அப் செய்து அவரிடம் தந்து விட்டார் - உண்மையைச் சொல்லாமலேயே! எல்லாம் மனதில் தான் இருக்கிறது என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக் காட்டுகிறது!

பீலே அறக்கட்டளை: 1977-ல் அவர் தீவிர விளையாட்டிலிருந்து ஒய்வு பெற்றார். கால்பந்தாட்டத்திற்கான உலக தூதுவராக ஆனார். மிக்க ஏழ்மையில் வாழ்ந்த அவருக்கு வறுமை என்றால் என்ன என்பது நன்கு தெரியும். ஆகவே உலகின் ஆகப் பெரும் செல்வந்தராக அவர் ஆன போது ஒரு அறக்கட்டளையை நிறுவினார். அதில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் உதவலானார்.

மரணம்: 2019-ல் சிறுநீரகக் கற்களை அகற்ற ஒரு அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டார். தொடர்ந்து பெருங்குடலில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. கொரானா காலத்தில் அவர் புற்று நோய் முற்றவே 2022, டிசம்பர் மாதம் 29-,ம் நாள் உயிரிழந்தார்.

சாண்டோஸ் நகரில் பெல்மிரா ஸ்டேடியத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவர் உடல் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் கூடிய ரசிகர்கள் வரிசையாக வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிரேசில் நாடு 3 நாள் துக்கம் அனுஷ்டித்தது.

சுயசரிதமும் டாகுமெண்டரி படமும்: பீலே திரைப்படங்களில் தோன்றிய காட்சிகளும் உண்டு. இவரைப் பற்றிய டாகுமெண்டரி படமும் எடுக்கப்பட்டது. தனது சுயசரிதத்தையும் பீலே எழுதியுள்ளார். 'மை லைஃப் அண்ட் தி பியூட்டிஃபுல் கேம்' என்பதே அந்த புத்தகத்தின் பெயர். அழகிய விளையாட்டு - பியூட்டிபுல் கேம் - என்பதே இவர் கால்பந்துக்கு சூட்டிய அழகிய பெயராகும். இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகள், மெடல்கள் கணக்கிலடங்கா.

பயிற்சி, பயிற்சி, பயிற்சி: பீலே தனது வாழ்க்கைச் செய்தியாக அறிவித்திருப்பது ஒரே ஒரு வார்த்தை தான் : அது தான் பயிற்சி! பயிற்சி!

பயிற்சி!! பயிற்சி!!! இதுவே வெற்றிக்கான வழி என்பது அவரது கொள்கையாகும்.

அவரது புகழ் பெற்ற பொன்மொழிகளில் சில:

வெற்றி என்பது ஒரு தற்செயலான விஷயம் அல்ல. கடும் உழைப்பு, விடாமுயற்சி, நன்கு கற்பது, தியாகம், எல்லாவற்றிற்கும் மேலாக செய்யும் வேலையில் அளவற்ற ஈடுபாடு - இதுவே வெற்றிக்கு வழி! ஒரு தனிப்பட்ட நபர் ஒரு போதும் ஒரு விளையாட்டை அவரால் மட்டுமே வெல்ல முடியாது.

நான் கால்பந்து விளையாடுவதற்காகவே பிறந்துள்ளேன் - எப்படி பீத்தோவன் இசைக்காகப் பிறந்தாரோ, எப்படி மைக்கெல் ஏஞ்சலோ ஓவியம் படைக்கப் பிறந்தாரோ அது போலத் தான் நான் கால்பந்து விளையாடப் பிறந்துள்ளேன். கால்பந்து பற்றி அவர் கூறியது:

தலை இதயத்துடன் பேசுகிறது; இதயம் கால்களுடன் பேசுகிறது. கால்பந்து எனக்கு ஒரு மதம் போல! நான் பந்தையே வழிபடுகிறேன். அதையே கடவுளாகக் கருதுகிறேன்.

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News