சிறப்புக் கட்டுரைகள்

கலிகாலக் காவலன் கால பைரவர்

Published On 2022-11-13 11:51 GMT   |   Update On 2022-11-13 11:51 GMT
  • கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவர்.
  • பஞ்சகுண சிவமூர்த்திங்களில் பைரவர் வக்ர மூர்த்தி எனப்படுவார்.

தென்னாடுடைய சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவுருக்களுள் பைரவர் ஒருவர். இவரை வைரவர் என்றும் குறிப்பர். பைரவரின் வாகனமாக நாய் இருப்பதால் தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயரும் வழங்குகிறது. பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்றெல்லாம் பலவகையாக அழைக்கின்றார்கள்.

கால பைரவரை சிவ பெருமானின் ருத்திர உருவமாக குறிப்பர்; பெரும்பாலான சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் தெற்கு அல்லது மேற்கு பார்த்தவாறு நின்ற கோலத்தில் காட்சி தருவார்; பன்னிருகரங்களுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் சூடியும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருவார்.அவருக்கு பின்புறம் நாய் ஒன்று நிற்கும். கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவர். பஞ்சகுண சிவமூர்த்திங்களில் பைரவர் வக்ர மூர்த்தி எனப்படுவார்.

பைரவர் தோற்றம்

அந்தகாசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் மிகுந்து, தேவர்கள் முனிவர்களை வதைத்தான். தேவர்கள் பெண் வேடத்தில் தனக்கு சாமரம் வீசப்பணித்தான். அந்தகாசுரன் சிவனிடமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்று, உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம்சென்று வேண்டினார்கள். தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை அகற்ற எட்டு பைரவர்கள் தோன்றியதாக தொல்வரலாறுகள் கூறுகின்றன.

சிவபெருமானை பிரிந்த சக்தி பிரம்மாவின் மானசீக மகனான தட்சன் மகளாக தோன்றினாள். அவள் தாட்சாயினி சதிதேவி என்றும் அழைக்கப்பட்டாள். பருவத்தில் சிவன் மீது இயற்கை ஈர்ப்புக் கொண்டு, தட்சனின் ஒப்புதலின்றி மணம் கொண்டாள். கோபம் கொண்டிருந்த தட்சன் மற்ற தேவர்களுக்கு அழைப்பு அனுப்பி, அவிர்பாகம் பெற வேண்டிய சிவபெருமான்-தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றைத் தொடங்க வெகுண்ட சதி அந்த யாகத்தீயில் விழுந்து இறந்தாள்.

சிவபெருமான் சதிதேவியாரின் உடலோடு அலைவதைக் கண்டு திருமால், சிவபெருமானை மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் அவ்வுடலைத் சிதைத்தார். சதியின் உடற்பகுதிகள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதறுண்டது. சிதறுண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தியின் பீடங்களாக மாற்றினார். தாரகாசுரன் போன்றவர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்கு வரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

பைரவ வடிவங்கள்

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் செயல்படுகின்றனர். சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன. சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்

1)அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் . இவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அன்ன பறவையினை வாகனமாக கொண்டு அருள்செய்கிறார். நவகிரகங்களில் ‎குருவின்‬ கிரக தோஷத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். ‬

2)ருரு பைரவர்‬ அஷ்ட பைரவ வடிவங்களில் இரண்டாமவர் ஆவார். காசி மாநகரில் காமாட்சி கோவிலில் ரிஷபத்தினை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் சுக்கிரனின்‬ கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்

3)சண்ட பைரவர் அஷ்ட பைரவ வடிவங்களில் மூன்றாவதாகும். காசி மாநகரில் துர்க்கை கோவிலில் மயிலை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார்.நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோஷத்திற்காக இவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.

4)குரோதன பைரவர் நான்காவது தோற்றமாகும். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள் செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.

5)உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ வடிவங்களில் ஐந்தாவதாகும். காசி பீம சண்டி கோவிலில் குதிரையை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்..

6)கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தங்களில் ஆறாவது தோற்றமாவார்.காசியில் லாட் பசார் கோவிலில்யானையை வாகனமாக்கிக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.

7)பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்திகளில் ஏழாவதாகும். காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் சிங்கத்தை வாகனமாக்கிக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்..

8)சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். காசி மாநகரில் திரிலோசன சங்கம கோவிலில் நாயை வாகனமாகக் கொண்டு அருள் செய்கிறார். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள்.

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் விளங்கும் பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசிவிஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசியில் காலபைரவர் எட்டு இடங்களில் கோயில் கொண்டுள்ளார். இதனை பைரவ சேத்திரம் என்றும் கூறுகின்றனர்.

பைரவர் தலங்கள்

தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் நடுவெளிக்கு அருகில் காவிரியின் மேற்குக்கரையில் பழமையான இரட்டை காலபைரவர் கோவில் அமைந்துள்ளது.

குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ள க்ஷேத்திரபாலபுரம் எனும் ஊரில் கால பைரவருக்கு தனி கோயில் உள்ளது. சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் இருந்தாலும், தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக் கோயில் இது ஒன்றேயாகும்.

நாகை மாவட்டத்தில் சீர்காழியில் சட்டைநாதரை பிரதானமாகக் கொண்டு எட்டு பைரவர்கள் எழுந்தருளியுள்ளனர்.திருச்சி உறையூர் சாலையில் உள்ள ஜெயகாளிகாம்பாள் கோயிலில் அஷ்ட பைரவர்கள் பைரவிகள் மற்றும் வாகனங்களுடன் அருளுகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகில் ஆறகளுரில் அருள்மிகு பெரியநாயகி உடனுறை காமநாதீசுவரர் ஆலயத்தில் அஷ்ட பைரவர்கள் அருளுகிறார்கள் எனப்படுகிறது.

திண்டுக்கல் தாடிக் கொம்பு சௌந்திரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்தலாதிபதியாக ஸ்வர்ணாகர்ஷன பைரவர் எழுந்தருளியுள்ளார்.

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகில் காரைக்காடு கிராமத்தில் உள்ள பைரவ சாய் பீடத்தில் விதியினை மாற்றும் பன்னிரண்டு ராசிக்கும் உரிய அஷ்ட பைரவர்கள் உடன் சொர்ணாகர்ஷண பைரவரும் இணைந்து நவ பைரவர்களாக காட்சியளிக்கின்றனர்.

காஞ்சிபுரம் திருமாகறல் தலத்தில் அர்த்தநாரி பைரவர் வடிவில் காட்சியளிக்கின்றனர். சென்னை –திருவொற்றியூர் தியாகராஜசுவாமி ஆலயத்தில் சூர சூளாமணி பைரவருக்குத் தனிகோயில் உள்ளது.

சீர்காழி சட்டநாதர் ஆலயத்தில் பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோயில் உள்ளது. காஞ்சிபுரம் வைரவேச்சுரம்: இலுப்பைக்குடி வடுக பைரவரே சிறப்புத் தெய்வமாக வழிபடப்படுகிறார்.

திருப்பத்தூர் யோக பைரவர், புதுச்சேரியிலுள்ள திரு ஆண்டார் கோயில் வடுக பைரவர், திருப்பாதிரிபுலியூர் கால பைரவர், திருமயிலை கபாலீஸ்வரர், திருஒற்றியூர் பைரவர், திருவான்மியூர் பைரவர் முதலிய தலங்களிலுமுள்ள பைரவ வடிவங்கள் அதிக சக்தி உள்ளவர்களாக வழிபடப்படுகின்றனர்.

அனைத்து சிவத்தலங்களிலும் பைரவர் பெரும்பாலும் எழுந்தருளியிருப்பர். தென் தமிழகத்தில் திருப்பத்தூர், பைரவன்பட்டி, அழகாபுரி, பெருச்சிக் கோயில், திருமெய்ஞானபுரம், காரையூர், நெடுமரம், இலுப்பைக்குடி ஆகிய தலங்கள் அஷ்ட பைரவத் தலங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் சன்னதிகளைப் பூட்டியதும் அர்ச்சகர் கோவிலை வலம் வந்து கோவில் சாவிகளை பைரவர் சன்னதியில் ஒப்படைத்தால் தான் அன்றைய பூஜை முடிவடைந்ததாக பொருளாகும்.

வழிபாட்டு நாட்கள்

கலியுகத்திற்கு உகந்த முக்கியமான வழிபாடாக கருதப்படுவதே கால பைரவர் வழிபாடாகும்..பைரவரை ஞாயிற்றுக்கிழமை: ராகு காலத்தில் ருத்ராபிஷேகம், வடை மாலை சாற்றி வழிபட்டால் திருமணப்பேறு சித்திக்கும்.திங்கட்கிழமை வில்வார்ச்சனை செய்தால் சிவன் அருள் கிடைக்கும்.செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்.

பூமி பிரச்சனை உள்ளவர்கள்,புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட பிரச்சினை தீரும்.வியாழக்கிழமையில் விளக்கேற்றி மஞ்சள் மலர் சார்த்திவழிபட்டால் ஏவல், பில்லி, சூன்யம் விலகும்.வெள்ளிக்கிழமை மாலைவேளையில் வில்வ அர்ச்சனை செய்தால் இழந்த செல்வம் சேர்ந்து செழிப்பு உண்டாகும். சனி பகவானுக்கு குரு பைரவர். சனிக்கிழமை பைரவ வழிபாடு செய்ய அஷ்டமச் சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச் சனி அல்லல்கள் குறைந்து மெல்ல நலம் உண்டாகும்.

பலவகை தெய்வ வழிபாடுகளில் முக்கியமான ஒன்று பைரவ வழிபாடு ஆகும். பைரவர் எதிர்ப்புகளையெல்லாம் முறியடிக்கும் வல்லமையோடு துன்பங்களை நீக்கி தீயசக்திகளை ஒதுக்கி காத்தருளும் சக்தி மிக்கவர் என்று பக்தர்கள் போற்றுகிறார்கள்.

பைரவருக்கு உகந்தது அஷ்டமி திதி. அதிலும் தேய்பிறையில் வரக்கூடிய அஷ்டமியில் பைரவரை வணங்குவதும் வழிபடுவதும் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்ற கருத்து நிலை பெற்றிருந்தாலும் அனைத்து அஷ்டமியும் பைரவரை வணங்குவதற்கான நாள்தான். வழிபடுவதற்கு உரிய நாட்களே.

பைரவருக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. மிளகு கலந்த வடை நைவேத்தியம் செய்வது உன்னதமானது. அதேபோல் தயிர்சாதம் விசேஷமானது என்கிறது ஆகமமும் சோதிடமும்.

ஐப்பசி தேய்பிறை அஷ்டமி பைரவ ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பைரவ ஜெயந்தியில் பைரவருக்கு மிளகு கலந்த சாதம் நைவேத்தியம் செய்து வேண்டிக்கொள்ளலாம். தயிர்சாதம் நைவேத்தியம் செய்யலாம். வடை மாலை சார்த்தியும் பிராத்தனை செய்யலாம்.

பைரவர் அபிஷேக பிரியர் என்பதாலும் அவர் அபிஷேகப் பிரியர் என்பதாலும் அவருக்கு விபூதி அபிஷேகம் செய்யலாம். அஷ்ட கால பைரவரை விபூதி அபிஷேகம் செய்து வணங்கினால் பயங்கள் அகலும், தோஷங்கள் நீங்கும். வயிறு தொடர்பான நோய்கள், இதய நோய் உள்ளிட்ட தீராத நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

அனைத்து பைரவ தலங்களிலும் சிறப்பு பூஜை நடைபெறுகின்றது என்றாலும் அஷ்ட பைரவர்களுடன் மஹாபைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர்கள், வேலூர் மாவட்டம் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு பிரதி அஷ்டமியில் சிறப்பு பூஜைகளும் ஹோமங்களும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் சங்க காலத்தில் பைரவ வழிபாடு நடந்ததற்கான குறிப்புகள் இதுவரை கிசைக்கவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டன் எடுத்தனூரில் உள்ள மஹேந்திர வர்மனின் 34ம் ஆண்டு நடுகல்லில் வீரனும் நாயும் செதுக்கப்பட்டு வழிபாட்டில் இருந்துள்ளது. இது பைரவ வழிபாட்டின் தொடக்க நிலையென்பர்.

திருச்சேறை தேவாரத்தில் "விரித்த பல்கதிர் கொள் சூலம், வெடிபடு தமருகம், கை தரித்தது ஓர் கோல காலபயிரவன்ஆகி, வேழம் உரித்து, உமை அஞ்சக் கண்டு, ஒண் திரு மணிவாய் விள்ளச் சிரித்து, அருள்செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே."என பைரவர் தோற்றம் குறிக்கப்படுகிறது.

பழங்காலம் முதல் இருந்துவரும் பைரவரை அஷ்டமியில் விளக்கேற்றி வழிபடுங்கள். பயத்தையெல்லாம் போக்குவார். பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைப்பார்.

Tags:    

Similar News