சிறப்புக் கட்டுரைகள்

கனடா ஆடும் கண்ணாமூச்சி விளையாட்டு

Published On 2024-10-19 09:23 GMT   |   Update On 2024-10-19 09:23 GMT
  • உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது.
  • கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள்.

இந்தியா - கனடா இடையே என்னதான் பிரச்சனை? இதனால் யாருக்கு என்ன சாதகம்? (அ) பாதகம்?

இந்தக் கேள்வி, சில நாட்களாகப் பரவலாகக் கேட்கப்பட்டு வருகிறது. இது பற்றி விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பாக...

உலக அரசியல், நாளுக்கு நாள், உள்ளூர் அரசியலாக மாறி வருகிறது. சர்வதேசப் பார்வை, சர்வதேசப் பயன்பாடு, சர்வதேச ஒருங்கிணைப்பு, சர்வதேச செயல்பாடு... இவற்றை உள்ளடக்கி, மனித குலத்தை இயன்ற வரையில் ஒரே சமூகமாய் ஒன்றிணைப்பதே சர்வதேச அரசியலின் நோக்கம் ஆகும். ஆனால், இதை நோக்கி சர்வதேச அரசியல் நகர்வதே இல்லை.

அவ்வப்போது 'சித்தாந்தப் போர்கள்', உலக நாடுகளை ஒன்று சேர விடாமல் தடுத்த போதிலும், பொதுவாக, உலகப் பிரச்சனைகள், உலகளாவிய தீர்வுகள், சர்வதேச அரசியலில் முக்கிய இடம் வகித்தன.

சமீப காலத்தில், சர்வதேச அரசியலின் தரம் பெருத்த சரிவைக் கண்டுள்ளது.'உள்ளூரில் உற்பத்தி; வெளிநாட்டில் வர்த்தகம்' - நீண்ட காலமாக இருந்து வருகிற பொருளாதார நடைமுறை. இதையே தலைகீழாய் மாற்றி, 'வெளிநாட்டு அரசியல்; உள்நாட்டில் அறுவடை' என்கிற புதிய யுக்தி, பிரபலம் அடைந்து வருகிறது. இதற்குக் காரணம், சில முரட்டு நாடுகளின் வறட்டுத் தலைவர்கள்.

இந்தப் பட்டியலில் இப்போது கனடாவை இணைத்துள்ளார் - அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ருடோ. தமது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள எந்த நிலைக்கும் செல்ல, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தீர்மானித்து விட்டால், அர்த்தமற்ற பேச்சுகளும் ஆபத்தான நடவடிக்கைகளும் தொடரத்தானே செய்யும்? ஜஸ்டின் ரூடோவின் செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கின்றன.

'சீனாவின் ஆதரவால் தான் இதற்கு முன் ஜஸ்டின் ரூடோ தேர்தலில் வெற்றி பெற்றார்; தற்போது தனது கட்சிக்குள் எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிக்கவே கனடாவின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக ஜஸ்டின் ரூடோ பொய் சொல்கிறார்' என்று, கனடாவின் முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, அப்பட்டமாகக் கூறுகிறது.

கடந்த ஆண்டு, ஹர்தீப் சிங் நிஜார் என்பவர் கனடாவில் கொலை செய்யப்பட்டார். இவர் காலிஸ்தான் தீவிரவாதி என்று இந்தியாவால் அடையாளம் காணப்பட்டவர்.

 

இந்தக் கொலையின் பின்னணியில் இந்திய தூதரக அதிகாரிகளின் பங்கு உள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறுகிறார். இந்திய அரசு இந்த குற்றச்சாட்டை வன்மையாக முழுமையாக மறுக்கிறது.

தனது புகாருக்கான ஆதாரத்தை வழங்குமாறு இந்திய அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது. இதுவரை அப்படி எந்த ஒரு ஆதாரத்தையும் கனடா அரசு வழங்கவில்லை.

சமீபத்தில் இந்தப் பிரச்சனை தொடர்பாக கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகளை இந்திய அரசு திருப்பி அனுப்பியது. இத்தனைக்குப் பிறகு நேற்றைய தினம் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, தன்னிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். உளவுத்துறை தந்த தகவலின் அடிப்படையில் மட்டுமே கூறுவதாகச் சொல்கிறார். இப்படி ஒரு பொறுப்பற்ற பேச்சு ஒரு நாட்டு நிர்வாக தலைமையிடம் இருந்து வருவது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கனடா நாட்டில் சுமார் 8 லட்சம் சீக்கியர்கள் வசிக்கிறார்கள். இந்தியாவுக்கு வெளியே, சீக்கிய மக்கள் அதிகம் வசிக்கும் நாடு கனடா.

1980-90களில் சீக்கியர்களுக்கு என்று தனியே காலிஸ்தான் நாடு கோரிக்கை வலுவாக எழுந்தது. குறிப்பாக 1984 ஜூன் மாதம் நிகழ்ந்த 'ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார்' சீக்கியர் மனதில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

தமது மிக உயரிய புனித தலமான பொற்கோயிலில் ராணுவம் நுழைந்து சண்டையிட்டதை, அங்கே இரத்தம் சிந்தப்பட்டதை சீக்கிய மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த சம்பவத்துக்குப் பிறகு காலிஸ்தான் முழக்கம் தீவிரம் அடைந்தது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்திலும், கனடா நாட்டிலும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பெருகியது.

பிறகு படிப்படியாக அரசின் நடவடிக்கைகள், சீக்கியர்களின் மனமாற்றம், மாறிப்போன அரசியல் சூழல் போன்ற காரணங்களால் பஞ்சாபில் பயங்கரவாதம் மறைந்து போனது. ஆனால் கனடாவில் சீக்கிய பயங்கரவாதிகள் தொடர்ந்து இன்று வரை சீக்கியர்களுக்கான தனிநாடு முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.

கனடா நாட்டில் இருந்து கொண்டு பயங்கரவாதம் மற்றும் தீவிர குற்ற செயல்களில் ஈடுபடும் 26 பேரை இந்தியாவுக்கு அனுப்புமாறு, கடந்த 10 ஆண்டுகளில் பலமுறை இந்திய அரசு கனடாவை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் இன்று வரை இதன் மீது கனடா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

காலிஸ்தான் பயங்கரவாதிகள் விஷயத்தில் ஜஸ்டின் ரூடோவின் அரசு, பாராமுகமாகவே நடந்து கொள்கிறது. இதற்குக் காரணம் கணிசமாக உள்ள சீக்கியர்களின் வாக்குகள். அதாவது, சீக்கியர்களின் வாக்கு வங்கியைத் தவற விட ரூடோவுக்கு மனமில்லை. இந்த வாக்கு வங்கி அரசியல்தான் இன்று, தூதரக அதிகாரிகள் நீக்கம் வரை, நீண்டு இருக்கிறது.

நல்ல வேளையாக, ரூடோவின் அரசியல் தப்புக் கணக்குகளை கனடா மக்களும் புரிந்து வைத்துள்ளார்கள். எனவேதான் ரூடோவின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கு அவருடைய கட்சிக்கு உள்ளே கூட பெருத்த ஆதரவு கிடைக்கவில்லை.

இதற்கு அரசியல் களம் மட்டுமல்ல, கனடாவின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணம். மிகவும் மோசமாக இல்லை என்றாலும் கூட, கனடா நாட்டுப் பொருளாதாரம் மிகச் சிறப்பாக, மிக வலுவாக இல்லை என்பதே உண்மை. பொருளாதாரத்தில் எங்கேயும் சிறிதளவு சரிவு ஏற்பட்டாலும் அது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். இது, அங்குள்ள அரசியல் தலைவர்கள், மக்களுக்கு நன்கு தெரிந்து இருக்கிறது.

இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவைப் பொருத்தமட்டில், 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டு முடிவில், கனடாவின் இறக்குமதி, ஏற்றுமதி முறையே $956மி மற்றும் $2522 மி என்கிற அளவில், கனடாவுக்கு சாதகமாக இருக்கிறது. அதாவது இந்தியாவில் இருந்து கனடா செய்யும் இறக்குமதியை விட, கனடாவில் இருந்து இந்தியா செய்யும் இறக்குமதி அதிகம். ஆகவே ஒருவேளை இந்தியா - கனடா இடையே வர்த்தக உறவு தடைப்பட்டால், இந்தியாவை விடவும் கனடாவுக்கே பொருளாதார பாதிப்பு அதிகமாகும்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு எந்த ஒரு நாடும் பொருளாதாரத்தை பாதிக்கும் எந்த செயலிலும் இறங்கும் நிலையில் இல்லை. இங்குதான் ட்ரூடோவின் பேச்சையும் செயலையும் கனடா மக்கள் பெரிதும் ஆட்சேபிக்கிறார்கள்.

'நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு...? இவருக்கு ஏன் இந்த வேலை..?' என்று அங்கிருந்து வலுவான குரல்கள் எழுகின்றன.

இருநாட்டு வர்த்தகத்துக்கு அப்பால் வேறொரு முக்கிய அம்சமும் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் மேற்படிப்புக்காக இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் கனடாவுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை.

ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று லட்சம் இளைஞர்கள், இந்தியாவில் இருந்து கனடா வருகின்றனர். இதன் மூலம் கனடாவுக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி மிகவும் கணிசமானது. அவர்களின் வருகை தடைப்பட்டால் அல்லது நின்று போனால், கனடாவுக்கு அது, ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக முடியலாம்.

மேற்படிப்புக்காக கனடா நாட்டுக்குச் செல்ல இளைஞர்கள் ஆர்வமாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது - அங்குள்ள குடியுரிமை சட்டம். உலகின் வேறு எந்த நாட்டையும் விட, கனடா நாட்டில் குடியுரிமை பெறுவது வெகு எளிது.

 

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் - காந்திய சிந்தனையாளர்

இந்த நிலையில்,ஒரு கேள்வி எழுகிறது - தற்போது எழுந்துள்ள பிரச்சனை காரணமாகத் தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு ஏதும் இடையூறு ஏற்படுமா..? அயல்நாட்டுக் கல்வி என்னும் கனவோடு இருக்கும் பல்லாயிரம் இந்திய மாணவர்களுக்கு, கனடா செல்வது இனி சாத்தியம் இல்லையா..?

இந்தியா கனடா நெருக்கடி பொருத்தமட்டில், இரு அரசுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கிற உரசல் தானே தவிர்த்து, இரு நாட்டு மக்களிடையே உறவில் எந்த விரிசலும் இல்லை. என்ன பொருள் ..? கனடாவில் தங்கிப் படிப்பதில் எந்த ஆபத்தோ சிக்கலோ இல்லை.

எப்போதும் போல பாதுகாப்பான சூழலே நிலவுகிறது. கவலை கொள்ளும் படியான கலவரச் சூழல் நிச்சயமாக இல்லை. இது விஷயத்தில் இந்திய அரசு மிக கவனமாக, மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்கிறது.

சர்வதேச உறவுகளை உன்னிப்பாக நோக்கினால் ஓர் உண்மை புரியும். தூதரக உறவுகளை முறித்துக் கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் அப்படி ஒன்றும் புதிதல்ல. பலமுறை பல நாடுகளுக்கு இடையே நடந்து வருகிற, ஒருவகையில் சாதாரண நடவடிக்கை தான் இது. ஓரிரு நாட்களில் அல்லது ஓரிரு மாதங்களில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் எல்லாம் தாமாகவே மறைந்து போகும்.

இதற்கு அச்சாரமாக, நேற்று ஜஸ்டின் ரூடோவின் பேச்சையே குறிப்பிடலாம்.

"இந்தியாவின் ஒருமைப்பாட்டை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஒரே இந்தியா என்பது தான் எங்களின் கொள்கை. இதற்கு மாறான கருத்தை ஏற்பதில்லை என்பதே எனது அரசின் கொள்கை நிலைப்பாடு." இந்தியா கனடா இடையே உறவு மோசமடைந்து விடக்கூடாது என்பதே தனது விருப்பம் என்றும் கூறுகிறார்.

இந்தியா கனடா இடையே எல்லைப் பிரச்சனை எதுவும் இல்லை. சித்தாந்த ரீதியாகவும் விரோதமோ பகைமையோ இல்லை. முதலீடுகளில் ஆகட்டும், பணிபுரிவோரின் செயல் திறன், விசுவாசம் ஆகட்டும்.. இந்தியாவின் மீது கனடாவுக்கு துளி அளவும் அதிருப்தி ஏற்படக் காரணமே இல்லை.

கனடாவில் சுமார் 28 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களின் பங்களிப்பால் கனடாவின் பொருளாதாரம் மிகவும் பயன் பெற்று வருகிறது. இப்படி எல்லா வழிகளிலும் எல்லா வகைகளிலும் இந்தியா உடனான நட்புறவால் கனடாவுக்கே சாதகங்கள் அதிகம் உள்ளன.

எந்தவொரு நாட்டோடும் தனது ராஜ்ய உறவுகளை முறித்துக் கொள்ள இந்தியா என்றுமே விரும்புவது இல்லை. இதனைக் கனடா அரசும் அறியும்; கனடா மக்களும் அறிவார்கள்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ஒன்று மட்டும் உறுதியாய்த் தெரிகிறது - ஒரு தனி மனிதனின் ஆசைக்கோ வெறுப்புக்கோ இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவில் குந்தகம் வந்து விடக்கூடாது என்பதில் தலைவர்களை விடவும் மக்களுக்கு அதிக அக்கறை இருக்கிறது. அவ்வப்போது வந்து போகிற ரூடோ போன்ற சுயநலத் தலைவர்களால் நீண்ட கால நிலைத்த நட்பு குலைந்து போகாது குறைந்து போகாது. நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..?

Tags:    

Similar News