சிறப்புக் கட்டுரைகள்

மராட்டியத்தில் மல்லுக்கட்டும் பாஜக

Published On 2024-10-18 06:23 GMT   |   Update On 2024-10-18 06:23 GMT
  • உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார்.
  • சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

மராட்டியம், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20-ந்தேதி தேர்தல் நடக்கிறது. 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு நவம்பர் 13-ந்தேதி (43 தொகுதி) நவம்பர் 20-ந்தேதி (38 தொகுதி) என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

அரியானா, காஷ்மீர் மாநிலங்களில் பாஜகவும், காங்கிரசும் விறுவிறுப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதை மிஞ்சும் வகையிலான பரபரப்பை மராட்டிய மாநில தேர்தல் எதிர்நோக்கி காத்திருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சியை அவசியம் கைப்பற்ற வேண்டும் என்ற நிர்பந்தமான சூழ்நிலையில் பாஜக இருக்கிறது.

நாட்டின் பொருளாதார தலைநகரமான மும்பையை கொண்டு இருக்கும் மராட்டியத்தை தன் வசம் வைத்திருப்பதை பாஜக கவுரவமாகவும் கருதுகிறது. உத்தரபிரதேசத்துக்கு அடுத்த படியாக அதிக எம்.பி.க்கள் தொகுதிகளை (48) வைத்திருக்கும் மாநிலம் என்பதாலும் மராட்டிய தேர்தலை பா.ஜ.க. தலைவர்கள் கவனமுடன் அணுகி உள்ளனர்.

நாட்டின் மக்கள் தொகையில் 2-வது பெரிய மாநிலமான மராட்டியத்தில் 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 11 கோடியே 24 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் 9 கோடியே 63 லட்சம் பேர் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களது கையில்தான் மராட்டியத்தில் அடுத்து யார் ஆட்சியில் அமருவார்கள் என்பது அடங்கி உள்ளது.

கடந்த 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த 3 சட்டசபை தேர்தல்களை ஆய்வு செய்தால் பாஜக கட்சி நல்ல வலுவுடன் இருப்பது தெரிய வரும். 2009-ல் 46 இடங்களிலும், 2014-ல் 122 இடங்களிலும், 2019-ல் 105 இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது.


மராட்டியத்தில் காலம் காலமாக தாக்கரேயின் சிவசேனாவும், பாஜகவும் நல்ல நட்புடன் இருந்தனர். அந்த அடிப்படையில் தான் 2019-ம் ஆண்டு தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் 56 இடங்களில் வெற்றி பெற்ற சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவி கேட்டு பாஜகடன் உள்ள கூட்டணி உறவை துண்டித்தார்.

அதோடு 54 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியில் அமர்ந்தார். ஆனால் 2022-ம் ஆண்டு சிவசேனா முக்கிய தலைவர்களில ஒருவரான ஏக்நாத் ஷிண்டே அந்த கட்சியை உடைத்து 39 எம்.எல்.ஏ.க்கள், 12 எம்.பி.க்களுடன் தனியாக பிரிந்தார். அது போல தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த அஜித்பவார் அந்த கட்சியை உடைத்து 42 எம்.எல்.ஏ.க்களுடன் தனி கட்சி தொடங்கினார்.

இதன் காரணமாக 2022-ல் உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்தது. பாஜக ஆதரவுடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். இந்த நிலையில் தற்போது தேர்தல் வந்துள்ளது. மராட்டிய தேர்தலில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் கட்சி என்ற அந்தஸ்துடன் இருக்கும் பாஜக இந்த தேர்தலிலும் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற வேண்டும் என்று திட்டம் தீட்டி உள்ளது.

எனவே 288 இடங்களில் குறைந்தது 150 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. பா.ஜ.க.வுடன் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இந்த கூட்டணியின் முதல்- மந்திரி வேட்பாளராக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு மூலம் பாஜக கட்சி மராட்டியத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை உறுதிபடுத்தி இருக்கிறது. அது மட்டுமின்றி முதல்- மந்திரி வேட்பாளர் தேர்வு மூலம் காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக மறைமுகமாக சவாலும் விட்டுள்ளது.


மேலும் மராட்டிய தேர்தலில் அரியானா மாநில வெற்றி வியூக பாணியை கடைபிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. அரியானாவில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பாஜகவுக்கு வாக்கு சதவீதம் அதிகரித்து வெற்றி கிடைத்தது.

மராட்டியத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சுமார் 35 சதவீதத்துக்கும் மேல் உள்ளனர். அவர்களை கவருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா திட்டமிட்டு செய்து வருகிறது. நேற்று முன்தினம் பிரதமர் மோடி தலைமையிலான மராட்டிய மாநில பா.ஜ.க. வேட்பாளர் தேர்வில் 110 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 110 வேட்பாளர்களில் கணிசமானவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று அடுத்தடுத்து மேலும் பல அதிரடிகளை கொண்டுவர பாஜக கூட்டணி முடிவு செய்திருக்கிறது.

இந்த கூட்டணிக்கு சவால் விடும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி உருவாகி இருக்கிறது. அந்த கூட்டணியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு நடந்த பாராளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் உள்ள 48 எம்.பி. தொகுதிகளில் 30 தொகுதிகளை காங்கிரஸ், உத்தவ் தாக்கரே, சரத்பவார் கூட்டணி கைப்பற்றியது. பாஜக, ஏக்நாத் ஷிண்டே, அஜித்பவார் கூட்டணிக்கு 17 இடங்களில்தான் வெற்றி கிடைத்தது.

பாஜக தலைமையிலான கூட்டணியை விட இரட்டிப்பு வெற்றி பெற்றதால் ராகுல், உத்தவ் தாக்கரே, சரத்பவார் மூவரும் நம்பிக்கையுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மராட்டியத்தில் காங்கிரசை மீண்டும் அரியணையில் அமர வைக்க வேண்டும் என்பதில் ராகுல் மிக மிக தீவிரமாக உள்ளார்.

சமீபத்தில் மராட்டிய காங்கிரசாருடன் ஆலோசித்த அவர் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 100 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதுபோல உத்தவ் தாக்கரேவும் 100 தொகுதிகளுக்கு குறி வைத்துள்ளார். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைக்கும் என்று தெரிகிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிகளில் சிவசேனாவும், திரிணாமுல் காங்கிரசும் ஒருவரை எதிர்த்து ஒருவர் முதல் முறையாக போட்டியிட உள்ளனர். அந்த வகையில் பாஜக, காங்கிரஸ், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா, அஜித்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் திரிணாமுல் காங்கிரஸ் என 6 கட்சிகள் களம் இறங்குகின்றன.

இது தவிர சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம்ஆத்மி, அசாதுதின் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, அம்பேத்கர் பேரன் பிரகாஷ், அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதி கட்சி என்று பல கட்சிகள் உள்ளன. இதன் காரணமாக இந்த தடவை மராட்டிய மாநில தேர்தலில் பல கட்சிகளின் பலமுனை போட்டி உருவாகி இருக்கிறது.

இந்த பலமுனை போட்டியால் வாக்குகள சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் மொத்தம் உள்ள 9 கோடியே 63 லட்சம் வாக்காளர்களில் 4 கோடியே 97 லட்சம் வாக்காளர்கள் ஆண்கள். 4 கோடியே 66 லட்சம் வாக்காளர்கள் பெண்கள். இவர்களில் இளம் வாக்காளர்கள் சுமார் 2 கோடி பேர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது வாக்குகள்தான் பல தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல மராட்டியத்தில் மொத்தம் 288 தொகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான தனி தொகுதிகள் 29 உள்ளன. மலைவாழ் மக்களுக்கான தனி தொகுதிகள் 25 உள்ளன. இந்த 54 தொகுதிகளும் மிக முக்கியம் என்று காங்கிரசும், பாஜகவும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளன.

சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் உடைந்தாலும் கிராமங்கள் அளவில் அந்த கட்சிகளின் தொண்டர்கள் இன்னமும் உத்தவ் தாக்கரே, சரத்பவார் பக்கம்தான் இருப்பதாக ஒரு கருத்து உள்ளது. இதனால் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று அந்த கட்சி தலைவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயத்தில் பாஜகவும் தொடர்ந்து நல்ல வலிமையுடன் இருப்பதால் போட்டி கடுமையாகி உள்ளது.

இதை கருத்தில் கொண்டுதான் இந்தியா கூட்டணி தலைவர்கள் மராட்டியத்தில் சலுகை அறிவிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளாக அள்ளி வீச தொடங்கி உள்ளனர். பெண்களுக்கு மாதம் தோறும் பணம், இலவச மின்சாரம், இலவச கியாஸ் சிலிண்டர் என்று இந்தியா கூட்டணி தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

ஆனால் பாஜக பிரதமர் மோடியை முன்னிறுத்தி பிரசாரம் செய்கிறது. பெரிய அளவில் பாஜக இலவசங்கள் அறிவிக்கவில்லை. இதன் காரணமாக மராட்டியத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக மல்லு கட்ட தொடங்கி இருக்கிறது.

Tags:    

Similar News