சிறப்புக் கட்டுரைகள்

எலினார் ரூஸ்வெல்ட்

மனித உரிமைக்காக போராடியவர்... எலினார் ரூஸ்வெல்ட்

Published On 2024-10-14 08:26 GMT   |   Update On 2024-10-14 08:26 GMT
  • மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார்.
  • 1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக பிராங்க்ளின் பதவி வகித்தார்.

மனித உரிமைகளைப் பெரிதும் மதித்து அதற்காகப் போராடியவர், அமெரிக்காவின் முதல் பெண்மணியாகத் திகழ்ந்தவர், ஐக்கிய நாடுகள் சபை உருவாகப் பெரிதும் உழைத்தவர் – உலகின் முதல் பெண்மணி என்று போற்றப்பட்டவர் – இத்தனை பெருமைக்கும் உரியவராகப் போற்றப்படும் பெண்மணி எலினார் ரூஸ்வெல்ட் ஆவார்.

பிறப்பும் இளமையும்:

எலினார் ரூஸ்வெல்ட் அமெரிக்காவில் 1884-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ந் தேதி நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஒரு செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் எலியட் ரூஸ்வெல்ட் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் நெருங்கிய வம்சாவளி உறவினர் ஆவார். தாயார் அன்னா ரெபக்கா ஹால் செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்.

எலினாரின் இளமை வாழ்வு மிகவும் சோகமயமானது. தான் அழகாக இல்லை என்ற எண்ணம் இளமையிலிருந்தே இவருக்கு ஆழமாக மனதில் பதிந்து விட்டது. இளமையில் பெரியவர் போல மிகவும் சீரியஸாக இவர் இருந்ததால் இவரைப் பாட்டி என்றே இவரது தாயார் அழைப்பது வழக்கம். இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் உண்டு.

1892-ம் ஆண்டு அவரது தாயார் டிப்தீரியா நோயால் மரணமடைந்தார். இதே வியாதியால் ஜூனியர் எலியட்டும் மரணமடைந்தார். தந்தையோ 1894-ம் ஆண்டு மதுப்பழக்கத்தினால் ஒரு சானிடோரியத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜன்னலிலிருந்து கீழே குதித்தார். அந்த விபத்தில் உயிர் பிழைத்தாலும் பின்னர் காலமானார். இப்படி ஏராளமான இழப்புகளை இவர் இளமையில் சந்திக்க நேர்ந்தது.

லண்டனில் படிப்பு:

தாயையும் தந்தையையும் இழந்த நிலையில் அவர் தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். பதினைந்தாம் வயதில் அவரை லண்டனில் உள்ள ஆலன்ஸ்வுட் என்ற இடத்திற்கு பாட்டி அனுப்பி வைத்தார். அங்கு தலைமை ஆசிரியையாக இருந்த மேரி ஸௌவெஸ்டர் என்பவர் அவரை எல்லாவற்றிலும் நன்கு ஊக்குவித்தார். அவரால் அழகு என்பது மட்டுமே தேவையான ஒன்று அல்ல என்பதை அவர் உணர்ந்தார். பின்னால் எலினார் குறிப்பிடுகையில் அவருடன் தான் இருந்த மூன்று வருடங்கள் தான் தனது வாழ்க்கையிலேயே மகிழ்ச்சிகரமான வருடங்கள் என்று குறிப்பிட்டார்.

1902-ம் ஆண்டு எலினார் நியூயார்க்க்கிற்கு சமூக அறிமுக நிகழ்ச்சிக்காகத் திரும்ப வேண்டியீருந்தது. பாரம்பரியமாக குடும்பத்தினர் சமூக சேவைகளில் ஈடுபட்டிருந்ததால் அவரும் அந்த சேவைகளில் ஈடுபடலானார்.

பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்:

அந்தக் கால வழக்கப்படி அவரது பாட்டி அடிக்கடி விருந்துகள் (பார்ட்டிகள்) கொடுப்பது வழக்கம். அப்படிப்பட்ட விருந்து ஒன்றில் தன் எதிர்காலக் கணவரான பிராங்ளின் ரூஸ்வெல்ட்டை அவர் சந்தித்தார். 'என்னுடன் நடனமாட வருகிறாயா' என்ற ரூஸ்வெல்ட்டின் அழைப்புடன் அவர்கள் சந்திப்பு தொடங்கியது.

மிக செழிப்பான வாழ்க்கையில் இருந்த ரூஸ்வெல்ட்டுக்கு அடித்தளத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை பற்றி எலினார் புரிய வைத்தார். இதனால் பிராங்க்ளினுக்கு எலினார் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. 1905-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது பிராங்க்ளினுக்கு வயது 22. எலினாருக்கு வயது 20.

முதலில் அன்னா என்ற பெண் குழந்தையைப் பெற்ற எலினார் ஆறு குழந்தைகளுக்குத் தாயானார். அவரது மாமியாரது கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்தது.

முதல் உலகப் போர் ஆரம்பமாகவே அவரது சகோதரர் விமானப் படையில் சேர்ந்தார். அதை அவரது மாமியார் கடுமையாக விமர்சித்தார். கனவானான ஒருவர் இப்படி போர்க்காலத்தில் விமானப்படையில் சேரலாமா என்ற அவரது விமரிசனத்திற்கு, கனவான் என்பவர் மற்ற அமெரிக்க குடிமகனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர் என்று கேட்டார் எலினார். இது தான் அவர் முதன்முதலாக தனியாக தனது உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்திய சம்பவமாக அமைந்தது.

அவரது கணவர் பிராங்க்ளின் அரசியலில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல்வாதியாக இருந்தார், அமெரிக்க செனட்டர் ஆனார்.

இதே கால கட்டத்தில் அவர் போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்கவே முடியாத நிலையை அடைந்தார். மாமியாரோ தாங்க முடியாதபடி அவரை பலவிதத்திலும் மனதளவில் காயப்படுத்தினார். இதனால் அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டது.

தன் கணவர் வீல்சேரில் அமர்ந்து இருக்க, அவரை அவரது அரசியல் வாழ்க்கையைத் தொடர அவர் வற்புறுத்தினார். அவருக்கு சொற்பொழிவுக்கான உரைகளைத் தயார் செய்து தர ஆரம்பித்தார். பல ஆவணங்களைச் சேகரித்துக் கொடுக்கலானார். படிப்பதில் இளமையிலிருந்தே இருந்த அவரது ஆர்வம் இதற்கு நன்கு கை கொடுத்தது.

'ஒரு பெண் என்பவள் ஒரு டீ பை போல; அவள் எவ்வளவு ஸ்ட்ராங் என்பதை அந்த டீ பேக்கை வெந்நீரில் போடும் வரை உங்களால் அறிய முடியாது' என்றார் அவர். 'உங்களை வழி நடத்த உங்கள் மூளையை உபயோகியுங்கள்; மற்றவர்களைக் கையாளும்போது உங்கள் இதயத்தை உபயோகியுங்கள்' என்றார் அவர். இதன்படி அனைவருடனும் இயல்பாகவே எளிமையாகப் பழக ஆரம்பித்தார்; அனைவரையும் கவர ஆரம்பித்தார்.

அரசியலில் முக்கியத்துவம்:

1924-ம் ஆண்டு, நியூயார்க் நகரத்தின் டெமாக்ரடிக் கட்சியில் தலைவராக இருந்த சார்லஸ் மர்பியிடம், அவர் பெண்களுக்கு கட்சி முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். ஆனால் மர்பி அதை மறுத்து விட்டார். நியூயார்க் டைம்ஸ் என்ற பிரபல பத்திரிகையில்' "பெண்கள் ஆண்களிடமிருந்து மதிப்பைப் பெற வேண்டும்." என்ற அவரது கட்டுரை பிரசுரமானது. இந்தக் கட்டுரை அனைவரையும் கவர்ந்தது. மர்பி அவரது கோரிக்கைக்கு இணங்கினார்.

தொடர்ந்து 1928-ம் ஆண்டு பிராங்க்ளின் நியூயார்க் நகரத்தின் கவர்னராக ஆனார். 'நாங்கள் இருவரும் மக்களின் முன்னேற்றத்தை விரும்புகிறோம்' என்ற அவரது உரையை மக்கள் கூர்ந்து கவனத்துடன் கேட்டனர். 'மை டே' என்ற அவரது பத்திரிகையில் வரும் பகுதி அனைவரையும் கவர்ந்தது.

மைனாரிட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் உரிமைக்காக அவர் பாடுபடலானார். குறிப்பாக இளைஞர்களுக்காக தேசீய இளைஞர் நிறுவனம் ஆரம்பிக்க அவர் முனைந்தார்.

இதனாலெல்லாம் மக்களிடையே பிரபலமாக ஆரம்பித்த அவர் தன் கணவர் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குப் பெரிதும் காரணமானார்.

பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொண்ட முதல் கூட்டம்:

பெண்களின் உரிமையில் பெரிதும் அக்கறை கொண்டவர் அவர் என்பதை அவரது ஒரு சந்திப்பு நன்கு விளக்கியது. 1933-ம் ஆண்டு மார்ச் 4-ம் தேதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆனார் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்.

தான் பத்திரிகை நிருபர்களைச் சந்திக்கப்போவதாக அறிவித்தார் எலினார். பத்திரிகையாளர்கள் அனைவரும் அதை ஆவலுடன் வரவேற்றபோது, 'ஒரே ஒரு நிபந்தனை, அந்த நிருபர்கள் கூட்டத்தில் பெண் நிருபர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்' என்றார் அவர்.

அனைவரும் வியந்தனர். பெண்கள் அவரைப் போற்றினர். அவசரம் அவசரமாக அனைத்துப் பத்திரிகைகளும் ஏராளமான பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின; பயிற்றுவித்தன.

ஜனாதிபதி பதவியேற்ற இரண்டே நாட்களில் மார்ச் மாதம் 6-ந் தேதி அவரது பெண் நிருபர்கள் கூட்டம் நடந்தது. இதுபோல 348 பெண் நிருபர்கள் கூட்டத்தை அவர் நடத்தினார்.

1933 முதல் 1945 முடிய அமெரிக்க ஜனாதிபதியாக பிராங்க்ளின் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் பல நாடுகளுக்கும் எலினார் பயணம் மேற்கொண்டார். உரைகளை நிகழ்த்தினார். அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்பதை உலகம் அறிந்து போற்றியது.

அத்துடன் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று தன் கணவரை எலினார் வற்புறுத்த அவரும் அதை ஏற்றார். பெண்களுக்கு முன்பு கண்டிராத உரிமைகளும் பதவிகளும் கிடைத்தன!

 

ச.நாகராஜன்

இரண்டாம் உலகப் போர்:

இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பயங்கரமான நாஜி ஜெர்மனியுடன் போர் புரியும் நிலை ஏற்பட்டது. எலினார் தன் பங்கைச் செய்ய அமெரிக்கா இதற்கு ஈடு கொடுத்தது.

ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்மணியான மேரியன் ஆண்டர்ஸன் என்ற பாடகியை அமெரிக்க புரட்சி மகளிர் சங்கம் கான்ஸ்டிடியூஷன் ஹாலில் பாடக்கூடாது என்று போர்க்கொடி தூக்கியது. இந்த இனவெறியைக் கண்டித்த எலினார் அவரை ஆதரித்து தனது உறுப்பினர் பதவியை அந்தச் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்தார். தனியாக ஒரு கூட்டத்தை லிங்கன் மெமோரியல் இடத்தில் ஏற்பாடு செய்தார். 75000 பேர்கள் அங்கு குழுமினர்.

இப்படி பல சம்பவங்கள் அவரது வாழ்க்கையில் நிகழ்ந்தன.

கணவரின் மறைவு:

1945-ம் ஆண்டு பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் மறைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரூமன் அவரை உலகின் முதல் பெண்மணி என்று பாராட்டினார். தனது கணவர் 1945-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி மறைவதற்கு சில மணி நேரம் முன்பாக அவர் தனது கடைசி பெண் நிருபர்கள் கூட்டத்தை நடத்தினார்.

தன் பணியை அவர் தொடர்ந்து செய்தார். அடுத்த ஆண்டே ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கமிஷனில் அவர் முதல் இடத்தைப் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக ஆன ட்ரூமன் அவரை 1945 முதல் 1952 முடிய ஐ.நா.வின் அமெரிக்க தூதராக நியமித்தார்.

நூல்கள்: வாழ்நாள் முழுவதும் அவர் 28 நூல்களை எழுதியுள்ளார். அவரது சுவையான சுயசரிதம் பல பகுதிகள் கொண்ட நூல்களாக அமைந்துள்ளது. பத்திரிகைகளில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் 3000-க்கும் மேற்பட்டவை.

மறைவு: ஒருவித எலும்பு மஜ்ஜை காச நோயினால் பாதிக்கப்பட்ட எலினார் தனது 78-ம் வயதில் 1962-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி மரணமடைந்தார். ஹட்ஸன் நதிக்கரையோரம் உள்ள பிராங்க்ளின் நூலகத்தின் அருகில் ஹைடன்பார்க்கில் அவரது குடும்பத்தினருக்கான கல்லறையில் அவர் புதைக்கப்பட்டார். அந்த நூலகமே அவரை உருவாக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எலினாரின் பொன்மொழிகள்:

குறிப்பிடத்தகுந்த அவரது பொன்மொழிகளில் சில:

பெரிய மனங்கள் கருத்துக்களை விவாதிக்கின்றன. சராசரி மனங்கள் சம்பவங்களை விவாதிக்கின்றன. சிறிய மனங்களோ மனிதர்களை விவாதிக்கின்றன.

எந்த ஒருவரும் உங்கள் அனுமதியின்றி உங்களை தாழ்ந்தவராக கருதச் செய்ய முடியாது.

ஒரு நல்ல தலைவர் மக்களைத் தன் மீது நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார். ஒரு பெரிய தலைவரோ மக்களை தங்கள் மீதே நம்பிக்கை கொள்ள உத்வேகம் ஊட்டுகிறார்.

Tags:    

Similar News