சிறப்புக் கட்டுரைகள்

பசி, பட்டினியை போக்க வேண்டும்.. உலக உணவு தினத்தின் முக்கியத்துவம் என்ன?

Published On 2024-10-16 12:00 GMT   |   Update On 2024-10-16 12:00 GMT
  • உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
  • 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை

உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தான் 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்பதாகும்.

உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்வதாகவும் கிட்டத்தட்ட 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது.

Tags:    

Similar News