சிறப்புக் கட்டுரைகள்

ரத்தன் டாடா செய்த சாதனை!

Published On 2024-10-16 09:40 GMT   |   Update On 2024-10-16 09:40 GMT
  • ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு அங்கத்தில் டாட்டாவின் தயாரிப்பு இருக்கிறது என்பது வெளிப்படை உண்மையாகும்.
  • வாழ்நாளில் திருமணம் என்ற எண்ணத்திற்கே அவர் இடம் வைக்கவில்லை.

இந்திய தொழில் துறையை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றிய தொழிலதிபரும், ஆகச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்டிருந்தவரும், அனைத்துயிர்களையும் நேசித்தவரும், சமூக சேவையில் உளமார ஈடுபட்டவருமான ஒரு உத்தமர் ரத்தன் டாடா அவர்கள். இவரது வாழ்க்கை அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய அற்புதமான ஒரு வாழ்க்கையாகும்.

பிறப்பும் இளமையும்:

டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாடாவின் மகனான ரத்தன்ஜி டாடா அவர்களால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாடாவின் மகனான ரத்தன் டாடா 1937-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி மும்பையில் பிறந்தார்.

இளமையில் கடுமையான துன்பங்களை இவர் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இவரது பத்தாவது வயதில் பெற்றோர்கள் பிரியவே, இவர் பாட்டி நவஜ்பாய் டாடாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

தொழிலில் முனைப்பு:

1962-ல் கட்டிடக் கலையில் பட்டத்தைப் பெற்ற இவர் டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க ஆரம்பித்தார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அவருக்கு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை தயாராகக் காத்திருந்தது. அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க விண்ணப்பித்தார். அதற்கு தன்னைப் பற்றிய விவரங்களை தானே ஒரு டைப்ரைட்டரில் அடித்து விண்ணப்பித்து வேலையைப் பெற்றார்!

அடித்தளத்து தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்த இவருக்கு தொழிலாளர்களின் கஷ்டங்களும் புரிந்தன; பணியில் உள்ள நுட்பங்களும் தெரிந்தன.

ஒரு முறை நிறுவனத்தின் மேலாளர்களுடன் மும்பையிலிருந்து நாசிக்கிற்குக் காரில் பயணப்பட்டபோது காரின் ஒரு டயர் பஞ்சரானது. கார் நிறுத்தப்பட்டது. டயரை சரிபார்த்துப் பொருத்தும் அந்த இடைப்பட்ட நேரத்தில் மேலாளர்கள் ஓய்வாக அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் தங்கள் கூட இருந்த சேர்மனைக் காணோமே என்று திடுக்கிட்டுத் தேட ஆரம்பித்தனர். ரத்தன் டாடா டயரைப் பொருத்திக் கொண்டிருந்த டிரைவர் பக்கத்தில் இருந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்தனர்.

படிப்படியாக தொழிலகத்தில் உயர்ந்த ரத்தன் டாடா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை 1991-ம் ஆண்டில் ஏற்றார். 2012 முடிய அந்தப் பொறுப்பைத் திறம்பட வகித்தார்.

உலகளாவிய விதத்தில் உயர்வு:

இவரது தலைமைப் பொறுப்பில் டாட்டா குழுமம் உலகம் போற்றும் விதத்தில் உயர்ந்தது. இதற்கான காரணம் இவரது அயராத உழைப்பும், தீர்க்கதரிசனப் பார்வையும், தீவிர நாட்டுப்பற்றும், மேதைத் தன்மையுமே காரணங்களாக அமைந்தன.

2007-ல் டாட்டா நிறுவனம் பிரிட்டனின் ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கியது.

1999-ல் அவர் போர்டு நிறுவனத்தைப் பெற முயற்சி எடுத்தபோது போர்டின் தலைவரான பில் போர்டு, "உங்களுக்கு எதுவுமே தெரியாதே! எதற்காக பயணிகளின் காரைச் செய்யும் பிரிவை ஆரம்பித்தீர்கள்?" என்று அவரிடம் கூறினார். இதை மனதில் உள்வாங்கிக் கொண்ட டாட்டா 2008, ஜூன் மாதம் பொருளாதார நெருக்கடியால் போர்டு திவாலாகும் நிலைமையில் இருந்தபோது போர்டின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்க முன் வந்தார். அப்போது பில் போர்டு மனதார நன்றி தெரிவித்து "நீங்கள் எனக்கு ஒரு பேருதவியைச் செய்து விட்டீர்கள்" என்று நெகிழ்ந்து கூறினார். "ஒன்றுமே தெரியாதவர்', 'எல்லாம் தெரிந்தவரைக்' காப்பாற்றிய இந்த சம்பவம் அவரது பெருந்தன்மையைக் காட்டியது!

 

டாட்டா குழுமம்:

உப்பிலிருந்து உயரப்பறக்கும் விமானம் வரை டாட்டா குழுமம் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு அங்கத்தில் டாட்டாவின் தயாரிப்பு இருக்கிறது என்பது வெளிப்படை உண்மையாகும். டாட்டா ஸ்டீல், டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் (கணினித் துறை), டாட்டா மோட்டார்ஸ், டைடான் கம்பெனி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாட்டா பவர், ஏர் இந்தியா, டாட்டா காபிடல், டாட்டா கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் முதலீடு சுமார் 29 டிரில்லியன் ரூபாய் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின்னால் 12 சைபர்களைப் போட்டு வரும் எண்ணாகும்) இந்த நிறுவனங்களில் சுமார் பத்து லட்சத்து இருபத்தியெட்டாயிரம் பேர்கள் வேலை பார்க்கின்றனர்.

21 வருடங்களில் தன் உழைப்பாலும் திறமையாலும் டாட்டா நிறுவனங்களை உலக தரத்திற்கு நிகராக உலகில் பேசப்படும் குழுமமாக ஆக்கினார் ரத்தன் டாடா. குழுமங்களின் வருமானத்தை தனது 21 வருட காலப் பணியில் நாற்பது மடங்கு உயர்த்திக் காட்டினார் அவர்.

அவர் தலைமையில் நூறு நாடுகளில் தனது கிளைகளை அமைத்தது டாட்டா குழுமம்.

'எதையும் இந்தியாவில் தயாரித்துக் காட்டு" என்பது அவரது தேசபக்தியின் அடிப்படையில் எழுந்த ஒரு லட்சியமாகும்!

அவர் ஒரு திறமையான பைலட்டும் கூட. 2007-ல் F 16 பால்கன் விமானத்தில் பறந்த முதல் இந்தியராக அவர் திகழ்ந்தார்.

மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதல்:

2008 நவம்பர் 26-ம்தேதி மும்பை பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. 166 பேர்கள் கொல்லப்பட்டனர். டாடா குழுமத்தில் ஒன்றான தாஜ்மஹால் பாலஸ் ஹோட்டலில் 33 பேர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர், இறந்தனர்.

நேரடியாக தனது காரில் பாதுகாவலர் யாருமின்றி துணிச்சலுடன் ரத்தன் டாடா ஓட்டலுக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.

தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதற்குமான உதவியை அவர் தந்தார்.

நாய்களின் மீது பேரன்பு:

நாய்களின் மீது பரிவும் பேரன்பும் கொண்டிருந்தார் ரத்தன் டாடா. பிரம்மாண்டமான நட்சத்திர ஹோட்டலான தாஜ்மஹாலுக்கு வருகை தந்த ஒருவர் அங்கு பிரதான வாயில் அருகே நின்று கொண்டிருந்த தெருநாய் ஒன்றைப் பார்த்து ஆச்சரியம் கொண்டார்.

"இது ஏன் இங்கு இருக்கிறது?" என்று ஆவல் கொண்டு கேட்டபோது அவருக்குக் கிடைத்த பதில் : "இந்த ஓட்டல் கட்டும் ஆரம்ப காலத்திலிருந்தே இது இங்கு இருக்கிறது. இதை ஒருவரும் தொந்தரவு செய்யக் கூடாது என்பது டாடாவின் உத்தரவு"

2018-ல் டாட்டாவிற்கு மிகவும் பிரசித்தி பெற்ற விருதான வாழ்நாள் விருது ஒன்றை இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ் அளிக்க முன் வந்து அவரை அழைத்தார். ஆனால் அந்த விருதை வாங்க டாட்டா செல்ல இருந்த தனது பயணத்தை ரத்து செய்து விட்டார்.

காரணம் அவரது வளர்ப்பு நாய் ஒன்றிற்கு உடல்நிலை சரியில்லை. அதைப் பாதுகாப்பதற்காக அவர் விருது பெறும் பயணத்தையே ரத்து செய்தார்.

டாட்டா குழுமத்தின் மும்பை தலைமையகத்தை அழகுற புனருத்தாரணம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது அந்தத் திட்டத்தை ரத்தன் டாட்டாவிடம் காட்டியபோது அவர் கேட்ட கேள்வி: "அது சரி, அங்குள்ள நாய்கள் எல்லாம் எங்கே போகும்?" என்பது தான்!

உடனே திட்டமிட்டவர்கள் அதற்கென வசதியான கூண்டுகள் அமைக்கப்படும் என்றனர். உடனே டாடா, "முதலில் அதன் வடிவமைப்பை எனக்குக் காட்டுங்கள்" என்றார். அதைப் பார்த்து மகிழ்ந்த பின்னரே கட்டிடத்தைப் பெரிதாகக் கட்ட அவர் இசைந்தார்.

 

பெரும் நன்கொடையாளர்:

மிகப் பெரிய அளவில் நன்கொடைகளைத் தந்த பெரும் நன்கொடையாளராக அவர் திகழ்ந்தார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் நிறுவனத்திற்கு அல்ஜெமீர் வியாதியைக் குணமாக்குவதற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ள அவர் 75 கோடி ரூபாய் வழங்கினார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவ 235 கோடி ரூபாய் அளித்தார். அத்தோடு 2020-ல் கோவிட்- 19 தொற்று நோய் பரவிய காலத்தில் 500 கோடி ரூபாயை நிவாரண நிதிக்கென அளித்தார். தாஜ் பப்ளிக் சேவை நல அறக்கட்டளை ஒன்றை நிறுவி தாஜ்மஹால் ஓட்டல் மீது மேற்கொண்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானோருக்கு உதவி செய்ய 419 கோடி அளித்தார். இப்படி அவர் அளித்த நன்கொடைகளுக்கு ஒரு கணக்கே இல்லை.

இந்தியாவின் மீது அவர் அபாரமான பற்று கொண்டிருந்தார். இந்தியாவில் வாழும் மத்தியதர வர்க்கத்தினர் உலகில் வாழும் ஏனைய மக்களுடன் அதே சவுகரியத்துடன் வாழவில்லையே என்று அவர் கவலை கொண்டார். அதனால் அவர்கள் சொந்தமாக கார் ஒன்றை வாங்கிப் பயணிப்பதற்காக ஒரு லட்ச ரூபாயில் டாட்டா நேனோ என்ற கார் திட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக அமல்படுத்தினார்.

திருமணம்:

வாழ்நாளில் திருமணம் என்ற எண்ணத்திற்கே அவர் இடம் வைக்கவில்லை. பிற்காலத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் நான்கு முறை திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்தன என்றும் ஏதோ ஒரு காரணத்திற்காக அது தனக்கு ஒத்துவரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

 

ச.நாகராஜன்

விருதுகள்:

வாழ்நாள் முழுவதும் அவரைத் தேடி விருதுகள் வந்து குவிந்தன. 2000-ம் ஆண்டில் இந்தியாவின் ஐம்பதாவது குடியரசு தினத்தில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

2008-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

2007-ம் ஆண்டில் பார்சூன் இதழ் வெளியிட்ட உலகின் ஆற்றல் மிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் டாட்டா இடம் பெற்றார். 2008-ம் ஆண்டில் உலகின் புகழ் பெற்ற இதழான டைம் இதழ் வெளியிட்ட உலகில் செல்வாக்கான நூறு பேர்கள் கொண்ட பட்டியலில் இடம் பெற்றார். 2008-ல் சிங்கப்பூர் அரசு தனது கவுரவ குடிமகன் சிறப்பை அவருக்கு வழங்கியது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் அவருக்கு விருதுகளை வழங்கியுள்ளன.

மறைவு:

வயதானதன் விளைவாக வரும் மருத்துவ நிலையின் காரணமாக மருத்துவ சோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 2024 அக்டோபர் 9-ம் நாள் பிரீச் கேண்டி மருத்துவமனையில் தனது 86-ம் வயதில் அவர் காலமானார்.

அரசு மரியாதையுடன் அவரது உடல் அக்டோபர் பத்தாம் நாளன்று வொர்லியில் தகனம் செய்யப்பட்டது.

பொன்மொழிகள்

வாழ்நாள் முழுவதும் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தி வந்தார். அவரது குறிப்பிடத்தகுந்த பொன்மொழிகளில் சில இதோ:

ஏற்ற இறக்கங்கள் ஒரு வாழ்வில் இன்றியமையாதது. இவை நம்மை மேலே கொண்டு செல்ல அமைந்தவை. ஈசிஜியில் கூட அது நேர்கோட்டைக் காட்டினால் உயிர் இல்லை என்று அர்த்தமாகும். நீங்கள் மற்றவருடன் பழகும்போது அன்பு, இரக்கம், தயை ஆகியவற்றின் சக்தியைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மற்றவர்கள் உங்கள் மீது விட்டெறியும் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வைத்து பிரம்மாண்டமான கட்டிடத்தை அமையுங்கள். சவால்களை விடாமுயற்சியுடன் வளைந்து நெகிழ்ந்து எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அவையே வெற்றிக்கான படிக்கட்டுகள்.

டாட்டா சால்ட் முதல் ஏர் இந்தியா முடிய!

உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்பது பழமொழி. உப்பிட்டதோடு விமானத்தில் ஏற்றி உயரப் பறக்கவும் வைத்த உத்தமரான ரத்தன் டாடாவை நினைத்துப் போற்றுவது நமது கடமை அல்லவா!

Tags:    

Similar News