சிறப்புக் கட்டுரைகள்

நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன்

Published On 2024-10-15 08:53 GMT   |   Update On 2024-10-15 08:53 GMT
  • தந்தைக்கு ‘ஓம்’ என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.
  • முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு.

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்

மருகனே ஈசன்மகனே ஒருகைமுகன் தம்பியே

நின்னுடைய தண்டை கால் எப்பொழுதும்

நம்பியே கைதொழுவேன் நான்

கடவுள் ஒருவரே. ஆனால்

அவதாரங்கள் பல.

ஒவ்வொரு கடவுளுக்கும் அவதார சிறப்பு மற்றும் தனித்துவம் இருக்கிறது. அதர்மம் தலை தூக்கும்போது அதை அழிக்கவே அனைத்து கடவுள்களின் அவதாரங்களும் நிகழ்ந்துள்ளன. முருகப்பெருமானின் அவதார நோக்கமும் இதுதான்.

ஆனால் முருகனின் அவதாரம் பல்வேறு சிறப்புகள் கொண்டது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் முருகனின் அவதாரம் தமிழர்களின் வாழ்வோடும், உணர்வுகளோடும் பின்னி பிணைந்தது. முருக வழிப்பாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் இதை உணர முடியும். இதன் மூலம் தமிழர்களுக்காகவே அவதரித்த தெய்வமாக முருகப்பெருமான் கருதப்படுகிறார்.

இதனால்தான் சங்க காலத்துக்கும் முன்பே நம் ஆதி தமிழர்கள் முருகப்பெருமானை தமிழ்க் கடவுள் என்று போற்றி இருக்கிறார்கள். சங்க காலத்தில் தமிழர்கள் முருகனை வணங்குவதில் பல புதுமைகள் சேர்ந்தன.

என்றாலும் பழமைக்கு பழமையாய், புதுமைக்குப் புதுமையாக முருகன் திகழ்கிறான். முருகு என்ற சொல்லில் மு-மெல்லினம், ரு-இடையினம், கு-வல்லினம். எனவே தமிழே முருகன், முருகனே தமிழ் என்பார்கள்.

முருகன் 'ஓம்' எனும் பிரணவப் பொருளாகவும் விளங்குகிறான். பிரணவம் என்றால், 'சிறந்த புதிய ஆற்றலைத் தருவது' என்று பொருள். முருகன் தன்னை நாடி, தேடி வருபவர்களுக்கு புதிய ஆற்றலை வற்றாமல் கொடுக்கிறான்.

தந்தைக்கு 'ஓம்' என்னும் பிரணவப் பொருளை முருகப் பெருமான் உணர்த்தியதாக வரலாறு உண்டு.

ஓம் என்பது அ, உ. ம என்ற மூன்றெழுத்தின் சேர்க்கை யால் உண்டானது. அ- படைத்தல் உ- காத்தல், ம-ஒடுக்கல் என முறையே பொருள்படும். எனவே முருகனை வணங்கினால் மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும். அ, உ, ம என்னும் மூன்றும் இணைந்து உண்டான ஓம் எல்லா எழுத்துகளுக்கும் எல்லா ஓசைகளுக்கும் எல்லா நூல்களுக்கும் மூலமாக உள்ளது.

முருகு என்ற மூன்றெழுத்துகளிலும் அ, உ, ம மூலமாக உள்ளதால் முருகன் ஓம்கார வடிவாக உள்ளான்.

சத்து, சித்து, ஆனந்தம் சச்சிதானந்தமாக முருகப் பெருமான் கைலாச மலையில் வீற்றுள்ளார்.

இந்தப் பிறவியில் கைமேல் பலன் தருவது முருகன் திரு வருள். ஞானவடிவான முருகனை நினைத்தால் ஞானம் கைகூடும். கவலைகள் விலகும். வினைகளும், பயமும் விலகும்.

மலையும், மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். குறிஞ்சி நிலக்கடவுளாக முருகன் கருதப்படுகிறான். இதன் காரணமாக 'குன்று தோறாடும் குமரன்' என்று முருகனை சொல்வார்கள்.

முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்று பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்ததாகும். தமிழ்மொழியில் மெய்யெ ழுத்துகள் கண்களாகவும், வில்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் இன எழுத்துக்கள் ஆறுமுகங்களாகவும், அகர முதலிய எழுத்துக்கள் பன்னிரண்டும் தோள்க ளாகவும், தனிநிலை எனப்படும் ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.

முருகன் உருவம் சிவந்த மேனியும், அபய வரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்தி லும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய் வானை இடது பக்கத்திலும் அமைய பெற்றதாகும்.

முருகப் பெருமான் அகத்தியருக்கு தமிழ் கற்றுக் கொடுத்ததாகவும், தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவராகவும் வீற்றிருந்து தமிழ் வளர்த்ததாகவும் கூறப்படுகிறது.

தெய்வ யானை கிரியா சக்தியாகவும் வள்ளி இச்சா சக்தியாகவும் வேல் ஞான சக்தியாகவும் மயில் ஆணவம் என்றும் சேவல் சிவஞானம் என்றும் கூறுவார்கள். அந்த அளவுக்கு முருகனின் அவதாரம் சிறப்பிக்கப்படுகிறது.

 

இந்த அவதாரத்துக்கு மூலமாக இருந்தவர் சிவபெருமான். சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து 6 குழந்தைகளாக சரவண பொய்கையில் முருகன் அவதரித்தார். அன்னை பார்வதி தேவி அந்த 6 குழந்தைகளையும் சேர்த்தெடுத்து ஞானப்பாலூட்டி வளர்த்தாள். இவர் விநாயகப்பெருமானின் இளைய சகோதரன், ஐயப்ப சுவாமியின் அண்ணன்.

திருமாலின் மருமகன், இந்திரனின் மாப்பிள்ளை, தேவயானை எனும் தேவியின் கணவன். வள்ளிக்குற மகளின் காதலன், வீரபாகு முதலான நவ வீரவாகுத்தேவர்கள் 9 பேரின் தோழன், தேவர்களுக்கு இன்னல்கள் விளைத்த தாரகாசூரன், சிங்கமுகன், சூரபதுமன் முதலான அசுரர்களை அழித்தவன்.

அகத்திய முனிவருக்கே தமிழ் இலக்கணம் போதித்த முதல் ஆசிரியன், அவ்வைப் பிராட்டிக்கு தத்துவ ஞானத்தை நாவல்பழம் மூலம் போதித்தவன். நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர், கச்சியப்பசிவசாரியார் போன்ற ஞானிகளுக்கே தமிழ் நூல்கள் எழுத பாதித்த சற்குரு.

அப்பனுக்கே ஞானம் சொன்ன சுப்பன். தமிழகத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழ் மக்களுக்கும் உண்மையான தமிழ்த்தலைவன்.

சித்தர்கள் பரம்பரையை துவக்கி வைத்த பெருமை முருகனுக்கு உண்டு. முருகனை மந்திரவடிவிலும், யந்திர வடிவிலும், யாக நெருப்பிலும், பற்பல சிற்ப வடிவிலும், ஓவிய வடிவிலும், தமிழ் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

முருகப்பெருமானைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டுமானால் கச்சியப்பரின் கந்தபுராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை, அருணகிரியாரின் திருப்புகழ், குமரகுருபரரின் கந்தர்கலிவெண்பா முதலான படைப்புகளை சலிப்பே இல்லாமல் படித்து, அதை நுணுக்கமாக ஆராய வேண்டும். அப்போது தான் முருகன் யார் என்பது மிகத்தெளிவாக தெரியவரும்.

சிவபெருமானின் ஈசானம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம் என்ற ஐந்து முகங்களுடன் அதோமுகம் சேர ஆறுமுகங்கள் ஆனது என்பார்கள்.

எப்போதெல்லாம் நம் உள்ளத்தில் பயம் தோன்றுகிறதோ அப்போது முருகனை நினைத்தால் போதும்..... ஆறுமுகம் தோன்றி நம் அச்சத்தைப் போக்கும்.

முருகனின் ஆறுமுகத்தின் செய்கைகள் பலராலும் போற்றப்பட்டுள்ளன.

ஏறுமயில் ஏறி விளையாடுவது ஒரு முகம்,

அடியவர்களின் வினைகளைத் தீர்ப்பது ஒரு முகம்,

சூரபத்மனை வதைத்து அழியாத பேரின்ப வாழ்வினைத் தருவது ஒருமுகம்,

உயிர்களின் மன இருளைப் போக்கி ஒளிர்படர்வது ஒருமுகம்,

வள்ளி, தெய்வானைக்கு மோகம் அளிப்பது ஒருமுகம்.

வேத, ஆகமங்களை முற்றுப் பெறச் செய்வது ஒரு முகம் என்று ஆறுமுகங்களின் பண்புகளை அருணகிரிநாதர் பாடுகிறார்.

வீடு பேற்றைப் பெற இயலாதபடி தடுப்பவர்களாக நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.

நம் உடம்பில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், ஆநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பவை அந்த ஆறு ஆதாரங்கள்.

மனிதனின் உடலும், மனமும் சர்வ சக்தியான குண்டலினியை இயக்கிட மேற்குறிப்பிட்டபடி ஆறு ஆதார சக்கரங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இயக்கம் உள்ளது. இந்த ஆறு சக்கரங்களும் ஒருங்கிணைந்து செயலாற்றும்போதுதான் மனமும், உடலும் ஒருங்கிணைந்து சர்வசக்தியின் மீது ஒருநிலையில் லயிக்கிறது. ஆனால் இதற்குத் தடை யாகத்தான் மேற்குறிப்பிட்ட ஆறு பகைவர்களும் உள்ளனர்.

எனவே ஆறுமுகனுக்குரிய ஆறெழுத்தான 'சரவணபவ' என்பதை கூறி வந்து ஆறு படை வீடுகளுக்கும் சென்று நல்ல எண்ணங்களுடனும் நம்மிடம் உள்ள ஆறு பகைவர்களும் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்று வேண்டி வணங்க வேண்டும்.

முருகனுக்குப் படை வீடு ஆறு. அவை திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகும். ஒவ்வொரு படை வீடும், நம் உடம்பில் உள்ள ஒவ்வொரு சக்கர ஆதாரத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மூலாதாரம் - திருப்பரங்குன்றம், சுவாதிஷ்டானம்- திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்). மணிபூரகம்- திருவாவினன்குடி (பழநி). அநாகதம் - திருவேரகம் (சுவாமிமலை), விசுத்தி- குன்றுதோன்றாடல் (திருத்தணி), ஆக்ஞை - பழமுதிர்ச்சோலை. இந்த ஆறு ஆதாரங்களிலும் உள்ள அசுர சக்தியை ஆறுபடை வீடுகளில் ஒவ்வொரு தலத்திலும் இருக்கும் முருகப் பெருமானின் அருட்சக்தி அழித்து உய்வு பெறலாம்.

பல கோடி பிறவிகளில் செய்த புண்ணி யங்கள் திரண்டு ஒன்றுபட்டால் தான் முருக பக்தி உண்டாகும். முருகன் அருள் வேண்டி பக்தர்கள் பலவித விரதங்கள் இருந்தாலும், அதில் முதன்மையாக சஷ்டி விரதம் உள்ளது.

திருசெந்தூரில் சூரனுடன் முருகன் 6 நாட்கள் சண்டையிட்டபோது, அவரது அன்பர்கள் விரதம் இருந்த தியானித்தனர். அன்று தொடங்கிய இந்த பாரம்பரிய சக்திமிகு விரதத்தை இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடை பிடிக்கிறார்கள்.

திருச்செந்தூர் கந்த தலத்தில் சஷ்டி விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும். வேலை வணங்குவதே வேலை என்று முருகனுடன் மனம் ஒன்றுபவர்களை முருகன் நிச்சயம் ஆட்கொள்வார்.

எனவேதான் திருச்செந்தூர் தலத்து முருகனை, நினைத்ததை நடத்தி தரும் முருகன் என்கிறார்கள். திருச்செந்தூர் முருகனின் சிறப்புகள், தனித்துவத்தை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை பார்க்கலாம்.

Tags:    

Similar News