சிறப்புக் கட்டுரைகள்

கடவுளுடன் கலந்த தருணங்கள்

Published On 2024-10-17 09:27 GMT   |   Update On 2024-10-17 09:27 GMT
  • பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள்.
  • உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது.

கடவுளையே தீவிரமாக பக்தி செய்பவர்கள் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறி விடுகிறார்கள். ஒவ்வொரு மகானும் கடவுளுடன் கலக்கும் அவர்கள் வாழ்வின் நிறைவுத் தருணம் பல வகைகளில் அமைகிறது.

மனித வடிவெடுத்து வந்த கடவுளான ராமபிரான் சரயூ நதியில் கலந்து வைகுந்தம் சென்றார். ராமன் வைகுந்தம் செல்வதற்கு முன்பாகவே நிலமகளான சீதை தான் எந்த நிலத்திலிருந்து பிறந்தாளோ அந்த நிலத்திற்குள் புகுந்து பின் விண்ணை அடைந்தாள்.

திருமாலின் இன்னோர் அவதாரம் ஸ்ரீகிருஷ்ணர், மரத்தில் அமர்ந்திருந்த அவரின் வெண்ணிறப் பாதங்களைப் பார்த்துப் புறா என எண்ணித் தவறுதலாக ஜரா என்ற வேடன் அம்பெய்ய விண்ணில் கலந்தார் கிருஷ்ணர். இவையெல்லாம் மனித வடிவெடுத்த கடவுளர்கள் மறுபடி விண்ணுலகம் போன சரித்திரம்.

அதுபோலவே பக்தர்களும் வாழ்வின் நிறைவில் கடவுளுடன் கலந்து கடவுளாகவே மாறுகிறார்கள்.

ஆண்டாள் திருவரங்கத்தில் அரங்கனுடன் கலந்து மறைந்ததையும் மாணிக்க வாசகர் சிதம்பரம் நடராஜர் சன்னிதிக் கருவறையில் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கலந்து மறைந்ததையும் தென்னக வரலாறு சொல்கிறது.

 

வட இந்தியாவில் கண்ணன் மேல் பக்தி செய்த மீரா, இறுதியில் கண்ணனுடனேயே கலந்து மறைந்ததை மீராவின் திருச்சரிதம் தெரிவிக்கிறது.

மகான்கள் பலர் விந்தையான முறைகளில் தங்கள் வாழ்வை நிறைவு செய்திருக்கிறார்கள். கபீர் தாசர் சித்தி அடைந்த பின் அவர் உடலை ஒரு போர்வையால் மூடி வைத்திருந்தார்கள்.

சற்று நேரம் கழித்து அந்தப் போர்வையைத் திறந்து பார்த்தபோது அந்த இடத்தில் சடலத்திற்கு பதிலாக ரோஜா மலர்களே நிறைந்திருந்தன என்ற செய்தி கபீர்தாசர் வரலாற்றில் வருகிறது.

பட்டினத்தார் சிவனுடன் கலந்து சிவமாகவே மாறிய அவரின் கடைசித் தருணம் ஆச்சரியகரமானது. ஒருநாள் சென்னையில் திருவொற்றியூர்க் கடற்கரையில் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காண்பித்துக் கொண்டிருந்தார் அவர்.

அவர் காண்பித்த சித்து விளையாட்டைக் கள்ளம் கபடமில்லாத சிறுவர்கள் மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னை ஒரு கூடையால் மூடச் சொல்வார். சிறுவர்கள் அவ்விதமே மூடுவார்கள். பின் வேறோரிடத்தில் இருந்து தோன்றுவார் அவர். இப்படிப் பலமுறை நிகழ்ந்தது.

ஒருமுறை தன்னை மூடச் சொன்ன அவர் எந்த இடத்திலிருந்தும் நெடுநேரம் தோன்றவே இல்லை. சிறுவர்கள் திடுக்கிட்டார்கள். பின் சந்தேகத்தோடு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

உள்ளே பட்டினத்தார் இல்லை. ஆனால் அங்கே ஒரு சிவலிங்கம் மண்ணில் முளைத்து கம்பீரமாக ஒளிவீசிக் கொண்டிருந்தது. ஓடோடிச் சென்று தங்கள் தாய், தந்தையரை அழைத்துவந்து விவரம் சொன்னார்கள்.

பெற்றோர் மிகுந்த பக்தியோடு சிவலிங்கத்தை விழுந்து வணங்கி பட்டினத்தாராகிய லிங்கத்திற்கு ஒரு கோயில் அமைத்தார்கள். அப்படி எழுந்ததுதான் சென்னையில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில்.

 

மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் மருத்துவ ரீதியாக இறந்துவிட்டார் என்றே மருத்துவ அறிக்கை சொல்லிற்று. ஆனால் மருத்துவர்களே பார்த்து ஆச்சரியப்படும் ஒரு விஷயம் அரவிந்தரின் உடலில் நிகழ்ந்தது.

சுமார் 111 மணிநேரம் ஸ்ரீஅரவிந்தரின் உடலில் அவர் காலமானதற்கான எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. அது மட்டுமல்ல, ஒரு பொன்மயமான ஒளி அந்த உடலைச் சுற்றி மெலிதாகப் படர்ந்திருந்தது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஏழை எளியர்வர்கள் பலர், அந்த ஒளியை வியப்போடு தரிசித்துச் சென்றார்கள்.

அரவிந்தரின் பொன்னுடலை சமாதி செய்விக்க வேண்டுமே? அவர் உடலைச் சுற்றியிருந்த பொன்னொளி விலகுவதற்காக பாண்டிச்சேரி அன்னை காத்திருந்தார். அன்னையின் மனத்தில் அடக்கம் செய்விக்கலாம் என உத்தரவு கிடைத்த பின்னரே அவர் அரவிந்தரின் உடலை அடக்கம் செய்ய அனுமதி அளித்தார்.

அரவிந்தரின் உடல் மரப் பேழையில் வைத்து மண்ணில் இறக்கப்பட்டது. அப்போது, `ஸ்ரீஅரவிந்தரே! தெய்வ சக்தியை மண்ணிற்குக் கொண்டுவர வேண்டும் என வாழ்நாள் முழுதும் உழைத்தீர்களே, இப்போது உடலைவிட்டு நீங்கி விட்டீர்களே? இனி நீங்கள் கனவுகண்ட அந்தச் செயல் எவ்விதம் நடக்கும்?` என ஓர் அன்பர் கண்ணீரோடு வேண்டினார்.

அப்போது `ஹொபே ஹொபே ஹொபே` என அவர் காதில் ஸ்ரீஅரவிந்தரின் குரல் தெள்ளத் தெளிவாய்க் கேட்டது. ஹொபே என்ற வங்காளச் சொல்லுக்கு நடக்கும் என்பது பொருள். அரவிந்தர் கண்ட கனவெல்லாம் நனவாகும் என அவர் புரிந்துகொண்டார்.

ரமணர் சித்தி அடைந்த நேரம்: 1950 ஏப்ரல் 14 இரவு 8.47 மணி. மிகச் சரியாக அதே நேரத்தில் ஆகாயத்தில் ஒரு வால்நட்சத்திரம் கீழைத் திசையிலிருந்து புறப்பட்டுப் பெரும் ஒளியோடு விண்ணில் சென்று மறைந்தது. இந்த அதிசய நிகழ்வை எழுத்தாளர் கல்கி தம் கட்டுரையொன்றில் பதிவு செய்திருக்கிறார்.

பரமஹம்ச யோகானந்தர் தம் உடலை விட்டு நீங்கும்முன் அவ்விதம் நீங்கப் போவதை முன்னரே அறிவித்தார். அப்பொழுது, அவர்முன் சுமார் எழுநூறு பேர் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மகாசமாதி அடைந்தார்.

 

திருப்பூர் கிருஷ்ணன்

தான் உடலை விடும் முன்பே, 'நான் உயிரை விடப்போகிறேன்' என்று அவர் அறிவித்திருந்த ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் எனப் பலரும் அங்கே வந்து அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

பின்னர், 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, அவ்விதம் அமர்ந்தவாறே தன் உடலை நீத்தார் அவர் மருத்துவர்களுக்கு விளங்கிக் கொள்ள இயலாத ஒரு புதிராக இருந்தது அந்நிகழ்வு. மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, உடலில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உடலை விட்டு உயிர் பிரியும்.

இதயமோ, நுரையீரலோ, வேறு முக்கியமான ஓர் உறுப்போ பழுதுபட்டால் உயிர் நீங்கும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானம் சொல்வது.

ஆனால் ஆரோக்கியமாக எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒருவர், 'இப்போது நான் போகப்போகிறேன்' என்று சொல்லி விடைபெற்றுக் கொண்டு, தம் உடலை விட்டு நீங்குவதை அவர்கள் எங்கும் அதுவரை பார்த்திருக்கவில்லை.

அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? உலகம் காரண காரிய அறிவை மட்டுமே நம்புகிறது. ஆனால் அதைத் தாண்டிய நம் அறிவுக்கு எட்டாத விஷயங்கள் பல உண்டு. அதைப் பலர் அறிய வேண்டும் என அவர் நினைத்திருக்க வேண்டும்.

தான் உடலை நீக்கிய நிகழ்வின் மூலம் அறிவுக்கு எட்டாத ஆன்மிகத்தை அவர் உறுதிப்படுத்தினார்.

அவர் உடலை உகுத்த பின்னரும் நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்த உடல் எந்தவித மாறுபாட்டையும் புலப்படுத்தாமல் உயிரோடிருந்தபோது எப்படி இருந்ததோ அப்படியே வாடாமல் வதங்காமல் இருந்தது என்பதும் ஆச்சரியமே.

பரமஹம்ச யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வரகிரி மகராஜும் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்தார்.

அவர் உடலைத் துறந்தபின் அடுத்த நாளே தன் சீடர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு உடலோடு காட்சி கொடுத்தார் என்பதும் விந்தைதான்.

ஒவ்வொரு யோகியும் தன் உடலைக் கைவிட்டு விண்ணில் கலக்கும் நிலை ஒவ்வொருவருக்கும் தனித்துவமானது. மகா சமாதி என்று அந்த நிகழ்வைக் குறிப்பிடுகின்றனர்.

ஒரு சட்டையைக் கழற்றுவதைப் போலத் தங்கள் உடலை மகான்கள் நீக்கிவிடுவர். குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே என்று சொல்கிறது வள்ளுவம். உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு, முட்டையைத் தனியே விட்டுவிட்டு ஒரு பறவை வெளியேறுவதைப் போன்றதுதான் என்கிறார் வள்ளுவர்.

உண்மையில் யோகிகளும் சித்தர்களும் உடலை நீக்குவது மரணமல்ல. சாகாநிலை அது. மரணமில்லாப் பெருவாழ்வு என்றே அந்நிலை சொல்லப்படுகிறது. அதாவது அவர்கள் செயலாற்றுவதற்கு இனி அவர்களின் உடல் தேவையில்லை. அவ்வளவுதான். மற்றபடி அவர்கள் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

வடலூர் வள்ளல் பெருமான் தம் கடைசிக் காலத்தில் பல அரிய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு முக்கியமான அறிவுரைகளையும் அடியவர்களுக்கு வழங்கினார். பின்னர் இறுதியாய்ப் படுக்கையில் மெல்லச் சாய்ந்துகொண்டார்.

தமது உருவம் எவருக்கும் புலப்படாதிருந்து சில காலத்திற்குப் பிறகு பிரணவ தேகமாக குருநிலை பெறும் என்றும் அதன்பின்னர் சித்துகள் புரியும் என்றும் குறிப்பிட்டார்.

முன்னரே அவர் உத்தரவிட்டபடி, அவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் மூடப்பட்டன. சாளரங்களும் மூடப்பட்டன. அறையில் காற்றுப் போவதற்கும் இடமில்லை.

சிறிதுகாலம் சென்றபின் கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு வெறும் வெளிதான் இருந்தது. வள்ளலாரின் உருவத்தின் சின்னச் சுவடு கூட அங்கே தென்படவில்லை. வள்ளலார் தாம் சொன்னபடியே தம் உடலைப் பஞ்ச பூதங்களில் கரைத்து, உலகெங்கும் நிறைந்துவிட்டார்.

மகான்கள் கடவுளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்து கடவுள் சக்தியைத் தங்களில் இறக்கிக் கொண்டு கடவுளாகவே மாறி விடுகிறார்கள். அவர்கள் உடலை உகுத்தாலும் அந்த உடலில் தங்கியிருந்த தெய்வ சக்தி உடலிலிருந்து வெளிப்பட்டு எங்கும் நிறைகிறது.

அந்த தெய்வ சக்தி, குறிப்பிட்ட மகானின் அடியவர்களைக் கவசமாய் இருந்து காக்கிறது. மகான்களைப் பூஜித்து அவர்கள் அருளை வேண்டிப் பெறுவதன் மூலம் நம் மனம் சாந்தி அடைகிறது.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News