சிறப்புக் கட்டுரைகள்
null

சந்தனக் காற்றே- ரத்தன் டாடா!

Published On 2024-10-21 18:15 GMT   |   Update On 2024-10-21 18:15 GMT
  • ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு.
  • இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது.

டாடா என்று சொன்னாலோ-டாடா குடும்பம் என்று சொன்னாலோ மறைந்த ரத்தன் டாடா அவர்களின் வியத்தகு சாதனைகளும், வியத்தகு தர்ம சிந்தனைகளுமே நம் மனதிற்கு வரும். இவை நம் நாடு பெற்ற நன்மைகள் ஆகும். சமூக நலன், ஏழைகள் நலன் இவற்றை மனதில் கொண்டு தலைமுறை தலை முறையாய் இறைவனிடம் தவம் இருந்து வரம் பெற்று வந்தவர்கள் போலும்.

ஆர்வமுள்ள, சாதிக்கத் துடிக்கும் இன்றைய இளைஞர்களுக்கு இவர் ஒரு முன் உதாரணம். ஒளி விளக்கு எனலாம்.

இந்த கட்டுரை 'மா மனிதர்' என்று நம்மை கூற வைக்கும் அவரது மனித நேயத்தினைப் பற்றியது ஆகும்.

அக்டோபர் 9, 2024 அன்று மறைந்த ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.

உயர்ந்த ஆத்மா என்பது தன் விலைமதிப்பின்மையை என்றுமே வாய் பேச்சின் மூலம் காண்பிக்காமல் அதன் செயல்களின் மூலமே தெரிய வரும். அந்த ஆத்மாவின் விலை மதிப்பின்மையை பிரபஞ்சம் தானே வெளிப்படுத்தும்.

இந்த சொற்றொடர்கள் யாரை குறிப்பிடுகின்றன என்பது அனைவருக்கும் எளிதாய் புரியும். 'ரத்தன் டாடா' அவர்களே, நீங்கள் ஒரு புனித ஆத்மா என்று என் மனதில் முணுமுணுப்பது வெளி வந்ததே உங்களைப் பற்றி மற்றவர்கள் புரிய வேண்டும். அறிய வேண்டும் என்பதால்தான். இந்த உலகமே உரத்த குரலில் எழுந்து, பேச்சு, ஒளிபரப்பு என நொடி விடாது பேசி பேசி கதறிக் கொண்டு இருக்கின்றதே. என் தவிப்பின் வடிகாலாக நானும் எழுதி உங்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன். இது என் ஆத்ம திருப்தி, அவ்வளவே, இவை நான் படித்து அறிந்த குறிப்புகள் ஆகும்.

நான் இந்தியன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். இந்தியா என் நாடு. இந்தியர்கள் என் மக்கள் என்று சொல்லி எங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்னவோ செய்தீர்களே. அப்புறம் எதற்காக எங்களை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டீர்கள்? விண்ணுலகம் தேவர்கள் நலத்தைக் காக்க நீங்கள் வேண்டும் என அழைத்து சென்று விட்டதோ? மற்றொரு விண்வெளி இவ்வளவு நல்லவர் எங்களுக்கு வேண்டும் என கடத்தி சென்று விட்டதோ? இருக்காது... இருக்காது... எங்களை விட்டு நீங்கள் எங்கும் செல்ல மாட்டீர்கள். இங்கேயே இயற்கையோடு கலந்து பரவி இருக்கின்றீர்கள் தானே? எங்களது மூச்சு காற்றில் கலந்து விட்டீர்கள் தானே? ஆம். அப்படித்தான் அப்படியேதான். அப்படியானால் இனி மக்கள் அனைவரிடமும் நாட்டுப் பற்று இன்னமும் கூடும். உழைப்பும், சாதனைகளும் இன்னமும் கூடும். உங்களைப் போலவே செயலால் நடத்திக் காட்ட மக்கள் மேலும் உத்வேகம் பெறுவர்.

ஒருவரது பேச்சினை மறந்து விட வாய்ப்புகள் உண்டு. செயலினைக் கூடமறந்து விடுவர். ஆனால் ஒருவரின் ஆழ் நெஞ்சில் உணர்த்தும் உண்மையினை யாராலும் மறக்க முடியாது.

ஆக மக்களின் ஆழ் நெஞ்சில் குறிப்பாக இந்திய மக்களின் ஆழ் நெஞ்சில் நீங்கள் உணர்த்தியுள்ளவைகளை யாராலும் மறக்க முடியாது.

* தேசிய பற்று என்பதினை உங்கள் செயல்கள் மூலம் எங்கள் ரத்தத்தில் மேலும் வலுப்படுத்தியவர் நீங்கள்.


* சம்பாதிப்பதில் ஒரு சிறிய பகுதியினையாவது இயலாத மக்களுக்கு அளிக்க வேண்டும். இது அனைவருமே வலியுறுத்துவதுதான். ஆனால் நீங்களோ சம்பாதித்ததில் 60 சதவீதத்துக்கும் மேல் மக்களுக்காக அளித்தவர்.

* சமையலறை முதல் சமுதாயத்தில் காணும் அனைத்திலும் ஊடுருவி நிற்பவர்.

* சின்ன சின்ன வரிகளை காரணம் காட்டி வாழ்க்கையே வீனாகப் போய் விட்டதாக புலம்பும் இந்த உலகில்... எத்தனையோ மன வலிகளை ஓரமாய் ஒதுக்கி விட்டு வாழ்வினை பயனுள்ள பிறப்பாக்கியவர் நீங்கள்.

இத்தோடு நிறுத்தினீர்களா?

* சமுதாயத்தில் நல்லவராக இருந்தால் மட்டும் போதாது. வல்லவராக இருந்தாலும் பத்தாது சதா எதிர் நீச்சல் போடும் போராளியாக இருந்தால் மட்டுமே தொடர்ந்து சாதனைகள் நிகழ்த்த முடியும் என்று வாழ்ந்து காட்டியவராயிற்றே நீங்கள்.

* ஒரு மனிதன் தன்னை காப்பாற்றி வாழ்வதே சவால்தான் அதிலும் மனைவி, மக்கள், உறவினர் என்று ஆகி விட்டால் வாழ்க்கை பெரும் சவால்தான். திணறி தவிக்கின்றனர். இது உலகம் தோன்றிய நாள் முதலாகவே இப்படித்தான்.

ஆனால் ஒரு மனிதர் மற்றவர் துயர்களையும் போக்க போராட வேண்டும் என்பது உங்கள் வாழ்வின் மூலம் உலகிற்கு சொல்லிக் கொடுத்த பாடம். உங்களை காலத்தால் தான் மறக்க முடியுமா? அல்லது மறப்பதற்குத்தான் அதற்கு தைரியம் இருக்கின்றதா?

இந்த உலகம் மாமனிதர்கள் பலரைப் பார்த்திருக்கின்றது. இது அவரவர் காலத்தில் அவர்கள் அனுபவ ரீதியாக பார்த்து வாழ்ந்த ஒன்று. ஆனால் மிக அதிகமாகவே தவறான குணம் கொண்டவர்களையே பார்க்கின்றது.

பணம் இருப்பவருக்கு கொடுக்க மனம் இருக்காது.

கொடுக்க நினைப்பவருக்கு பணம் இருக்காது.

ஆனால் பணமும், குணமும் ஒருசேர கொண்ட உங்களைப் போன்ற பலரால்தான் உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

அன்பு, கருணை, கொடைவள்ளல், மன உறுதி, சொன்ன வார்த்தை தவறாமை என உங்களை எங்களுக்குத் தெரிந்த பெயரால் அழைக்கலாம். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் தெரியவில்லை என்பதே உண்மை.

வாழ்வில் எத்தனையோ சாதித்தும் ஒருவருக்கு தனிமை என்பது ஆழ் மனதில் நீங்காத வலிதான். ஆனால் ஒன்று கவனித்து இருக்கின்றீர்களா?

பல உயர் ஆத்மாக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தனிமை என்பது இறைவன் படைப்பின் ரகசியமே.

இங்கு மக்களிடையே ஒரு பழக்கம் இருக்கின்றது. மனிதனை மனிதனாக மதிக்க மாட்டார்கள். திட்டும் போது 'நாயே' என்று திட்டுவார்கள். நாய் நன்றியுள்ள பிராணி. மனிதனை நாயே என்று கூறுவதற்கு நாய்தான் வருத்தப்பட வேண்டும். அப்படிப்பட்ட இந்த உலகில் எல்லா நாய்க்கும் சிகிச்சை அளிக்க- இலவச சிகிச்சை அளிக்க மும்பையில் ஒரு மருத்துவமனையே உருவாக்கி அனைத்து உயிர்களுக்கும் அன்பு செலுத்தியவர் நீங்கள்.

கமலி ஸ்ரீபால்

ஒருவர் எவ்வளவு படித்துள்ளார், எவ்வளவு செல்வந்தர், என்பது பொருட்டே அல்ல.... ஒருவர் மற்றவரை எப்படி மதிக்கின்றார் என்பதை வைத்தே அவர் உயர்ந்த இடத்தினைப் பெறுகின்றார். நீங்கள் மனிதர் மட்டுமல்ல, வாயில்லா ஜீவன்களுக்கும் எத்தனை கருணை காட்டியுள்ளீர்கள்.

உங்கள் முப்பாட்டனார் ஜாம்ஹெட்ஜி பெயரில்தான் வடஇந்தியாவில் ஜாம்ஷெட்பூர் என்ற நகரம் 1912-ல் உருவானது. ஆசிய கண்டத்திலேயே முதல் இரும்பு ஆலையினை இங்கு உருவாக்கியவர் அவர். அகன்ற சாலைகள், இரு புறமும் மரங்கள், அனைத்து மதத்தினருக்கும் கோவில்கள் என மக்களுக்கான அனைத்து வசதிகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட நகரம் பிரபலமான இடம். 'ஒரு நாட்டில் அதிக இரும்பு லாபமாய் இருந்தால் அதிக தங்கமும் லாபமாய் கிடைக்கும்' என்ற வார்த்தைகளை ஜாம்ஷெட்ஜி தன் இந்தியாவில் இதனை உருவாக்கினார். இந்த இரும்பு ஆலை இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்று. டாடா நிறுவனங்களின் அடித்தளமே ஜாம்ஷெட்ஜிதான் எனலாம். 'இந்திய தொழிற்சாலையின் தந்தை' எனவும் இவரை குறிப்பிடுவர்.

ஜாம்ஷெட்ஜி அவர்களை வெள்ளையர்கள் தங்களது ஓட்டலுக்குள் அனுமதிக்கவில்லை. காரணம் அவரது நிறம். இதன் காரணமாகவே ஜாம்ஷெட்ஜி அவர்கள் 'டாம்' என்ற பிரமாண்ட ஓட்டலை உருவாக்கினார். அனைவரும் அங்கு வந்து உணவருந்தவும் தங்கவும் பிரம்மாண்டமாக ஏற்படுத்தினார். இரும்பு, மின் சக்தி, துணி ஆலை, ஓட்டல் என பரந்து விரிந்தது. இவர்கள் சாம்ராஜ்யம். இவை அனைத்தும் இந்தியாவினை உலகத்தின் முன் தலை நிமிரச் செய்தது.

சில குறிக்கோள்கள் உள்ளவர்கள் அதனை நிறைவேற்ற மீண்டும் உலகில் பிறந்து தம் குறிக்கோள்களை நிறைவேற்றுவார்களாம். என் தனிப்பட்ட கருத்தாக ஜாம்ஷெட்ஜி டாடா அவர்கள்தான் ரத்தன் டாடாவாக வந்து சென்றுள்ளாரோ என்று தோன்றுகிறது.

சம்பாதிக்கும் பணத்தினை எல்லாம் அதாவது 65 சதவீதம் அளவிற்கு பல தர்ம காரியங்களில் செலவழிப்பதால் உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இல்லை என்பார்கள். இதனை மாற்றி இத்தனை நிறுவனங்கள், இந்த அளவு தர்ம செயல்கள் என்று கணக்கிட்டுப் பார்த்தால் நீங்கள் முதலாவதாக மட்டுமே என்றும் இருப்பீர்கள். மற்றவை வெகு தொலைவில் தான் இருக்கச் செய்யும்.

எப்போதுமே ஒருவர் தன்னை தனித்தே வைத்துக் கொள்ள வேண்டும் என்பார்கள். யாரிடமும் தாமரை இலை மீது தண்ணீர் போல் ஒட்டாது இருக்க வேண்டும் என்பார்கள். காரணம் இன்று நாம் ஒருவருக்கு மிக முக்கியமான வராகத் தெரியலாம். விழுந்து விழுந்து நம்மோடு ஒட்டி இருக்கலாம். நாளை அவரே நம்மை ஒதுக்கி விடலாம். இது மனதினை அதிகம் வலிக்கச் செய்யும். ஆனால் 'ரத்தன் டாடா' அவர்களே உங்களின் மறைவால் தான் இந்திய மக்களின் மனங்கள் ஆறாத புண் போல் வலிக்கின்றன. இது என்ன அதிசயமோ.

ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் உங்கள் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஒரு வீட்டில் 4 பேர் என்று வைத்தாலும் 50 லட்சம் மக்கள் உங்கள் நிறுவனங்களினால் வாழ்ந்து வருகின்றனர்.

பணத்தினை உபயோகமாக செலவழிப்பது எப்படி என்பதனை உங்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். பல பல கோடி வரை இதுவரை சம்பாதித்த பணத்தினை நாட்டு மக்களுக்கு நன்கொடையாய் கொடுத்து பழகிய உங்கள் குடும்பத்திற்கு "0"ன் மதிப்பு எனபதே தேவையற்றதுதான்.

'இந்தியா பெருமைப்படும் ஹீரோவே' உங்களை என்றென்றும் வணங்குகின்றோம்.

Tags:    

Similar News