சிறப்புக் கட்டுரைகள்

அந்த பயம் தான் காரணம்- மீனா மலரும் நினைவுகள்

Published On 2024-10-21 09:37 GMT   |   Update On 2024-10-21 09:37 GMT
  • குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன்.
  • 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது.

என்னிடம் நிறையபேர் கேட்டிருக்கிறார்கள். மேடம் நீங்கள் ஏன் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்கவில்லை என்று. குடும்ப பாங்கான படங்கள், காதல் காட்சிகள், சோக காட்சிகள் என்று நடிப்பில் பல பரிமாணங்க ளையும் வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் சண்டை காட்சி என்றால் ஏனோ அப்படி ஒரு பயம்.

சின்ன வயதில் சண்டை காட்சிகளில் நடிக்கும் பல வாய்ப்புகள் வந்தன. ஆனால் நம்மால் முடியுமா என்ற பயத்தால் நடிக்க மறுத்து விட்டேன். ஆசையாக இருந்தாலும், நல்லா நடிக்க முடியுமா? மக்களிடம் எப்படி கொண்டுபோய் சேர்ப்போம் என்ற பயம் இருந்ததால் நடிக்கவில்லை.

 

குழந்தையாக இருக்கும்போதே சினிமாவுக்குள் வந்துவிட்டேன். அப்போதெல்லாம் எனது உலகம் அம்மா- அப்பா மட்டும்தான். அவர்கள் அங்கு போ என்றால் போவேன்! இங்கு வா என்றால் வருவேன்! வெளி உலகம் எப்படி இருக்கும்? என்ன மாதிரி பிரச்சினைகள் வரும்? அதை எப்படி சமாளிப்பது என்றெல்லாம் எதுவும் தெரியாது. எல்லாவற்றையும் அம்மாவும், அப்பாவும் பார்த்துக் கொண்டார்கள்.

எனவே சின்ன பிரச்சினை என்றாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவமோ, தைரியமோ எனக்கு இருந்ததில்லை. அப்படிப்பட்ட நான் சண்டை காட்சியில் எப்படி நடிப்பேன்? அந்த பயம் இயல்பானது தானே!

ஆனால் கல்யாணத்துக்கு பிறகு ரொம்பவே மாறி இருக்கிறேன். அதுவும் ஒரு குழந்தைக்கு தாயான பிறகு பொறுப்பு, தைரியம் அதிகமாகவே வந்திருக்கிறது என்று தான் சொல்வேன். எனவே அன்று பார்த்த மீனா வேறாக இருப்பாள்.

இப்போது பார்க்கும் மீனா வேறாக இருப்பாள். எனவே இனிமேல் அப்படிப்பட்ட காட்சிகளிலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் நிலைத்து நிற்பதை திரும்பி பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் நான் கலைக் குடும்ப பின்னணியில் இருந்து வரவில்லை. திடீரென்று சிவாஜி சார் என்னை பார்த்ததும் குழந்தை நட்சத்திரமாக நடிக்க அழைப்பு விடுத்தார். அந்த கலை உலக சக்கரவர்த்தியால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டேன்.

அதன் பிறகு அம்மா- அப்பாவின் ஒத்துழைப்பு, எனது கடின உழைப்பு, கொஞ்சம் அதிர்ஷ்டம் எல்லாம் கை கூடியதால் சாத்தியமாயிற்று என்று நினைக்கிறேன். நிழலில் நடித்தாலும் நிஜத்தில் ஏகப்பட்ட அனுபவங்கள். படப்பிடிப்புக்காக ஊர் ஊராக சென்றிருக்கிறேன். உலகமெல்லாம் சுற்றியிருக்கிறேன். ஒவ்வொரு இடத்தையும் திரும்பி பார்க்கும் போதும் அன்றும்... இன்றும்... எத்தனையோ மாற்றங்கள்.

எத்தனையோ ஊர்களுக்கு சென்றாலும் நம்ம சென்னை தான் எனக்கு தாய் வீடு. இதைப்போல் எந்த ஊரும் வராது. அந்த காலத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழி படப்பிடிப்புகள் எல்லாமும் சென்னையில்தான் நடந்தது.

வெளியூர் படப்பிடிப்புகளுக்காக ஐதராபாத்துக்கு அதிகமாக சென்றிருக்கிறேன். அதிலும் தெலுங்கு படத்தில் அதிகம் நடித்த தால் ஆந்திராவில் பல பகுதிகளுக்கும் சென்று இருக்கிறேன். அந்த வகையில் ஐதராபாத்தைத் தான் எனது 2-வது வீடு என்பேன்.

நான் அன்று பார்த்த ஐதராபாத் வேறு இன்று பார்க்கும் ஐதராபாத் வேறு. முன்பெல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்கு ஐதராபாத்துக்கு செல்லும்போது அங்கு பெரிய அளவில் வசதிகள் எதுவும் இல்லை.

ஷூட்டிங் நேரத்தில் அவசரமாக ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் உடனே வாங்க முடியாது. ஏனெனில் கடைகளே காலை 9 மணிக்கு பிறகுதான் திறக்கும். தலையில் வைப்பதற்கு ஒரு முழம் மல்லிகைப்பூ வாங்க வேண்டுமென்றாலும் 9 மணி வரை காத்திருக்க வேண்டும்.

இன்று இருப்பது போல் அன்று ஆஹா.. ஓஹோ... என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு ஏதும் கிடையாது. ஷூட்டிங் முடிந்து இரவு 9 மணிக்கெல்லாம் பஞ்சராஹில்ஸ் பகுதியில் இருந்து ஜூப்ளிஹில்ஸ் பகுதிக்கு செல்லவே பயமாக இருக்கும். அந்த அளவுக்கு இருட்டாக இருக்கும். தெரு விளக்கு வசதிகூட அவ்வளவாக செய்யப்பட வில்லை. இப்போது எல்லாம் முற்றிலுமாக மாறிவிட்டது. சொர்க்கலோகம் போல் மாற்றி இருக்கிறார்கள்.

ஒருமுறை பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும். அந்த அளவு ஜெகஜோதியாக காட்சியளிக்கும் நகரமாகி விட்டது. எப்படி இருந்த ஐதராபாத் இப்போது இப்படி மாறிவிட்டதே என்று ஆச்சரியமாக இருக்கும்.

எத்தனை ஊர்கள் சுற்றி வந்தாலும் நம்ம மலைகளின் ராணியை அடிச்சிக்க முடியாது. அதுதான் ஊட்டி. முன்பெல்லாம் வெளிநாடு ஷூட்டிங் என்றாலே பெரும்பாலும் ஊட்டியாகத்தான் இருக்கும். ஊட்டிக்கு படப்பிடிப்புக்கு சென்றாலே ரொம்ப ஜாலியாக இருக்கும்.

இயற்கை காட்சிகளும், குளிரும் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும். எவ்வளவு நேரம் படப்பிடிப்பு நடந்தாலும் களைப்பே தெரியாது. அதற்கு காரணம் வியர்க்காது. முக்கியமாக தூசு கிடையாது.

நகரத்து வாழ்க்கை ஆடம்பரமாக தெரிந்தாலும் தூசு மாசு தவிர்க்க முடியாததாகி விட்டது. இவை எதுவும் இல்லாததால் ஊட்டி மனம் கவர்ந்த ராணியாக இருக்கிறாள். எல்லோரும் பார்த்து ரசிக்க வேண்டிய இடம் ஊட்டி. இன்னும் எவ்வளவோ நான் ரசித்த அனுபவங்கள் உண்டு. அதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்...)

60 அடி உயர கட் அவுட்!

பொதுவாக படங்களில் ஹீரோக்களுக்கு தான் பிரமாண்டமான கட்-அவுட்டுகள் வைக்கும் பழக்கம் உண்டு.

அவ்வை சண்முகி பட வெளியீட்டின்போது டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் சார் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். அந்த காலத்தில் பட வெளியீடு, பட பூஜைகள் பிரமாண்டமாக நடக்கும்.

அந்த வகையில் கமல் சாருக்கு 60 அடி உயர கட்-அவுட் வைத்திருந்தார்கள். அதே அளவுக்கு எனக்கும் 60 அடி உயரத்தில் நான் கமல் சாரின் தோளில் கைபோட்டு நிற்பது போன்ற கட்-அவுட் வைத்திருந்தார்கள். ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது.

 

முத்து பட ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்த எங்க அம்மாவுக்கு ஒரு சந்தேகம். எங்கே எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடுமோ என்று கே.எஸ்.ரவிக்குமார் சாரிடம் அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார்.

படம் வெளிவந்த பிறகுதான் அவருக்கு திருப்தி. அதனாலேயே இப்படி ஒரு கட் அவுட்டை ஏற்பாடு செய்ததாக பின்னாளில் எனக்கு நடந்த பாராட்டு விழாவில் கே.எஸ்.ரவிக்குமார் சார் குறிப்பிட்டார். அதை கேட்டு நானும் அம்மாவும் நெகிழ்ந்து போனோம்.

Tags:    

Similar News