- சாதராண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவரின் பிரதான தேவை பணம்.
- பொதுவாக பணம் இல்லாதவர்களை விட அளவிற்கு அதிகமாக பணம் உள்ளவர்களுக்கே மன அழுத்தம் ஏற்படுகிறது.
அனுபவத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் கிரகயுத்தமே மனித வாழ்க்கை. இந்த போராட்டத்தின் இறுதியில் அனுபவமே அறிவின் துணை கொண்டு வெற்றியடையும். இதை புரிந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியடைகிறார்கள். இது புரியாமல் பணம் எனும் அதிர்ஷ்ட குதிரையின் வாலை பிடித்து வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்.அதிகம்.இந்த கட்டுரையில் பண அழுத்தத்தையும் மன அழுத்தத்தையும் எப்படி குறைப்பது என்பதைக் காணலாம்.
பண அழுத்தம்
சாதராண மனிதர்கள் முதல் சாதனையாளர்கள் வரை அனைவரின் பிரதான தேவை பணம். மனிதர்களின் வாழ்வாதாரத் காரணியான பணம் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. பண அழுத்தத்தால் மன அழுத்தம் ஏற்படுகிறதா? மன அழுத்தம் பண அழுத்தத்திற்கு காரணமாகிறதா?
என வியக்கும் வகையில் பண அழுத்தமும் மன அழுத்தமும் அதிகரித்து சமுதாய நோயாக மாறிக் கொண்டே போகிறது.பணம் இருப்பவர்களுக்கு சமுதாயம் வழங்கும் மதிப்பு, மரியாதை, கவுரவம் பணம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை. இதைத் தான் வள்ளுவர்
'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை'
என்று கூறியுள்ளார். இதன் பொருள் தகுதி அற்றவரையும் கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை என்பதாகும்.
அதாவது மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதாகும்.
நிரந்தர மற்ற காரணியான பணம் சிலரிடம் தேவைக்கு அதிகமாக குவிகிறது. சிலருக்கு தன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பணம் இருக்கும். சிலருக்கு அடிப்படைத் தேவையைக் கூட சமாளிப்பதில் சிரமம் இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்த காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க பண வசதியுள்ளவர்களுக்கு தேடிய செல்வத்தை எப்படி எதிர்காலத்திற்காக பத்திரப்படுத்துவது என்ற மன அழுத்தம். இருப்பவனுக்கு இருப்பதால் மன அழுத்தம். இல்லாதவனுக்கு இல்லை என்பதால் மன அழுத்தம். இதுதான் பிரபஞ்ச சக்தி. தனக்கு மீறிய விஷயங்கள் உலகத்தில் நடக்க முடியாது என்று பிரபஞ்சம் மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கை.
ஜோதிடத்தில் 2,5,8,11 ஆகிய பணபர ஸ்தானங்கள் பணவரவைக் குறிக்கும் பாவகங்களாகும். இதில் இரண்டாம் பாவகம் என்பது ஜாதகரின் பண வருவாய் நிலையையும், ஐந்தாம் பாவகம் என்பது பூர்வ புண்ணிய பலனால் ஒருவருக்கு கிடைக்க கூடிய தனத்தின் நிலையையும், எட்டாம் பாவகம் என்பது, எதிர்பாராத அதிர்ஷ்டம் மறைமுகமான தன லாபத்தையும், பதினொன்றாம் பாவகம் என்பது, 5க்கு 7 என்ற முறையில், பூர்வ புண்ணிய பலனை பதினோராம் பாவத்தில் லாபமாக, 10க்கு 2 என்ற முறையில் பத்தாம் வீட்டிற்கு லாபகரமான தன நிலையை குறிக்கும். 2, 11-ம் பாவகத்துடன் ஒரு ஜாதகத்தில் 5, 8-ம் பாவகங்கள் தொடர்பு பெற்று சம்பந்தப்பட்ட தசை வரும்பொழுது, நிச்சயம் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுய ஜாதகத்தில் குரு பாவ கிரக சேர்க்கை பெறாமல் நல்ல ஸ்தான பலத்துடன் இருக்கும் பொழுது, நிச்சயம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கிடைத்த பணத்தை பாதுகாப்பது எப்படி என்ற மன அழுத்தம் இருந்து கொண்டே இருக்கும்.
பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
ஒரு ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் இருந்து 3, 6, 8, 12 ஆகிய நான்கு பாவங்கள் துர் ஸ்தானங்கள் அல்லது மறைவு ஸ்தானங்கள் எனப்படும். இந்த நான்கு பாவகங்களும் அதன் அதிபதிகளும் ஒரு ஜாதகருக்கு அசுப பலன் தருபவர்கள். ஒருவரின் கர்ம வினைப்படி அவர் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை மறைவு ஸ்தானம் பரிபூரணமாக தருவது மறைவு ஸ்தான அதிபதிகள்.
மூன்றாம் பாவகம் பாதி மறைவு காலமாக கருதப்படுகிறது எனவே இதன் அதிபதி மத்திமமான பவராக அமைக்கிறார் பன்னிரன்டாமிடம் முக்கால் பங்கு மறைவு ஸ்தானமாகும். ஆறு மற்றும் எட்டாமிடம் முழு மறைவு ஸ்தானங்களாகும். இதன் அதிபதிகள் ஒரு ஜாதகத்திற்கு முழு பாவ கிரகங்களாக அமைகிறார்கள். ஒரு ஜாதகத்தில் மறைவு ஸ்தானாதிபதிகள் வலு குறைவாக இருப்பதே சிறப்பு. மறைவு ஸ்தானமும் அதன் அதிபதிகளும் அதில் நின்ற கிரகங்களும் சுப வலுப்பெற்றால் பணம் ஒருவரை வாழ வைக்கும். உழைக்காத அதிர்ஷ்ட வருமானம், உயில் சொத்துக்கள் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் நடைபெறும்.
அசுபத் தன்மையுடன் இயங்கினால் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், அடிப்படைத் தேவைக்கு திணருவது தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுப பலன்கள் நடக்கும். வாழ்பவரை வீழ வைக்கும். பணத் பிரச்சினைகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சல் மிகுதியாகும்.
ஆக பணம் இருந்தாலும் மன அழுத்தம், பணம் இல்லாவிட்டாலும் மன அழுத்தம். பொதுவாக பணம் இல்லாதவர்களை விட அளவிற்கு அதிகமாக பணம் உள்ளவர்களுக்கே மன அழுத்தம் ஏற்படுகிறது. மத்திய அரசாங்கம் 2000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு வெளியிட்டதை அடுத்து கிடைத்த ஐந்ததையும் பத்தையும் 2000 ரூபாய்த் தாளாக மாற்றி வைத்தவர்களின் பாடு படு திண்டாட்டமாகி மன அழுத்தத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார்கள்.
மன அழுத்தம்
அவசரகதியான உலகில் டென்ஷன், மன அழுத்தம் தீர்க்க முடியாத ஒரு வியாதியாக சமூதாயத்தில் உலா வருகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியாது. மன அழுத்தத்தை சுலோ பாய்சனுடன் ஒப்பிடலாம். தீராத மன அழுத்தம் மனிதனை சிறிது சிறிதாக அழித்து விடும். ஒருவரின் எண்ணங்கள் ஈடேறும் போது அவர்கள் அடையும் சந்தோசம், மன நிம்மதிக்கு அளவே கிடையாது, நிறைவேறாத எண்ணங்கள் கனவாக கானல் நீராக ஆழ் மனதில் பதிந்து விடும். நிறைவேறாத எண்ணங்களை மன வலிமை உள்ளவர்கள் கனவாக நினைத்து மறந்து அடுத்த முயற்சியை நோக்கி அடியெடுத்து வைக்கிறார்கள். மன வலிமை குறைந்தவர்கள் தனிமையில் யோசித்து தன் மனதை தானே கெடுத்துக்கொண்டு மற்றவர்களையும் வதைக்கிறார்கள். அனைவரையும் படாத பாடு படுத்தும் மன உளைச்சல் ஏற்படுவதற்கான காரணங்களை பார்க்கலாம். பணம், தொழில், உத்தியோகம் தொடர்பான மன உளைச்சலை பெரிய முதலீட்டாளர்கள் முதல் சிறிய பெட்டி கடை வரை யாரையும் விட்டு வைக்காமல் அனைவரையும் தலை சுற்ற வைக்கிறது. உளவியல் ரீதியாக பண அழுத்தமே மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தம் ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு நோய்களை மனிதனுக்கு தருகிறது.
ஜனன ஜாதகத்தில் லக்கினம், 3-ம் இடம், சந்திரன், சூரியன், நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் எண்ணங்கள் 100 சதவீதம் நிறைவேறும். ஜாதகர் நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்த வராக இருப்பார், ஜாதகரின் எண்ணங்கள் வலிமை உடையதாக இருக்கும். அதனால் எளிதில் எந்த விசயத்திற்கும் அசருவதில்லை என்பதால் மன அழுத்தம் ஏற்படாது.
ஜோதிட ரீதியாக மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான கிரக அமைப்புகள் உள்ளன. ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன் ஆகும். சூரியன் ராகு, கேது, சனியுடன் இணைவது, சூரியன்நீசம் பெற்றவர்கள், 6,8,12-ல் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.
ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனோரீதியான பாதிப்பு அதிகமாகும். லக்னரீதியாக லக்னத்திற்கோ லக்னாதிபதிக்கோ 8-ல் சந்திரன் மறைந்தால் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சந்திரனுடன் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி, பாதகாதிபதி சம்பந்தம் கடுமையான மன உளைச்சல் ஏற்படுத்தும்.
ராசியின் அடிப்படையில் பார்க்கும் போது மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு சந்திரனால் மனோரீதியான பாதிப்புகள் இருக்கும். நட்சத்திர ரீதியாகப் பார்க்கும் போது சனி, புதன், ராகு, கேது ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மன அழுத்தம் மிகுதியாக இருக்கும். மிகக் குறிப்பாக சனி, புதனின் நட்சத்தி ரத்தில் பிறந்தவர்களுக்கு பாதிப்பு மிகுதியாக இருக்கும்.
புதன், சந்திரன், சனி நீச்சம் அடைந்தாலும் கடுமையான மன அழுத்தம் நிச்சயம் ஏற்படும்.
ராகு, சனி, புதன், கேது, பாதகாதிபதி, அட்டமாதிபதியின் திசை, புத்தி காலங்களில் மன அழுத்தம் உண்டு.
கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது பிறப்பு ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும்போதோ மனோரீதியாக பாதிப்பு நிச்சயம் உண்டு.
கோட்சார ராகு, கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம ராகு,கேது, ஆகிய காலகட்டங்களிலும் மனோரீதியான பாதிப்பு அதிகம் உருவாகும்.
லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்ட்டமாதிபதி இருந்தாலோ அல்லது பார்வை சேர்க்கை பெற்றாலோ அல்லது லக்னாதிபதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6,8,12-ம் அதிபதியுடன் அமர்ந்தாலும் மனோரீதியான நோய் பாதிப்பு ஏற்படும்.
ஜனன கால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தால் மன அழுத்தம் உண்டாகும். மனிதனை கொல்வது நோயா? பயமா? என்று ஆய்வு செய்யலாம். நமது முன்னோர்கள் செயல்பாடுகளில் விவேகத்தையும் நிதானத்தையும் கடைபிடித்ததால் பயமும், நோயும் இல்லாமல் 100 வருடங்களுக்கு மேல் கவலை, பயம் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
அவசர உலகத்தில் சக மனிதர்களிடம் போட்டி, பொறாமை, யாரை கெடுத்தால் பணம் சம்பாதிக்கலாம் என்ற வஞ்சக எண்ணம், காசு, காமம், சொத்தால் விரக்தி, ஆரோக்யமற்ற உணவான பாஸ்ட் புட் கலாச்சாரம் போன்றவைகள் மன வியாதியை பொன்னாடை போர்த்தி வரவேற்கிறது. யாரோட திறமையையும் யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. ஒவ்வொரு ஆன்மாவும் பூமியில் ஜீவிக்கத் தேவையான ஞானத்துடன் பிரபஞ்சம் படைக்கிறது.அப்படி இருக்க பிரபஞ்சத்திற்கு எதிரான செயல்களில் மனிதன் ஈடுபடும் போது இனம் புரியாத பெயரிட முடியாத வியாதி, மனக்கவலை அவனை சிறைப்படுத்துகிறது. எனவே பிரபஞ்சத்தோடு ஒன்றி நல்ல எண்ணங்களோடு பயபக்தியோடு வாழ்பவர்களுக்கு மன உளைச்சல் வராது. லக்கினம், 3-ம் இடம், சந்திரன் மூன்றும் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே ஜாதகரால் மனதை ஒரு நிலை படுத்த முடியும். எந்த நோயும் மனிதனை கொல்வதில்லை. அதைப்பற்றிய பயம்தான் அவனை கொல்கிறது.
உடலை ஆன்மாவின் போக்கில் பயணிக்க அனுமதித்தால் அது எதற்காக வடிவமைக்கப்பட்டதோ அதை மிகச் சிறப்பாக செய்யும். இயற்கையோடு ஒன்றி மனமும், உடலும் இணைந்து செயல்பட அனுமதிப்பவர்களுக்கு மனநோய் வருவதில்லை, அப்படியே வந்தாலும் ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஜனன ஜாதகத்தில் லக்னம் வலிமையானவர்களுக்கும், ஆழ்மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்களுக்கும், எப்போதும் எந்த பாதிப்பும் இருக்காது.
பரிகாரம்
வெயில், மழை, குளிர் என அனைத்து பருவ சீதோசனத்தையும் உடலுக்கு பரிட்சயப் படுத்த வேண்டும். சிறிய உடல் உபாதைகளுக்கு அலோபதி மருந்தை பயன்படுத்தாமல் எளிய வீட்டு வைத்தியத்தை கடைபிடிக்க வேண்டும். மன அழுத்தத்தால் விரக்தியில் இருப்பவரை குடும்பத்தாரின் அன்பான வார்த்தைகளாலும், ஆதரவாலும் மட்டுமே இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் பூமியில் ஜனனமாகும் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு வினைப் பதிவு உண்டு. அசைவ, உணவு சாப்பிடுபவர்கள் பிற உயிர்களின் கர்மா,நோயை சேர்த்து சுமக்க வேண்டும். எனவே முடிந்த வரை காய்கறி பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். யோகா, தியானம் போன்றவற்றை பயிற்சி செய்ய வேண்டும். சித்தர்கள், ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும். அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய துவிதியை திதியில் இருந்து பவுர்ணமி திதி வரை மாலை நேரத்தில் சந்திர தரிசனம் செய்யவேண்டும்.
தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபடுவது நல்ல பலன் தரும். திருவோண நட்சத்திரத்தன்று திருவோண விரதம் இருந்தால் மன விரக்தி நீங்கி சந்தோஷமான வாழ்வு அமையும். திருவோண விரதத்தால் மனநிம்மதியுடன் அனைத்து செல்வ வளங்களையும் பெற்றிடலாம். மனநோய் தாக்கம் மிகுந்தவர்கள் திருச்சி அருகிலுள்ள குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் சென்று வரலாம். மனக்குழப்பம், மனநோயால் பாதிக்கப்பட்ட வர்கள் வழிபட வேண்டிய தலம். இங்கு சென்று வந்தால் மன நோயின் சுவடே இல்லாது போகும். மனக்குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பொருளாதார வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.