வாழ்வை வளமாக்கும் கரணநாதன் வழிபாடு
- ஜோதிடம் என்பது நவகிரகங்களின் இயக்கத்தை கணிக்கும் கணித முறையாகும்.
- நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறுவது ஜோதிடம்.
மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சாஸ்திரம் தொடர்பான தகவல்களை தரும் நல்ல வழிகாட்டியாகவும் ஜோதிடம் திகழ்கிறது. ஜோதிடம் என்பது நவகிரகங்களின் இயக்கத்தை கணிக்கும் கணித முறையாகும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பஞ்சபூதங்கள் மூலம் நவகிரகங்கள் உலகத்தை இயக்குகிறது. நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பற்றி கூறுவது ஜோதிடம். அதே போல் வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை கொண்ட பஞ்சாங்கமின்றி ஜோதிடம் இல்லை. பஞ்சாங்கம் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு அங்கம். பஞ்சாங்கமே ஜோதிட சாஸ்திரத்தின் அரிச்சுவடி என்றால் மிகையாகாது , ஒருவர் பிறந்த நாளின் பஞ்சாங்கத்தை வைத்து அவரின் வாழ்க்கை முறையை அறிய முடியும். அதே போல தினசரி பஞ்சாங்கம் உலகியல் மாற்றத்தினால் தனி ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பை காட்டும்.
நவ கிரகங்களின் இயக்கத்தை கணிக்க உதவியாக இருக்கும் பஞ்சாங்கத்தை பற்றி தெரிந்து கொள்வது அனைவரின் கடமையாகும்.
ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்களும் பாரம்பரியத்தை பின்பற்றுபவர்களும் தினமும் காலையில் எழுந்தவுடன் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இருக்கும். பல சிவ, விஷ்ணு ஆலயங்களில் மூலஸ்தானத்தில் உள்ள இறைவனுக்கு தினமும் காலை நேரத்தில் பஞ்சாங்கம் வாசிக்கும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. ஜோதிடம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என யாராக இருந்தாலும் சுப நாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான சுப பலன்களும் உண்டாகும். விரோதிகள் புற முதுகு காட்டுவார்கள். ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் விலகும். நீண்ட ஆயுளும், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். தினமும் பஞ்ச அங்கங்களை பற்றி தெரிந்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை அளவிட முடியாது.
தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம் கிடைக்கும், வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைச் தெரிந்து கொண்டு அன்றாட பணிகளை அனுசரிப்பது நல்லது. ஒருவரின் ஜென்ம ராசி, ஜென்ம நட்சத்திரம், ஜென்ம லக்னம் போல் அவர்கள் பிறந்த கரணமும் கரணநாதன் வழிபாடும் மிக முக்கியம்.இந்த கட்டுரையில் பஞ்ச அங்கங்களில் ஐந்தாவது அங்கமான கரணம் என்றால் என்ன. எந்த வகையான கரணத்தில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் அதற்கான வழிபாடு பற்றிய விரிவான தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
கரணம்
கரணம் என்பது பஞ்சாங்கத்தின் ஐந்தாவது அங்கமாகும். சந்திரனின் 16 நாட்கள் வளர்பிறை நிலை, 16 நாட்கள் தேய்பிறை நிலைக் கால சுழற்சியே ஒரு மாதம் என்று கணக்கிடப்படுகிறது. கரணம் என்பது ஒரு திதியின் பாதியாகும். 6 பாகை கொண்டது ஒரு கரணமாகும். இரண்டு கரணம் கொண்டது ஒரு திதியாகும்.
கரணங்கள் 11 வகைபடுகின்றன.
இதில் 7 கரணங்கள் "ஸ்திர" கரணங்கள் அதாவது நிலையான கரணங்கள், இது ஒரு மாதத்தில் 8 முறை வரும். மீதமுள்ள 4 கரணங்கள் "சர" கரணங்கள். அதாவது நகரும் கரணங்கள் இது மாதத்தில் ஒரு முறை மட்டுமே வரும். மனிதர்கள் தாங்கள் பிறக்கும் கரணத்தின் பறவைகள், மிருகங்களின் குணங்களையும், உணர்வுகளையும் தன்னகத்தே பெற்றவர்களாக இருப்பார்கள்.
அக்கரணங்களுக்குக்கான உருவமாக சில விலங்குகள், பறவைகள் உருவங்களும் ஜோதிட சாத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவரவர் பிறந்த நேரத்தை வைத்து அவரவரின் கரணத்தை அறியலாம். அதோடு ஒவ்வொரு கரணத்தில் பிறந்தவருக்கும் சில குணாதிசயங்கள் இருக்கும் அது பற்றி பார்ப்போம்.
1. பவ கரணம் - சிங்கம்
இந்த கரணத்தின் விலங்கு சிங்கம் என்பதால் இந்த கரணத்தில் பிறந்தவர்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். எந்த காரியத்திலும் பின் வாங்காத தைரியம் உடையவர்கள். சற்று ஏழ்மையானச் சூழ்நிலையில் பிறந்தாலும் தங்கள் விடா முயற்சியால் செல்வந்தராவார்கள். மிகவும் பெருந்தன்மையான குணங்களை பெற்றிருப்பார்கள். இந்த கரணத்தின் விலங்காக சிங்கம் இருப்பதால், வீர தீர சாகசம் புரியும் ராணுவம், காவல்துறைப் போன்றப் பணிகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள். இதன் விலங்கு சிங்கம் என்பதால் இவர்கள் நாமக்கல் நரசிம்மரை வழிபடுவதால் மேன்மை பெறமுடியும்.
2. பாலவ கரணம் - புலி
இந்த கரணத்தின் விலங்கு புலி என்பதால் இவர்கள் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். மிகுந்த தைரியசாலிகளான இவர்கள் அழகானத் தோற்றம் உடையவர்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள்.
புகழ் உடையவர்கள். முயற்சியுடையவர். சிற்றின்ப பிரியர். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி அதில் வெற்றியும் பெறுவார்கள். அதே நேரத்தில் பிறருக்காக எத்தகையத் தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர்கள் அது சம்பந்தமான துறைகளில் சாதனைகள் புரிவார்கள். நீங்காத செல்வமுடையவர். இதன் விலங்கு புலி என்பதால் புலி வாகனன் சபரிமலை ஐயப்பன், தர்மசாஸ்தா மற்றும் கிராம தேவதைகளை வழிபட்டால் சுபம் உண்டாகும்.
3. கவுலவ கரணம்- பன்றி
இக்கரணத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு சிலர் தங்களின் சுயநலம் காரணமாக இரக்கமின்றி, பிறருக்கு துன்பம் தருபவர்களாக இருப்பார்கள். மற்றவர்களிடம் அவப்பெயரைச் சம்பாதிப்பார்கள் இதன் காரணமாக இவர்கள் தங்கள் வாழ்வில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அரசாங்கப் பணியாளராக இருப்பார்கள். நல்ல ஆச்சாரமுடையவர்கள். தந்தை தாய் மீது பற்றுள்ளவர்கள், நில புலன்கள் வாகன வசதி உண்டு. இதன் விலங்கு பன்றி என்பதால் கடலூர் ஸ்ரீ முஷ்ணம் பூவராக பெருமாளை வழிபட இன்பம் அதிகமாகும்.
4. தைதுலை கரணம்- கழுதை
இவர்கள் எப்போதுமே இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒரு பிரச்சினையில் தங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும், அதை அதிகாரத் தன்மையுடன் தீர்க்காமல் அமைதியான முறையில் தீர்ப்பார்கள். இயற்கையிலேயே மன உறுதி கொண்டவர்களாக இருப்பதால், எப்படிப்பட்ட சவால்களையும் ஏற்றுக் கொண்டு அதில் வெற்றி அடைவர். எதிர்காலத்திற்கான பாதுகாப்பைக் கொடுக்கும் உத்தியோகங்களில் சேர்ந்து பணிபுரிவர். குறிப்பாக அரசாங்கத்தில் பணி புரிபவர்கள். இவர்கள தேவியை வழிபடலாம்.
பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
5. கரசை கரணம் (யானை)
இதன் விலங்கு யானை என்பதால்
மக்கள் தலைவர்களாக அச்சமற்றவர்களாக அரசர்களுக்கு ஆலோசனை சொல்பவர்களாக
பகைவரை வெல்பவர்களாக இருப்பார்கள். இந்நபர்கள் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் திட்டமிட்டு செய்யக்கூடியவர்கள். சிறந்தப் பேச்சுத் திறனும் அதிகம் பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். கற்பனைத்திறன் அதிகம் கொண்டவர்கள் என்பதால் ஓவியம், சிற்பம், கவிதை, நாடகம், நடனம் போன்ற கலை சம்பந்தமான துறைகளில் சாதிப்பர். எல்லோருக்கும் உதவும் தரும சிந்தனையுடையவர்கள். இதன் விலங்கு யானை என்பதால் விநாயகரை வழிபடலாம்.
6. வணிசை கரணம் (எருது)
இதன் விலங்கு எருது என்பதால் இவர்களிடம் சிறந்த நிர்வாகத்திறன் இருக்கும். படித்தவர், சாமர்த்தியசாலி சுகவாசி அன்பு நிறைந்தவர்கள். மேலும் வியாபாரத்தில் சாதிக்கக் கூடிய மிகச் சிறப்பான புத்திசாலித்தனம் இருப்பதால் இவர்கள் எவ்வகையான தொழில்களிலும் முன்னிலைக்கு வந்து விடுவர். மற்றவர்களிடம் இனிமையாகப் பேசி தங்களுக்கு வேண்டிய காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். காரியங்களைத் திட்டமிட்டு செய்து வெற்றிகளைப் பெறுவார்கள். இதன் அதிபதி சூரியன் என்பதால் சிவ வழிபாடு சிறப்பு.
7. பத்திரை கரணம் (கோழி-சேவல்)
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் பயம் அறியாதவர்கள். சபலகுணம் உண்டு. மிகுந்த கருமியும், சஞ்சல மனம் படைத்தவர்கள். மந்த குணத்தால் எந்த காரியத்தையும் சற்றுத் தாமதமாகவே செய்து முடிப்பர். ஓவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் மிக்கவர்களாக இருப்பர். மனிதாபிமான குணம் இருக்கும். இவர்களை யாராவது தொடர்ந்து ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதன் அதிபதி கேது. இதன் பறவை உருவம் சேவல் என்பதால் திருச்செந்தூர் முருகனை வழிபடலாம்.
8. சகுனி கரணம் (காகம்)
இக்கரணத்தில் பிறந்தவர்கள் மிகவும் அமைதியானவர்களாக இருப்பார்கள். புத்திசாலித்தனமும், சிறந்த அறிவாற்றலும் கொண்டவர்களாக இருப்பார்கள் மேலும் இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமிருப்பதால் இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும். எதிர்காலம் அறிந்தவர்கள். மிகுந்த செல்வம், தைரியம் உள்ளவர்கள். இவர்கள் மிகவும் பக்குவப்பட்ட மனிதர்களாக நடந்து கொள்வார்கள். நோய்த் தீர இந்த கரணத்தில் மருந்து உட்கொள்ளலாம். இதன் அதிபதி சனி. இதன் பறவை காகம் என்பதால் ஸ்ரீ சனி பகவானை வழிபடலாம்.
9. சதுஷ்பாத கரணம் (நாய்)
இக்கரணத்தினர் சுதந்திரத் தன்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே பிறருக்கு கீழ் அவர்கள் உத்தரவுகளுக்கு பணிந்து வேலை செய்யாமல், தானே முதலாளியாக இருக்கக் கூடிய தொழிலில்களையே இவர்கள் செய்வார்கள். பிறரிடம் அனைத்திலும் உண்மையாக நடந்து கொள்வார்கள். மிகவும் கடினமாக உழைக்கக் கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நிலையற்ற புத்தி உடையவர்கள். ஆரோக்கிய கேடு, கொடூர குணம் உண்டு. இக்கரணத்தில் சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களைக் தரும். இதன் விலங்கு நாய் என்பதால் பைரவர் வழிபாடு நல்லது.
10. நாகவ கரணம் (பாம்பு)
இந்த கரணத்தில் பிறந்தவர்கள் வித்வான், கோபம் உடையவர்கள். குறைவாக சாப்பிடு வார்கள். துன்பத்தை ஆள்பவர்கள். இந்த கரணத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பூமி சம்பந்தப்பட்ட சுரங்கம், தாதுக்களை வெட்டி எடுப்பது போன்ற தொழில்களையோ, வியாபாரங்களையோ செய்வர். இவர்கள் ஆன்மிக வழியில் சென்றால், சிறந்த ஞானியாகுவார்கள். ஒரு சிலர் பிறருக்கு தீமை விளைவிக்கும் காரியங்களைச் செய்வர். இதன் விலங்கு பாம்பு என்பதால் சர்ப்ப வழிபாடு சிறப்பு.
11. கிம்ஸ்துக்கினம் கரணம் (புழு)
இவர்கள் சுகவாசி நகைச்சுவை உணர்வு மிக்கவர் தன்னம்பிக்கை சிறந்த அறிவாற்றலைக் உடையவர்கள். தீயவர்களுடன் சகவாசம் கொள்ளாதவரை இவர்கள் தவறான வழியில் செல்வதில்லை. இவர்கள் மகாவிஷ்ணுவை வழிபடலாம். வாழ்வை வளமாக்கும் கரண தேவதைகளை வழிபட்டு வெற்றி பெற நல் வாழ்த்துக்கள்.