சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்... சிக் உடையில் கிக்...

Published On 2024-07-01 10:44 GMT   |   Update On 2024-07-01 10:44 GMT
  • சாப்பிடுவது முதல் ஷாப்பிங் போவது வரை எல்லாமும் மகேஸ்வரியுடன் தான்.
  • படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்தே படப்பிடிப்பை எதிர்நோக்கி இருந்தோம்.

நானும் மகேஸ்வரியும்....!

திரை உலகில் பல நண்பர்கள் இருந்தாலும் நானும் மகஸ்வரியும் மிகவும் நெருக்கமான தோழிகள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இருவருமே பிசியாக இருந்த காலகட்டம். படப்பிடிப்புகளில் எங்காவது சந்திக்க நேர்ந்தாலும் சரி. ஓய்வு கிடைத்து இருவரும் சென்னையில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் சரி. இருவரும் ஒன்று சேர்ந்து விடுவோம்.

சாப்பிடுவது முதல் ஷாப்பிங் போவது வரை எல்லாமும் மகேஸ்வரியுடன் தான். அந்த அளவுக்கு எங்கள் நட்பு ஆழமானது. அழகானது. படப்பிடிப்புகளுக்காக ஆளுக்கொரு திசையில் சுற்றிக் கொண்டிருந்தாலும் எங்காவது சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிஸ் பண்ண மாட்டோம்.

அப்படிப்பட்ட எங்களுக்கு ஒரு படத்தில் ஒன்றாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படி ஒரு சந்தர்ப்பம் 'நாம் இருவர் நமக்கு இருவர்' படத்தில் கிடைத்தது.

பிரபுதேவா சார் தான் ஹீரோ. ஹீரோயின் இருவர். ஒன்று நான். இன்னொன்று என் தோழி மகேஸ்வரி.

படம் ஒப்பந்தம் ஆனதில் இருந்தே படப்பிடிப்பை எதிர்நோக்கி இருந்தோம்.


நான் கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்தேன். அந்த நேரம் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் மகேஸ்வரி சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க தொடங்கி விட்டார்கள். ஊட்டி பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

நான் கேரளாவில் ஷூட்டிங்கை முடித்து விட்டு ஊட்டி போக வேண்டும். அன்றைய தினமே மகேஸ்வரியும் வேறு ஒரு ஷூட்டிங் செல்ல வேண்டும். அதை முடித்து விட்டு மீண்டும் வந்து என்னோடு இணைந்து கொள்வார். இது தான் திட்டம். திட்டமிட்டபடி கேரளாவில் இருந்து நான் புறப்பட முடியவில்லை. விமானம் தாமதமாகி விட்டது. தாமதமாகவே கோவை சென்று அங்கிருந்து காரில் ஊட்டிக்கு விரைந்தேன்.

எப்படியாவது என்னை பார்த்து விட வேண்டும் என்ற ஆசையில் மகேஸ்வரியும் ரொம்ப நேரம் காத்திருந்துள்ளார்.

நானும் மகேஸ்வரி கிளம்புவதற்குள் பார்த்து விட வேண்டும் என்று விரைந்து கொண்டிருந்தேன். காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க வாஞ்சையுடன் செல்லும் போது எதிர்பாராத விதமாக எதிர் எதிரே இருவரும் செல்வதும், ஆனால் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாமல் போவதும் சினிமா காட்சிகளில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்.

அப்படி அன்று எங்களுக்கு இடையேயும் ஒரு எதிர்பாராத காட்சி நடந்தது. அதாவது நீண்ட நேரம் காத்திருந்தும் என்னை காணாததால் மகேஸ்வரி காரில் கோவை புறப்பட்டு இருக்கிறார்.

நான் கோவையில் இருந்து ஊட்டியை அடைந்ததும் மகேஸ்வரியை தேடினேன். அப்போது தான் அவர் கிளம்பிய விபரத்தை கூறினார்கள்.


எனது காருக்கு எதிரில் வந்து என்னை கடந்து சென்றிருக்கிறார். ஆனால் ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை. இன்றைய கால கட்டத்தை போல் செல்போன்கள் இருந்திருந்தால் அதிலாவது தொடர்பு கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குத்தான் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

மணிவண்ணன் சார், செந்தில் சார், ஜெமினி சார், மஞ்சுளா ஆண்டி என்று நட்சத்திர பட்டாளங்கள் அதிகம். அதனால் செட்டே கலகலப்பாக இருந்தது.

'இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன். மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன். இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன். உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...'

இந்த சூப்பர் பாடல் காட்சிகள் ஐதராபாத்தில் அப்போது தான் கட்டப்பட்ட ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. முதல் முதலாக அந்த பிலிம்சிட்டிக்கு ஷூட்டிங் சென்ற சிலரில் நாங்களும் இருந்தோம். பிரபுதேவா சார் டான்ஸ் என்றால் சொல்ல வேண்டியதில்லை. நிறைய 'மூவ்மெண்ட்ஸ்' இருக்கும் அதிலும் வித்தியாசமாக இருக்கும். அதை அச்சு பிசகாமல் ஆட வேண்டும் என்றால் நன்றாக கவனிக்க வேண்டும். நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அருமையான பாடல். சூப்பர் மூவ்மெண்ட்ஸ். ரசித்து ரசித்து நடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு. ஏனெனில் 2 நாள் தான் கால்ஷீட் இருந்தது. பிரபுதேவாவும் நானும் ஒன்றரை நாளில் முடித்துவிட்டோம்.

பாடல் காட்சி ஒன்றுக்கு நீருற்றினை சுற்றி இருக்கும் சிறு சுவர் மீது நின்று ஆட வேண்டும். அதற்கு ஒரு மூவ்மெண்ட்டை சொல்லித்தந்தார். அதன்படி பின்னோக்கி நடந்து ஆட வேண்டும்...? லேசாக தவறினாலும் தண்ணீரில் தான் விழ வேண்டும். பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் கச்சிதமாக நடித்து முடித்தேன். இப்போதும் அந்த காட்சி என் நினைவில் உள்ளது. ஷூட்டிங் ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நானும் மகேஸ்வரியும் ஜாலியாக பொழுது போக்கினோம். இரவு 'டின்னர்' 'ஸ்டீம்பாத்' எல்லாம் ஒன்றாகவே செய்வோம். அறையில் இருக்கும் போது எங்களுக்குள் அரட்டை அடித்து பலமாக சிரிப்போம்.

டைரக்டர் சுந்தர்.சி உள்பட மொத்த டீமும் ஏம்மா... நாங்களும் இருக்கிறோம். எங்களிடமும் சொல்லி சிரியுங்களேன் என்பார்கள். 'சகலகலா ராணி...' என்ற ஒரு பாடல். அந்த பாடலில் நானும் மகேஸ்வரியும் சேர்ந்து ஆட வேண்டும். அதற்கான காஸ்ட்யூம் பற்றி நாங்கள் இருவரும் பேச முடிவெடுத்தோம். நான் என்ன கலர்... நீ என்ன கலர்... சிகை அலங்காரம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். வழக்கமாக இந்த மாதிரி கலந்து பேச மாட்டேன். நாங்கள் தோழிகள் என்பதால் படத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்ற கற்பனையோடு இருந்தோம்.

கடைசியில் அந்த பாடலுக்கான ஷூட்டிங்கே நடக்கவில்லை. அந்த பாடலும் படத்தில் இடம் பெறவில்லை. எங்கள் ஆசை நிராசையாக போய் விட்டது.

அடுத்த வாரம் மற்றொரு தகவலுடன் சந்திக்கிறேன்...

(தொடரும்...)

Tags:    

Similar News