சிறப்புக் கட்டுரைகள்

தெய்வீகம் கமழும் தென் கன்னடம்

Published On 2024-07-03 08:57 GMT   |   Update On 2024-07-03 08:57 GMT
  • அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது.
  • சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

மகிழ்வான மங்களூர் நகர கட்டுரையில் கர்நாடகத்தில் உள்ள தக்ஷண கனடா என்று அழைக்கப்படுகின்ற தென் கன்னட மாவட்டத்தின் தலைநகரான மங்களூரை பற்றியும் அங்குள்ள பொழுதுபோக்கு அம்சங்களையும் கண்டோம். இப்போது தென் கன்னடம் என்றாலே தொன்மை மிகு கோயில்கள் பெயர் பெற்றவைகளாக உள்ளன. அவைகளை அறிவோம்.

கர்நாடகத்தின் முக்கிய புண்ணிய தலமாக உள்ள "தர்மஸ்தலா மஞ்சுநாதர் ஆலயம்" மற்றும் "குக்கே சுப்பிரமணிய ஆலயம் (காளஹஸ்தி போல் நாக தோஷம் போக்குகின்ற பக்தர்கள் குவியும் பரிகாரத் தலம்) பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

இவை மட்டுமல்லாது இன்னும் பல கோவில்களும் இந்த மாவட்டத்திலேயே உள்ளன. இந்த மாவட்டத்தில் மங்கலாதேவி உள்ளிட்ட ஏழு அம்மன்கள் (சகோதரிகள்) அங்கு வாழக் கூடிய மக்களை காவல் காப்பதாக ஐதீகம்.

இவற்றில்... மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து நெளிந்து ஓடி வரும் நந்தினியாற்றின்அருகே அமைந்துள்ள "கட்டில்" என்ற ஊரிலுள்ள "துர்கா பரமேஸ்வரி அம்மன்" அங்கு வருகை புரியும் பக்தர்களுக்கு கேட்ட வரத்தை அருள் பாலிப்பவளாக காட்சியளிக்கிறாள்.

சுயம்புவாக எழுந்ததாக கருதப்படும் அம்மன் "மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி அதிகம்" உடையவளாக இருப்பது உண்மை.

இந்த அம்மனுக்கு சாற்றப்படும் புடவைகள் எண்ணிலடங்கா.... அத்துடன் கண்ணாடி வளையல்களை, வேண்டுதல் கோரிக்கை நிறைவேற்றியதும் அங்கு வரும் பக்தர்களுக்கு அளிப்பது வாடிக்கை.

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக் காலங்களில் அதிக மழை பெய்யும் நாட்களில் இந்த கோவிலினுள் ஓடும் நந்தினியாற்றின் அழகை ரசிப்பதே தனி ஆனந்தம். பல்குணி நதிக்கரையில் நம் நாட்டின் பழமையான கோவில் ஒன்று "பொலலி"என்ற இடத்தில் உள்ளது.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி இங்கே எழுந்தருளியுள்ள தெய்வம். நம்மூரில் உள்ள மாரியம்மன் போல் ஆளுயரத்திற்கும் மேல் சிவப்பு நிறத்தில் 9 அடி உயரத்தில் மூலிகை மருந்துகளால் உருவாக்கப்பட்டு அமர்ந்திருப்பதை காண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

இங்கு வருடத்திற்கு ஒருமுறை அருகில் உள்ள வயல்வெளியில் "பொலலி செண்டு" என்று கொண்டாடும் திருவிழாவிற்கு மக்கள் வெள்ளம் கூட்டம் கூட்டமாக திரள்கிறது. இத் திருத்தலம் மங்களூருவிற்கு 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மங்கலாதேவி ஆலயத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திலேயே மாரி குடியும் (மாரியம்மன் கோயில்) உருவா மார்க்கெட் என்ற இடத்தில் ஒரு மாரி குடியும் உள்ளது.

மேலும் 30 கிலோமீட்டர் தொலைவில் உடுப்பி செல்லும் வழியில் உள்ள "முல்கி" என்ற இடத்தில் "துர்கா பரமேஸ்வரி" அருள்பாலிக்கிறாள்.

இந்த சக்தி மிகுந்த தெய்வங்கள் தென் கனடா மாவட்டத்தை காவல் காப்பதாக மக்களின் தெய்வீக நம்பிக்கை.

இந்த மாவட்டத்தில் பல கிறித்துவ தேவாலயங்கள் இருந்தாலும் மங்களூரில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் இன்பான்ட் ஜீசஸ் சர்ச், கார்மல் குன்றில் உள்ள கிறிஸ்தவ குழந்தை இயேசு தேவாலயம் அமைதி ததும்பும் இடமாக இருக்கிறது.

தென் கன்னடாவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ள "உல்லால்" கேரளா காசர்கோடு செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

மதினாவில் இருந்து 400 வருடங்களுக்கு முன்பு வந்த புனித சையது சரி என்பவர் பல அற்புதங்களை நிகழ்த்தியதாக சொல்லப்படுகிறது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உருஸ் திருவிழாவிற்கு பல்வேறு நாடுகளில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் திரளாக வந்து பங்கேற்கின்றனர்.

தென் கன்னட மாவட்டத்தில் சமண வழிபாடும் அதிகமாக இருந்திருப்பதை ஆங்காங்கேயுள்ள பசதிகள் அதாவது சமண ஆலயங்கள் நிரூபிக்கின்றன.

ஜெயின் சமயத்தவரின் தென்னிந்தியாவில் உள்ள வாரணாசியாக கருதப்படும் மூடுபத்திரியில் உள்ள ஆயிரம் தூண் ஆலயம் 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருந்தாலும் ஒரு தூண் போன்ற அமைப்பு இன்னொரு தூணில் காணப்படுவது இல்லை.

மங்களூர் மாவட்டத்தில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய மக்கள் இருந்தாலும் துளு பேசக்கூடிய மக்களே அந்த மண்ணின் மைந்தர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தெய்வ வழிபாடு என்பது கர்நாடகத்தில் இருந்தாலும் முற்றிலும் வேறுபட்டு இருப்பது ஆச்சரியமே.

"யக்ஷகானா" என்கின்ற நடன நாடகம் அக்டோபர் முதல் அறுவடை முடிந்த வயல்வெளிகளில் வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய உடைகள் மற்றும் அலங்காரத்தோடு மகாபாரதம் ராமாயணத்தில் உள்ள கிளை கதைகள் போன்றவை சொல்லப்படுகின்றன. விடியும் வரை மக்கள் அமர்ந்து விரும்பி பார்க்கக்கூடிய அளவில் சிறப்பாக நடைபெறுகிறது.

துளு மக்கள் நாக வழிபாட்டில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள "குடுப்பு" என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் பஞ்சமி.. சஷ்டி திதிகளில் ஆயிரக்கணக்கான இளநீர்கள் அபிஷேகத்திற்கு பக்தர்களால் வழங்கப்படுகிறது. அதைப்போன்றே அனைத்து கோவில்களிலும் அரச மரத்தை ஒட்டியுள்ள நாக சிலைகளுக்கும் இதே பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

"நாகமண்டலா" என்ற பெயரில் லட்சக்கணக்கில் செலவு செய்யப்பட்டு பொதுவெளியில் இரவு நேரத்தில் ஒரு பூஜை நடத்தப்படுகிறது.

நாகம் போன்று வேடமிட்டு ஆண் சுழன்றும் நெளிந்தும் ஆடும் முறையை தரிசிக்க அனைத்து மக்களும் பயபக்தியுடன் கலந்து கொள்வதை நாம் காணலாம். அங்கு அனைவருக்கும் உணவு வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தினரும் கூட இந்த பூஜையை வேண்டிக் கொண்டு தனிப்பட்ட முறையில் செய்வதும் இங்கு வழக்கத்தில் உள்ளது.

யக்ஷ கானாவை போலவே இங்கு பூத கோலா அல்லது நேமா என்ற ஒரு வழிபாட்டு முறை இங்கு கொண்டாடப்படுகிறது. 'கொரகஜ்ஜா' என்ற தெய்வத்திடம் (நம் முனீஸ்வரர் கருப்பசாமி போல்) அதிகம் பயம் உள்ளவர்களாக இந்த ஊர் மக்கள் இருக்கின்றனர். அவர் மீது செய்யப்படும் சத்தியத்தை மீறாமல் நடந்து கொள்வதை கடைப்பிடிக்கின்றனர்.

"புலி வேஷம்" ,இது நம்ம ஊர் போன்று புலி வேஷம் என்றாலும் இதற்கான ஒப்பனை என்பது சற்று வேறுபட்டுள்ளது.

இங்கு கிருஷ்ண ஜெயந்தி உரியடி ஊர்வலங்கள்... விநாயகர் சதுர்த்தி... தசரா போன்ற பண்டிகைகளின் ஊர்வலங்களில் மக்கள் புலிவேஷம் அணிந்து தாளத்திற்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டு வருவது மிகவும் ரசிக்கத் தக்க வகையில் இருக்கும். வேடிக்கைக்காகவும் வேண்டிக் கொண்டும் இந்த வேடம் போடுகின்றனர்.

இவ்வாறு வித்தியாசமான வழிபாடுகள் முறைகள் இருந்தாலும் தென் கன்னட மாவட்ட மக்கள் அனைவரும் 'பரசுராம ஷேத்திரம்' என்ற புண்ணிய பூமியில் இருப்பவர்களாக உணர்ந்து நியாயம் தவறாது நடப்பவர்களாக உள்ளனர்.

இங்குள்ள அனைத்து கோவில்களிலும் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்பது அவர்கள் ஆலயத்தை எந்த அளவிற்கு பக்தியுடனும் அறநெறியுடனும் பராமரிக்கிறார்கள் என்பதை உணர முடியும்.

அனைத்து கோவில்களிலும் தூய்மையும் அமைதியும் காக்கப்படுகிறது. கோவிலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் பக்தர்களின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல இடங்களுக்கும் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து பயணிப்போம்.

இணைய முகவரி:

thaenmozhi27@gmail.com

Tags:    

Similar News