சிறப்புக் கட்டுரைகள்
null

மன்னிப்பதும் மறப்பதும்!

Published On 2024-07-07 11:15 GMT   |   Update On 2024-07-07 11:15 GMT
  • மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தவறுகள் நேர்வது என்பது இயல்பான செயல் ஆகும்.
  • ஒருவர் பிழையை மற்றவர் பொறுத்துக் கொள்வது.

மன்னிப்பது மறப்பது ஆகிய மாபெரும் மனித மாண்புகளைப் பற்றி வாசிக்கக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.

அடுத்தவர்கள் மீது நமக்கிருக்கும் பகை உணர்வைப் போக்கவும், எப்போதும் அடுத்தவர்கள் மீது குறை சொல்லிக்கொண்டே இருக்கும் தீயபழக்கம் நம்மைவிட்டு அகலவும் ஒரே சிறந்தவழி, அவர்கள் எவ்வளவு பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்து விடுவது ஆகும். மன்னிப்பதோடு மட்டுமில்லாமல் அவற்றை மறந்துவிடவும் செய்தால் அதைவிட மிக உன்னதமான செயல் வேறு இல்லவே இல்லை என்றே சொல்லி விடலாம்.

மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தவறுகள் நேர்வது என்பது இயல்பான செயல் ஆகும்; அந்தத் தவறுகளால் தாம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்தவர்களும் பாதிக்கும்படி நேர்ந்துவிட்டால் அதற்கு வருந்துவதோடு மட்டுமல்லாமல், அதே தவறுகள் மீண்டும் நிகழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருதரப்பினரிடையே பகை, இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி வசைமாரி பொழிந்துகொள்ளும் நிலை.. இப்படி இருந்தால் ஒருவர் மட்டுமே மன்னித்து மறந்து விடுவதால் அந்தப்பகை தீர்ந்துவிடாது. இருதரப்பினருமே முழுமையாக மன்னித்து மறந்துவிடுவதால் மட்டுமே பரஸ்பரம் அன்புகனிந்து நேசம் மலரும்.

மன்னிப்பது, மறத்தலில் தொடங்குகிறது என்று பலர் கருதுவர். ஆனால் திருவள்ளுவர், மன்னித்தல் நினைத்தலில் நிறைவு பெறுவதாகக் கூறுகிறார். ஒருவரைப்பற்றிய வெறுப்புணர்வு பகையாக மாறுகிறது; அவர் செய்துவரும் அடாத செயல்களால் அவர்மீது வெறுப்புப் பெருகுகிறது. திருவள்ளுவர் சொல்கிறார், ஒருவர் நமக்கு மன்னிக்க முடியாத அளவுக்குக் கெடுதல் செய்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அதையே நினைத்துக் கொண்டிருந்தால் அவரை நமக்கு மன்னிக்கத் தோன்றாது; மாறாக அவர் இதற்குமுன் நமக்கு யாதேனும் ஒரே ஒரு நன்மை செய்திருந்தாலும் அந்த ஒரு நன்மையை நினைவில் வைத்துக்கொண்டு, இப்போது கொலைபாதகக் கொடுமைகள் செய்திருந்தாலும் அவற்றை மன்னித்து விடுங்கள் என்கிறார்.

தவறு செய்வது மனிதகுணம் என்றால் அடுத்தவர் நமக்கிழைத்த தவறுகளை மன்னித்து மறந்து விடுவது என்பது தெய்வகுணமாகும். சிலருக்கு மனது சல்லடைபோல இருக்கும். நல்லவற்றையெல்லாம் வடிகட்டிக் கீழே அனுப்பிவிட்டுக் கசடுகளை மட்டுமே தேக்கி வைத்திருக்கும். இக்குற்றம் பார்க்கும் கசடுமனம் கழிவதற்குக் கசடு இல்லாத நல்ல நூல்களைக் கசடின்றித் தெளிவாகக் கற்கவேண்டும்.

மூத்தோர்கள் மீது இளையவர்களுக்கும், இளையவர்கள் மீது மூத்தோர்களுக்கும், மேலதிகாரிகள் மீது கீழதிகாரிகளுக்கும், கீழதிகாரிகள் மீது மேலதிகாரிகளுக்கும் ஒருவிதக் குற்றம்பார்க்கும் மனப்பான்மை இருந்துகொண்டே இருக்கும். இது தலைமுறை இடைவெளி காரணமாகவும் அலுவல் ரீதியான மேல்கீழ்த் தன்மை காரணமாகவும் ஏற்படுகிறது. பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மதிக்கக் கற்றுக்கொண்டால் இந்தக் குற்றம்காணும் தீங்குமுறை ஏற்படுவதில்லை.

குடும்பங்களில் தாய் தந்தையிடமும், தந்தை தாயிடமும், பெற்றோர்கள் பிள்ளை களிடமும், பிள்ளைகள் பெற்றோர்களிடமும் குற்றம் காண்பதிலேயே குறியாய் இருக்கின்றனர். குடும்பம் தவிர உறவு, சுற்றம், நட்பு என எந்நிலையிலும் ஒருவருக்கொருவர் குறைசொல்லி வெறுப்புணர்வை வளர்த்தபடியே தான் வருகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காகவே "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை!" என்கிற பழமொழியும் பரவலாக வழங்கப்பட்டு வருகிறது.

பள்ளிக்கூடங்களில் பல ஆசிரியர்கள் குற்றம் கண்டுபிடிக்கும் புலவர்களாகவே காணப்படுகின்றனர். விடைத்தாள்களில் 'சரி' என்னும் குறியீடுகளைவிடத் 'தப்பு' என்னும் குறியீடுகளை அதிகமாகப் போடும் ஆசிரியர்களே பெருகி வருகின்றனர். வளரும் மாணவத் தலைமுறையைக் குற்றம் கூறித் திருத்த முயல்வதைவிடக், குற்றமற்றவர்களாக அவர்களை உணரவைத்து வளர்த்தெடுப்பதே நேர்முறை அணுகுமுறை ஆகும்.

ஓர் இளைஞன், தனக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியராய் இருந்த பெருமகனை ஒரு பொதுநிகழ்வில் சந்தித்தான். ஓடிச்சென்று காலில் விழுந்து வணங்கி," ஐயா! நான் தங்கள் மாணவன்; அந்த ஊரில் தங்களிடம் ஐந்தாம் வகுப்புப் படித்தேன்!; என்னைத் தங்களுக்கு நினைவில் இருக்கிறதா?" என்று கேட்டுத் தனது பெயரைச் சொன்னான். யோசிக்கத் தொடங்கினார் ஆசிரிரியர்; உடன் படித்த மாணவர்கள் பெயர்களையெல்லாம் சொன்னான் இளைஞன்; அவர்களில் சிலரை நினைவில் இருக்கிறது, ஆனால் நீ நினைவுக்குள் வரவில்லையே! என்று இழுத்தார் ஆசிரியர்.

"ஐயா! அவ்வளவு சுலபமாக நீங்கள் என்னை மறந்திருக்க முடியாது!; நானும் உங்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டேன்!; நீங்கள்தான் எனக்கு உயரிய ஒழுக்கம் கற்பித்த ஆசான்!" என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக்கொண்டே போனான் இளைஞன். "என்னப்பா நீ என்னென்னமோ சொல்லிக் கொண்டு போகிறாய்! எனக்கு எதுவுமே நினைவுக்கு வரமாட்டேன்கிறதே!" என்றார் ஆசிரியர்.

"ஐயா ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு நாள் வகுப்பறையில் நடந்த அந்த சம்பவத்தைச் சொன்னால் நிச்சயம் உங்களுக்கு என்னை நினைவுக்கு வரும். அன்று வகுப்பறைக்குத் தனது மாமா சிங்கப்பூரிலிருந்து வாங்கி வந்து தனக்குப் பரிசாக வழங்கியிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்துடன் முருகன் என்கிற மாணவன் வந்திருந்தான். அந்தக் கடிகாரத்தின் அழகில் மயங்கிப் போயிருந்த நான் எப்படியாவது அதனைத் திருடிவிட வேண்டும் எனத் திட்டம் போட்டேன்.

பாட இடைவேளை நேரத்தில், முருகன் தனது கைக்கடிகாரத்தைக் கழற்றி தனது மேசைக்குள் வைத்துவிட்டுக் கழிவறைக்குச் சென்றுவிட்டான். அந்த நேரம் பார்த்து, யாருக்கும் தெரியாமல் அதனைத் திருடி எனது கால்சட்டைப் பாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்துக்கொண்டேன். வகுப்பறைக்குத் திரும்பிய முருகன், தனது கடிகாரம் காணாமல் போனதை வகுப்பாசிரியராகிய உங்களிடம் புகார்க் கூறினான். இதற்காகப் பதற வேண்டாம்; கடிகாரம் வேறு எங்கும் போயிருக்காது; இங்குதான் இருக்கும்; கண்டுபிடித்து விடலாம் என்று முருகனிடம் கூறிய நீங்கள் வகுப்பிலிருந்த மாணவர்களாகிய எங்களைப் பார்த்து ஓர் அறிவிப்புச் செய்தீர்கள்.

"மாணவச் செல்வங்களே! நமது முருகனுடைய வெளிநாட்டுக் கைக்கடிகாரம் இப்போது தொலைந்து விட்டது; உங்களில் யாராவது ஒருவர் அதனைக் கண்டெடுத்துப், பத்திரமாக உங்கள் சட்டை அல்லது கால் சட்டைப்பைகளில் போட்டு வைத்திருக்கலாம். நீங்களாகத் தாருங்கள் என்று கேட்டால், தரும்போது, வீண்பழி உங்களை வந்து சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் எல்லோரும் இங்கு முன்னால் வந்து கண்களை மூடிக்கொண்டு வரிசையாக நில்லுங்கள்; நான் ஒவ்வொருவர் பைகளிலும் தேடுவேன்; கடிகாரத்தைக் கண்டெடுத்து விடுவேன்; கட்டாயம் முருகன் உட்பட எல்லோரும் நான் சொல்லும் வரை கண்களைத் திறக்கவே கூடாது".

எனது அன்பான ஆசிரியரே! எல்லா மாணவர்களும் கண்களை மூடிக்கொண்டு நிற்க, நீங்கள் அந்தக் கடிகாரத்தை எனது கால்சட்டைப் பாக்கெட்டில் இருந்துதான் எடுத்தீர்கள்; ஐயா! இப்போது என்னை உங்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்கும். அந்த அறியாப் பருவத்தில் நான் வேடிக்கை யாகச் செய்த அந்தத் திருட்டுப்பழியை என்மீது படியாமல் பாதுகாத்த தெய்வ மையா நீங்கள்!" என்று கண்கலங்கச் சொன்னான்.

அப்போது அந்த இளைஞனைப் பார்த்து அந்த ஆசிரியர் சொன்னார், "தம்பி அந்த சம்பவம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; ஆனால், அந்தக் கடிகாரத்தை உனது பையிலிருந்துதான் நான் எடுத்தேன் என்பது எனக்கு நினைவில்லை. ஏனெனில் கடிகாரத்தை தேடும் அந்த நேரத்தில் நானும் உங்களைப் போலவே கண்களை மூடித்தான் இருந்தேன்!" .

சுந்தர ஆவுடையப்பன்

எவ்வளவு பெரிய ஒழுக்க முறையை அந்த ஆசிரியர் கடைப் பிடித்திருக்கிறார் பாருங்கள்!. தவறுவது மனித இயல்பு!; அதிலும் அறியாப் பருவமாகிய குழந்தைப் பருவத்தில் மனம்பிறழத் தவறுகள் செய்வது சர்வ சாதாரணம். ஆயினும் திருடப்பட்ட அந்தக் கடிகாரத்தைத் தொலைந்து போனது போலவும், அதனைக் கண்டெடுப்பது போலவும், யாரிடமிருந்து கண்டெடுக்கப்பட்டது என்று தெரிந்து விட்டால் அந்த அழியாத திருட்டுப் பட்டம் அந்த மாணவனைச் சூழ்ந்து சிதைத்துவிடும் என்பதால் கண்களை மூடிக்கொள்ளச் சொன்னதோடு, அந்தக் கசப்பான உண்மை தனக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று தனது கண்களையும் மூடிக்கொண்ட மகத்தான மனம் அந்த ஆசிரியருடையது!. இதுவன்றோ ஆகச்சிறந்த மன்னிக்கும் மறக்கும் திறம்!.

மன்னிக்கும் மனப்பான்மை மனித மனங்களுக்குள் குடியிருக்கும் வெறுப்புணர்வை அகற்றுகிறது; மனிதர்களுக்கு இடையே இருக்கும் பிரிவினைகளையும் இடைவெளிகளையும் அகற்றி உறவு நிலையை

உறுதியாக்கி ஒன்றிணைக்கிறது. எந்நேரமும் கொதிநிலையில் இருக்கும் மனம் அமைதிநிலையை அடைந்து ஆனந்தம் கொள்வதற்கு மறக்கும் மனப்பான்மை பெரிதும் உதவுகிறது.

எப்போதும் புதிதுபுதிதாய்ச் சிந்திக்கும் மனநிலையே மனிதனை எப்போதும் 'இன்று புதிதாய்ப் பிறந்தவர்களைப் போல' வைத்திருக்க உதவுகிறது. அடுத்தவர் இழைத்த தீங்குகளைப் பற்றியே எந்நேரமும் சிந்தித்துக் கொண்டிருக்கும் நெஞ்சம், அந்த இடத்திலேயே நின்றுபோய் விடுகிறது; சாக்கடைச் சகதிக்குள் உழன்றுகொண்டிருக்கும் பன்றியைப்போல மனம் வாசமிழந்து போகிறது. மன்னிக்காமலும் உடனே மறக்காமலும் விட்டுவிட்டால் நம்முடைடைய வளர்ச்சி என்பது நிகழாமல் அங்கேயே தேங்கிப் போய் நின்று விடுகிறது.

இருவருக்குள் மனவேறுபாடு வந்து, இருவருமே ஒருவருக்கொருவர் வசைமாரி பொழிந்து கொண்டிருந்தால் யார் முதலில் யாரை மன்னிப்பது? என்னும் கவுரவப் பிரச்சனை எழுவதற்கு வாய்ப்பு உண்டு. சமாதானமாகப் போய்விடுவது, அதற்கு, ஒருவர் பிழையை மற்றவர் பொறுத்துக் கொள்வது. என்கிற நிலை வரும்போது, யார் முதலில் இறங்கி வருகிறார்களோ அவர்களே உயர்ந்த மனிதர்கள் ஆகின்றனர். மறைந்திருந்து தன்னைக் கொல்வதற்கு அம்பை எய்த இராமனை, மரணத்தறுவாயில் ஏசித்தீர்த்துக் கொண்டிருந்தான் வாலி. எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்ட ராமன் ஒரே வரியில், 'நீ இது பொறுத்தி' என்று கூறி மன்னிப்பும் கேட்டான்; வாலியினது மகனை ஏற்றுக்கொண்டு மன்னித்தும் விட்டான். ராமன், பொறுத்துக் கொள் என்றவுடன் வாலியும் முந்திக்கொண்டு மன்னித்துத், தன் மகனை அடைக்கலமாக ராமனிடம் ஒப்படைத்தும் விட்டான்.

உலகில் நிகழும் அத்தனைக் கொடுஞ்செயல்களுக்கும் மன்னிக்கும் தன்மை இல்லாத மனங்கள் பெருகியிருப்பதே முக்கியக் காரணமாகும். தானே பெரியவர் என்கிற மிகப்பெரும் ஆணவத் தலைப்பாகைகளைச் சுமந்துகொண்டு ஒவ்வொருவரும் உலா வந்துகொண்டிருப்பதால், சிறுசொல்கூடப் பொறுக்கமுடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். கோபம் கொப்பளிக்கத் தொடங்குகிறது; மனம் பரபரப்பாகி மன அழுத்தத்தில் உழல்கிறது; அமைதியின்மை நெஞ்சில் குடியேறி, உறக்கமின்மையில் கொண்டுபோய்த் தள்ளிவிடுகிறது.

பிறகு பெருகிடும் மனநோயிலும் உடல் நோயிலும் இடையறாது அல்லல்பட்டு உழலவேண்டியது அவசியமா? என ஒருநொடி யோசிக்க வேண்டாமா?.

மன்னித்தலில் தொடங்கிவிடுகிற மன அமைதி, அடுத்தவர் இழைத்த தீங்குகளை மறந்துவிடும்போது ஆனந்த அமைதியாகி விடுகிறது.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News