சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- கொல்லாமை

Published On 2024-09-30 09:07 GMT   |   Update On 2024-09-30 09:07 GMT
  • கனவிலும் பிறருக்குத் தீங்கு செய்யாத எண்ணம் இருந்தால் தவம் கைகூடி சித்தி பெறலாம்.
  • பக்தியும் புண்ணியமுமே குருஅருளை பெற்றுத்தரும்.

அதிகாரம்: கொல்லாமை

இந்த அதிகாரத்தில்,

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாந் தரும்.

என்ற குறளில் தொடங்கி

உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

உயிர்களைக் கொலை செய்வது பாவம். எந்த உயிர்களை, எந்தக் காரணத்திற்காக கொலை செய்தாலும் அது பாவமே. சிலர் தற்காப்புக்காக கொல்கின்றோம் என்று கூறி, தின்பண்டங்களைப் பாதுகாப்பதற்காக ஈ, எறும்பு போன்ற உயிர்களைக் கொலை செய்வார்கள். அவ்வாறு செய்யாமல் அதற்கு வேறுவகையான யுக்தியைக் கையாண்டு பாதுகாத்துக் கொள்ளலாம்.

எந்த உயிர்களைக் கொலை செய்தாலும் அதற்குரிய தண்டனை அந்த ஆன்மாவையே சார்ந்து, அந்த ஆன்மாவிற்குக் கெடுதலை உண்டாக்கும். உயர்நிலையில் உள்ள ஞானிகள், சான்றோர்கள் தமக்குத் துன்பம் ஏற்பட்டாலும் கூட பிற உயிர்களைக் கொலை செய்ய மாட்டார்கள். அவர்கள் கருணையே வடிவானவர்கள்.

உயிர்க்கொலை செய்வது பாவம் என்பதையும் அவர்கள் நமக்கு வலியுறுத்துகின்றார்கள். தன் உயிரை வளர்ப்பதற்காகவும் சுவைக்காகவும் பிற உயிர்களைக் கொல்வார்கள்.

இதுவும் பாவமே. நம்மிடம் பிறர் உதவி கேட்டால் தக்க நேரத்தில் கொடுத்து உதவ வேண்டும். கொடுப்பதாகக் கூறி மனதில் வஞ்சம் வைத்து இறுதிக் கட்டத்தில் இல்லை என்று ஏமாற்றி னால் அது கொலை செய்வதை விட கொடுமையான பாவம். நன்றி மறப்பது உயிர்க் கொலை செய்வது போன்றதே.

தினந்தோறும் மனைவியை அடித்துச் சித்ரவதை செய்வதும் நித்தியக் கொலையே. தாய், தந்தையர் செய்த நன்றியை மறந்து அவர்களுக்குத் துன்பம் செய்தால் அதுவும் ஒருவகைக் கொலையே. வேலை செய்பவனை கசக்கி பிழிவதும் ஒருவகை கொலையே.

ஆக, சொல்லால் கொல்லுதல், செய்கையால் கொல்லுதல், சிந்தனையால் கொல்லுதல் போன்ற பலவகையான கொடுமைகளும் கொலைகளே! தவம் மேற்கொள்கின்றவர்கள் ஈ, எறும்பு போன்றவற்றைக் கொன்றால்கூட தவம் கைகூடுவதில் தடை ஏற்படும்.

கனவிலும் பிறருக்குத் தீங்கு செய்யாத எண்ணம் இருந்தால் தவம் கைகூடி சித்தி பெறலாம். அதற்குத் திருவடி துணை வேண்டும். புலால் உண்ணுகின்ற பழக்கம் நின்றாலே உயிர்க் கொலை செய்கின்ற பழக்கம் நின்று போகும். உயிர்க்கொலை செய்தால் ஆன்மாவிற்குப் பாவம் சூழும், ஆன்மாவிற்குப் பாவம் சூழ்ந்தால் அறிவு மங்கிவிடும்; அறிவு மங்கினால் அறியாமை சூழும்; அறியாமை சூழ்ந்தால், வறண்ட மனம் உருவாகிப் பிற்காலத்தில் தனித்து நிற்கின்ற சூழ்நிலை உருவாகும்.

மனித வர்க்கம் முன்னேற வேண்டுமாயின் பிற உயிர்களைக் கொலை செய்கின்ற எண்ணம் இருக்கக் கூடாது. அப்போது ஆன்மா ஆக்கம் பெறும். உயிர் ஆக்கம் பெற்றால், உடல் ஆரோக்கியம் உண்டாகும், வறுமை தீரும். உயர்ந்த சிந்தனைகளும் குழப்பம் இல்லாத தெளிவான அறிவும் நல்ல நட்பும் உண்டாகும். அதற்கு ஞானிகள் ஆசியைப்பெற வேண்டும். கொலை செய்தால் தலைவனின் கருணையை நாம் பெற முடியாது.

பல உயிர்களுக்கு நன்மை செய்தால்தான் ஆன்மாவைக் கடைத்தேற்ற முடியும். உயிர்க்கொலை செய்தால் எமன் விரைவில் நம்மைப் பற்றிக் கொள்வான். சிலர் சில உயிர்களை அடித்துப் பாதியில் போட்டு விட்டு, அது துடிப்பதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். அது கொடுமையிலும் கொடுமை. இத்தகைய துன்பத்தை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும். லட்சோப லட்சம் பிறவிகளை எடுத்து வந்துள்ளோம். ஒவ்வொரு ஜென்மத்திலும் அறியாமையின் காரணமாகவும், அகந்தையின் காரணமாகவும், கவனக்குறைவு காரணமாகவும், கர்வத்தின் காரணமாகவும், கொலை செய்த பாவம் குழும்.

அதனால் மீண்டும் பிறந்து அதனை அனுபவிக்க வேண்டும். மீண்டும் பிறவாமல் இருக்க உயிர்க் கொலை செய்யக்கூடாது. உயிர்க்கொலை செய்ய அஞ்ச வேண்டும். செல்வத்தை இழந்தவன் கூட மீண்டும் செல்வத்தைத் தேடிக்கொள்ள முடியும். ஆனால், தவசிகளின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தால் அவனுக்கு விமோச்சனம் கிடையாது. அதற்குப் பரிகாரம் தேடமுடியாது. தவம் மேற்கொள்பவர்கள் கோபம் கொள்வது கொலைக்குச் சமமானது. அதனால் பலநாள் செய்த தவம் கெடும்.

கோபம் கொள்ளாமல் இருக்க தலைவனை உருகித் தியானிக்க வேண்டும். கோபம் கொண்டு பிறரைச் சபித்து, உயிர்களை அழிக்கின்ற தவசிகளுக்கு, அடக்கத்துடன் உயிர்க்கொலை செய்யாது பல உயிர்களுக்கு நன்மை செய்கின்ற இல்லறத்தானே தலைவன் ஆகத் தகுதியுடைய வன் ஆவான். கோபத்தை வென்றவனே உண்மையான துறவி. நாம் எவ்வளவு பாடுபட்டு உயர்ந்தாலும் உயிரைக் கொன்றால், எல்லா பாவங்களும் சூழ்ந்து நாம் பாவியாகி விடுவோம்.

 

தவத்திரு. ஆறுமுக அரங்கமா தேசிக சுவாமிகள்

தம் உயிரே போவதாக இருந்தாலும் பிற உயிரைக் கொலை செய்தல் கூடாது என்ற வைராக்கியம் மேற்கொள்ளுதல் வேண்டும். சிலர் சிறுதெய்வத்திற்கு உயிர்களை பலியிடுவார்கள், தாங்கள் உயர்நிலை அடைவதற்காக அவ்வாறு செய்வதாகக் கூறுவார்கள்.

அத்தகைய வன்செயலை உயர்ந்த நிலையில் உள்ள சான்றோர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சாத்வீகவாதிகள், ஆன்மீகவாதிகள், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகிறவர்கள் இந்த செயலை ஏற்க மாட்டார்கள்.

இத்தகையவர்களைப் பார்ப்பதே கொடியது என்று சான்றோர்கள் கூறுவார்கள். புகழ் வாய்ந்தவர்கள், அதிகார பலம் படைத்தவர்கள், பணபலம் உள்ளவர்கள், படைபலம் உள்ளவர்கள், மன்னர்கள் ஆகியோர் பிறர் தங்களை இடறிப் பேசினாலும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அவர்கள் கோபம் கொண்டு பிறரை அழித்தால், அவர்களின் செய்வழும் புகழும்கூட அவர்களுக்கு ஆபத்தாக இருக்கும்.

அருவருப்பான தேகத்துடன் அருகில் செல்லவே அஞ்சக்கூடிய வகையில், நோய்வாய்ப்பட்டுக் கிடப்பார்கள். இவர்களெல்லாம் அறியாமையின் காரணமாகவோ, அகந்தையின் காரணமாகவோ அல்லது புலால் உண்ணுவதற்காகவும் பல உயிர்களைக் கொன்று குவித்திருப்பார்கள். அவர்களே இத்தகைய நிலையை அடைவார்கள். அவர்கள் நாடாளும் மன்னராக இருந்தாலும் இத்தகைய நிலையை அடைய நேரிடும்.

கொலை செய்கின்ற வன்மனத்தால், அவர்கள் மீண்டும் மீண்டும் பிறந்து துன்பத்தை அனுபவிப்பார்கள். உயிர்க்கொலை செய்வதைத் தவிர்த்து பிற உயிர்களுக்கு உபகாரம் செய்பவர்கள், மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம். அதற்குச் சான்றோர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். திருமந்திரம், திருக்குறள். திருஅருட்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். குரு அருள் பெறுவதற்கு கொல்லா நெறியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பக்தியும் புண்ணியமுமே குருஅருளை பெற்றுத்தரும். ஞானிகள் கருணைக் கடலாக விளங்குபவர்கள். அவர்கள் திருவடிகளைப் பற்றி, பூஜை செய்தால், நம் மனமும் கருணையோடு இருக்கும். அப்போது தெளிந்த அறிவு ஏற்படும். தெளிந்த அறிவு ஏற்பட்டால் தன்னைப் பற்றி அறியான், தன்னைப் பற்றி அறிந்து, தனக்குள்ள பலகீனங்களை நீக்கிக் கொள்வான். நீக்கிக் கொண்டால், மலமாயை அற்றுப்போகும். மீண்டும் பிறவாமல் இருக்க தலைவன் அருள் செய்வான். எனவே மனத்தை வென்று மரணமில்லாப் பெருவாழ்வை அடையலாம்.

Tags:    

Similar News