சிறப்புக் கட்டுரைகள்

என்னவென்று சொல்வதம்மா... மீனா மலரும் நினைவுகள்

Published On 2024-09-30 09:29 GMT   |   Update On 2024-09-30 09:29 GMT
  • பொள்ளாச்சி கேமரா கண்களை மட்டுமல்ல நமது கண்களையும் கொள்ளையடிக்கும் அழகான ஊர்.
  • கிராமங்களில் அப்படித்தான் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் ஆடி மகிழ்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

வாழ்க்கையில் புதுமைகளை அனுபவிக்கும் அனுபவம் இருக்கிறதே அது மறக்க முடியாத அனுபவமாக இருந்துகொண்டே இருக்கும்.

சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு வசதியாக இப்போது நடமாடும் பங்களாவைப்போல் கேரவன்கள் வந்துவிட்டன. ஒரு இடத்தில் ஷூட்டிங் நடக்கும்போது மேக்கப் போடுவது உடை மாற்றுவது சிறிது நேரம் ஓய்வெடுப்பது எல்லாமே இந்த நடமாடும் பங்களாவுக்குள் தான். ஆனால் அந்தக் காலத்தில் இப்படி ஒரு வசதியை நாங்கள் பார்த்ததும் இல்லை. அனுபவித்ததும் இல்லை.

ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன் மரங்களுக்கு பின்னால் நின்றும், நாலு பேர் போர்வைகளை சுற்றி பிடித்துக்கொள்ள அதற்குள் நின்றும் உடை மாற்றிக்கொண்டு நடித்த அனுபவங்கள் உண்டு. இப்போது கிடைக்கும் வசதிகள் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால் இந்த வசதி 2000-ம் ஆண்டு வாக்கில் அறிமுகமானது.

அறிமுகமானபோது இன்றைய கேரவன்கள் போல் கிடையாது. ஒரு சிறிய கூண்டு வண்டி போல் இருக்கும். காரில் கட்டி இழுத்து வருவார்கள். அதற்குள் மேக்கப் போடுவதற்கு நிலை கண்ணாடி கூட இருக்காது. உட்காருவதற்கு ஒரு சின்ன அறை. ஒரு சிறு டாய்லெட். அதற்குள் செல்லும்போது இடிக்கும். இவ்வளவுதான் வசதிகள் இருந்தது. அதுவும் கதாநாயகிகளுக்கு தர மாட்டார்கள். ஹீரோவுக்கு மட்டும்தான். அந்த வசதியை கொடுப்பார்கள் உடை மாற்றுவது போன்ற பிரச்சனைகளை சந்திப்பது பெண்களாகிய நாங்கள் தான்.

ஆனாலும் வசதிகளை செய்து கொடுப்பது ஹீரோக்களுக்கு தான். அதற்காக எதுவும் சொல்ல முடியாது. இதுதான் நிலைமை. அதன் பிறகு அந்த கூண்டு வண்டிகள் தாராளமாக கிடைக்க ஆரம்பித்ததும் நாங்களே வாடகைக்கு அமர்த்திக் கொள்வோம். ஷூட்டிங் செல்லும்போது அந்த கேரவன்களை வைத்துக் கொள்வோம்.

ஆனால் இப்போது கேரவன்கள் தாராளமாகி விட்டன. அது மட்டுமல்ல அதற்குள் வசதிகளும் ஏராளம் வந்துவிட்டன. ஒரு டோர் வேன்களும் இருக்கின்றன. இரண்டு டோர் வேன்களும் இருக்கின்றன. அதற்குள் இருந்தால் குளிரூட்டப்பட்ட வசதியுடன் ஒரு பங்களாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இது நவீனங்களின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள மாற்றம்.

பொள்ளாச்சி...

பொள்ளாச்சி கேமரா கண்களை மட்டுமல்ல நமது கண்களையும் கொள்ளையடிக்கும் அழகான ஊர் அதனால் தான் தமிழ், தெலுங்கு என படப்பிடிப்பு குழுவினர் பலரும் முற்றுகையிடுகிறார்கள்.

இந்தப் பகுதியின் இயற்கை காட்சிகளும் இதமான சூழ்நிலையும் படப்பிடிப்புக்கு உகந்ததாக அமைந்துள்ளது. முன்பெல்லாம் பொள்ளாச்சியில் மாதம் தோறும் சென்று தங்குவோம். அங்கு ஓட்டல் சக்தி பிரபலமானது. அந்த ஓட்டலில் இரண்டாம் தளத்தில் அறை எண் 210 பெரும்பாலும் எனக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கும். அது சூட் போன்ற மிகப்பெரிய அறையும் அல்ல. மிகச் சிறிய அறையும் கிடையாது. ஆனால் வசதியாக இருக்கும் எங்கள் படப்பிடிப்பு குழுவினர் எல்லோருக்குமே தெரியும் மீனா வந்தால் அறை எண் 210-ல் தான் தங்கி இருப்பார் என்று. எனவே என்னை சந்திக்க நேரடியாக அங்கே வந்து விடுவார்கள். அந்த அளவு அந்த ஓட்டலுக்கும் அந்த அறைக்கும் எனக்கு ராசி உண்டு.

பொள்ளாச்சியை சுற்றிய பகுதிகளான வால்பாறை, ஆனைமலை என்று பல இடங்களில் படப்பிடிப்பு நடக்கும். வால்பாறை என்றால் அங்கு தான் செல்ல வேண்டும் என்பது அல்ல. போகும் வழிகளிலேயே வயல்வெளிகள், மரங்கள் சூழ்ந்த பகுதிகள் என்று பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கெல்லாம் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அவ்வளவு ஏன் செட் அமைத்துக் கூட படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஏனெனில் அந்த செட்டுக்கு பின்னணியில் மலையும் மலை சார்ந்த இடங்களும் தெரிவது காட்சி அமைப்புக்கு பிரமாதமாக இருக்கும்.

பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் வீடுகளும் அழகாக இருக்கும். பல வீடுகளில் வைத்து கூட படப்பிடிப்பு நடந்திருக்கிறது.

பிரபு சாருடன் நான் நடித்த ராஜகுமாரன் படத்தில் இடம்பெற்ற

என்னவென்று சொல்வதம்மா

வஞ்சி அவள் பேரழகை

சொல்ல மொழி இல்லையம்மா

கொஞ்சி வரும் தேரழகை...

- என்ற பாடலுக்கு ஒரு ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி அதில் ஆடி கொண்டிருப்பேன்.

 

கிராமங்களில் அப்படித்தான் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் ஆடி மகிழ்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையாகவே பொள்ளாச்சி பகுதியில் அப்படி ஆடியபோது படப்பிடிப்புக்காக ஆடுகிறோம் என்பதையும் தாண்டி மனதுக்குள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி அலைமோதியது.

பக்கத்திலேயே நீர் நிறைந்து ஓடிக்கொண்டிருந்த ஆறு. அந்த மாதிரி இடங்களில் மணிக்கணக்கில் அமர்ந்து இருந்தாலும் 'போர்' அடிக்காது.

இதே பொள்ளாச்சியில் தான் ரஜினி சாருடன் எஜமான் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்ப வேண்டும்.

பொள்ளாச்சியில் இருந்து காரில் கோவை வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்ல வேண்டும். அப்போது ஏர் இந்தியா விமானம் மட்டும் தான்.

விமானம் புறப்படுவதற்கு ஒரு மணி நேரம் தான் இருந்தது. அப்போது தான் நாங்கள் பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்டோம். விமானம் புறப்படுவதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு கவுண்டரை மூடிவிடுவார்கள்.

ரஜினி வருவது பற்றி ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதனால் அவர்கள் காத்திருந்தார்கள்.

15 நிமிடங்களுக்கு முன்பு தான் விமான நிலையத்தை அடைந்தோம். எல்லோரும் ரஜினிக்கு பின்னால் விறுவிறு என்று ஓடி விமானத்தை பிடித்து விட்டோம்.

அந்த எஜமான் (ரஜினி) இல்லைன்னா எங்களால் நிச்சயமாக அன்று விமானத்தை பிடித்து இருக்க முடியாது.

கவர்ச்சியில் கலக்கினேன்! கலங்கியும் போனேன்!!

கவர்ச்சி சினிமாவுக்கு முக்கியமா என்றால் அதுவும் வேண்டும் என்பேன். ஆனால் வெறும் கவர்ச்சியினால் மட்டும் சினிமா ஜெயிக்காது. கதை, நடிப்பு, பாடல், இசை, ஒளிப்பதிவு என்று எல்லாமும் சிறப்பாக அமைந்தால் தான் படமும் சிறப்பாக இருக்கும்.

சினிமாவில் கதாநாயகியை விட குடும்ப நாயகியாகத்தான் எல்லோரும் என்னை பார்க்கிறார்கள். அது எனக்கும் பெருமையாக உள்ளது. சினிமாவில் கவர்ச்சியும் ஒரு ரோல்தான் என்பதால் என்னை சுற்றியி ருப்பவர்கள் 'கவர்ச்சியான வேடத்தில் நீ ஏன் நடிக்க கூடாது? என்று அடிக்கடி கேட்பார்கள்.

கவர்ச்சியான கேரக்டராக முயற்சி செய்வதில் என்ன தவறு? நாமும் ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம் என நினைத்தேன்.

பிரபுதேவாவுடன் நடித்த படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதித்தேன். ஆனால் நீச்சல் உடையை அணிந்து மேக்கப் அறையை விட்டு என்னால் வெளியே வரமுடியவில்லை. உடை மிகவும் இறுக்கமாக இருந்தது. இந்த உடையில் எப்படி வெளியே செல்வது என்று ரொம்ப தயங்கினேன். இதை வெளியே சொல்லக் கூட கூச்சமாக இருந்தது. பெரும்பாலும் நெருக்கமான காட்சிகள், கவர்ச்சியான காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தேன். அதற்கு காரணம் வெட்கமும், பயமும்தான்.

அடுத்து ஒரு பரபரப்பான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

(தொடரும்...)

Tags:    

Similar News