சிறப்புக் கட்டுரைகள்
null

உலகம் வியக்கும் மைசூர் தசரா!

Published On 2024-10-03 10:00 GMT   |   Update On 2024-10-03 10:00 GMT
  • அனைத்தையும் வெகு சிறப்பாக மன்னருடன் சேர்ந்து இதனை மக்களும் கண்டுகளிப்பார்கள்.
  • தசரா பண்டிகை தொடங்கியதிலிருந்து பொருட்காட்சியும் நடத்தப்படும்.

இந்தியாவின் மிகப் பெரிய நாடெங்கும் கொண்டாடப்படுகின்ற பண்டிகை தசரா. மைசூர் தசரா பற்றிய சிறப்புக்கள் எல்லாம் பார்த்தவர்கள் மனதில் மகிழ்ச்சியுடன் அசைப்போட.. பார்க்காதவர்கள் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்க கூடிய ஒரு மிகப்பெரிய விழாவாகும்.

இன்றும் மன்னர் ஆட்சியில் மக்களுக்கு இருந்த மகிழ்ச்சியை பறைசாற்றக்கூடிய அளவில் தசராவை மைசூர் மாநகரம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

மைசூரில் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தசரா வெகு சிறப்பாக கொண்டாடப்படும் என்பது நாம் அறிந்த விஷயமே. அதைப் பற்றிய பல சுவையான செய்திகளை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்..

மைசூரில் இந்த விழா நாட்டு விழாவாக இல்லாமல் அங்கு குடியிருக்கும் ஒவ்வொருவருடைய வீட்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.

முதலில் அரச பரம்பரையில் எப்படி எல்லாம் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டதோ அதேபோன்று தற்போதும் மைசூர் நகர மக்கள் அரசர்களுக்கே உரிய அனைத்து மதிப்பும் மரியாதைகளும் அளித்து தங்கள் குடும்பப் பெரியவர்களை காண்பது போல் மைசூர் மகாராஜாவை தரிசிப்பதற்கு செல்கிறார்கள்.

தசராவின் பத்து நாட்களில் மன்னர் காலை அரண்மனை வளாகத்தில் இருக்கக்கூடிய கோவில்களுக்கு சென்று கஜபூஜை... கோபூஜை.. பரிபூஜை செய்வார்.

அதாவது போர் செய்யும் போது தங்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற யானைக்கும் குதிரைக்கும் மற்றும் பசு மாட்டிற்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் நாள்தோறும் புரோகிதர்கள் மந்திரம் ஓத.. இந்த பூஜைகள் நடக்கும். மன்னர் 10 நாட்கள் விரதம் இருந்து இதில் கலந்து கொள்வார்.

அங்கு வரக்கூடிய மக்களுக்கு தரிசனம் வழங்குவது இன்று வரை வழக்கத்தில் உள்ளது. மன்னர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க ஒவ்வொரு படிகளிலும் பதுமைகள் இருப்பதை காணலாம். இந்த சிம்மாசனம் ஆயிரம் கிலோவிற்கும் மேற்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள்.

மந்திரி சபையுடன் அன்றைய தர்பார் போலவே இன்றும் மைசூர் அரண்மனையில் உள்ள தர்பாரில் மன்னர் அமர... அமைச்சர்கள் இருபுறமும் கூட்டமாக அமர்ந்திருப்பார்கள். இன்றைய காலத்தில் மந்திரிகள் இல்லாததால் பொதுமக்களை தேர்வு செய்து அவர்களுக்கு அந்த சிறப்பை அளிப்பார்கள்.

கிட்டத்தட்ட 50 பேர் பேட்டா என்று அழைக்கப்படும் தலைப்பாகையுடன் இருபுறமும் அமர்ந்து மன்னருடன் அங்கு நடத்தப்படுகின்ற மல்யுத்தம்.. வாள் போர் போன்ற வீரத்தை பறைசாற்றுகின்ற விளையாட்டுக்களையும் பார்த்து ரசிப்பார்கள்.

பழைய காலத்தில் மன்னர் வெளியே செல்லும்போது, தேவதாசி எதிரில் வர அவர்களை பார்த்து சென்றால் செல்லும் காரியம் வெற்றிகரமாக அமையும். சுப சகுனமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் அந்த பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. அது போன்று இப்பொழுதும் செய்யப்படுகிறது என்று சொல்லப்படுகிறது.

மன்னர், அரண்மனை வளாகத்தில் இருக்கக்கூடிய காயத்ரி... புவனேஸ்வரி... திரிபுரசுந்தரி... சொர்ண பைரவர் போன்ற ஆலயங்களுக்கும் அவர்களது குல தெய்வமாக இருக்கக்கூடிய அன்னை சாமுண்டி தேவிக்கும் மற்றும் வராக சுவாமி கோவிலுக்கும் சென்று வழிபட்டு ஒவ்வொரு நாளும் தசராவிற்கு சிறப்பு சேர்ப்பார்.

தசராவையொட்டி மைசூரில் விளக்குகளின் அலங்காரம் பிரசித்தம். கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். எங்கெங்கும் ஒளி வெள்ளம் பரவியிருக்கும். அதை காண்பதற்காக மக்கள் வெள்ளமென திரண்டு வருவார்கள். நம் நாட்டில் இருந்துமட்டுமல்ல பல்வேறு நாட்டில் இருந்தும் வருவார்கள். இதனால் மைசூரே மக்கள் வெள்ளத்திலும் ஒளிவெள்ளத்திலும் மிதக்கும்.

அது மாத்திரம் அல்லாமல் மைசூர் பேலஸ்சில் மாலை நேரங்களில் மகாராஜா அமர்ந்திருக்க, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அனைத்தையும் வெகு சிறப்பாக மன்னருடன் சேர்ந்து இதனை மக்களும் கண்டுகளிப்பார்கள். அதைப் போன்று மைசூரின் பல இடங்களில் குறிப்பாக ஞானபாரதி சரா சபா உள்ளிட்ட நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் பலவிதமான கலைநிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என்று மக்களை கவரும் வண்ணம் நடந்து கொண்டே இருக்கும்.

ஓவல் மைதானம் என்னும் இடத்தில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அங்கேயே அவர்களுக்கு நாள்தோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று புட் மேளா என்ற உணவுத் திருவிழா ஸ்கவுட்ஸ் மைதானத்தில் நடக்கும். இங்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் கர்நாடகா மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற உணவு வகைகள் சைவம் அசைவம் என அனைத்து வகை உணவுகளும் கிடைக்கும். தசரா விழாவுக்கு வரும் மக்கள் கலைநிகழ்ச்சிகளைக்கண்டு களிப்பதுடன் பலவகையான உணவுகளை ருசித்தும் மகிழ்வார்கள்.

தசரா பண்டிகை தொடங்கியதிலிருந்து பொருட்காட்சியும் நடத்தப்படும். இவை தொடர்ந்து இரண்டு மாதம் அதாவது டிசம்பர் மாதம் வரை நடக்கும்.

சிவராம் பேட் நஞ்சராஜா பகதூர் சவுத்ரி என்று அழைக்கப்படும் இடத்தில் ஓவிய திருவிழா என்பதாக மைசூரின் புகழ்பெற்ற ஓவியங்கள் கண்காட்சி நடைபெறும். இதில் இயற்கை வண்ணங்களால் தீட்டபட்ட ஓவியங்கள் மற்றும் சிறந்த வேலைபாடுகள் கொண்ட கைவினைப் பொருட்கள் கிடைக்கும்.

ஜெகன்மோகன் பேலஸ் என்று அழைக்கப்படுகின்ற அரண்மனை இன்று அருங்காட்சியகமாக உள்ளது. வண்ண வண்ண ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், மன்னர்கள் அணிந்திருந்த ஆடை ஆபரணங்கள், அவர்கள் பயன்படுத்திய போர்க்கருவிகள் இப்படியாக அந்த வம்சத்தில் காலம் காலமாக பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் நாம் காணலாம். இது எப்போதும் பார்க்க கூடிய ஒரு இடமாக இருக்கிறது.

மைசூர் தசரா ஊர்வலம் உலகப் புகழ்பெற்றது. விஜயதசமி என்று அழைக்கப்படுகின்ற பத்தாம் நாள் அரண்மனையில் இருந்து ஊர்வலம் புறப்படும். அந்த ஊர்வலத்தில் அம்பாரியின் மேலே 750 கிலோ எடையுடைய தங்க இருக்கையை பட்டத்து யானை சுமந்து வரும்.

இதற்கு பின்னால் டிரக்குகள் என்று அழைக்கப்படுகின்ற வண்டிகளில்... பெரிய திறந்த வாகனங்களில்... ராமாயணம் மகாபாரதம் போன்ற பல்வேறு வகையான காட்சிகள், கர்நாடக மாநிலத்தின் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் வகையில் அலங்காரங்கள் சுதந்திர தின ஊர்வலத்தில் வருவது போன்று அலங்கார ஊர்திகள் பவனி வரும்.

இந்த ஊர்வலத்தை கர்நாடக முதல்வர் பூ போட்டு மாலை.. புடவை சாத்தி... முறைப்படி தொடங்கி வைப்பார். தற்போது அரசர் சாரட் வண்டியில் பவனி வருவது இல்லை. பதிலாக மகிழுந்தில் பன்னிமண்டபம் வந்து விடுகிறார்.

அரண்மனையில் தொடங்கும் அனைத்து வகை அலங்கார ஊர்திகளும் பன்னிமண்டபம் என்ற இடத்திற்கு சென்று நிறைவடைகிறது. அங்கு வன்னி மரத்தை குத்துவது போன்ற நிகழ்ச்சி பன்னி குத்துவது என்று சொல்லப்படுகிறது. அத்துடன் தசரா நிகழ்ச்சி நிறைவு பெறும்.

இறுதியாக டார்ச் லைட் பெரெடு என்று அழைக்கப்படுகின்ற இருட்டில் ஒளிரும் வகையில் நடத்தப்படும். ரிசர்ச் போலீசார் மோட்டார் வாகனங்களில் சாகச நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடத்துவார்கள். இறுதியாக வானவேடிக்கை ஆகாயத்தை வண்ணமயமாக்க ஒரு கோலாகலமாக காட்சியளிக்க கூடிய கண்ணிற்கும் கருத்தித்கும் விருந்தாக வெகு விமர்சையாக இந்த வான வேடிக்கை நிகழும். மக்களும் மிகவும் மகிழ்வுடன் வீடு திரும்புவார்கள்.

இதற்கான ஒத்திகை முதல் நாளே அரண்மனையில் டார்ச் லைட் ஷோ.. பைக் ரேஸ்... கலை நிகழ்ச்சிகள் போன்றவை ஒத்திகை பார்க்கப்படும். அன்று அனைவருக்கும் இலவசமாக அந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கலாம். மறுநாள் விஜய

தசமி அன்று அதற்கான நுழைவுச்சீட்டுக்கு பணம் கொடுத்து வாங்குபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

ஏர் ஷோ பன்னிமண்டபத்தில் ஏழாம் எட்டாவது நாட்களில் சிறப்பாக நடைபெறும். அரண்மனையின் வெளியே 20000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவில் இருக்கக்கூடிய இடத்தில் தசரா அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவார்கள்.

தசராவிழாவின் பத்து நாட்களும் அரண்மனைக்குள் சாமுண்டி தேவி ஊர்வலம் மற்றும் பூஜை புனஸ்காரங்கள் சிறப்பாக நடத்தப்டும்.

அதேபோல 12 13-ஆம் நாள் மலை மேல் உள்ள சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் தெப்ப திருவிழா நடைபெறும்.

Tags:    

Similar News