- 27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை.
- தன்னம்பிக்கை அதிகமானவர்கள்.
27 நட்சத்திரங்களில் 6-வது நட்சத்திரம் திருவாதிரை. கால புருஷ மூன்றாம் ராசியான மிதுனத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் உள்ளது. இதன் அதிபதி ராகு. இதன் அதி தேவதை சிவன். இதன் உருவம் ரசமணி, பவளமணி என்று கூறப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திரம் வான மண்டலத்தில் வைரம் போலவும், மண்டை ஓடு போலவும், திரிசூலம் போன்ற தோற்றத்திலும் காணப்படும்.
திருவாதிரையின் வேறு தமிழ் பெயர்கள் செங்கை, சடை, (வடமொழியில் ஆருத்ரா), மூதிரை, ஆகியன.வானில் நீர்த்துளி போல காணப்படும். ஆகாய கங்கை இந்த நட்சத்திரத்தில் இருந்தே வானில் இருந்து பூமிக்கு வந்தாள் என்கிறது பகீரத புராணம்.
திருவாதிரை நட்சத்திர பொது பலன்கள்
மிதுனத்தின் வேகமான இயல்பையும், புதனின் தன்மையை ராகுவின் இயல்பிலும் கொடுக்கும் நட்சத்திரமாகும். இது மிதுன ராசியின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
ஒரு ராசியின் மத்திமப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திரங்களெல்லாம் அந்த ராசியின் இயல்பை தன் நட்சத்திர அதிபதியின் இயல்பில் கலந்து முழுமையாக வெளிப்படுத்தும். பார்வைக்கும் கம்பீரமானவர்கள்.
தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்க ளிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைக் கூடத்தாங்களே சமாளித்துக் கொள்ளும் திறமையுடையவர்கள்.
அடுத்தவர்களுடன் விவாதித்தால் கவுரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.நிதானமான முன்னெச்சரிக்கையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.
சூழ்நிலைக்கேற்ப மற்றவர்களை அனுசரித்து செல்லக்கூடிய குணம் இல்லாதவர்கள். சற்று கோபமான குணநலன்களை உடையவர்கள். ரகசியங்களை பாதுகாக்கும் வல்லமை உண்டு.
மலைவாசஸ்தலங்களும், தொலைதூர பயணங்களும் இவர்களுக்கு மிகவும்பிடிக்கும்.
தனிமையில் அதிகமாகச் சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள்.சமூதாயத்தில் பிரபலமான நிலையை அடையக் கூடியவர்கள். மிகக் கடினமான வேலையையும் தன் திறமையால் எளிதாக செய்து முடிப்பார்கள்.
சொன்னதைச் செய்வார்கள்.உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்களாகவும், தன்னைச் சுற்றி இருப்போரை எப்போதும் சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள்.இவர்களுக்கு ஆளுமைதிறன், செல்வம், செல்வாக்கு உண்டு.
கல்வி
ஏட்டுக் கல்வியை விட அனுபவ பாடம் அதிகம் கற்றவர்கள். கல்வியில் எப்போதாவது ஆர்வம் காட்டுவார்கள். உட்கார்ந்து கஷ்டப்பட்டு படிக்கமாட்டார்கள்.மத்திம வயதிற்கு மேல் படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். இவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம். எலக்டிரிக்கல் இஞ்சினியரிங், ஜோதிடம் அல்லது சைக்காலஜியில் கல்வி கற்றிருப்பீர்கள்.
எலக்டிரிக்கல் இஞ்சினியரிங் அல்லது கம்ப்யூட்டர் தொடர்பான பணி, ஆங்கில மொழிபெயர்ப்பு, புகைப்படக்கலை, இயற்பியல் அல்லது கணிதம் கற்பித்தல், ஆராய்ச்சி அல்லது அது தொடர்பான பணி, தத்துவவியல், நாவல் எழுதுதல், நஞ்சுகள் தொடர்பான மருத்துவம், பார்மசிட்டிகல், கண் மற்றும் மூளை தொடர்பான நோய்களை கண்டறிதல், போக்குவரத்து, கருத்து பரிமாற்ற பிரிவு.
சைக்கியாட்டரி பிரிவு, துப்பு துலக்குதல், துரித உணவு மற்றும் பானங்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பவராக இருக்கலாம்.
தொழில்
தனியார் நிறுவனங்களையும் நடத்தும் திறமை மிக்கவர்கள்.இலாப நோக்கை விட, மனித நேயமும், தொழில் நியாயமும் இவர்க ளது நோக்கமாக இருக்கும்.அரசாங்க காண்ட்ராக்டர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், ரத்தின வியாபாரம், பரம்பரை குலத்தொழில், விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஒத்து வரும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
பணம் சம்பாதிப்பதில் ஆர்வம் இருக்கும். ஆனால் கடினமாக உழைக்க விரும்புவதில்லை. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைப்பதை அதிகம் விரும்புவார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம் உண்டு. தொழில், அரசியல், சமூக ரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தா லும், பெரும்பாலும் திருமண வாழ்க்கை மன நிறைவைத் தருவதில்லை.
பலரது இல்வாழ்க்கை என்பது தாமரை இலைத் தண்ணீரைப் போன்ற நிலையில்தான் அமை கின்றது. அன்பான மனைவி அமைந்தால் கூடத் தம்பதிகளுக்குள் பிரிவுகள் அடிக்கடி வந்து இவர்களை வாட்டுகிறது.
தொழில் சம்பந்தமானபிரிவுகள் மிகுதியாகவும் தவிர்க்க முடியாதவைகளாகவே இருந்துவிடும்.கௌரவப் பிரச்சினையால் அன்யோன்யம் குறைவுபடும்.
தசா பலன்கள்: ராகு தசா
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்க ளுக்கு முதல் தசா ராகு தசை. இதன் கால அளவு 18 வருடம். இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும். பால்ய வயது என்பதால் குடும்பத்தில் சிறுசிறு மனக்குழப்பம் உண்டாகும்.
ஆரோக்கிய குறைபாடு மிகுதியாகும். வீசிங், சளி தொந்தரவு இருக்கும். பிறந்தவுடன் இடப்பெயர்ச்சி நடக்கும். பிறக்கும் போது மீதமுள்ள ராகு தசா அதிக வருடம் இருந்தால் பள்ளி படிப்பில் நாட்டம் குறையும்.
குரு தசா
இது தன தாரையின் நட்சத்திரமாகும்.
இதன் தசா ஆண்டு 16 வருடம். பிறக்கும் போது ராகு தசா அதிக வருடம் நடத்தால் குரு தசையில் திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம் என அனைத்து சுப பலன்களும் நடக்கும். பிறக்கும் போது ராகு தசா குறைந்த கால அளவாக இருந்தால் குரு தசையில் பள்ளி கல்லூரி படிப்பு சிறப்பாக இருக்கும்.
பெற்றோர்களுக்கு பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். குடும்பம் சாதாரண நிலையில் இருந்தால் கூட உயர்வான நிலையை நோக்கி அடி எடுத்து வைக்கும்.
சனி தசா
மூன்றாவதாக வரக்கூடியது சனி தசா. இதன் கால அளவு 19 வருடம். இது விபத்து தாரையின் நட்சத்திரமாகும். சிலருக்கு குரு தசையில் சம்பாதித்த அனைத்து பெயர், புகழை இழக்க நேரும். சிலர் தொழில் உத்தியோகம், குடும்ப முன்னேற்றத்திற்காக இடம் பெயர்ந்து செல்வார்கள்.
பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்பவர்களின் வாழ்க்கை வரமாக இருக்கும். சிலருக்கு வீடு, வாகனம் என சுப விரயம் மிகுதியாகும். இது கொடுக்கல், வாங்கலில் நிதானம் கடைபிடிக்க வேண்டிய காலம். வைத்திய செலவு சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.
புதன் தசா
திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு நான்காவதாக வரக்கூடியது புதன் தசை. இது 17 ஆண்டுகள் நடக்கக்கூடிய தசாவாகும். இது சேஷம தாரையின் தசையாகும். இழந்ததை மீட்டுப் பெறும் நோம். தடைபட்ட சுப காரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாக குறையும்.
பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் முடிவிற்கு வரும். பேரன் பேத்தி என முதுமையை ரசித்து அனுபவிக்கும் காலம். வயது மூப்பு காரணமாக சில ஆரோக்கிய குறைபாடுகள் தலை தூக்கும். சில உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெறலாம். கோபம், பிடிவாதம் கூடும்.
கேது தசா
ஐந்தாவதாக வரக்கூடியது கேது. இதன் தசா ஆண்டு 7 வருடம். ஆன்மீக நாட்டம் கூடும். எளிமையை மனம் விரும்பும். தான, தர்மம், பாவம், புண்ணியம், மறுபிறவி பற்றிய எண்ணங்கள் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும்.
ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று வருவார்கள். எதிர்பாராத இடப் பெயர்ச்சியால் அலைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் மறைமுக எதிர்ப்புகள் கூடும்.
சுக்ர தசை
இது திருவாதிரை நட்சத்தி ரத்திற்கு 6-வதாக வரக்கூடிய சாதக தாரையின் தசையாகும். வயதில் வர வேண்டிய சுக்ர தசை இளவயோதிகத்தில் நடக்கும். முதுமை காரணமாக வசதி வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் பெரியதாக பயன்படாது.
குடும்ப உறவுகள் விலகிச் செல்வது போல் மனம் வெதும்பும். சிலர் படுத்த படுக்கையாக காலம் தள்ளலாம். உடலில் உள்ள சுரப்பிகள் செயல் இழக்கும் . சிலருக்கு வைத்தியச் செலவு கூடும். மனம் அமைதியை விரும்பும்.
திருவாதிரை நட்சத்திரத்தின் சிறப்புகள்:
எள், கடுகு, கம்பு, கேழ்வரகு போன்ற தானியங்களை விதைக்க ஏற்ற நட்சத்திரம்.நடனம் என்றாலே தில்லை கூத்தன் நடராஜன். முதன் முதலாக நடன அரங்கேற்றம் செய்பவர்கள் திருவாதிரையில் செய்தால் மென்மேலும் வளர்ச்சி அடையலாம்.
இசை கருவிகள் கற்க துவங்க, மந்திரப் பிரயோகம் செய்ய, ஆயுதப் பயிற்சி, வில்வித்தை, குதிரை ஏற்றம், மல்யுத்தம் முதலியவற்றை கற்கலாம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஒரு மர்ம கிரகம் என்பதால் சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் தொடங்கலாம்.
சிதம்பர ரகசியத்திற்கும் திருவாதிரை நட்சத்திரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திருவாதிரை நட்சத்திரத்தில் சிவபூஜை செய்தால் சிதம்பர ரகசியத்தை அறிய முடியும் இதன் அதிபதி சிவன் என்பதால் சிவபூஜை செய்ய மிக உகந்த நட்சத்திரமாகும்.
பைரவர் வழிபாட்டை திருவாதிரை நட்சத்திரத்தில் துவங்கினால் காரிய சித்தி உண்டாகி பிரார்த்தனை களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
திருவாதிரையில் நோய்வாய்ப்பட்டால் எளிதில் குணமாகாது. காரணம் கண்டு பிடிக்க முடியாத எந்த நோயானாலும், குணப்படுத்த முடியாத எந்த நோயாக இருந்தாலும் திருவாதிரையில் சிவனை வழிபட்ட பிறகு சிகிச்சை துவங்க வேண்டும்.
அன்று ருத்ர சாந்தி செய்ய படிப்படியாக நோய் தாக்கம் குறையும். பேய், பிசாசு ஆவிகள் தொல்லை இருப்பவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நட்சத்திர நாளில் திருநாகேஸ்வரம், சிதம்பரம், திருவாலங்காடு போன்ற சிவ தலங்களுக்கு சென்று சிவனை வழிபட பேண்டும்.
நட்சத்திர பட்சி:அன்றில்
யோகம்: அதிகண்டம்
நவரத்தினம்:கோமேதகம்
உடல் உறுப்பு: கண்கள்
திசை: தென்கிழக்கு
பஞ்சபூதம்:நீர்
அதிதேவதை: சிவன்
நட்சத்திர மிருகம்: ஆண் நாய்
நட்சத்திர வடிவம்: ரசமணி,
நன்மை தரும் நட்சத்திரங்கள்:
சம்பத்து தாரை: புனர்பூசம்,
விசாகம், பூரட்டாதி
சேம தாரை . ஆயில்யம், கேட்டை, ரேவதி
சாதக தாரை: பரணி, பூரம், பூராடம்
பரம மிக்ர. தாரை : மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
பொதுவான பரிகாரங்கள்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சிதம்பர நடராஜரை வழிபட்டால் வாழ்வில் அடைய முடியாத வெற்றிகளே கிடையாது.
தினசரி ராகு காலத்தில் துர்க்கை, காளியை வழிபட மேன்மை உண்டாகும். ஜென்ம நட்சத்திரநாளில் கருப்பு உளுந்து தானம் வழங்க வேண்டும்.
சாதக தாரையான பூர நட்சத்திர நாளில் ஆண்டாள் வழிபாடு செய்து வர சுப பலன்கள் அதிகமாகும்.