சிறப்புக் கட்டுரைகள்

வேர்களுக்கு நன்றி!

Published On 2024-09-27 11:15 GMT   |   Update On 2024-09-27 11:15 GMT
  • ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளுக்காகவே ஓடித் திரிகின்ற கால்கள், பெற்றோரின் கால்கள்.
  • பெற்றோரின் வியர்வைத் துளிகளில்தான், பிள்ளைகளின் எதிர்காலம் விளைகின்றது.

'உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே. நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். உன் தகப்பனும் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்'.

-பைபிள் (நீதிமொழிகள் 23: 22,24,25)

வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. சாலை எங்கும் அனல் பறந்தது. ஒரு முதியவர், சைக்கிள் நிறைய பொருட்களை ஏற்றிக் கொண்டு, மிகுந்த சிரமத்துடன் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்.

திடீரென்று மயக்கம் ஏற்பட, தடுமாறிக் கீழே விழுந்துவிட்டார். சிலர் ஓடி வந்து அவரைத் தூக்கி, பக்கத்தில் இருந்த ஒரு சலூனுக்கு வெளியே பெஞ்சில் உட்காரச் செய்தனர். அவரின் கைகால்கள் நடுங்கின. ஒருவர் சோடா வாங்கிக் கொடுத்தார். குடித்ததும் கொஞ்சம் தெளிவு வந்தது.

'இந்த வயசான காலத்துல உங்களுக்கு எதுக்கு இந்த வேலை. பேசாம வீட்ல இருக்க வேண்டியதுதானே'என்றார் பக்கத்துப் பழக்கடைக்காரர்.

அந்த முதியவர் துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, கையிலிருந்த மீதி சோடாவைக் குடித்து முடித்தார்.

'உங்களுக்கு என்ன வயசு?' - சலூன்காரர் கேட்டார்.

'எழுபத்தெட்டு' என்று சொல்லி, வெள்ளந்தியாய்ச் சிரித்தார் அவர்.

'தள்ளாத வயசுல எதுக்கு இப்படி கஷ்டப்படுறீரு?'.

'இந்தப் பொருட்களை நாலஞ்சி கடையில போடணும். அப்பதான் ஓனர்கிட்ட கமிஷன் பணம் வாங்க முடியும்'.

'அதுசரி, நீரு சம்பாதிச்சுதான் ஆகணுமா? புள்ளைங்க யாரும் இல்லையா?'

'எனக்கு ரெண்டு பையன்ங்க. நல்லா படிக்க வச்சி, கல்யாணத்தையும் முடிச்சிட்டேன். உசந்த உத்தியோகம். நெறைய சம்பளம். ரெண்டுபேர் குடும்பங்களும் நல்ல வசதியாதான் இருக்குது'.

'வெளிநாட்டுல இருக்காங்களா?'

'இல்ல, இங்கதான். ஆனா, நானும் என் சம்சாரமும் தனியாதான் இருக்கோம்'.

'ஏன், புள்ளைங்ககூட போக விருப்பமில்லையா?'

'நமக்கு மட்டும் விருப்பம் இருந்தா போதுமா? புள்ளைங்க வாழ்க்கை ஒசந்திடுச்சி. நாம யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது. அதனால எதையும் எதிர்பார்க்கிறதில்ல. அவங்க சந்தோஷமா இருந்தா, அது எனக்கு போதும்யா. ஆனா, இந்த கட்டை எப்பவும் சாஞ்சிடலாம். அதுக்கப்புறம் என் சம்சாரம்...' என்று சொல்லும் போது, அவரின் கண்கள் கலங்கின.

பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோரைத் தவிக்கவிட்டுக் கண்கலங்கச் செய்வது, நன்றிகெட்ட நாகரிக மனோபாவமோ என்னவோ. புரியவில்லை!

ஒவ்வொரு கட்டத்திலும் பிள்ளைகளுக்காகவே ஓடித் திரிகின்ற கால்கள், பெற்றோரின் கால்கள். அவர்கள் கடந்து வந்த பாதைகளில் முட்களும் கூரிய கற்களும் கண்ணாடிச் சிதறல்களும்தானே. அவர்களின் பாதங்களை நாம் பார்த்திருக்கின்றோமா!

பிள்ளைகளின் வயிறு நிறைந்தால், அவர்களின் மனம் நிறையும். பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டாடுவதில், அவர்களின் பாரம் குறையும். குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும், பெற்றோர்க்கு ஒரு கோடி மகிழ்ச்சி.

பிள்ளைகளின் பெருவாழ்வுதான் பெற்றோரின் ஒரே கனவு. தூக்கத்திலும் தூங்காமல் விழித்திருக்கும் விழிகள், பெற்றோரின் விழிகள். அந்த விழிகளில் ஏன் கண்ணீர்!

இன்று எண்ணற்ற பெற்றோர்களின் நிலை அப்படிதான் இருக்கின்றது. தன்னந் தனிமையில் விடப்படும் பரிதாப நிலை.

பெற்றோரின் வியர்வைத் துளிகளில்தான், பிள்ளைகளின் எதிர்காலம் விளைகின்றது. தங்கள் வயதை மறந்து அவர்கள் படுகின்ற பாடுகளில்தான், பிள்ளைகளின் முன்னேற்றம் மலர்கின்றது. பெற்றோரின் அர்ப்பணிப்பில்தான் மனித வாழ்வு நீட்சி பெறுகின்றது.

இன்று பணம்தான் பிரதானம். படிக்கிறார்கள், வளர்கிறார்கள், வேலையில் சேருகிறார்கள், கைநிறைய சம்பாதிக்கிறார்கள். பெற்றோர்களிடமிருந்து தங்களை அந்நியப்படுத்திக் கொள்கிறார்கள்.

பெற்றோரின் நிழல் தேவைப்படும் வரை, அவர்களுக்கு மரியாதை. சில குடும்பங்களில் அதுவும் இல்லை. பெற்றோரைத் தங்களின் குடும்பத்திற்கு வேலையாட்களைப்போல் பயன்படுத்திக் கொள்கின்ற ஜென்மங்களும் உண்டு. முதிர்வயதின் சோர்வுகளை, அவர்கள் கண்டு கொள்வதில்லை. உழைத்துக் களைத்த கைகால்களின் நடுக்கங்களை, அவர்கள் கவனிப்பதில்லை. ஈவிரக்கம் கொஞ்சமும் இல்லை. காரணம், சுயநலம்!

அதனால்தான், இன்று ஏராளமான முதியோர் இல்லங்கள். அங்கு எழுகின்ற ஏக்கப் பெருமூச்சுகளையும், தனிமையின் புலம்பல்களையும் பிள்ளைகள் அறிவார்களா! முதிர்வயதின் தேவைகளையும் ஆசைகளையும் கல்நெஞ்சங்கள் உணருமா!

ஓர் அற்புதமான கவிதை. அந்தக் கவிதை இப்படிச் சொல்கிறது:

தாயின் கருவறையில் குழந்தை. அதனிடம் இறைவன் பேசுகின்றான்.

'குழந்தையே, நாளை நீ பூமியில் பிறக்கப் போகின்றாய். மகிழ்ச்சிதானே!'

'வேண்டாம் சாமி. இங்கேயே நான் இருந்து கொள்கிறேன். பூமியில் எனக்கு யாரைத் தெரியும்?'

'அங்கே உனக்காக ஒரு தேவதையை நான் வைத்திருக்கின்றேன்'.

'இங்கே நான் பாதுகாப்பாக இருக்கின்றேன். அங்கே எனக்கு யார் பாதுகாப்பு?'

'உன்னைப் பாதுகாக்க, அங்கே ஒரு தேவதையை நான் வைத்திருக்கின்றேன்'.

'இங்கே எனக்கு வேளா வேளைக்கு உணவு கிடைக்கிறது. அங்கே எனக்கு யார் தருவார்?'

'உன் பசியாற்ற ஒரு தேவதையை வைத்திருக்கின்றேன்'.

'இங்கே சந்தோஷமாக இருக்கிறேன். இந்த சந்தோஷத்தை அங்கே யார் தருவார்?'

'உன்னை சந்தோஷப்படுத்த அங்கே ஒரு தேவதையை வைத்திருக்கின்றேன்'.

குழந்தை பொறுமை இழந்துவிட்டது. இறைவனிடம் சற்று அழுத்தமாகக் கேட்டது:

'நான் கேட்பதற்கெல்லாம் தேவதை தேவதை என்கின்றாயே. யார் அந்தத் தேவதை?'

இறைவன் குழந்தையைப் பார்த்துப் புன்னகைத்தபடியே, 'அவள்தான் உன் தாய்' என்றான். குழந்தை நிம்மதி கொண்டது.

தாயன்பிற்கு ஈடாக, தந்தையின் தியாகங்களுக்கு நிகராக எதைச் சொல்ல முடியும். பிள்ளைகளின் உயரங்களை அண்ணார்ந்து பார்த்துப் பெருமிதம் கொள்வதற்கு, அவர்களைத் தவிர வேறு யார்!

அவர்கள் தங்களின் காயங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. பாத வெடிப்புகளையும், கீறல்களின் வலிக்கசிவுகளையும் பெரிதாகப் பேசுவதில்லை.

பெற்றோரின் இதயத் துடிப்புகள் பிள்ளைகளையே வாழ்த்திக் கொண்டிருக்கின்றன. அவர்களின் ரத்த நாளங்களில் அன்பும் கருணையுமே ஓடிக் கொண்டிருக்கின்றன.

பெற்றோர் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடை. அவர்களின் அரவணைப்பிற்குள் நாம் பெறுகின்ற சுகத்தை மிஞ்சிய சொர்க்கம் வேறொன்று கிடையாது. அவர்களைப் பாதுகாப்பதும் பராமரிப்பதும் ஆயிரம் கோடி புண்ணியங்களுக்குச் சமம்.

ஆனால், இன்று எத்தனை பெற்றோர்கள் தனிமையின் கொடுமையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கக்கூட ஆதரவாய் பிள்ளைகள் இல்லை.

இல்லை என்றால் இல்லை என்பதில்லை. இருக்கிறார்கள்; அருகிலோ, வந்து போகும் தொலைவிலோதான் இருக்கிறார்கள். ஆனால், கவனிப்பதற்கு மனம் இல்லை. அடிமரத்தைத் தாங்க வேண்டிய விழுதுகள், வெவ்வேறு திசைகளில் ஒளிந்து கொள்கின்றன.

அருகில் இருந்தும் பெற்றோரை அனாதைகளாக்குகின்ற பிள்ளைகள் ஒருபுறம். இங்கே பிறந்து வளர்ந்து படித்து முடித்து வெளிநாட்டில் 'செட்டில்'ஆனதும், பெற்றோரையும் பிறந்த மண்ணையும் அறவே மறந்துவிடுகின்ற பிள்ளைகள் இன்னொரு புறம்.

ஆதிசங்கரர் தமது இளவயதிலேயே துறவறம் மேற்கொண்டார். அவர் துறவறம் ஏற்பதற்கு அவரின் தாயார் ஆர்யாம்பாள் முதலில் சம்மதிக்கவில்லை. அதன்பின்னர், ஓர் இக்கட்டான சூழ்நிலையின் போது வேறு வழியின்றிச் சம்மதித்தார்.

ஆதிசங்கரர் துறவறம் பூண்டார். ஆர்யாம்பாள் மனம் கலங்கினார். ஏன் தெரியுமா? துறவிகள் ஈமக் கிரியைகள்கூட செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. தாயின் சோகத்தில் உள்ளம் நெகிழ்ந்தார் ஆதிசங்கரர். அந்த சாஸ்திர விதியை மீறித் தன் அன்னையிடம், 'தாயே, உன் அந்திம காலத்தில் ஈமக் கிரியைகளைச் செய்வதற்கு நான் கண்டிப்பாக வந்துவிடுவேன்' என்று வாக்களித்தார்.

ஆண்டுகள் பல கடந்தன. ஆர்யாம்பாள் மரணப் படுக்கையில் கிடந்தார். அன்னையிடம் வாக்களித்திருந்தபடியே, ஆதிசங்கரர் ஓடோடி வந்தார். சாஸ்திரம் படித்த அவரின் உறவினர்கள் அவரைத் தடுத்தனர். ஆனால், தடையை மீறி அவர் தமது கடமையை நிறைவேற்றினார். தாயின் அந்திம காலத்தில், மடியில் அவரைக் கிடத்திக் கொண்டு பாடிய 'மாத்ரு பஞ்சகம்' உள்ளங்களை உருகச் செய்துவிடும்.

'அம்மா! என்னைக் கருவில் தாங்கி, நான் பிறக்கும் வரை உடல் மெலிந்து நீ பட்ட கஷ்டங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? குழந்தையான என் மலஜலம் எல்லாம் சுத்தம் செய்து, எனக்காகப் பத்தியம் இருந்து என்னைக் காப்பாற்றி வளர்த்த உனக்கு நான் என்ன கைமாறு செய்வேன்? அன்றுமுதல் இன்றுவரை நீ எனக்குச் செய்ததற்குக் கைமாறு செய்ய எனக்குப் பல ஜென்மங்கள் போதாதே!' - இப்படித் தமது தாயின் அன்பை இன்னும் சொல்லிச் சொல்லிப் புலம்பி அழுகிறார் ஆதிசங்கரர்.

முற்றும் துறந்த ஞானத் துறவியே, அன்னையின் மரணத்தில் கண்ணீர் சொரிந்தார். தமது கடமையினை நிறைவேற்றி முடித்தார்.

இன்றைய உலகம் பணத்திற்கு அடிமையாகிவிட்டது. இதயங்கள் இயந்திரமாகிவிட்டன. பெற்றோர்குச் செய்வதை 'வீண்செலவு' என்று எண்ணுகின்ற அற்பத்தனம் மேலோங்கிவிட்டது. 'வீடியோ கா'லில் எல்லாவற்றையும் முடித்துவிடுகின்றனர்.

இந்த மனோபாவம் மாற வேண்டும். நமது வாழ்வின் ஆதார வேர்களுக்கு, அன்பின் செயல்களினால் நன்றி பாராட்டுவோம். செத்தபின் கல்லறை கட்டிக் கும்பிடுவதைவிட, வாழ்கின்ற காலத்தில் அவர்களை வாழ்விப்போம்.

காலத்திற்குக் காலம் நாகரிகம் மாறலாம். நம்பிக்கைகள் மாறலாம். ஆனால், பெற்றோரின் தூய்மையான அன்பு ஒருநாளும் மாறாது. அவர்களின் உள்ளங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருக்கும். பெற்றோரைக் காண்பதே தெய்வ தரிசனம். பெற்றோர்க்குச் செய்வதே இறைத்தொண்டு.

போன்: 9940056332
Tags:    

Similar News