சிறப்புக் கட்டுரைகள்

பாம்பன் சுவாமிகள் அருளிய "சஸ்திர பந்தம்"

Published On 2024-09-26 09:41 GMT   |   Update On 2024-09-26 09:41 GMT
  • தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி. அருள் மொழி.
  • சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

அஞ்சும் முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்;

வெஞ் சமரில்,'அஞ்சல்' என வேல் தோன்றும்; - நெஞ்சில்

ஒரு கால் நினைக்கின், இரு காலும் தோன்றும்

'முருகா!' என்று ஓதுவார் முன்

தெய்வ மொழியான தமிழின் மூலமாக இறைவனைத் துதிக்கத் தமிழில் துதிப் பாடல்களை அருளிச் செய்ய அவ்வப்பொழுது மகான்கள் தெய்வ பூமியான தமிழகத்தில் தோன்றுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.

இந்த வகையில் சமீப காலத்தில் தோன்றி முருகனின் அருளை அனைவரும் பெற தெய்வீகப் பாடல்களை அருளிச் செய்த பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.

தோற்றம்: பழந்தமிழ்க் குடியான அகமுடையார் குலத்தில் சாத்தப்ப பிள்ளை என்பாருக்கும் செங்கமல அம்மையாருக்கும் மகனாக பாம்பன் குமரகுரு சுவாமிகள் என்று பின்னால் அறியப்படும் அப்பாவு 1853-ம் ஆண்டு வாக்கில் ராமேஸ்வரத்தில் பாம்பனில் பிறந்தார்.

இளமையில் இவர் உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். சேது மாதவ ஐயர் என்பவரிடம் வடமொழியையும் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். இயல்பாகவே இவர் தமிழில் கவி பாடும் திறமையைப் பெற்றிருந்தார். முருகன் மீது பக்தி கொண்ட இவர் அருணகிரிநாதரைத் தனது ஞான குருவாகப் பெற்றார். ஆகவே உபய அருணகிரிநாதர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

குடும்பம்: 1878-ஆம் ஆண்டு வைகாசி மாதம் ராமநாதபுரத்தில் கண்ணுப் பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை இவர் மணம் புரிந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

முருகப் பெருமானை நேரில் தரிசனம் பெற விழைந்த இவர் பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மயானபூமி அருகில் ஒரு குழியை வெட்டச் சொல்லி அதைச் சுற்றி முள் வேலி ஒன்றையும் அமைத்து தவம் புரியலானார். ஏழாம் நாளில் முருக தரிசனம் சித்தியானது. பிறகு தொடர்ந்து தவத்தை ஆற்ற, 35-ம் நாள் 'எழுக' என்ற கட்டளை எழ இவர் தவக்குழியில் இருந்து எழுந்து முருகனுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பவுர்ணமி நாளாக அமைந்தது.

பயணங்கள்: 1895-ம் ஆண்டு சந்நியாசம் பெற்ற இவர் சென்னைக்கு வந்தார். சுவாமிகள் தமிழ் நாட்டில் உள்ள பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். பின்னர் பெஜவாடா, விசாகப்பட்டினம், ஜகந்நாத், கொல்கத்தா, கயா என்று நெடும் பயணங்களையும் மேற்கொண்டார். காசி தல யாத்திரையையும் முடித்தார். ஏராளமான சீடர்கள் இவரை நாடினர்.

விபத்தும் அதிலிருந்து மீண்டதும்: 1923-ம் ஆண்டு (வயது 70) டிசம்பர் மாதம் 27ம் தேதி சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்தபோது, குதிரை வண்டிச் சக்கரம் அவரது இடது கணுக்கால் மீது ஏறியது. இதில், அவரின் இடது கால் எலும்பில் ஒரு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நிபுணர்கள் அவரது இடது காலைத் துண்டிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர். முருகனைப் பிரார்த்தித்த இவருக்கு மருத்துவமனையில் 13 நாட்கள் இருக்குமாறு அசரீரி வாக்கு ஒன்று தோன்றியது. இவரது அருகிலிருந்த சீடர் ஒருவர், வேல் ஒன்று அவரது காலில் ஊடுருவதை மானசீகமாகக் கண்டார். மருத்துவர்களே வியக்கும் வண்ணம் எலும்பு முறிவு குணமாகி இருந்தது. முருகனின் திருவிளையாடல் இது என்று சீடர்கள் கூறி மகிழ்ந்தனர்.

இதை நினைவு கூரும் வண்ணமாக மயூர வாகன சேவை என்ற நிகழ்ச்சி இன்றளவும் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை நாளில் நடைபெற்று வருகிறது. இவர் இருந்த மருத்துவமனையில் மன்ரோ வார்டில் இவரது திருவுருவப் படம் மாட்டப்பட்டுள்ளது.

தமிழில் கவிதை மழை!

தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி. அருள் மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும், மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி.

பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும் அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும் மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான சொற்சேர்க்கைகளால் பாக்களை அருளி அனைவரையும் உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!

இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால் இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும். தமிழில் பந்தங்கள் அமைப்பது ஒரு சிலராலேயே முடியும்.

தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிப் புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளுக்குத் தமிழில் தெய்வீகத் துதிகள் இயற்றும் ஆற்றலும் முருகப் பெருமான் அருளும் ஒருங்கே சேர்ந்து உண்டாக அருட்கவிகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தார்.

 

சிக்கலான பந்தங்கள் பலவற்றை அதை ஓதுவோர் அனைவரும் தெய்வீக அருளைப் பெறும் வண்ணம் இவர் பாடியருளியுள்ளார். இவற்றுள் சில முக்கிய பந்தங்களை இங்கு காணலாம்.

சஸ்திர பந்தம்:

"வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா

மாலைபூ ணேமதிற மால்வலர்தே- சாலவ

மாபாசம் போக மதிதேசார் மாபூதம்

வாபாதந் தாவேல வா."

`தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே, பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன் எனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே, என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க' என்பது இப்பாட்டின் பொருளாகும்.

இந்தப் பாடலை வேல் வடிவில் வரைந்து அதைத் தொழுதல் சாலச் சிறந்தது. முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க் கிழமை, சஷ்டி தினங்கள் மற்றும் விசாகம், கார்த்திகை நட்சத்திர நாட்கள் ஆகிய தினங்களில் முருகன் சந்நிதி முன் இதைத் தொடங்குவது மரபு.

இப்படித் தொழும் பக்தர்களுக்குத் தீமைகள் அகலும். செல்வம் சேரும். நோய்கள் தீரும். நன்மை பெருகும். ஆன்மீக ஞானம் உண்டாகும்.

சுவாமிகள் அருளிய மயூர பந்தம்:

"வரதந திபநக ரகமுக

வொருகுக

வறிதுத புவிரிவிதி

மரகத வரிபர மதுகளி லசலவி

மலமழ

வெனலிரிய

மரபுறு குறுமுனி வருதிம

யலசர மதிவிரி

விபுதகுரு

சுரபதி நவரச பரததி நகரம

துகமழு முனிவருதி"

இது சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல மந்திரப் பாடலாகும்.

சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

"வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா

வேளா மயிலோய் விமலர்கண் வந்த

சமாதியர்கோ

வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க

ளாரியற்கே

யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே"

இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21

எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சதுரங்க பந்தத்தின் இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.

இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பலவித அற்புத பலன்களை இது அருளுகிறது.

 

ச.நாகராஜன்

குமாரஸ்தவம்: 1918-ஆம் ஆண்டு சுவாமிகளுக்கு வெப்பு நோய் பாதித்தது. உடனே மந்திர நூலான குமார ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். நோய் உடனே நீங்கியது. இதை ஓதுவோருக்கு நோய்கள் தீரும், முருகன் தன் இரு தேவியருடனும் காட்சி தருவார் என்று இவர் கூறி அருளியுள்ளார். சக்தி வாய்ந்த இதை ஓதி பக்தர்கள் இன்றும் நல்ல பயனை அடைவது கண்கூடு.

ஷண்முக கவசம்: தனது தந்தையார் இறந்த சமயத்தில் அவர் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு 30 பாடல்கள் கொண்ட 'சண்முக கவசம்' என்னும் நூலை இயற்றினார்.

6 மண்டலங்களில் 6666 பாடல்கள் சுவாமிகள் இயற்றிய ஒவ்வொரு பாடலும் தனித்தன்மைகொண்டது. சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 அரும் தமிழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.

சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது.

சமாதி: 1926-ஆம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி உயில் ஒன்றை எழுதி தேஜோ மண்டலசபை அமைப்பை உருவாக்கி செயல்முறை ஒன்றை சுவாமிகள் உருவாக்கினார்.

சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதியன்று காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதி அடைந்தார். சுவாமிகளின் சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் திருமடவளாகத்துள் அமைந்துள்ளது.

தமிழின் தெய்வத் தன்மையை உணரவும் முருகனின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை பெறவும் பக்தர்கள் துதிக்க அருட்பாடல்களைத் தந்த ஒரு பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் என்றால் அது மிகையாகாது!

Tags:    

Similar News