சிறப்புக் கட்டுரைகள்

நட்பு என்னும் நல்லுணர்வு!

Published On 2024-09-22 05:00 GMT   |   Update On 2024-09-22 05:00 GMT
  • நல்லவர்களோடு கொள்கிற நட்பு வளர்பிறை போல வளருமாம்.
  • உலகியலில், மனித உறவுகளுக்கென சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன

நட்பு என்னும் நற்குணத்தை என்றென்றும் போற்றிப் பாதுகாத்திட விரும்பிடும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

உலகிலுள்ள உயிரினங்கள் எல்லாம் ஒன்றினோடு ஒன்று கலந்து உறவாடிட உறவுமுறைச் சொற்களும், உரிமைவழிச் சொந்தங்களும் உருவாயின. எத்தனை வகையான ரத்தவழிச் சொந்தங்கள் உருவாகிப் பிணைந்து நின்றாலும் 'நட்பு' என்கிற உணர்வுவழி உறவுக்கு ஈடாக உலகில் வேறொன்றும் இதுவரை உருவாகவில்லை என்றே கூற வேண்டும்.

ரத்தவழிச் சொந்தங்களும் உறவுமுறைகளும் பிறப்பின்வழியே உருவானவை; இந்தவகை உறவுகள் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவை; விதிவழியே உருவானவை. ஆனால் ரத்தவழிச் சொந்தமற்ற மனிதர்களுக்கிடையே உருவாகும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், ஒருவர் மற்றொருவர் மீது கொண்டுள்ள நெருக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ளவும், பெருகிவரும் பாச உணர்வைப் பரிமாறிக்கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் நம்பிக்கையைப் புலப்படுத்திக் கொள்ளவும் 'நட்பு' என்கிற புதிய உறவு புனித உணர்வாய்ப் போற்றப்படுகிறது.

எத்தனை விதமான உறவுகள் இயல்பாகவே அமைந்து சூழ்ந்து நின்றாலும், உருவாக்கி உறவுகொள்ளும் சிறப்புத் தன்மை வாய்ந்த நட்பை வெல்வதற்கு மற்றெவற்றாலும் முடியாது. ஏனெனில், நாம் செய்கிற எந்தவொரு செயலாக இருந்தாலும், அது உறவுகளால் சூழ்ந்து நிற்பதைவிட நட்புகளால் சூழ்ந்து நிற்பதே பெரு வெற்றிகளைக் குவிக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. திருவள்ளுவர் தமது திருக்குறளை 133 அதிகாரங்களாக வகுத்து ஆகச்சிறந்த பொருண்மைகளுக்கு அதிகாரங்களைப் பகுத்துக் கொடுத்திருந்தாலும், 'நட்பு' என்பதற்கு மட்டும் ஐந்து விதமான அதிகாரங்களைத் தாராளமாக வழங்கியுள்ளார். 'நட்பு', நட்பாராய்தல்','தீ நட்பு', கூடா நட்பு', 'பழைமை' என்பவை அவ்வதிகாரங்கள்.

மனித உறவாடல்களில் ஆகச் சிறந்த உறவாடல் 'நட்பு' மட்டுமே என்பதால், அதனை ஆராய்ந்து தெளிந்து, தீயவற்றையும், கூடாதவற்றையும் விலக்கி, கொள்வனவற்றை ஏற்று, நட்பைக் கொள்ள வேண்டும் என்பதற்காக வள்ளுவர் ஐந்து அதிகாரங்களை மனித குலத்திற்கு வழங்கி வழிகாட்டி உள்ளார்.

நல்லவர்களோடு கொள்கிற நட்பு வளர்பிறை போல வளருமாம்; தீயவர்களோடு கொள்கிற நட்பு, தேய்பிறை போலத் தேய்ந்து போகுமாம். நல்ல நண்பர்களோடு நட்புக்கொண்டு பழகுவதும், நல்ல இலக்கிய நூல்களை நாள்தோறும் பயில்வதும் ஒருதன்மையான நன்மை பயப்பவை ஆகும். நல்ல நூல்களைப் படிக்கப் படிக்கப் புதிதுபுதிதான சிந்தனையோட்டங்களும் நலம்நலமான நயமான திறங்களும் வெளிப்பட்டுத் தோன்றும். அவை நமது வாழ்வியல் போக்குகளைச் செம்மைப்படுத்திக் கொள்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் நல்கும் தன்மையைத் தரும். அதைப்போல நல்ல பண்புநலனும் அன்புநயமும் உடைய நண்பர்களோடு பழகத் தொடங்கினால், அந்த நட்பும், தடைகளாலும் தோல்விகளாலும் துவண்டு நிற்கும் தருணங்களிலெல்லாம் நம்மைத் தூக்கி நிறுத்தும் ஊக்கிகளாகச் செயல்படும்.

உலகியலில், மனித உறவுகளுக்கென சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. தாய்,தந்தை பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், பிள்ளைகள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உரிமைகள், சகோதர- சகோதரிகள், அத்தை-மாமா, மாமனார்-மாமியார், அங்காளி பங்காளிகள், மாமன்-மைத்துனர்கள் இவர்களுக்கிடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும்… இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். இந்த உறவுகளுக்கு இடையேயுள்ள உரிமைகளும் கடமைகளும் விதிகளுக்கு உட்பட்டவை; தவறினால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படும் சமூகத்தன்மை வாய்ந்தவையும்கூட.

ஆனால் நட்பிற்கு எந்த வரையறுக்கப்பட்ட உரிமையும் கிடையாது; கட்டாயப்படுத்தப்பட்ட கடமையும் கிடையாது. மகிழ்ச்சித் தருணங்களில் கொண்டாடி மகிழ்வதற்கு மட்டுமல்ல நட்பு; வாழ்நெறி தவறிப் பிழையான பாதையில் செல்லத் தொடங்கும்போது, இடித்துக்கூறித் திருத்தும் தன்மை வாய்ந்தது நட்பு. நாள்தோறும் நேரில் சந்தித்து மணிக்கணக்கில் அரட்டையடித்து மகிழ்ந்துபேசி முகத்தளவில் சிரித்துப், பிரிந்து போவதல்ல நட்பு; சந்தித்தாலும் சந்திக்காவிட்டாலும் அகத்தளவில் அடைகாத்து வளர்க்கப்படுவதே இனிய நட்பு.

நண்பர்கள் என்றால் அடிக்கடி கூடி மகிழ்வதும் உண்டுமகிழ்வதும் மட்டுமே நினைவுக்கு வந்தால் அவர்கள் நட்பைப் பொழுதைக் கழிப்பதற்கான கருவியாக மட்டுமே கருதுகிறார்கள் என்று பொருள். நட்பைத் திருவள்ளுவர், இருவகைப்படுத்திப் பெருமைப் படுத்துகிறார்; 'அல்லல் அழிப்பதாம் நட்பு', 'இடுக்கண் களைவதாம் நட்பு' என்கிறார்.

ஒரு நண்பனுக்குத் துன்பம் என ஒன்று வந்தவுடன் ஓடிச்சென்று, அவனுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நீக்கி, அந்தத் தீமையிலிருந்து வெளியேறும் வழிமுறைகளைக்கூறி, தேவைப்பட்டால் அவனது துன்பத்தில் பங்கு போட்டுத் தாங்கிக் கொள்வதுதான் நட்பாம்.

"அழிவினவை நீக்கி ஆறுய்த்து

அழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு"

சுந்தர ஆவுடையப்பன்

ஒரு நண்பன் துன்பத்தில் தவிக்கும்போது, அவன் உதவிசெய் என்று கேட்காமலேயே, அவனையுமறியாமலேயே ஓடிச்சென்று உதவி செய்து துன்பத்தைத் தீர்ப்பதுதான் நட்பாம். எப்படியென்றால், உடுத்தியிருக்கிற ஆடை நழுவும்போது, நமது கைகள், நம்மையுமறியா மலேயே அனிச்சையாக ஓடிச்சென்று ஆடையைச் சரி செய்வதுபோலத் துயரப்படும் நண்பனுக்கு உதவ வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். நட்பு, விளம்பரங்களுக்கும் விதிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு".

நட்பின் மேன்மையை விளக்கும், 'கிம்' மற்றும் 'டிம்' என்கிற இரண்டு மேனாட்டு நண்பர்களின் கதை மிகவும் உருக்கமானது. கிம் மற்றும் டிம் இருவரும் ஒரே ஊரில், ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் ஒரே ஆண்டில், ஒரே மாதத்தில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில், ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து பாடம் கற்றவர்கள். இணைபிரியாத தோழமையோடு கல்லூரிப் படிப்புவரை கற்று, அந்த நாட்டின் ராணுவப் படைப்பிரிவில் ஒன்றாகப் பணியாற்றத் தொடங்கினர்.

ராணுவத்திலும் ஒரே குழுவில் இருவரும் பணியாற்றி வந்தனர். அப்போது அவர்களது நாட்டிற்கும் அண்டை நாட்டிற்கும் சண்டை மூண்டது. கிம்மும் டிம்மும் தங்களது படைக்குழுவோடு போர்க்கள எல்லையில் சண்டையில் பங்கேற்றனர். எல்லையில் இருபுறமும் பதுங்கு குழிகள் அமைத்து இருநாட்டுப் படைகளும் கடுமையாகச் சண்டையிட்டு வருகின்றன. துரதிர்ஷ்ட வசமாக, கிம் எதிரிநாட்டு எல்லைக்குள் சென்றுவிட்டான்; பலத்த காயம் வேறு; அங்கிருக்கும் பதுங்கு குழிக்குள் குற்றுயிரும் கொலை உயிருமாகக் கிடந்து கிம் முனகும் முனகல் சத்தம், எல்லைக்கு இந்தப்பக்கமாகப் பதுங்கு குழிக்குள் இருக்கும் நண்பன் டிம்முக்கு நன்றாகவே கேட்கிறது.

" நண்பா! டிம்! நான் இங்கு உன்னைக் காணவேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறேன்!. வா நண்பா! வந்து என்னை மீட்டுக்கொண்டு செல்!" என்று கிம் அழைக்கும் முனகலோசை டிம்முக்குக் கேட்கிறது. தனது குழுவின் தளபதியிடம் அனுமதி கேட்கிறான் டிம்," எப்படியாவது எதிரிநாட்டின் எல்லைக்குள் சென்று உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் என் நண்பனை மீட்டு வருகிறேன்! அனுமதி தாருங்கள்!". தளபதி அனுமதி மறுக்கிறார், " நீ அங்கு சென்றால், எதிரிப்படை உன்னையும் பிடித்துக் கொன்றுவிடும். நமக்கு இழப்பு இரட்டிப்பு ஆகிவிடும்; அதனால் போகாதே!" என்று தடுக்கிறார்.

நட்பின் வேகம் பொங்கிப் பிரவாகம் எடுக்க, தளபதியின் கால்களில் விழுந்து," தயவு செய்து அனுமதி கொடுங்கள்!. நிச்சயம் என் நண்பனை உறுதியுடன் மீட்டுக்கொண்டு வருகிறேன்! இது எனது நட்பின்மீது ஆணை!" என்று கெஞ்சுகிறான் டிம். "சரி. தொலைந்து போ! என்று வேண்டா வெறுப்புடன் அனுமதிக்கிறார் தளபதி.

எதிரிப்படையின் கண்களில் மண்ணைத் தூவி, எல்லைதாண்டி நுழைந்த டிம், உயிர் நண்பன் கிம் இருக்கும் பதுங்கு குழியைக் கண்டுபிடிக்கிறான். நண்பன் வந்துவிட்டதைத் தனது இரண்டு கண்களால் கண்ட கிம் ஆனந்தக் கண்ணீரை மாலைமாலையாக உகுத்து டிம்மை ஆரத் தழுவுகிறான். " வந்து விட்டேன் கிம்! இனி ஆபத்தில்லை! நாம் பாதுகாப்பாக நம்மிடத்திற்குச் சென்று விடுவோம்!" என்று ஆறுதலாக டிம் கூறியதைக் கேட்டுக்கொண்டே உயிர் துறக்கிறான் கிம். உயிரிழந்த நண்பனது உடலைச் சுமந்துகொண்டு, தனது படை தங்கியுள்ள பகுதிக்கு வந்து சேர்கிறான் டிம். பார்க்கிறார் தளபதி. "இதற்காகத்தான் உன்னை அங்கே போகாதே என்று சொன்னேன். சிக்கியிருந்தால் உன்னையும் அவர்கள் கொன்று போட்டிருப்பார்கள்!. பார் உன் நண்பனையாவது காப்பாற்ற முடிந்ததா?" என்று கேட்டார்.

டிம் பதில் சொன்னான். " நான் அங்கு சென்று என் நண்பனை உயிரோடு இங்கு கொண்டுவந்து சேர்க்க முடியவில்லை. நண்பன் செத்து விட்டான்; ஆனால் எப்படியாவது தனது உயிர் நண்பன், உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் தன்னை நிச்சயம் காண வருவான் என்று அவன் என் மீது கொண்டிருந்த நம்பிக்கையைச் சாகடிக்காமல் நான் காப்பாற்றியிருக்கிறேன். நண்பன் வந்து விட்டான் என்கிற நம்பிக்கையோடுதான் அவன் உயிர் துறந்திருக்கிறான். நண்பர்கள் செத்துப்போகலாம்!; ஆனால் அவர்கள் ஒருவர்மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை என்றுமே செத்துப் போகக்கூடாது".

என்னே அமரத்துவமான நட்பின் நம்பிக்கை வரிகள்!.

வெளிநாட்டில் மட்டுமா இதைப்போன்ற அமரத்துவமான நட்பின் கதைகள் இருக்கின்றன? இங்கே நமது தமிழ் வரலாற்றில், இறுதிவரை, காணாமலேயே நட்புப் பூண்டு, நிறைவாக மரணத்தில் ஒன்றிணைந்த கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பிற்கு ஈடு இணை இந்த உலக வரலாற்றில் வேறு எதுவுமுண்டோ?.

முகநூல், வாட்ஸ்அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் என நட்புப் பதாகை தாறுமாறாகப் பறந்து கொண்டிருக்கிற இன்றைய சமூகஊடகக் காலத்தில், ஒருவரை ஒருவர் காணாமலேயே நட்புக் கொண்டிருந்த வரலாறு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அதுவும் ஒருவர் ஒரு நாட்டின், சோழ சாம்ராஜ்யத்தின் ராஜா! இன்னொருவரோ பாட்டுமட்டுமே இயற்றத் தெரிந்த ஏழைப்புலவர். இருவரும் ஒரே நாட்டினரும் அல்லர்; ஒருவர் சோழ நாடு. மற்றவர் பாண்டியநாட்டில் பிசிர் என்னும் சிற்றூர். இணைத்து வைக்க எந்த இணைய வசதியும் இல்லாத காலத்தில் எப்படிக் காணாமலேயே நட்பில் இணைந்திருந்தார்கள்?. மானம் காக்க வடக்கிருந்து உயிர் துறப்பது என முடிவெடுத்தபின், தன்னை அடக்கம் செய்யப்போகும் இடத்திற்கு அருகிலேயே, தன்னுடைய உயிர்நண்பர் பிசிராந்தையாருக்கும் ஓரிடம் தயார் செய்துவையுங்கள்! என்று கோப்பெருஞ்சோழன் கட்டளையிட்டது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்? . நூற்றுக்கணக்கான கல் தொலைவுகளுக்கு அப்பாலிருந்த பிசிராந்தையார் சரியான நேரத்திற்கு அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது எந்த உள்ளுணர்வின் அடிப்படையில்?.

எல்லாம் நட்பு என்னும் நல்லுணர்வு செய்யும் மாயம்தான்.

தொடர்புக்கு 94431 90098

Tags:    

Similar News

பயமே ஜெயம்!