சிறப்புக் கட்டுரைகள்
null

அவர் நாண நன்னயம்!

Published On 2024-09-15 10:45 GMT   |   Update On 2024-09-15 11:23 GMT
  • தமிழில் நாணப்படுதல், வெட்கப்படுதல் என இரண்டுசொற்கள் ஒரே பொருளில் வருகின்றன.
  • சான்றாண்மைக் குணமுடையவர்களின் செயல் என்று அடையாள முத்திரையையும் குத்திக் காட்டுகிறார்.

தீமை செய்தோர்க்கும் நன்மையே செய்தல் வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருக்கும் அன்பு வாசகர்களே! வணக்கம்!.

'உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்!; தப்பைச் செய்தவன் தண்டனை பெறுவான்!' என்று பழமொழி இருக்கிறதே! பின் எப்படித், தீமை செய்தவர்களுக்கும் நன்மை செய்யுங்கள்! என்று கூறுகிறீர்கள்? என்று நீங்கள் கேட்கலாம். பெரும்பெரும் குற்றங்களைச் செய்த குற்றவாளிகளுக்கு, அரசுமுறை சார்ந்து அவர்களுக்கு நீதி வழங்கும்போது, குற்றங்களுக்கேற்ற தண்டனைகள் வழங்குவதென்பது இயல்பான நடைமுறை. ஆயினும் தனிப்பட்ட முறையில் நமக்கு மற்றவர் இழைக்கும் தீமைகளுக்கும் கடுமையான தண்டனைகளை வழங்கியே ஆகவேண்டும் என்று நினைக்காமல் அவர்கள் நாணப்படும்படியாக நன்மையையே தண்டனையாக வழங்கவேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு.

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்"

இந்தக் குறளில் வள்ளுவர், நமக்குத் தீமை செய்தவர்களுக்குக் கட்டாயம் தண்டனை வழங்கியே ஆக வேண்டும்! என்றுதான் உறுதியாகக் கூறுகிறார்; 'ஒறுத்தல்' என்ற சொல்லுக்குத் 'தண்டித்தல்' என்று பொருள். ஆனால் அப்படித், தண்டனையாக வழங்கும் செயல் தீமைக்குத் தீமை என்றில்லாமல், தீமைக்கு நன்மை என்கிற பாங்கில் இருக்க வேண்டும். 'நாம் செய்த தீமைக்குத் தீமையைத் தண்டனையாக வழங்காமல் நன்மையை வழங்குகிறானே!' என்று தண்டனைக்குரியவன் நாணும்படியாக அந்த நன்மையும் இருக்க வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். இதுவே சான்றாண்மைக் குணமுடையவர்களின் செயல் என்று அடையாள முத்திரையையும் குத்திக் காட்டுகிறார்.

"இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு"


கெடுதல் செய்தவர்களுக்கும் நன்மையே செய்வதுதான் சான்றோர் எனப்படும் நல்லவர்களுக்கு அடையாளமாகும். இப்படிச் செய்வதன்மூலம், நன்மையைப் பெற்ற கெட்டவர்கள் நாணத்தினால் வெட்கித் தலைகுனியும் தண்டனையை அனுபவிப்பார்கள் என்பது வள்ளுவர் கருத்து. நன்னயம் செய்வதுகூடப், பலவேளைகளில் தண்டனைகள் போலாகித், தீயவர்கள் திருந்துவதற்கு வாய்ப்பை வழங்கிவிடும்.

தமிழில் நாணப்படுதல், வெட்கப்படுதல் என இரண்டுசொற்கள் ஒரே பொருளில் வருகின்றன. பழிபாவங்களைச் செய்ய நாணப்படுதல் அல்லது வெட்கப்படுதல் என்பது அறமுணர்ந்த சான்றோர்களின் குணமாகும். ஆனால் பெண்களின் நற்குணங்களைக் கூறவந்த சான்றோர், அச்சம், மடம், நாணம், பயிற்பு ஆகிய நான்கும் நிச்சயமாகப் பெண்களிடத்தில் அமைந்திருக்க வேண்டும். இந்த நால்வகைக் குணங்களே பெண்களுக்கு அணிகலன்கள் போன்றவை என்கின்றனர். அப்படியானால் பெண்களிடத்தில் இருக்கின்ற நாணப்படுதல் என்னும் குணம் அவர்களின் அழகுக்கு அழகு சேர்க்கின்ற நேர்முறை நோக்கம் கொண்ட குணமாகும். இதைத் திருவள்ளுவரும் ஒரு குறளில் வெகு அழகாகத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். 'நாண் உடைமை' அதிகாரத்தில்,

"கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்

நல்லவர் நாணுப் பிற"

என்னும் குறளில், பழிதரும் தீயச்செயல்களைச் செய்வதற்கு வெட்கப்பட்டு நாணுவதே நாணம் ஆகும். பெண்கள் நாணம் கொள்வது என்பது வேறு என்கிறார்.

ஒரு செயலால் தமக்குத் தனிப்பட்ட முறையிலோ அல்லது பொது நிலையில் மற்றவர்களுக்கோ பழிபாவம் ஏற்படுமானால் அந்தச் செயலைச் செய்வதற்கு அஞ்சி, அதனைச் செய்யாமல் விட்டுவிடுவது நாணம் ஆகும். சமுதாயத்தால் அறமற்ற தீயச்செயல்கள் என்று ஒதுக்கிவைக்கப்பட்ட செயல்களைச் செய்யக்கூடாது; கட்டாயத்தின்பேரில் அவற்றைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதற்காக நாணமும் வெட்கமும் பட்டு விலகி விட வேண்டும்.

"புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்

பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"

எனவரும் புறநானூற்று வரிகள், இன்னும் இந்த உலகம், பழிச்செயல்களுக்கு அஞ்சுகிற நாணமுடைய பெருமக்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்கிறது. தனிமனித குண விசேஷங்களைப் பொதுமைப்படுத்திப் பார்க்கிற பரந்த அறிவுப் பார்வையை இதில் காணலாம்.

"எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்

இங்குள்ள எல்லாரும் நாணிடவும் வேண்டும்!"

என்கிற பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை வீச்சு, சமுதாயத்தில் ஒருமனிதன் வறுமையின் காரணமாகப் படிப்பற்றவனாக இருந்தாலும், அதற்கான பொறுப்பை ஒட்டுமொத்தச் சமுதாய மும் ஏற்று, நாணப்படவேண்டும் என்கிறது. இங்கே எல்லாரும் கல்விகற்று அமர நிலை எய்திட வேண்டும் என்கிற மகாகவியின் கனவை நனவாக்க அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. உழைப்பும் முன்னேற்றமும் கல்வியறிவும் தனிமனித முயற்சி சார்ந்தது என்றாலும், அவற்றிற்கான இலக்குகளை அடைவதற்கான முன்னெடுப்புகளை ஒட்டுமொத்தச் சமூகமும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.

இந்தச் சமூகத்தில், தம்முடைய ஒரு செயலால் தமக்கோ, அல்லது பிறருக்கோ தீங்கு வந்து விடுமென்றால் அதனைச் செய்யாமல் விட்டுவிடவேண்டும். அப்படி மீறித் தீச்செயல்களைச் சிலர் செய்தால் அவர்களாக அதற்கு வெட்கி நாணப்படும்படி, அவர்களுக்கு நற்செயல்களைச் செய்து திருத்த முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு கிராமத்தில் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் நடந்த ஒரு சம்பவம் சுவாரஸ்யமானது. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, கிராமங்களில் வீடுகள்தோறும் வீட்டுத் தோட்டங்கள் போட்டுக் காய்கறிகள் பயிர் செய்வதும், ஆடுமாடுகள் கோழிகள் வளர்ப்பதும் வழக்கம். அப்படி ஒரு வீட்டில் மூன்று கோழிகளை ஒருவர் வளர்த்து வந்தார். அவரது பக்கத்து வீட்டுக்காரர் கோழிகள் எதுவும் வளர்க்கவில்லை; தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் காய்கறித் தோட்டம் மட்டும் போட்டிருந்தார். இரண்டு வீட்டுக் கொல்லைப் புறத்திற்கு இடையே வேலிகளோ அல்லது மதிற்சுவர்களோ கட்டப்படவில்லை.

சுந்தர ஆவுடையப்பன்

ஒவ்வொருநாள் விடிந்ததும், தன்வீட்டில் பஞ்சாரத்தில் அடைக்கப் பட்டிருக்கும் கோழிகளை வீட்டுக்காரர் மேய்ச்சலுக்காகத் திறந்துவிடுவார். ஆனால் அந்த மூன்று கோழிகளும் அந்த வீட்டுக் கொல்லைப் புறத்தில் மேயாமல், பக்கத்துவீட்டுக் கொல்லைப் புறத்திற்குச் சென்று, அங்கிருந்த காய்கறிச் செடிகளைக் கொத்திக்கிளறிச் சேதப்படுத்தி மேய்ந்து கொண்டிருந்தன. பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் அப்போதைக்குக் கோழிகளை அந்த வீட்டுப்பக்கமாக விரட்டினாலும், அவை மீண்டும் மீண்டும் வந்து அவர் வீட்டுக் கொல்லைப்புறப் பயிர்களிலேயே மேய்ந்து கொண்டிருந்தன.கோழிக்குச் சொந்தக்காரரைப் பார்த்துக் கோழிகள் செய்வதைச் சொல்லி, அவற்றைக் கூடைகளுக்குள் அடைத்துவைத்து வளருங்கள்! அல்லது உங்கள் வீட்டுக் கொல்லைப் புறத்திலேயே மேயும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்! என்று அறிவுரை கூறினார்.

பக்கத்துவீட்டுக்காரரின் புகாரைக் கேட்ட கோழிவீட்டுக்காரர்," ஐயா! எனக்கு ஆயிரம் வேலைகள் வெளியில் இருக்கின்றன; எந்நேரமும் கோழிகளை உங்கள் வீட்டுப்பக்கம் வரவிடாமல் கோழிமேய்க்கும் வேலையை மட்டும் என்னால் பார்க்க முடியாது. உங்களுக்கு வேண்டுமானால், கொல்லைப்புறத்தில் ஒரு தடுப்புச் சுவரோ வேலியோ போட்டு வைத்துக் கொள்ளுங்கள்; வசதிப்பட்டால், எங்கள் வீட்டுக் கோழிகள் உங்கள் வீட்டுப்பக்கம் வராமலிருக்க ஒரு ஆளைக் காவலுக்குக்கூட அமர்த்திக் கொள்ளுங்கள்!" என்று முகத்தி லடித்தாற் போலச் சொல்லி விட்டார்.

கோழிக்காரரை எப்படித் திருத்துவது? யோசித்தார் பக்கத்து வீட்டுக்காரர். கடைக்குச் சென்று ஐந்தாறு கோழிமுட்டைகளை வாங்கி வந்தார். அன்றுகாலை பஞ்சா ரத்தைத் திறந்துவிட்டவுடன் வழக்கம்போலக் கோழிகள், பக்கத்து வீட்டுக் கொல்லைப் புறத்துக்கு வந்து காய்கறிச் செடிகளுக்குள் புகுந்து செடிகளைக் கொத்திக் கிளற ஆரம்பித்தன. அந்த நேரத்தில் தான் கடையில் வாங்கி வந்திருந்த கோழி முட்டைகளைச் செடிகளுக்கு அடியில் வைத்துக், கோழிக்காரர் பார்க்கும்நேரத்தில், அவர் பார்க்கும்படியாக ஒவ்வொரு முட்டையாக எடுத்து வீட்டுக்குள் கொண்டு சென்றார்.

அவ்வளவுதான் பதறிப்போய்விட்டார் கோழிக்காரர். இந்தக்கோழிகள் பக்கத்து வீட்டுக் கொல்லைப்புறத்துக்கு மேய மட்டும் செல்லாமல் அங்கு முட்டைகளையும் இட்டு வருகின்றனவா? என்று பார்த்தார். ஓடிச்சென்று மூன்று கோழிகளையும் ஒரே பிடியாகப் பிடித்துத், தன் வீட்டுப் பஞ்சாரத்திற்குள் போட்டு அடைத்து வைத்துவிட்டார். இனி எந்தக்காலத்திலும் அந்தக் கோழிகள் பக்கத்துவீட்டுக் கொல்லைப்புறத்திற்கு மேய வரப்போவதேயில்லை.

இதுதான் அவர்நாண நன்னயம் செய்துவிடல். பக்கத்துவீட்டுக்காரர் நினைத்திருந்தால் தன்வீட்டுக் கொல்லைக்கு மேயவந்து காய்கறிச் செடிகளைச் சேதப்படுத்திய கோழிகளைப் பிடித்துச் சிறைப் படுத்தியிருக்கலாம். அல்லது அடித்துச் சமைத்தும் உண்டிருக்கலாம். ஆனால் அவை மென்மேலும் இருவீட்டார்களுக்கும் கசப்புணர்வையே வளர்த்திருக்கும். பிரச்சனைகளுக்கு எதிர் வினைகளே தீர்வாகாது. எதிரியும் உணர்ந்து திருந்தும்படி நன்மைகள்வழி நல்வழிப்படுத்துவதே சிறந்த தீர்வு.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் அறமற்ற செயல்களில் ஈடுபடுவதற்கு நாணப்பட வேண்டும். தன்மானத்திற்குத் தலைகுனிவா கவும், சுயமரியாதைக்கு இழுக்காகவும் உள்ள செயல்களைச் செய்யக்கூடாது. அவமானம் உண்டாகும் காரியத்தில் தம்மை அறியாமலும்கூட ஈடுபட்டு விடக்கூடாது. ஒரு மனிதர் எவ்விதமான துன்பம் வந்தாலும், எவ்விதமான இக்கட்டு வந்தாலும், தனது நிலையிலிருந்து தாழ்ந்துவிடக் கூடாது. அப்படி ஒரு மனிதன் தனது நிலையிலிருந்து தாழ்வதைத் தலையிலிருந்து உதிரும் மயிருக்கு உவமைகாட்டி இழிவாகக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.

நாணப்படும்படி செயல்கள் நிகழ்ந்துவிடும்போது, அக்காலத் தமிழ்மன்னர்கள் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் துறந்த மான வரலாற்றைச் சங்ககால வரலாறு எடுத்துரைக்கிறது. சேரமன்னன் பெருஞ்சேரலாதன், கரிகால்சோழன் எய்தஅம்பு முதுகில் புண் ஏற்படுத்தியதற்காக நாணி வடக்கிருந்து உயிர்துறக்கிறான். போரில் வீரமரணம் என்பது மார்பில் வேல்தாங்கி இறப்பது; ஆனால் கரிகாலன் எய்தஅம்பு புறமுதுகைப் புண்ணாக்கியது என்றால், அது அம்புஎய்த கரிகாலனுக்கும் இழுக்கு! அம்பைத் தாங்கிய பெருஞ்சேரலாதனுக்கும் இழுக்கு! எனவே நாணப்பட்டு வடக்கிருந்து இறக்கிறான் பெருஞ்சேரலாதன்.

தன்னுடைய சொந்த மகன்களாலேயே தனக்கு அவமானம் ஏற்பட்டுவிட்டதால், அதற்குப் பொறுக்காத கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்து உயிர் துறந்த வரலாறும் புகழ்மணக்கும் புறநானூற்றில் உண்டு.

பிறக்கின்ற மனிதர் எல்லாரும் வாழ்ந்தாலும் மறைந்தாலும் ஒருசிலரின் மறையாத நிலைத்த புகழுக்கு அடிப்படையாகத் திகழ்வது, அறமற்ற செயல்களைச் செய்வதற்கு நாணப்படுவதே ஆகும். அடுத்தவர் நமக்கு அறமற்ற செயல்களைச் செய்தாலும் அவர்களாக உணர்ந்து நாணப்படும்படியாக அவர்களுக்கு நன்மையையே செய்வதுதான் சிறந்த மனிதச் செயல் ஆகும்.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News