சிறப்புக் கட்டுரைகள்

தொடுவதா? விடுவதா?

Published On 2024-09-13 09:10 GMT   |   Update On 2024-09-13 09:10 GMT
  • குடி ஒருவனுடைய உடம்பையும், ஒழுக்கத்தையும், அறிவையும், ஆக்கத்தையும் நாசமாக்குகிறது.
  • வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு.

'குடிப்பழக்கத்தைக் கைக்கொள்ளுகிறவன் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் நாசத்திற்கு உள்ளாக்குகிறான். குடி ஒருவனுடைய உடம்பையும், ஒழுக்கத்தையும், அறிவையும், ஆக்கத்தையும் நாசமாக்குகிறது'.

-மகாத்மா காந்தி

அது பட்டணத்தின் ஒரு பரபரப்பான சாலை. அங்குமிங்கும் விரைகின்ற வாகனங்களின் இரைச்சல். ஒலியெழுப்பியபடி சீறிப் பாய்கின்ற மோட்டார் பைக்குகள். வியாபாரம், தொழில், அலுவலகம் என எல்லோரும் வேக வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்ற நேரம்.

அந்தச் சாலையின் பக்கவாட்டில் மாநகராட்சியின் குப்பைத் தொட்டி. அதன் அருகே ஒருவன் விழுந்து கிடக்கின்றான். முப்பது வயதுதான் இருக்கும். நல்ல பேண்ட், ஷர்ட், விலையுயர்ந்த ஷு அணிந்திருக்கின்றான்.

வாகனங்களின் பேரிரைச்சல், பாதசாரிகளின் பேச்சு சத்தங்கள், குப்பைத் தொட்டியின் நாற்றம் - எதைப் பற்றிய உணர்வுமின்றிக் கிடக்கின்றான்.

அவன் செல்போனை எடுத்து, அதிலிருந்து யாரோ ஒருவர் தகவல் கொடுத்திருக்க வேண்டும். சிறிது நேரத்தில் ஒரு ஆட்டோ அங்கு வந்து நிற்க, ஓர் இளம்பெண்ணும் சிறு குழந்தையும் பதற்றத்துடன் இறங்கி அவனருகில் ஓடுகின்றனர்.

'இப்படி விழுந்து கிடக்கி றீங்களே, தலைவிதியா... ஐயோ... எழும்புங்க, வீட்டுக்குப் போகலாம்' - அழுது அரற்றியபடியே கணவனின் உடலை உலுக்குகிறாள் அந்தப் பெண்.

'டாடி, டாடி...வாங்க டாடி. என்னை பாருங்க டாடி...நம்ம வீட்டுக்குப் போவோம் டாடி' என்று அந்தப் பிஞ்சுக் குழந்தை, தனது தந்தையின் கையைப் பிடித்து இழுக்கிறது.

'குடிச்சிக் குடிச்சி குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்துட்டீங்களே' என்று தலையில் அடித்துக் கொண்டு, அவனின் முதுகுக்குக் கீழ் தனது கையைக் கொடுத்து, ஆட்டோ டிரைவரின் உதவியுடன் சிரமப்பட்டு அவனைத் தூக்கி நிறுத்தி, மெல்ல நகர்த்திச் சென்று, ஆட்டோவில் உட்காரச் செய்துவிட்டாள்.

போதையின் உச்சத்தில் இருந்த அவனுக்கு எதுவுமே தெரியவில்லை. அவளோ அவமானத்தால் கூனிக் குறுகினாள். குழந்தையும் அவளும் ஏறிக் கொள்ள, ஆட்டோ அங்கிருந்து விரைந்தது.


இன்று எத்தனையோ குடும்பங்களின் நிலை இதுதான். குடி பலரின் குடியை நாசமாக்கிக் கொண்டிருக்கின்றது.

சம்பளத்தின் பாதி தொகைகூட வீடு வந்து சேர்வதில்லை. கடன் தொல்லை குறைந்தபாடில்லை. மனைவி மக்களைப் பற்றிய நினைவு இல்லை. எப்போதும் சண்டை சச்சரவு. காரணம் என்ன? குடிதானே!

குடிக்கப் பழகி, பின்னர் குடிக்காமல் இருக்க முடியாது என்கிற நிலை ஏற்பட்டுவிடுகின்றது. அப்போதுதான் பிரச்சனைகளும் போராட்டங்களும் பூதாகரமாய் எழுகின்றன.

குடிக்கின்ற எவனும் தனக்கென்று ஒரு நியாயத்தை வைத்திருக்கின்றான். அப்படி ஒரு நியாயத்தில் தன்னை நிரபராதியாகக் கருதுவதில் சமாதானப்பட்டுக் கொள்கின்றான்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் முதல், சிறுசிறு நிறுவனங்கள் வரை பெரும்பாலான இடங்களில் விழா விருந்து என்றால், மது ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகத்தான் இருக்கின்றது. அதனை 'நாகரிகக் கலாச்சாரம்' என்று கருதுகிறார்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து குடித்துக் கூத்தடிப்பதை 'நவயுகத்தின் முற்போக்குத்தனம்' என்று பெருமிதம் கொள்கின்றனர்.

மாணவர்கள், அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என எல்லா தரப்பினரிடமும் மதுப்பழக்கம் சகஜமாகிவிட்டது. இது மிகப்பெரிய சமூகச் சீரழிவையே நம் கண்முன் காட்டுகின்றது.

பர்த்டே பார்ட்டி, புரமோஷன் பார்ட்டி, வெட்டிங் பார்ட்டி, குழந்தை பிறந்தால் பார்ட்டி - இப்படி மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் மதுவிருந்து இல்லை என்றால், எந்தக் கொண்டாட்டமும் முழுமை பெறுவதில்லை.

காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி, வியாபாரத்தில் சரிவு, அலுவலகத்தில் பிரச்சனை, பாட்டி மரணம் - இத்தகைய காரணங்களை எல்லாம் குடிப்பதற்குரிய தருணங்களாகப் பயன்படுத்திக் கொள்வதில் 'குடிமக்கள்' சளைத்தவர்களில்லை.

குடிப்பழக்கத்தை சமூக அந்தஸ்தின் ஓர் அடையாளமாகக் கருதுபவர்களும் உண்டு. ஜாலியான பொழுதுகளில் உற்சாக ஊக்கியாக அதை பயன்படுத்துபவர்களும் உண்டு.

யார் எப்படி நியாயப்படுத்தினாலும், அதனால் ஏற்படுகின்ற விளைவு ஒன்றுதான்.

மது அருந்தும் போது உடம்பில் ஏதோ அபூர்வ சக்தி ஏற்படுவது போன்ற ஓர் உணர்வு. புத்துணர்ச்சி பொங்கி வழிவதாக ஒரு கற்பனை. நோய்கள் அதிகரிக்கும் போதும், ஆரோக்கியமாக இருப்பது போன்ற எண்ணம். எதார்த்தத்தை உணராமல் ஆபத்தின் வாயில் தலையைக் கொடுக்கின்ற பரிதாப நிலை.

நாளடைவில் உடம்பின் மத்திய நரம்புத் தொகுதியைப் பாதிக்கும். நடத்தையில் விபரீதமான மாற்றத்தைக் கொண்டுவரும். உளவியலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ரத்த அழுத்தம் கூடும். காரணமின்றிக் கோபம் வரும். கையில் பணமில்லை என்றால் தாறுமாறாக சிந்திக்கத் தூண்டும். மனிதத் தன்மையே இல்லாமல் போய்விடும்.

குடிகாரன் தள்ளாடுகிறான். அவன் தள்ளாடும் போது, அவன் மட்டுமல்ல; அவன் குடும்பமும் தள்ளாடுகின்றது, தத்தளிக்கின்றது. பொருளாதாரச் சீரழிவு குடும்பத்தின் நிம்மதியைச் சீர்குலைத்துவிடுகின்றது.

'வாழ்ந்து கெட்டவர்கள்' என்று சிலரைச் சுட்டிக் காட்டுவார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் குடிபோதைக்கு அடிமையாகித்தான் எல்லாவற்றையும் இழந்தவர்களாக இருப்பார்கள்.

கம்பீரமாய் நடந்தவர்கள் கையேந்தி நிற்பார்கள். ஊருக்குள் செல்வாக்குடன் வாழ்ந்தவர்கள், செல்லாக் காசாகித் தெருத்திண்ணைக்கு வந்துவிடுவார்கள்.

கவிஞர் தியாரூ


வாழ்க்கையை உதாசீனப்படுத்தியவர்களை, ஒரு கட்டத்தில் காலம் தலைகீழாகக் கவிழ்த்துப் போடுகிறது. இழக்க நேரிடுகின்ற எதையும், மீண்டும் பெறுவது கடினம். செல்வம், செல்வாக்கு, மானம், மரியாதை எல்லாவற்றிற்கும் அது பொருந்தும். இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் மட்டுமே, மயக்கத்தின் பிடியிலிருந்து ஒருவன் விடுபட முடியும்.

வாழ்க்கை அழகானது. அதனை அலங்கோலமாக்கிக் கொள்கின்றவனை யாரால் காப்பாற்றக்கூடும்! வாழ்க்கை இன்பமானது. அதனைத் துன்பமாக்கிக் கொள்கின்றவனை யார்தான் கரைசேர்க்கக்கூடும்!

புகை, மது, போதைப் பொருட்கள் சாதாரண விஷயங்கள் அல்ல. அவை, மனித சமூகத்தைச் சீரழிப்பதற்கென்றே விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற மாபெரும் அழிவுச் சக்திகள்.

பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரிடையே போதைப் பழக்கங்கள் தொற்றிக் கொண்டுள்ளதே. அதுதான் இன்றைய உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்; ஆபத்து.

ஏதோ காரா பூந்தி வாங்குவதுபோல் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை சுலபமாக வாங்க முடிகிறதாம். இன்று எண்ணற்ற இளைஞர்கள் அதற்கு இரையாகிக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பில் கவனம் இல்லை. வேலையில் நாட்டம் இல்லை. குடும்ப வாழ்வில் ஈடுபாடு இல்லை. போதைக்குமேல் போதை தேவை என்னும் அபாயகரமான நிலைக்கு வந்துவிடுகிறார்கள். பணத்திற்காக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பாலியல் வன்கொடுமைக் குற்றங்களும் அதிகரிக்கின்றன. இப்படியே போனால், இந்த உலகின் எதிர்காலம் என்னாகும். நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்கள் மதுவைத் தொட்டால், கருவின் ஆரம்ப நிலையையும் கருவையும் கடுமையாகப் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது ஓர் எச்சரிக்கை.

ஈரல், இரைப்பை ஆகியவற்றை மதுபானம் ஒரு கை பார்த்துவிடும். மாரடைப்பு ஏற்படக்கூடும். மூளையில் சேதங்கள் உண்டாகலாம். இவையெல்லாம் தேவைதானா!

ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கினால்தான், அறிவுப்பூர்வமான சமுதாயம் உருவாகும். இல்லையெனில், நோய்பிடித்து நலிவடைந்து நடுங்குகின்ற சமுதாயத்தைதான் இனி பார்க்க நேரிடும்.

அன்றாடம் சாலை விபத்துகள். எத்தனையோ உயிர்கள் பலியாகின்றன. அதற்குப் பல்வேறு காரணங்கள். எனினும், போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படுகின்ற விபத்துகள் அதிகம். ஒருவரின் போதை மயக்கத்தால், எத்தனை எத்தனை உயிர்கள் சேதமடைகின்றன! எத்தனைக் குடும்பங்கள் நிராதரவாகின்றன!

மது உள்ளே இறங்கிவிட்டால், சிலர் வீராதி வீரர் ஆகிவிடுவார்கள். வாய்க்கு வந்தபடி பேசத் தொடங்குவார்கள். தெருவில் போவோர் வருவோரை எல்லாம் வம்புக்கு இழுப்பார்கள். அடிதடி உண்டாகும்.

ஆக, போதைப்பழக்கம் என்பது தனிமனிதனை மட்டுமல்ல; அதில் சம்பந்தப்படாத மற்றவர்களையும் பாதிக்கின்றது. குடும்பங்களிலும் சமூகத்திலும், இப்பிரச்சனை இன்று கோர தாண்டவமாடுகிறது.

போதை என்பது சுகமல்ல, வாதை; மயக்கம் என்பது பெருமிதம் அல்ல, பேதைமை; வெறி கொள்ளுதல் ஆரோக்கியம் அல்ல, அழிவு என்கிற மனத்தெளிவு ஏற்பட வேண்டும். அப்போதுதான் போதைப்பழக்கம் நீங்கும்; மானுடம் தழைத்தோங்கும்.

வாழ்க்கை என்பது ஒவ்வொருவருக்கும் கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பரிசு. இந்தப் பரிசுக்குள் எத்தனையோ இன்பங்கள் இருக்கின்றன. குடும்பப் பாசம், நட்பின் நேசம், குழந்தைச் செல்வம், உறவுகளின் பிணைப்பு, உயர்வு, மகிழ்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கி இருக்கின்ற வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நாம் ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டும்.

ஆரோக்கியமான உடலும் நல்ல மனநிலையும் இருந்தால்தான் அது சாத்தியம். எனவே, தனிமனித ஒழுக்கம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு நமக்கு அவசியமாகின்றன.

பிரச்சனைகளுக்கு ஒருபோதும் போதை மயக்கம் தீர்வாகாது. அத்தகைய தருணங்களில் உணர்ச்சிவசப்படாமல், சற்று நேரம் அமைதியாக இருங்கள். உங்கள் நலனையும், மனைவி மக்களின் மகிழ்ச்சியையும் எண்ணிப் பாருங்கள்.

'மதுவைத் தொடுவதா விடுவதா' என்னும் குழப்பம் ஏற்படும்போது, 'விடுவது' என்று உடனடியாகத் தீர்மானியுங்கள். அதில் உறுதி கொள்ளுங்கள். உங்களுக்குள் ஒரு வெளிச்சம் வரும். பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும்.

உங்களிடம் போதைப் பழக்கத்தைத் தூண்டுபவர்கள் உங்கள் விரோதிகள் என்பதை நம்புங்கள். தொடர்பை அறவே துண்டித்திடுங்கள். நல்லவர்களோடு பழகுங்கள். நல்லவற்றைச் செய்யுங்கள். பணத்தை நல்வழியில் பயன்படுத்துங்கள்.

வாழ்வில் சுகதுக்கங்கள் இயல்பானவை. அவற்றை சரிசமமாய் எண்ணுங்கள். வாழ்வை நலமுடன் கொண்டாடி மகிழுங்கள்.

போன்: 9940056332

Tags:    

Similar News