சிறப்புக் கட்டுரைகள்

மீனா மலரும் நினைவுகள்

Published On 2024-09-16 10:30 GMT   |   Update On 2024-09-16 10:30 GMT
  • மறுநாள் ஷூட்டிங். மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.
  • ஒவ்வொரு அரங்கிலும் எத்தனையோ மொழி திரைப்படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும்.

'இதய ஊஞ்சல்' ஆடியது காட்சியை பற்றி விளக்கினார் டைரக்டர்.

இதய ஊஞ்சல் படப்பிடிப்பைதான் சொல்கிறேன்.

டூவீலரை ஓட்டியடியே பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணிடம் இந்த மாதிரி டயலாக் பேசியபடியே செல்ல வேண்டும். சில விஷயங்கள் பற்றி சொல்லும் போது அதற்கேற்ப ஒரு கையையும் அசைத்து சைகை காட்டியபடி செல்ல வேண்டும் என்றார்.

ஓ.கே. சார் வண்டி ஓட்டுவது யார்? பின்னால் இருப்பது யார்? என்றேன்.

ஓட்டப்போவது நீதான். பின்னால் துணை நடிகை ஒருவர் இருப்பார் என்றார்.

அதை கேட்டதும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நானா...? என்றேன்.

உனக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தானே!

ஆமாம். அப்படின்னா ஸ்கூட்டி ஓட்டுவது ஈசிதான் என்றார் சர்வ சாதாரணமாக.

சார் நீங்க ஈசி என்று சாதாரணமாக சொல்கிறீர்கள். ஆனால் நான் ஸ்கூட்டியே ஓட்டியதில்லையே என்றேன்.

ஆனாலும் அவர் விடவில்லை. அதைப்பற்றி எனக்கு தெரியாது. நாளை நீதான் ஸ்கூட்டி ஓட்ட வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி விட்டார். வேறு வழியில்லை என்பதால் பயிற்சி எடுத்து கொள்வதற்காக அந்த வண்டியை என் வீட்டுக்கு கொண்டுவர சொன்னேன்.

அப்போது எங்கள் வீடு வடபழனி குமரன் காலனியில் இருந்தது.

வீட்டுக்கு வண்டி வந்ததும் தெருவில் இரவில் வண்டியை ஓட்டி பயிற்சி எடுத்தேன். அந்த ஒரே இரவில் ஓரளவு கற்றுக் கொண்டேன். மறுநாள் ஷூட்டிங். மனதுக்குள் கொஞ்சம் பயம் இருந்து கொண்டேதான் இருந்தது.


வழக்கமாக கார் ஓட்டும் சீன் என்றால், கார் கதவை திறப்பது வரைதான் நான். அப்புறம் டிரைவர் இருக்கையில் சில நேரம் அமர்ந்து இருப்பேன். ஆனால் நான் அற்புதமாக கார் ஓட்டுவது போல் இருக்கும். அதுதான் சினிமா டெக்னிக் என்பது.

இதய ஊஞ்சல் படத்தில் எப்படியோ ஒரு வழியாக டூவீலரில் டபுள்ஸ் வேறு வைத்து ஓட்டி சாதித்து விட்டேன்.

ஆனால் பிற்காலத்தில் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டேன். இப்போதெல்லாம் சூப்பராக கார் ஓட்டுவேன். தோழிகளோடு எங்காவது செல்வதாக இருந்தால் நான்தான் கார் ஓட்டிச் செல்வேன். முதல் முதலில் நான் வெள்ளை நிற அம்பாசிடர் கார் வைத்திருந்தேன். அந்த காலத்தில் இவ்வளவு சொகுசு கார்கள் வரவில்லை.

அந்த காரில்தான் சில சமயம் படப்பிடிப்புக்கும் செல்வேன். கார் பதிவு எண்ணும் 'எம்.எஸ்.ஆர்., 'எம்.எஸ்.கியூ.' இப்படி 3 ஆங்கில எழுத்துக்கள் மற்றும் 4 நம்பர் இருக்கும். எனது கார் என் கூட இன்னும் நினைவில் இருக்கிறது. எம்.எஸ்.ஆர்.9275 இப்போது பதிவு எண் முறையே மாறி விட்டது. இப்போதும் பழைய மாடல் பதிவெண்ணுடன் கூடிய கார்களை பார்த்தால் ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சமீபத்தில் வடபழனியில் ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டி ருக்கும் சினிமா பாரம்பரிய அருங்காட்சியகத்தை பார்க்க சென்றிருந்தேன்.

அங்கு இடம் பெற்று இருந்த ஒவ்வொரு பொருட்களையும் பார்த்ததும் பழைய நினைவுகள் என் கண்முன் வந்து வந்து போனது. ஏ.வி.எம். ஸ்டூடியோ. குழந்தையாக நான் ஓடி விளையாடிய இடம். பல அரங்குகள் உண்டு. ஒவ்வொரு அரங்கிலும் எத்தனையோ மொழி திரைப்படங்கள் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும். பல முன்னணி கதா நாயகர்கள், கதாநாயகிகள் வந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி தெரிந்திராத நான் அவர்கள் முன்பே அங்கும் இங்குமாக ஓடி விளையாடுவேன்.

குழந்தை நட்சத்திரத்தில் இருந்து கதாநாயகியாக உருவெடுத்த பிறகும் பல படங்களின் ஷூட்டிங் அங்கு வைத்துதான் நடக்கும். படப்பிடிப்பு தளங்கள் பிரமாண்டமாக இருக்கும். எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இப்போது அந்த தளங்கள் இல்லை. ஆனால் அந்த கால கட்டத்தில் சினிமா தொழிலில் பயன்படுத்தப்பட்ட கருவிகள், வாகனங்கள் என்று எல்லாவற்றையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

அவற்றில் பல பொருட்களை பார்க்கும் போது அந்த தொழில் நுட்பத்தை வைத்தே எவ்வளவு பிரமாண்டமாக திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம்? என்று பெருமைப்பட வைத்தது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட அந்த காலத்து கேமராக்கள், லென்சுகள் ஒவ்வொன்றும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்கள்தான் உங்கள் மீனாவை உங்கள் கண்முன்பு நீங்கள் பார்த்து ரசிக்கும்படி கொண்டு வந்து நிறுத்தியது. மறக்க முடியுமா அவைகளை...?

நான் சுற்றிப் பார்த்து கொண்டிருந்த போது ஏ.வி.எம். சரவணன் சாரும் அங்கு வந்தார். அன்று போல் இன்றும் கைகளை கட்டியபடி நின்றவர் 'வாம்மா.... நல்லா இருக்கியா? என்று அன்புடன் விசாரித்தார். அவருடைய அன்பில் நெகிழ்ந்து போனேன்.

எவ்வளவு உயர்ந்த மனிதர்... எவ்வளவு சாதாரணமாக நின்று பேசுகிறார்...? என் மனதில் என்ன வெல்லாமோ ஓடியது. அவரிடம் இருந்து இந்த தலைமுறை கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது.

என்னை இன்று இவ்வளவு உயரத்தில் கொண்டு வந்து நிறுத்தியதில் அவரது வாழ்த்தும், ஆசீர்வாதமும் முக்கியமானவை.

அன்று எஜமானில் மீனாவுக்கு பதில் வேறு ஒருவரை போடலாமே என்று அவர் மட்டும் சொல்லி இருந்தால் உங்கள் மீனா இந்த அளவுக்கு உயர்ந்து இருப்பேனா என்பது சந்தேகமே. வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் யாராவது ஒருவர் வடிவில் வந்து கடவுள் நம்மை கை தூக்கி விடுவார் என்பார்கள். அந்த வகையில் என்னை முதல் வெற்றிப்படிக்கட்டில் தூக்கி விட்டவர் போற்று தலுக்குரிய ஏ.வி.எம். சரவணன் சார் தான். நெஞ்சிருக்கும் வரை மறக்க முடியாத மாமனிதர்.

இன்னும் எத்தனை யோ நினைவுகள்... ஒவ்வொன்றும் மறக்க முடியாதவை... அதுபற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

Tags:    

Similar News