சிறப்புக் கட்டுரைகள்

திருக்குறள் ஞான அமுதம்- கூடா ஒழுக்கம் கள்ளாமை

Published On 2024-09-15 04:24 GMT   |   Update On 2024-09-15 04:24 GMT
  • பொய்யானவர்களின் காலில் விழுந்தால் வாழ்க்கை வீணாகிப் பயனற்றதாகும், பாவமும் சூழும்.
  • துறவு மேற்கொள்பவன் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும்.

அதிகாரம்: கூடா ஒழுக்கம்

இந்த அதிகாரத்தில்,

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.

என்ற குறளில் தொடங்கி

மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்

பழித்தது ஒழித்து விடின்.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள்

உள்ளன.

கூடா ஒழுக்கம் எனும் அதிகாரத்தில் துறவு மேற்கொள்கின்றவர்கள் எப்படி தூய்மையாக இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் கூறுகின்றார். காவி கட்டுகின்றவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிகவும் இன்றியமையாதது. மிகவும் உள்ளத் தூய்மையுடன் இருக்க வேண்டும்.

தாம் இல்லறத்தில் இருந்து விலகிவிட்டதாக மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே காவி அணிவார்கள். அவர்கள் தங்களுடைய உணவு, உடை இருப்பிடத்திற்கு எந்தவித இன்னலும் வராமல் இருக்கத் தலைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். பொருளறிந்தவர்கள் இல்லறத்தில் இருந்தே கரை சேரலாம்.

சிலருக்கு உண்மை புரியாமல் மனக் குழப்பத்தினாலும், மற்றவர்களிடம் தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவும், காவி அணிவார்கள். சிலர், சமுதாயத்தில் உள்ள மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காகவே காவி உடைதரித்திருப்பார்கள்.

பிறரை ஏமாற்றுவதற்காக காவி தரித்திருப்பவர்கள் சொல்ல முடியாத பாவங்களை ஏற்று நரகத்தில் விழுவார்கள். அவர்களை பின்பற்றி செல்பவர்கள், பொய்யான துறவு வேடத்திற்குத் துணையாக இருந்த காரணத்தாலும், அவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த காரணத்தாலும் இவர்களும் பாவியாகி நரகத்தில் வீழ்வார்கள்.

காவி அணிபவர்கள் உண்மையான பக்தியுடன் தலைவனை மனம் உருகி தியானம் செய்ய வேண்டும். தங்களிடம் சேருகின்ற பணத்தில் புண்ணிய காரியங்களைச் செய்தல் வேண்டும்.

உண்மைப்பொருள் என்பது தலைவனின் திருவடியைப் பற்றி பூஜை செய்வதுதான். ஞானிகளை உருகி தியானம் செய்தால் தங்களுக்குத் தேவையானவற்றைத் ஞானிகளே கொடுப்பார்கள்.

குணக்கேடு உள்ளவன் காவி அணிந்து கொண்டு, ருத்ராட்சம் அணிந்து யோகத்தண்டை வைத்துக் கொண்டு ஏமாற்றுவான். இவன் பொருள் வெறியும், காம வெறியும் உள்ளவனாக இருப்பான்.

ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்கள் தாங்கள் ஆன்மீகத்தில் தெளிவடைய, தக்க ஆசானின் துணையை நாட வேண்டும். தக்க ஆசானை நாடுவதற்கு முன் அவர்களின் செயல்பாடுகளை நன்கு நோக்கி ஆராய வேண்டும். அதற்கு பின்பே அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாத போலித்துறவிகளிடம் சென்று ஏமாறுதல் கூடாது.

சம்சாரம் செய்பவரிலும் ஞானி உண்டு. சந்நியாசம் கொள்பவர்களிலும் மூடன் உண்டு. துறவு மேற்கொள்கின்றவன் ஜாதிவெறி, மதவெறி, காமவெறி, பொருள் வெறி அற்றவனாக இருத்தல் வேண்டும். இல்லையேல் அவனால் மக்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளையும்.

காவி உடை, யோகத்தண்டு, புலித்தோல் ஆசனம், ஜடாமுடி தாங்கி தோற்றத்தில் பெரிய முனிவன் போலக் காட்சியளிப்பான். அவனிடம் குணக்கேடுகள் நிறைந்து இருக்கும். இவன் கொலைக் கருவியான அம்புக்குச் சமமானவன். எனவே புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாறக்கூடாது.


உண்மைத் துறவி வெள்ளாடை அணிந்து எளிமையாக மக்களோடு மக்களாக பேசுவதற்கும், பழகுவதற்கும் இனிமையாக இருப்பான். உள்ளத்தால் இறைவனை உருகித் தியானித்துக் கொண்டிருப்பான். இத்தகையவன் இனிமையான இசைதரக்கூடிய யாழ் போன்றவன், எனவே, புறத்தோற்றத்தைக் கண்டு ஏமாறக்கூடாது.

உண்மையாகத் துறவு மேற்கொள்பவன், மற்றவர்களிடம் புண்ணியம் செய்யச் சொல்லி அவர்களின் வறுமை அகல வழி சொல்லுவான். தலைவனை நினைத்து உருகி பூஜை செய்யச் சொல்லுவான். பொய்யானவன் ஜாதகத்தைக் காரணம் காட்டி, அவனைத் தலைவனிடம் பக்தி செலுத்தச் சொல்லாமல், ஏதாவது சொல்லி அவன் வாழ்க்கையை வீணாக்கி விடுவான்.

இத்தகையவர்கள் சமுதாயத்தில் பொய் வேடம் பூண்டு அலைவர். அவர்கள் காம எண்ணம் நீங்காதவர்களாகவும் பொருள்பற்று உடையவர்களாகவும் இருப்பார்கள். இத்தகையவர்களை பஞ்ச பூதங்கள், "என்றாவது ஒரு நாள், உன்னைப் பொசுக்கி விடுவேன், அழித்து விடுவேன்" என்று அச்சுறுத்தி எள்ளி நகைக்கும்.

இடகலையும், பிங்கலையும் புருவமத்தியில் ஒடுங்கினால் அங்கே ஓங்காரம் கேட்கும். ஓங்காரமே அவன்தான். அவன்தான் ஓங்காரம். உண்மைப் பொருள் அறிந்தவர்களை நாம் குருவாக ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும். பொய்யானவர்களின் காலில் விழுந்தால் வாழ்க்கை வீணாகிப் பயனற்றதாகும், பாவமும் சூழும்.

எனவே மகான் திருவள்ளுவர், மகான் நந்தீசர் போன்ற முதுபெரும் ஞானிகளின் பாதங்களைப் பற்றி, பூஜை செய்வோம். பிறரின் வறுமை நிலை கண்டு மனம் இரங்கிப் பசியாற்றுவோம். மனதில் தூய்மை இல்லாதவர்களுக்கு இறவாநிலை கைகூடாது.

துறவு பூண்டவர்கள் ஒழுக்கக்கட்டுப்பாடு இல்லாமல் தவறுகள் செய்தால் பல ஜென்மங்களுக்கு அவர்கள் செய்த பாவங்கள் தொடரும். மனதில் உள்ள ஆசைகளை துறக்காமல் காவிதரித்து துறவு வேடம் கொள்பவர்கள் இரக்கமற்றவர்கள்.

தவம் செய்கின்றவர்கள் எத்தகைய துன்பத்தை அடைந்தாலும் தங்களுடைய நெறியில் இருந்து தவறமாட்டார்கள். தவவலிமை உள்ளவர்களிடம் அரசனும் சிரம் தாழ்ந்து நிற்பான்.

அதிகாரம்: கள்ளாமை

இந்த அதிகாரத்தில்,

எள்ளாமை வேண்டுவான் என்பான்

எனைத்துஒன்றும்

கள்ளாமை காக்கத்தன் நெஞ்சு.

என்ற குறளில் தொடங்கி

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை;

கள்லார்க்குத்

தள்ளாது புத்தே ளுலகு.

என்ற குறள் வரை 10 குறட்பாக்கள் உள்ளன.

கள்ளாமை என்பது திருடாமை என்பதாகும். திருடுவது என்பது பலவகையாக உள்ளது. நேரடியாக கையில் உள்ள பொருளைத் திருடுவது, முகமூடி அணிந்து திருடுவது, ஒரு பொருளைக் காட்டி மற்றொரு பொருளை விற்பது. பொருள் மீது அதிக லாபம் வைத்து விற்பது. வசியப்படுத்திக் கொள்ளையடிப்பது. இவ்வாறாக ஏமாற்றத் தெரிந்தவர்கள் பலவகையில் மக்களை ஏமாற்றித் திருடுவார்கள்.

இது மட்டுமன்றி, ஒரு வீட்டு மனையைப் பலரிடம் விற்று விடுவார்கள். சிலர் நூறு ரூபாய் அளவுக்கு ஒருவனிடம் வேலை வாங்கிக் கொண்டு, அவனுக்கு இருபது ரூபாய் கூலி கொடுப்பார்கள். சிலர் வேலையே செய்யாமல் ஏமாற்றி கூலி வாங்குவார்கள்.

வாடகைக்கு இருப்பவர்கள், வீட்டு வாடகை கொடுக்காமல் ஏமாற்றுவது, பரிதாபப்பட்டு கடன் கொடுத்தால் அதை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றுவது, இத்தகைய செயல்பாடுகள் எல்லாம் ஒருவகை திருட்டே.

இத்தகைய திருட்டையும் வஞ்சகத்தையும் ஆறறிவு படைத்த மனிதனே செய்கின்றான். இத்தகைய கயமைத்தனம் மனித வர்க்கத்தில் தொன்று தொட்டு நடந்து வருகின்றது. மற்ற ஜீவராசிகள் தனக்குத் தேவையானவற்றைச் சாப்பிட்டு விட்டு மற்றவற்றை விட்டுச் சென்றுவிடும்.

கயமைத்தனத்தில் இருந்து விடுபடவே கள்ளாமை எனும் அதிகாரத்தை திருவள்ளுவர் நமக்குத் தந்துள்ளார். இந்த அதிகாரத்தைத் துறவறவியலில் சேர்த்துள்ளதால் துறவு மேற்கொள்பவர்கள் வன்மனம் கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகின்றார்.

துறவு மேற்கொள்பவன் உடம்பையும் உயிரையும் பற்றி அறிதல் வேண்டும். துறவு மேற்கொள்பவர்கள் மற்றவர்களின் பொருள்களை வஞ்சித்து வாங்குதல் கூடாது. துறவு மேற்கொள்கின்றவன் தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்ளுதல் வேண்டும்.

உண்மைப் பொருளை அறிந்த, தக்க ஆசான் வழிகாட்டுதலுடன் துறவு மேற்கொள்ள வேண்டும். ஆசான் ஞான பண்டிதனைப் பூஜை செய்து மரணமில்லாப் பெருவாழ்வு அடைய வேண்டும். இல்லையெனில் துறவு என்ற பெயரில் கபட நாடகங்கள் ஆடி, தானும் கெட்டு, பிறரையும் கெடுத்து விடுவான்.

சிலர் வறுமையாலும் பேராசையாலும் காவி வேடம் பூண்டு, மக்களை ஏமாற்றுவார்கள். இத்தகையவர்கள் ரசமணி வைத்திருப்பதாகவும், நரிக்கொம்பு வைத்திருப்பதாகவும் கூறி, அவைகளை வைத்துப் பூஜை செய்தால் எல்லா நலன்களும் அடையலாம் என்று, இல்லறத்தானை வஞ்சித்து ஏமாற்றிப் பொருள் பறிப்பார்கள். அறியாமையில் உள்ள மக்கள் இதை நம்பி ஏமாறுவார்கள். இது ஒரு பலவீனமான எண்ணம்.

துறவு மேற்கொள்கின்றவன் இத்தகைய தாழ்ந்த எண்ணத்தால் கவரப்படாமல், பழிக்கு அஞ்சி பாவ புண்ணியம் அறிந்து துறவு மேற்கொள்ளுதல் வேண்டும். அத்தகைய எண்ணங்களை எண்ணுவதே பெரிய குற்றமாகும். ஆரம்பத்தில் பொன்னும் பொருளும் குவிவது போல் தோன்றி, இறுதியில் பாவியாகி விடுவான்.

துறவு மேற்கொள்பவன் திருமணம் செய்து கொள்ளுதல் வேண்டும். தாய், தந்தை, மனைவிக்குச் செய்யும் கடமைகளைச் செய்தல் வேண்டும். அவர்களைத் தவிக்க விட்டு காட்டுக்குப் போய் அலைதல் கூடாது.

பூஜையும் புண்ணியங்களும் செய்ய மனைவியே துணையாய் இருப்பாள். மனம் சாந்தப்பட்டு பொருளாதாரப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் முன் செய்த புண்ணியத்தால் துறவு கைகூடும்.

தக்க ஆசான் துணைகொண்டு தலைவனை உணர்ந்து பூஜை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்றவனே அறிவாளி.

அறியாமையில் உள்ளவன், இவையெல்லாம் தடை என்று நினைத்து தனித்திருக்க நினைப்பான். தன்னுடைய கடமைகளில் இருந்து தப்பி விடுவான். பொய் சொல்லித் தவவேடம் பூண்டு பொருள் சேர்ப்பவன் பாவம் சூழ்ந்து பாவியாகி விடுவான். பொருள் சேர்ப்பவன் தராசுமுனை போல் நேர்மையுடன் நின்று பொருள் சேர்க்க வேண்டும்.

ஜென்மத்தைக் கடைத்தேற்றுபவனுக்கு முன்செய்த புண்ணியபலமும் பூஜை பலமும் இருந்தால், அவன் மனமே அவனுக்கு வழிகாட்டியாக அமைந்து அவனை பாவத்தில் இருந்து காப்பாற்றிவிடும்.

பிறரால் இகழப்படாமல் வாழுகின்றவன் புண்ணியவான். பொய் சொல்லாமலும் திருடாமலும் இருந்தால் பிறரால் இகழப்பட மாட்டான். அவன் நெஞ்சத்தில் தலைவன் தங்கியிருந்து அவனை வழிநடத்துவான். நல்லவனாக வாழ தலைவன் மீது பக்தி இருக்க வேண்டும். பண்பு உள்ளவன் மட்டுமே துறவு மேற்கொண்டு இத்துறையில் வளர முடியும். மரணமில்லாப் பெருவாழ்வு அடைய முடியும். இந்நிலையை அடைய கள்ளாமை அதிகாரத்தில் கூறிய உண்மைகள் பேருதவியாக இருக்கும். பிறர் பொருளை வஞ்சகத்தால் பெறுபவர்களின் வாழ்க்கை, பாவம் சூழ்ந்ததாக அமையும். இத்தகையவர்களுக்கு பிற்காலத்தில் துன்பம் நேரிடும்.

அளவறிந்து வாழ்கின்றவர்கள் பிறர் பொருள்மீது பற்று வைக்கமாட்டார்கள். பிறர் பொருளை சுலபமாக அடையவேண்டும் என்ற எண்ணம், தீய எண்ணம் ஆகும். பொருள் ஈட்ட நல்ல வழிகளை விடுத்து தீயவழிகளில் பொருள் ஈட்டினால் அதனால் பாவம் மிகுந்து அவர்களும் அழிந்து, அவர்கள் சந்ததியும் அழிவார்கள்.

Tags:    

Similar News