சிறப்புக் கட்டுரைகள்

உணவில் தொடங்கும் ஆரோக்கியம்

Published On 2024-09-21 09:49 GMT   |   Update On 2024-09-21 09:49 GMT
  • மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு அறுசுவையும் தேவை.
  • சாப்பிடும் முன்னும் பின்னும் 20 நிமிடம் நீர் எடுக்கக் கூடாது.

நாம் பொதுவாக உணவு உண்ணும்போது, பேசிக்கொண்டே தான் சாப்பிடுவோம். பெரியவர்கள், உணவு உண்ணும்போது, வாயை மூடிக்கொண்டு உணவு எடு என்பார்கள். காரணம் என்னவென்றால் வாயை மூடிக்கொண்டு சாப்பிடுவது என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழியாகும். ஏனெனில், உடலை வளர்ப்பது உணவுதான்.

நமது வாயில் உணவு உள்ளே சென்ற பிறகு, உதடுகளை மூடிக்கொண்டு, பற்களால் நன்றாக அரைத்து உணவை கூழாக்கி அதனோடு வாயில் சுரக்கும் எச்சங்களை சேர்த்து உள்ளே அனுப்பும்போது அது சரியான முறையில் ஏழு தாதுகளாக மாற்றம் பெறும்.

நமது பற்கள், உணவை உடைப்பதற்கும் கிழிப்பதற்கும், கூழாக்குவதற்கும் ஆன மூன்று முறைகளிலே இறைவனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த பொருள் வாயில் சென்றாலும் நாம் விழுங்கக் கூடாது. அப்படி செய்தால் உடல் உணவை ஜீரணம் ஆக்காது. மாறாக உடலுக்கு பல துன்பங்களை ஏற்படுத்தும்.

பொதுவாக நாம் மூன்று வேலை உணவு எடுத்து கொள்வோம். ஒரு வேளை உணவு உண்டால் அவர்களை யோகி என்றும், இரண்டு வேளை உணவு உண்டால் அவர்களை போகி என்றும், மூன்று வேளை உணவு உண்டால் அவர்களை ரோகி என்றும் அதற்குமேல் அதிகமாக உணவு எடுப்பவர்களை துரோகி என்றும் கூறுவர். இந்த வார்த்தைகளை நாம் கவனத்தில் நிறுத்தி நம்முடைய உடல் தகுதி, வேலைக்கு ஏற்றவாறு நம்முடைய உணவுகளை அளவாக எடுக்க வேண்டும்.

பொதுவாக உணவு என்பது இனிப்பு, புளிப்பு, உப்பு, காரம், கசப்பு, துவர்ப்பு என்கின்ற ஆறு சுவைகளை உடையது என்று நமக்கு நன்றாக தெரியும். இந்த ஆறு சுவைகளையும் சமமாகவும் அளவாகவும் எடுத்துக்கொள்ளும்போது உடலில் வியாதிகள் வராது.

மனிதனுடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு அறுசுவையும் தேவை. ஆனால், நாம், கசப்பு மற்றும் துவர்ப்பு உணவுகளை பொதுவாக எடுத்து கொள்வதில்லை. இப்படி சுவைகளில் ஏற்றம் இறக்கம் இருப்பதால்தான் உடலில் வாதம், பித்தம் மற்றும் கபம் என்று சொல்லப்படும் மூன்று தோஷங்களும் சமன்படுவது இல்லை.

இவை சமன்படாவிட்டால் உடலில் நோய்கள் தலைதூக்கும். எனவே நம் அன்றாட உணவிலே கசப்பு சுவையை கொடுக்கக்கூடிய பாகற்காய், சுண்டைக்காய், வேப்பம்பூ போன்ற உணவுகளையும் அதே போல துவர்ப்பு தன்மை உடைய நெல்லிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற உணவுகளையும் அடிக்கடி எடுத்து வந்தால் உடலில் வாதம், பித்தம், கபம் சமன்படும். இதனால் தோல் சம்மந்தப்பட்ட வியாதிகளில் இருந்து நாம் தப்பித்து கொள்ளலாம்.

பொதுவாக நாம் உணவை உண்பதற்கு நம் முன்னோர்கள் சில விதிமுறைகளை கடைப்பிடித்தார்கள்.

 

தரையில் அமர்ந்து உணவு அருந்த வேண்டும்.

சாப்பிடும் முன்னும் பின்னும் 20 நிமிடம் நீர் எடுக்கக் கூடாது.

விக்கல் வந்தால் வாயை திறக்காமல் உணவை வாயில் மெல்ல வேண்டும். முடியவில்லை என்றால் மட்டுமே நீர் அருந்த வேண்டும்.

உதடுகளை பிரிக்காமல் உணவை 36 முறை (அதிகபட்சம்) 20 முறை (குறைந்தபட்சம்) மென்று விழுங்க வேண்டும்.

உணவு அருந்தும்போது, போன் பேசக்கூடாது. தொலைகாட்சி பார்க்கக்கூடாது. கூடுமான வரை யாரிடமும் பேசாமல், கவனம் முழுவதும் உணவிலேயே இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பழங்களை உணவுக்கு முன் எடுக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மலச்சிக்கல் வராது.

முடிந்தவரை நெல்லிக்காய் ஒன்றை பகலில் எடுத்து கொள்ள வேண்டும்.

உணவு உண்ணும்போது இந்த உணவு எனக்கு வருவதற்கு உதவி புரிந்தவர்கள், இந்த உணவை இவ்வளவு ருசியாக செய்தவர்கள் அனைவரையும் வாழ்த்தி இந்த உணவு என் உடலுக்குள் சென்று நன்றாக சீரணம் ஆகி உடலுக்கு நல்ல பலத்தை கொடுத்து ஆரோக்கியமாகவும், நலமாகவும், நோய் இல்லாமலும் வாழ வேண்டும் என்று தன்னைத் தானே வாழ்த்தி கொள்ள வேண்டும்.

பொதுவாக நமது உடல் வாத உடலா? பித்த உடலா? அல்லது கப உடலா? என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப அறுசுவை உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு என்ன வழி என்று பார்த்தால் எந்த சுவை எதனோடு தொடர்பு உடையது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நமது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுசுவை உணவுகள், வாத, பித்த, கபத்தோடு தொடர்பு பற்றி பார்ப்போம்.

அறுசுவை

இனிப்பு - கபத்தை கூட்டும். வாதம், பித்தத்தை குறைக்கும்.

புளிப்பு - பித்தம், கபம் கூடும். வாதத்தை குறைக்கும்.

உப்பு - பித்தம், கபம், கூடும். வாதத்தை குறைக்கும்.

காரம் - வாதம், பித்தம் கூடும். கபத்தை குறைக்கும்.

கசப்பு - வாதம் கூடும். பித்தம், கபத்தை குறைக்கும்.

துவர்ப்பு - வாதம் கூடும். பித்தம், கபத்தை குறைக்கும்.

 

மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்

போன்: 9444234348

பொதுவாக காலை நேரத்தை கப காலம் என்றும், மதிய நேரத்தை பித்த காலம் என்றும், இரவு நேரத்தை வாத காலம் என்றும் கூறுவர். பொதுவாக உணவு சீரணம் ஆகும்போது பித்தம் என்றும், உண்ட உணவு சீரணம் ஆன பிறகு வாதம் என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து கபம் என்றும் கூறுவர்.

வாதம், பித்தம், கபம் மூன்றும் பஞ்ச பூதத்தின் கூட்டாகும். பொதுவாக வாதம் என்பது இதயத்தின் கீழ் வாயு என்றும், பித்தம் என்பது நாடிகள் முதல் இதயம் வரை நெருப்பு என்றும், கபம் என்பது இதயத்திற்கு மேல் நிலம் என்றும் கூறுவர். இந்த மூன்று தோஷங்களும்தான் நமது உடலுக்கு உள் இருந்து நோய்களை உருவாக்குகிறது. இதன் தன்மைகள் என்னவென்பதை பார்ப்போம்.

அது தெரிந்தால் தான் உணவில் நமக்கு அளவு முறை வரும். அப்போது தான் அளவு குறையாமலும், அளவு மிகாமலும் பார்த்து கொள்ள முடியும்.

வாதம் என்பது காய்ந்த தன்மை உடையது. எடை குறைவானது. குளிர்ச்சி, சொர சொரப்பு உடையது. கண்ணுக்கு தெரியாதது.

பித்தம் என்பது எண்ணெய்க்குரிய குணம் ஆகும். வழவழப்பு தன்மை உடையது. உஷ்ணம் உடையது. ஊடுருவும் தன்மை கொண்டது. லேசானது. வியர்வை நாற்றம் உடையது. தண்ணீர் அதிகம் கொண்டது. முடி உதிருதல் தன்மை கொண்டது. கண் எரிச்சல், சூடு படுதல், வாய் மற்றும் வயிறு புண்களை உருவாக்க கூடியது.

கபம் என்பது உறைந்த தன்மை, வழவழப்பு உடையது. குளிர்ச்சி கொண்டது. சதையை அதிகம் வளர வைக்கும். மந்த குணம் உடையது. பிசுபிசுப்பு மற்றும் ஸ்திர தன்மை உடையது.

எனவே உணவு விஷயத்தில் ஒழுங்கு முறை கடைபிடிக்க வேண்டும். உடலுக்கு தேவையான உடற்பயிற்சி தினமும் 30 நிமிடம் செய்ய வேண்டும். 20 நிமிடம் மனம் அமைதிக்காக தியானம் செய்ய வேண்டும். உயிரை நீண்ட ஆயுளாக மாற்ற 5 நிமிடம் காய கல்பம் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

இப்படி ஆரோக்கியமாக வாழ்ந்தால் பிறவியின் நோக்கத்தை அறிந்து இன்பமாக வாழலாம். இதற்கான பயிற்சிகள், வேதாத்திரி மகரிஷியால் வடிவமைக்கப்பட்ட அனைத்தும் ஆழியாறு அறிவு திருக்கோவில் (பொள்ளாச்சி) மற்றும் உலகம் எங்கிலும் உள்ள அறிவு திருக்கோவில்கள், அறக்கட்டளைகள் மற்றும் தவ மையங்களில் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

Tags:    

Similar News

பயமே ஜெயம்!