சிறப்புக் கட்டுரைகள்

'குடலைக் கழுவி உடலை வளர்'

Published On 2024-09-19 09:00 GMT   |   Update On 2024-09-19 09:01 GMT
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது, மற்றும் அடிவயிற்று தசை பயிற்சி செய்வது நல்லது.

பொதுவாக சிகிச்சை முறைகள் இருவகைப்படும். ஒன்று நோய் வருமுன் காப்பது. மற்றொன்று நோய் வந்தபின் தீர்ப்பது. இப்பொழுது நாம் செய்து கொண்டிருப்பது பெரும்பாலும் இரண்டாவது வகையைத் தான்.

நோய் வந்த பின்பு அதைத் தீர்க்க மருந்துகள், பத்தியங்கள், உணவுக் கட்டுப்பாடுகள் என்று செய்வதை விட, இவற்றையெல்லாம் (மருந்துகள் தவிர) நோய் வரும் முன்பே முறையாகக் கடைபிடித்தாலே நோய் நம்மை அண்டாது.

ஒரு பக்கம் விண்முட்டும் விஞ்ஞான வளர்ச்சி மற்றும் எங்கும் காணப்படும் மருத்துவமனைகள், மறுபக்கம் வாழ்க்கை என்னும் கடலில் தரைதட்டி ஸ்தம்பித்து சிறிது, சிறிதாக மூழ்கிக் கொண்டுள்ளது உடல்நலன் எனும் கப்பல்.

எங்கே தவறு செய்து விட்டோம்? எங்கே கோட்டை விட்டு விட்டோம்? ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. இல்லை பிணியுடனும், மூப்புடனும் வாழ்வதுதான் இயல்பானது என்று கூறி, அதன் வழி நடந்தோமேயானால் பிணி, மூப்பு, சாக்காட்டை வென்ற சித்தர்களின் வாழ்வியலும் அவர்கள் அருளிய "நோயில்லா நெறி" முறைகளும் தெரியாமல் இருந்துவிடும்.

ஆக பிணியுடனும், மூப்புடனும் வாழக்கூடிய இழிவான வாழ்க்கைக்காக சித்தர் பெருமக்கள் தம் அரிய யோக முறைகளையும், வாழ்வியல் அடிப்படையாகக் கொண்ட நோயில்லா நெறிமுறைகளையும் அமைத்துச் செல்லவில்லை.

மனித சமுதாயம் அவற்றிலிருந்து விடுபட்டு விலகி வாழ்வதற்காகத்தான் சில நெறிமுறைகளை நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் அருளிய "அரை வயிறு சோறு; கால் வயிறு நீரு; அவனியிலே நோயில்லை பாரு;", "உண்டி சுருங்கில் உபாயம் பல உள; பிண்டம் சுருங்கில் பிராணன் நிலைபெறும்" போன்ற நெறிமுறைகளை நாம் வாழ்வில் கடைபிடித்து வந்தாலே போதும்.

இவைகளைப் போலுள்ள மேலும் பல நெறிமுறைகளை நாம் செய்து நிரூபித்தாலே போதும், உலகிலுள்ள அனைத்து நோய்களையும் தீர்க்கக் கூடிய வல்லமை சித்தர்களின் வாழ்வியலில் உண்டு என்பதை உலகம் உணர்ந்து நம் நாட்டு மருத்துவமுறைக்கு தனிமாண்பே கிட்டும். அப்படிப்பட்ட முறைகளில் ஒன்றுதான் "குடலைக் கழுவி உடலை வளர்" .

சித்தர்கள் அருளிய "காயசுத்தி" முறையில் குடலைக் கழுவி வாழ்பவருக்கு நோய்கள் அணுகாது. நாம் உண்ணும் உணவுகள் கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம்.

சரி, இந்த குடலை எதற்காக கழுவ வேண்டும்? குடலை கழுவ வேண்டியதன் அவசியம்தான் என்ன? அவ்வாறு குடலை கழுவாவிட்டால் என்னவாகும்? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையாக நாம் ஒருவேளை உண்ணும் உணவே செரித்து, பின் கழிவாக வெளியேற 6 முதல் 20 மணி நேரம் எடுத்துக் கொள்ளுமேயானால் மூன்று வேளை உண்ணும் உணவுகளும், இடையிடையே வயிற்றுக்குள் திணிக்கப்படும் திண்பண்டங்களும் செரித்தபின் கழிவாக வெளியேறுவது எப்போது?

உணவை நன்கு செரிக்கச் செய்யவும், கழிவை வெளியேற்றவும் வெளியேற்றிய பிறகு சிறிது ஓய்வெடுக்கவும் நமது உணவு மண்டலத்தை நாம் அனுமதிக்கிறோமா? அல்லது உணவுக் குடலில் தங்கிச் செரிக்கவும், கழிவாக வெளியேறவும் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் அவை உள்ளேயே அழுகி விடமாக (Toxin) மாறி, அதுவே நமது அனைத்து நோய்களுக்கும் காரணம் என்பதை உணர்ந்துள்ளோமா?

தற்காலத்தில் பட்டினியால் இறப்பவர்கள் ஒருப்பக்கம் இருக்க, உணவின் விடத்தால் நோய்வாய்ப்பட்டு இறப்பவர்கள் மறுப்பக்கம் உள்ளனர். அப்படியானால் இதற்கு தீர்வு தான் என்ன? இதற்கு ஒரே தீர்வு காயசுத்தி எனும் குடலைக் கழுவி உடலை வளர்க்கும் முறை ஒன்றுதான்.

சரி, காயசுத்தி செய்வது எவ்வாறு?

1. காலையில் எழுந்தவுடன் பல் துலக்கியவுடன் காபி, டீ அருந்தும் பழக்கத்தை விட்டுவிட்டு முடிந்தளவு நீர் குடிக்க வேண்டும். பசி எடுக்கும்போதெல்லாம் நீரையே அருந்தவும். எவ்வளவு மணி நேரம் நீரை மட்டும் குடித்துக் கொண்டிருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். இதனால் உணவுக் குழாயிலும், ரத்தத்திலும் படிந்துள்ள விடங்கள் சிறுநீர் மூலமும், மலகுடல் மூலமும் வெளியேறும். ஒருவேளை இடையில் பசி மிகுதிப்படின் உப்பு சேர்க்காது வேகவைத்த முட்டைகோசு, முருங்கைக்கீரை முதலியவற்றை உண்ணலாம்.

நந்தினி

இதனால் பசியுணர்வும் அடங்கிவிடும். உடலிலுள்ள பழைய கழிவுகளும் மலக்குடல் மூலம் வெளியேறி விடும். பின் மாலை வேளை சப்பாத்தியுடன் முட்டைகோஸ், வாழைத்தண்டு, பீட்ரூட் ஆகியவற்றை பொறியலாக மிதமாக உண்ணலாம். இம்முறையில் நமது உடலானது முழுச்சுத்தம் பெற்று புத்துணர்ச்சியுடனும், புதுவகைத் தெம்புடனும் விளங்குவதை நாம் உணரலாம். நாட்பட்ட நோய்களும் நீங்கும்.

இதை வாரம் ஒரு முறை அல்லது 2 முறை அல்லது விடுமுறை நாட்கள் என தொடர்ச்சியாக மன உறுதியுடன் செய்து வந்தால் அதற்குரிய பலன் கிட்டும் என்பது அனுபவபூர்வமான உண்மை.

2. காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும்.

3. இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும்.

4.வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது.

5. கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, சிறிது நீர் அல்லது தேங்காய்ப் பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும்.

6. கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றி. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்; மலம் எளிதாக வெளியேறும். மற்றும் திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.

7. சீரக தண்ணீர்: சீரக நீர் வயிற்றுக்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் மேம்படும். சீரகத் தண்ணீரைக் குடிப்பதால் வாயு மற்றும் வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சீரகத் தண்ணீரை தினமும் குடித்து வந்தால் வயிறு சுத்தமாகும்.

8. கற்றாழை சாறு: மலச்சிக்கல் பிரச்சனையை போக்க கற்றாழை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் கற்றாழை சாறு எடுத்துக்கொள்ளலாம். கற்றாழை சாற்றை சிறிய அளவில் குடிக்கத் தொடங்குங்கள். வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். கற்றாழை சாற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.

தினசரி உணவில் அகத்தி கீரை, முருங்கை கீரை, மணத்தக்காளி கீரை, அத்திக்காய், அத்திப்பழம், இலந்தை பழம், உலர்ந்த திராட்சை பழம், கருப்பு திராட்சை,பேயன் வாழைப்பழம், ரோஜா குல்கந்து, கொய்யா, மாம்பழம், ஆரஞ்சு, பப்பாளி, பேரிச்சம்பழம், கருணைக்கிழங்கு, வாழைத்தண்டு, தவிடு நீக்காத கோதுமையின் உணவுகள், கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற சிறு தானியங்கள், தேங்காய்ப்பால்சாதம், பிரண்டைத்துவையல், புதினாதுவையல் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை உட்கொள்வதால் செரிமான மண்டலம் வலுவடையும். இவற்றை உட்கொள்வதால் வயிறு நன்கு சுத்தமாகும்.

முறையாக மலம் கழிக்கும் பழக்கத்தை குழந்தை பருவத்திலிருந்தே கற்றுத்தரவேண்டும். குத்துகாலிட்டு அமர்ந்து மலம் கழித்தலே சிறந்தது.

மலச்சிக்கல் நீங்க நாள் ஒன்றுக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகாலை எழுந்ததும் 500 மிலி வெது வெதுப்பான நீரை பருக வேண்டும். கழிப்பறை சுத்தமாகவும் வெறுப்பு அளிக்காவண்ணமும் இருக்க வேண்டும். மலம் கழிக்க உட்கார்ந்த பிறகு கவனம் முழுவதும் மலத்தை வெளியேற்ற தூண்டும் வகையில் இருக்க வேண்டும். குறிப்பாக மலம் கழிக்கும்போது செய்தித்தாள் வாசிப்பது, மொபைல் பார்ப்பது போன்றவற்றை தவிர்க்கவும். தினசரி உணவில் கீரை வகைகள், பச்சை காய்கறிகள், பழவகைகள் சேர்த்து கொள்ளவும்.

தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது, மற்றும் அடிவயிற்று தசை பயிற்சி செய்வது நல்லது.

வாரம் ஒருமுறைதலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதால் திரேகத்தில் உள்ள உட்சூட்டை தணித்து மல குடலில் உள்ள வறண்ட நிலையை சீர் படுத்தும். இதனால் மூலாதார சூடு தணியும், கண்கள் வலுவடைந்து கண்பார்வை சீராகும். இவ்வாறு பராமரிப்பு செய்து மலச்சிக்கல் ஏற்படாமல் ஆரோக்கியம் காக்கவும்.

பாஸ்ட் புட் உணவுகள், பீட்சா, பர்கர், மைதா உணவுகள், புரோட்டா, பாதுஷா, பிஸ்கட், பண்ரொட்டி, வர்க்கி, சேமியா கிச்சிடி, இவைகளை தவிர்க்கவும்.

மருத்துவர் ஆலோசனையின்றி மலச்சிக்கல் இருக்கிறது என்று அடிக்கடி பேதி மருந்துகளை எடுத்துக்கொள்வதையும், அடிக்கடி இனிமா எடுத்துக்கொள்வதையும் தவிர்க்கவும். இதனால் மலக்குடல் வீணாக விரிந்து குடல் சுவர்களின் இயக்க சக்தி (propulsive power) குறைந்து போகும். மலச்சிக்கலின் தன்மையை அதிகப்படுத்தும்.

இது போன்று உணவுப் பழக்க வழக்கங்களினால் குடலினை சுத்தம் செய்து மலச்சிக்கலினை போக்கி நோயில்லா சமுதாயமாக வாழ்ந்து அடுத்த தலைமுறைக்கும் பழக்கப்படுத்தி அவர்களும் ஆரோக்கியமா இருக்க வழிவகை செய்வது நம் கடமை ஆகும்.

போன்: 9500676684


Tags:    

Similar News