சிறப்புக் கட்டுரைகள்
null

இருக்கிறது; ஆனால் இல்லை!

Published On 2024-10-05 05:00 GMT   |   Update On 2024-10-05 05:00 GMT
  • உறவினர்களைக்கூட தங்கள் பக்கம் நெருங்கவிட மாட்டார்கள்.
  • வாழ்க்கை என்பதே ஒரு சவால்தானே.

'மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இதுதான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும்'.

-தலாய்லாமா

பசுமையான மரங்களும் செடிகொடிகளும் நிறைந்த ஓர் அழகிய வளாகம். அந்த வளாகத்திற்குள் ஒரு சிற்றுண்டி விடுதி. பட்டணத்தில் அப்படி ஓர் இடத்தைப் பார்க்க முடியாது.

போதுமான அளவிற்குப் பரந்தகன்ற 'பார்க்கிங்' வசதி. சிலர் தங்கள் காரில் அமர்ந்திருந்தபடியே சிற்றுண்டி ஆர்டர் செய்வார்கள். வடை, போண்டா, காபி ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து கதைபேசிக் களிப்பவர்கள் ஏராளம். காதல் ஜோடிகளுக்குப் பஞ்சமே இருக்காது.

காலை பத்து மணிமுதல் இரவு பத்து மணி வரை, அந்த வளாகம் கலகலப்பாக இருக்கும். சிற்றுண்டி விடுதியில் உட்கார்ந்து சாப்பிட இருக்கை வசதிகளும் உண்டு. எண்ணற்ற வாடிக்கையாளர்கள்; எல்லோரும் அதற்கு ரசிகர்கள்.

பெரியவர் ஒருவர் அங்கு தினந்தோறும் வருவார். மதியம் பன்னிரெண்டு மணிக்கெல்லாம் வருபவர், இரவு வரை அந்தச் சிற்றுண்டி விடுதியில், ஒரு மூலையிலுள்ள இருக்கையில்தான் உட்கார்ந்திருப்பார். அவ்வப்போது காபி மட்டும் பருகுவார். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். இரவு எட்டு அல்லது ஒன்பது மணிக்குக் கிளம்பிவிடுவார்.

தினமும் அவரைப் பார்க்கின்ற சீனியர் சர்வருக்கு ஒரே வியப்பு. என்ன மனிதர் இவர்! வருகிறார் இருக்கிறார் போகிறார். பேச்சு வார்த்தை இல்லை, சிரிப்பதில்லை. ஆனால் நாள் தவறாமல் வந்துபோய்க் கொண்டிருக்கிறார்.

ஒருநாள் அவரிடமே கேட்டுவிட்டார்.

'சார், தப்பா எடுத்துக்காதீங்க. உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு ரொம்ப ஆசை'.

சர்வரை அவர் அலட்சியமாகப் பார்த்தார். காபியை குடித்துவிட்டு, 'டங்' என்று தம்ளரை டேபிளில் வைத்தார்.

'இன்னொரு காபி' என்றார்.

சர்வர் மேற்கொண்டு பேசாமல் சென்று, காபி கொண்டு வந்து அவர்முன் வைத்தார். அந்த மனிதர் ஏறிட்டுப் பார்த்தார்.

'என்ன பேசப் போறீங்க' என்றார்.

'இல்ல சார், சும்மாதான்...'

'பரவாயில்ல, பேசுங்க'.

'சார், உங்க அமைதியான குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, நீங்க யார்கிட்டேயும் பேசுறதில்ல. எப்பவும் எதையோ யோசிச்சிட்டே இருக்கீங்க. ஏதும் பிரச்சனையா சார்?'

இப்போது சர்வரிடம் பேச வேண்டும்போல் அவருக்குத் தோன்றியது.

'பிரச்சனை எதுவும் இல்ல. ஆனா, வாழ்க்கையே வெறுமையாதான் தோணுது'.

'ஏன் சார்?'

'எனக்கு எல்லா வசதிகளும் இருக்கு. புள்ளைங்களுக்குக் கல்யாணமாகி, நல்லபடியா செட்டில் ஆயிட்டாங்க. இங்க நானும் என் மனைவியும்தான். கார், பங்களா, பணம் எல்லாம் இருந்தும், எதுவுமே இல்லாத மாதிரி மனசு தவிக்குது. வாழ்க்கை சூன்யமா தெரியுது' என்று சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

பக்கத்து டேபிளில் இருந்த நபர்களைக் கவனித்துவிட்டு, மீண்டும் அவரிடம் வந்தார் சர்வர்.

'சார், நம்ம ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட சம வயசுதான் இருக்கும். என் பையன்களும் கல்யாணமாகி வெவ்வேறு ஊர்லதான் இருக்காங்க. இங்க நானும் என் சம்சாரமும் சந்தோஷமா இருக்கிறோம்' என்று சர்வர் சொல்ல, அவரை ஆர்வத்துடன் கவனித்தார் அந்த மனிதர்.

'சார், எனக்கு சொற்ப வருமானம்தான். ஆனா, வாழ்க்கை மனசுக்கு நிறைவா இருக்குது'.

'அப்படியா!'

'டியூட்டி முடுஞ்சி வீட்டுக்குப் போகும்போது, என் சம்சாரத்துக்குப் புடிச்ச வெங்காய பக்கோடாவும் கொஞ்சம் ஸ்வீட்டும் வாங்கிட்டுப் போவேன். ராத்திரி சாப்பாட்டுக்கப்புறம், குடும்ப விஷயங்களை பேசுவோம். ஞாயிற்றுக் கிழமை எனக்கு டியூட்டி கிடையாது. அன்னிக்கு கோவில், பீச், சினிமான்னு ஜாலியா கிளம்பிடுவோம்'.

கவிஞர் தியாரூ

'அடடே, கேக்கிறதுக்கே நல்லாருக்கே'.

'அப்பப்போ புள்ளைங்களும் குடும்பமா வந்து, எங்ககூட இருந்துட்டுப் போவாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். முக்கியமான விஷயம், என் சம்சாரம் ரொம்ப சிக்கனம் சார். சேமிக்கிற பணத்துல ஒரு பகுதியை ஏழைங்களுக்கு தர்மம் பண்ணிடுவோம். எங்க தெருவுல ஒரு பூக்காரம்மா. அவங்க குழந்தைக்கு ஸ்கூல் பீஸ் கட்டுறதுக்கு நாங்களும் உதவுறோம்' என்று சர்வர் சொன்னதும், அவரை மரியாதையுடன் பார்த்தார் அந்த மனிதர்.

'தெருவில் திரியிற நாய்களுக்கு தினமும் ரெண்டு பிஸ்கட் போடுறதும் புண்ணியம்தான் சார். பணங்காசு பெருசில்ல; நல்ல மனசுதான் பெருசு' என்று சர்வர் சொல்ல, அந்த மனிதரின் முகத்தில் ஒரு தெளிவு பளிச்சிட்டது.

இன்று வசதிகளுக்குக் குறைவில்லை. பணம் மழைபோல் கொட்டுகிறது. செல்வம் குவிந்து கிடக்கின்றது. எனினும் அவர்களில் பலருக்கு வாழ்க்கை வெறுமையாகத் தெரிகிறது.

அவர்களின் முகத்தில் ஒரு சலிப்பு. 'இனி என்ன இருக்கிறது' என்னும் விரக்தி. வாழ்க்கையே புள்ளியாகத் தேய்ந்துவிட்டது போன்ற ஓர் உணர்வு. காரணம் வேறொன்றுமில்லை; அவர்களின் மனம் கற்பாறைபோல் இறுகிக் கிடக்கின்றது.

அவர்களைக் கவனித்துப் பாருங்கள். 'உம்'மென்று இருப்பார்கள். கனிவு என்றால் என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. உறவினர்களைக்கூட தங்கள் பக்கம் நெருங்கவிட மாட்டார்கள். அதற்காகவே முகத்தைச் சிடுசிடு என்று வைத்துக் கொள்வார்கள்.

எல்லாரையும் சந்தேகத்துடன்தான் பார்ப்பார்கள். பண உதவி கேட்டுவிடுவார்களோ; வேலைக்கு சிபாரிசுக் கடிதம் கேட்பார்களோ; வீடு தேடிச் சாப்பிட வந்துவிடுவார்களோ...இப்படிக் குணக்கேடான கேள்விகளும் பயங்களுமே அவர்களை ஆட்கொண்டிருக்கும்.

அவர்களின் பார்வை ஏழைகள் பக்கம் திரும்பவே திரும்பாது. கையேந்தி நிற்பவர்களிடம் உபதேசம் செய்வார்கள். ஒரு ரூபாய் தர்மம் செய்ய மனம் வராது.

அப்படிப்பட்டவர்களின் மனதில் வெளிச்சம் எப்படி வரும்? கசப்பும் வெறுப்பும் குடிகொண்டிருந்தால் எங்கிருந்து மகிழ்ச்சி வரும்? அதனால்தான், அவர்களுக்கு வாழ்க்கை வெறுமையாகத் தெரிகிறது. எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போன்ற விரக்தி ஏற்படுகின்றது.

அதை மேற்கொள்வதற்கான வழியை அவர்கள் சிந்திப்பதே இல்லை. முதியவர்கள், ஆதரவற்றோர், நோயாளிகள் என நம்மைச் சுற்றி எத்தனையோ பேர். அவர்களுக்கு நம்மால் இயன்ற சிறுசிறு உதவிகளைச் செய்யலாம்.

உதவி செய்கின்றவர்கள் ஒருபோதும் வெறுமையைக் காண மாட்டார்கள். அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். அவர்களைக் காண்பவர்களிடத்தில் அதே மகிழ்ச்சி பரவிச் செல்லும்.

தங்கள் வாழ்வை நேசிக்கின்றவர்கள், நல்லவற்றைச் செய்ய விரும்புகிறார்கள். நல்லவற்றைச் செய்பவர்கள், மற்றவர்களின் அன்பைப் பெறுகிறார்கள். பிறரின் அன்பையும் மதிப்பையும் பெறுகின்றவர்கள், ஒவ்வொரு விடியலையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்; வாழ்வை அர்த்தம் உள்ளதாக்குகின்றனர்.

வாழ்க்கை என்பதே ஒரு சவால்தானே. அதில் சாதிப்பது ஒரு கலை. ஒலிம்பிக்கில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் பெறுவதுதான் சாதனை என்பதல்ல. மனநிறைவுடன் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் சாதனைதான். அதற்கான சூட்சுமத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய ஞானம், பணம், பொருள், புகழ் அவனுக்கு மனநிறைவைத் தந்துவிடாது. அவை நாலு பேர்க்குப் பயன் விளைவிப்பதாய் மாறும் போதுதான், அவன் உண்மையான மனநிறைவைப் பெறுகின்றான்.

மிகப்பெரிய செல்வந்தன் ஒருவன். தனது தொழிற்திறமையால் செல்வங்களைக் குவித்தான். ஏராளமான பணியாளர்கள். எல்லாம் இருந்தன. எனினும், அவன் மனதில் நிறைவு ஏற்படவில்லை. ஏழைகளிடம் காணப்படும் மகிழ்ச்சியைக் கண்டு ஏங்கினான். காரணம் புரியவில்லை.

ஒரு துறவியைச் சந்தித்தான். தனது பிரச்சனையைச் சொன்னான். அவனுக்கு ஓர் உண்மையைத் தெளிவுபடுத்த விரும்பிய துறவி, அவனை ஒரு மலையடிவாரத்துக்கு அழைத்துச் சென்றார். மூன்று கனமான கற்களைக் கொடுத்துத் தூக்கிவரச் சொன்னார். அவற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முயன்றான். அவனால் முடியவில்லை; தடுமாறினான். எனவே, அவற்றில் ஒரு கல்லைத் தூக்கிப் போடச் சொன்னார் துறவி. அவன் அப்படியே செய்தான்.

இரண்டு கற்களைத் தூக்கிக் கொண்டு சிறிது தூரம் சென்றதும், மீண்டும் நடக்க முடியாமல் சிரமப்பட்டான். கவனித்த துறவி, அவற்றில் ஒன்றைத் தூக்கிப் போடச் சொன்னார். அவன் அப்படியே செய்தான்.

இப்போது ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டு நடந்தான். சிறிது தூரம் சென்றதும் சோர்வுற்றான். அதையும் தூக்கிப் போட்டுவிட்டு நடக்கச் சொன்னார் துறவி. அதையும் போட்டுவிட்டான்.

கையில் எந்தச் சுமையும் இல்லாமல் சுலபமாக நடந்தான். இருவரும் மலை உச்சியை அடைந்தனர்.

துறவி அவனிடம், 'உன்னால் எப்படி எளிதாக மலையேற முடிந்தது?' என்று கேட்டார்.

'என்னிடம் இருந்த பாரங்களைத் தூக்கிப் போட்டுவிட்டேன். அதனால்தான் முடிந்தது' என்றான் அவன்.

'அதைப்போன்றுதான் உன் செல்வமும். அதை முழுவதுமாக உன் மனதில் சுமந்து கொண்டிருப்பதனால், உன்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. செல்வம்கூட பாரம்தான். சுயநலத்துடன் சேர்த்து வைத்திருக்கின்ற எதுவும் சுமைதான். உன்னிடத்தில் இருப்பவற்றில் ஒரு பகுதியை, ஏழைகளுக்கு மனமகிழ்ச்சியோடு கொடு. அந்த மகிழ்ச்சி பல மடங்குகளாய் உன்னிடத்தில் வந்து சேரும். சுமை குறையும்; மனம் நிறையும்' என்றார் துறவி. மனநிறைவின் ரகசியத்தை அப்போதுதான் உணர்ந்தான் அந்த செல்வந்தன்.

இருட்டறையில் இருந்து கொண்டு, உலகமே இருட்டு என்பதில் நியாயமில்லை. மன இறுக்கங்களில் இருந்து வெளிவர வேண்டும். மனிதத்திற்கு எதிரான கட்டுகளில் இருந்து விடுபட வேண்டும். வாழ்கின்ற காலத்தில் விசாலமான மனதோடு, கொடுத்தலும் மகிழ்தலும் - வரவேற்றலும் உபசரித்தலுமாய் வாழ்தல்தானே இனிது.

'எல்லாம் இருக்கிறது; எனினும் இல்லை' என்னும் எண்ணம் நம்மை அழுத்துகிறது என்றால், நம் வாழ்க்கை சரியில்லை என்று அர்த்தம். எனவே, வாழ்வைச் செம்மை செய்வோம்; பயனுற வாழ்வோம். அப்போது வெறுமை நீங்கும்; வாழ்வில் மகிழ்ச்சியும் மனநிறைவும் ஓங்கும்.

போன்: 9940056332

Tags:    

Similar News