சிறப்புக் கட்டுரைகள்
null

ஆற்றல் தரும் உணவுப் பொருட்கள்

Published On 2024-10-05 10:20 GMT   |   Update On 2024-10-05 10:50 GMT
  • நமது உடலில் உள்ள வெப்பம் குறைந்து விட்டால் உடனே அஜீரணம் உண்டாகும்.
  • காற்றில் இருந்தும் நமக்கு இயற்கை ஆற்றல் கிடைக்கிறது.

நாம் கடந்த இதழிலே வாதம், பித்தம், கபம் மற்றும் அதன் தன்மைகள் பற்றி ஆராய்ச்சி செய்தோம். இந்த வாரம் அதன் தொடர்ச்சியாக நாம் தினசரி வாழ்வில் உபயோகப்படுத்தும் உணவுகளின் தன்மையை பற்றி சிறிது சிந்தனை செய்யலாம். பொதுவாக, தினசரி நாம் உண்ணும் உணவுதான் ரசம், ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை மற்றும் விந்து நாதம் எனும் ஏழு தாது பொருட்களாக மாற்றம் பெறுகிறது.

உணவுக்கு முன்னும், பின்னும் நீரை நாம் அருந்துவோம். நீரானது திரி தோஷ சம நிலையை (வாதம், பித்தம், கபம்) சமன் செய்து உடல் எடையை குறைக்கும். உடலுக்கு சீரான சக்தியை உருவாக்கும். பொதுவாக, நாம் சுடு நீர் அருந்துவது நலம் பயக்கும். அதே நீரை ஆற வைத்து குடித்தால் பித்தத்தை குறைக்கும். ஆனால் ஆற வைத்த குடி நீரை மூன்று மணி நேரத்திற்குள் உபயோகிக்க வேண்டும். இப்போது நாம் தினமும் வாழ்க்கையில் உணவாக பயன்படுத்தும் பிற பொருட்களை சிந்திப்போம்.


இளநீர்: பித்தம் (சூடு) குறைக்கும். வாதத்தையும் குறைத்து பசியை தூண்டும். அதே நேரம் வழுக்கை கபத்தை கூட்டி, கொழுப்பையும் கூட்டும்.

பால்: பசும் பால் மற்றும் எருமைப் பால் இரண்டும் நல்லது. பசும் பால் இனிப்பு கூட்டும். ஓஜஸ் சக்தியை கூட்டும். வாதம் மற்றும் பித்தத்தை குறைக்கும். உணவு ஏழு தாதுக்களாக மாறுவதற்கு உதவி புரியும். எருமைப் பால், சீரணத்தை சிறிது தாமதமாக செய்யும். குளிர்ச்சி தன்மையை கொடுக்கும். தூக்கமின்மையை போக்கும். பொதுவாக பால் குடிப்பவர்கள், இரவு உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக எடுத்து கொள்வது நல்லது. அது நல்ல பலனை கொடுக்கும்.

தயிர்: மலசிக்கல் உள்ளவர்கள் தயிரை குறைப்பது நல்லது. அதற்கு மோர் அல்லது பால் சாதம் சாப்பிடலாம். தயிர் கொழுப்பு சத்தை கூட்டும். வாதத்தை குறைக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் எடுக்கலாம். நடுத்தர வயது உள்ளவர்கள் மோர் எடுப்பது நல்லது. குறிப்பாக இரவில் தயிர் சாதத்தை விட மோர் சாதம் நல்லது. புளிக்காத தயிர் உபயோகம் செய்தால் தோல் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.

மோர்: எளிதில் ஜீரணம் ஆகும் பொருள். புளிப்பு மற்றும் துவர்ப்பு தன்மையை உடையது. பசியை தூண்டும். வாதம் மற்றும் கபத்தை குறைக்கும். உடல் வீக்கம், வயிறு உப்புசம் உள்ளவர்கள் மோர் எடுப்பது நல்லது. மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மோர் சிறந்த நீர் ஆகாரமாகும். வாய்க்கு ருசியை ஏற்படுத்தும். சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ரத்த சோகை குறைப்பாட்டை சரி செய்யும்,

வெண்ணெய்: விந்து நாத உற்பத்திக்கு சிறந்தது. குளிர்ச்சி தன்மையை கூட்டும். உடல் உப்பசத்தை கூட்டும். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உண்ணலாம். ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு சத்து குறைபாடு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

நெய்: தினமும் நெய்யை உருக்கி ஒரு ஸ்பூன் எடுத்து கொண்டால் அறிவு திறன் கூடும். நெய்யை சித்த சுத்தி என்பர். நெய் பசியை கூட்டும். கண்ணுக்கு சிறந்த மருந்து. வாய்ப்புண், மலச்சிக்கல் உள்ளவர்கள் நெய்யை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக நெய் முதுமையை தள்ளிப் போடும்.

கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


தேன்: உடல் எடையை குறைக்கும் அற்புதமான உணவு. இதை சூடுபடுத்தக் கூடாது. அப்படி செய்தால் நமக்கு பலன் கிடைக்காது. எனவே, ஏழு தாதுக்களில் தடை ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் நல்ல உணவுகளை அளவு முறையோடு உட்கொள்வது நல்லது.

குறிப்பாக, இன்று அஜீரணம் பிரச்சனைதான் எல்லோருக்கும் உள்ளது. நமது உடலில் உள்ள வெப்பம் குறைந்து விட்டால் உடனே அஜீரணம் உண்டாகும். இதுவே எல்லாவிதமான நோய்களுக்கும் மூல காரணமாக அமைகிறது. எனவே, நாம் தினசரி உணவிலே மூன்று தோஷங்களுக்கும் ஏற்றவாறு உணவு உட்கொண்டால் காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்.

இயற்கை வழி: நாம் தினசரி உண்ணும் உணவுகளை தவிர மற்ற வழிகள் மூலமாக உடலுக்கு தேவையான ஆற்றல்களை பெற முடியும். சூரியனை மையமாக வைத்து தன்னைத்தானே சுற்றி கொண்டும், சூரியனையும் சுற்றி வரும் கோள்களிடம் இருந்தும் ஆற்றலை பெற முடியும். காரணம் கோள்களில் இருந்து வரும் ஆற்றல் நமது உடலோடு தொடர்பு உடையது.

சூரியனுடைய ஆற்றல் எலும்புகளோடும், புதனுடைய ஆற்றல் தோலோடும், சுக்கிரனுடைய ஆற்றல் விந்து நாதத்தோடும், சந்திரனுடைய ஆற்றல் ரத்தத்தோடும், செவ்வாய்யினுடைய ஆற்றல் மஜ்ஜையோடும், குருவின் ஆற்றல் மூளை செல்களோடும், சனியினுடைய ஆற்றல் நரம்புகளோடும், ராகு மற்றும் கேதுவினுடைய ஆற்றல் ஓஜஸ் என்கின்ற உயிர் சக்தியோடும் தொடர்பு உடையது.


எனவே, இந்த கிரகங்களிடம் இருந்து வரும் அலை கதிர்கள் மூலம் நாம் இயற்கையாக ஆற்றலை பெற முடியும். அதற்கு பசி உணர்வோடு இருந்து இந்த கோள்களினுடைய ஆற்றலை பெற்ற பிறகு உணவு உண்ண வேண்டும்.

அது போலதான் பூமியின் தற் சுழற்சி காரணமாக மெக்னீசியம் போன்ற உலோக ஆற்றலும், பசித்த பிறகு உணவு எடுக்கும்போது கிடைக்கிறது. காற்றில் இருந்தும் நமக்கு இயற்கை ஆற்றல் கிடைக்கிறது. இதற்கு தினமும் மூச்சு பயிற்சி மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் மூலமாக நமக்கு கிடைக்கும்.

அதுபோல நீரில் இருந்தும் நமக்கு ஆற்றல் கிடைக்கிறது. எப்போதும் நீர் குடிக்கும்போது தலையை மேலே தூக்கி டம்ளர் வாயில் படாமல் குடிக்கக்கூடாது. டம்ளரை உதட்டில் படுமாறு வைத்து கொண்டு வாயில் நீரை எடுத்து சுவையை உணர்ந்து அதன் பிறகு மெதுவாக விழுங்க வேண்டும். அப்போதுதான் உடலின் காரத் தன்மை மற்றும் அமிலத் தன்மை சமன்படும்.

செரிப்பதற்கு சிரமம் இல்லாத பழச்சாறுகள், இளநீர், தேன் நீர், வெள்ளரிக்காய் போன்ற உணவுகளை எடுக்கலாம். அவரவர் உடல் எடை எவ்வளவோ அந்த அந்த எடைக்கு ஏற்ப, நீர் மற்றும் உணவு எடுப்பது நல்லது.

பொதுவாக பழச்சாறுகள், நரம்பு பிரச்சனை, டென்சன், தூக்கமின்மை, வீசிங், மூச்சுத் திணறல், போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட வைக்கிறது.


மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற பழங்கள் சிறந்த சக்தியை கொடுக்கும். காரணம் என்னவென்றால் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் மற்றும் இரும்பு சக்தி அதிகமாகவும், சோடியம் குறைந்த அளவும் உள்ளது.

உணவு மற்றும் உணவின் அளவு முறைதான் நம் வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. எனவேதான் நம் முன்னோர்கள், நொறுங்க தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்றார்கள்.

எனவே, உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். திரவ பொருள் கூட மென்று உண்டால் நல்ல பலனைக் கொடுக்கும். இதனால், உடல் உள் உறுப்புகள் பலம் பெற்று நீண்ட ஆயுளைக் கொடுக்கும்.

எனவே, நாம் உண்ணும் உணவு முறைகளில் சில மாற்றத்தை எற்படுத்தி அந்த முறைகளை நடைமுறைப்படுத்தி வந்தால் உடல் நலம் கெடாது. இந்த உணவை சரியான முறையில் எடுக்காததால்தான் உடல் சார்ந்த பிரச்சனைகளை நாம் அதிகமாக எதிர்கொள்கிறோம்.

அதனால் உணவில் அளவு குறையாமலும், அதே நேரம் ருசியாக உள்ளது என்று அளவு மிகாமலும் பார்த்து கொண்டு வாழ வேண்டும்.

இதனால், நமக்கு எடை பராமரித்தல், உறுப்புகளை சுறுசுறுப்பாக்குதல், மனநிலையை சமன் செய்தல், நினைவு ஆற்றலை உயர்த்துதல், செரிமானம் சீராக்குதல், பசியை தூண்டுதல், தூக்கமின்மையை போக்குதல், உடல் நோய்களின் தாக்கத்தை குறைத்தல் அல்லது விடுபடுதல் போன்ற பல நன்மைகள் நமக்கு கிடைக்கும்.

போன்: 9444234348

Tags:    

Similar News